வெங்கட் சாமிநாதன்
கும்பகோணம் பள்ளிக்கூடம் போக தினம் ஐந்தரை மைல் காலையிலும் பின் உடையாளூர் திரும ஐந்தரை மைல் மாலையிலும் நடந்து செல்லும் வாழ்க்கையென்றாலும், கும்பகோணம் பள்ளி நேரங்களும், அதோடு ஒட்டிக்கொண்டு வந்து விட்ட உடையாளூர் கிராம வாழ்க்கையும் கொஞ்சம் கொஞமாக பிடித்துத் தான் போயின. பள்ளிக்கூடத்தில் முற்றிலும் புதிய சூழல். என்னமோ இஷ்டபாடம் (Optional subjects) எடுத்துக்கொள்ள வேண்டுமாக்கும் SSLC யின் கடைசி இரண்டு வருஷங்களில் என்று எனக்குச் சொல்லப்பட்டது. உயர் கணிதம், பௌதீகம், ரசாயனம் என்னும் மூன்று பாடங்கள் கொண்ட MPC க்ரூப் எடுத்துக்கொண்டால் பெரிய பெரிய வேலைக்குப் போகலாமாக்கும், எஞ்சினீயர் ஆகலாமாக்கும் என்று எல்லாரும் சொல்ல, எனக்கென்ன தெரியும், நானும் எஞ்சினீயராகப்போறேன் என்று அந்த க்ரூப் கேட்டேன். கொடுக்கப்பட்டது. முதல் நாள் பௌதீகம் நடந்த வகுப்புக்குப் போனால், வாத்தியார் சொன்னது ஒரு மண்ணும் புரியவில்லை. உயர் கணித வகுப்பு அதற்கு மேல். யாரிடம் போய் நான் என்ன கேட்டு விளங்கிக் கொண்டு படித்து தேறமுடியும்? இங்கு யார் இருக்கிறார்கள் எனக்கு சொல்லிக்கொடுக்க? வீடு திரும்பும் வரை எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருண்டு வந்தது. அம்மா கேட்டாள், என்னடா ஆச்சு, என்னமோ போல இருக்கியே? என்று. அப்பா வந்ததும் அம்மா சொன்னாள், “அவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை, சொரத்தாவே இல்லை” என்று சொல்லி விட்டாள். எல்லோரும் என்னைச் சூழ்ந்து உட்கார்ந்து விட்டார்கள். அப்பா அம்மா தான் என்றில்லை. மூன்று தங்கைகளும் சூழ்ந்து கொண்டு என் முகத்தையே கவலையோடு பார்த்தார்கள். “அண்ணாவுக்கு ஏதோ ஆயிடுத்து” என்று கவலை அவர்களுக்கு. நிலக்கோட்டையாக இருந்திருந்தால், மாமா திட்டி யிருப்பார். இங்கு என்னைச் சூழ்ந்து கொண்டு எல்லோரும் கவலைப் பட்டார்கள். இது புது அனுபவமாக இருந்தது எனக்கு.
தாழ்வாரத்தை ஒட்டிய கூடத்தில் ஹரிகேன் விளக்கின் மங்கிய மஞ்சள் ஒளியில் நடந்த அங்த மகா நாட்டில், “கஷ்டமா இருக்கற பாடத்துக்கு ஒரு முழுக்கு போட்டுட்டு வேறே பாடம் எடுத்துக்கறது, இஷ்ட பாடங்கள் தான் நிறைய இருக்கே, என்னத்துக்கு வேண்டாதத கட்டிண்டு அழணும்?” என்ற தீர்மானம் நிறைவேறியது. மறு நாளே வேறே என்ன எடுத்துக்கலாம் என்று நானே யோசித்து, ஒரு வேளை வேலை தேடி வடக்கே போவதென்றால் உபயோகமாக இருக்கும் என்று, பாகவதர் கிராப் வைத்துக்கொண்டிருந்த ஹிந்தி பண்டிட் வகுப்பில் சேர்ந்தேன். அப்படி ஒன்றும் ஹிந்தியையும் ஒழுங்காகப் படித்தேன் என்று சொல்ல முடியாது. ஹிந்தி வகுப்பில் என்னையும் சேர்த்து மூன்று பையன்கள், ஆறு பெண்கள். ஏதோ எம்ப்ராய்டரி, தையல் க்ளாஸ் போல இந்த ஹிந்தி வகுப்பிற்கும் அந்த மரியாதை தான் என்று தோன்றிற்று.
எனக்கு சிரமம் கொடுக்கத் தொடங்கிய இன்னொரு பாடமும் உண்டு. அது நம் தேனினும் இனிய தமிழ் தான்.. அந்த ஆண்டு தமிழ்ப் பாடங்கள் தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே, தமிழ் வாத்தியார் எடுத்த பாடங்கள் என்னை பயமுறுத்துவனவாக இருந்தன. என்னென்னமோ தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார். தமிழ் வகுப்பில் காய்கள் எங்கிருந்து வந்தன என்று நான் திகைத்துப் போனேன். எப்படிடா இங்கே படித்து தேறப்போகிறேன், எதைத் தொட்டாலும் அது பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்து விடுகிறதே, தமிழ் எப்படி இவ்வளவு சிரமப்படுத்தும் ஒன்றாகியது என்று எனக்கு விளங்கவில்லை. ஆனால் அதில் ஒரு நன்மையும் இருந்தது. தமிழ் வகுப்பில் தான் எனக்கு மிக ஆப்தமான நண்பனும் கிடைத்தான். ஆர். ஷண்முகம் என்று பெயர். வகுப்பிலேயே ஷண்முகம் தான் உயரமானவன். வயதிலும் மூத்த ஒரு தோற்றமும் உண்டு. வித்தியாசமான உடையும் அணிந்து வந்தவன். எல்லாரும் சட்டையுடன் காற்சட்டையோ வேட்டியோ அணிந்து வந்தால், ஷண்முகம் ஜிப்பாவும் வேஷ்டியும் பாகவதர் க்ராப்புமாக தன்னை மற்றவர்களிடமிருந்து தன்னை வேறு படுத்தும் தோற்றமுடையவன். எப்படியோ எனக்கும் அவனுக்கும் அத்யந்த சினேகம் உண்டாகிவிட்டது. என்னை பிரமிக்க வைத்த இன்னொரு காரணம், தேமா புளிமா என்னை பயமுறுத்திய மறு நாளே, “என்ன சாமிநாதன், இதையெல்லாம் நான் படிக்கவே வேண்டாம். எனக்குத் தெரியாத தேமாவும் புளிமாவுமா? ரொம்ப நாளாவே நான் இதில் தான் மூழ்கி நீந்திக்கொண்டிருக்கேன்” என்றான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘படிக்கவே வேண்டாம் என்கிறான், ரொம்ப நாளா அதிலேயே உழண்டுண்டிருக்கானாமே” என்று திகைத்தேன். சும்மா அளக்கறான், பெரிய மனுஷனா என்கிட்டே காட்டிக்கறான் என்றே நினைத்தேன். திடீரென்று ஒரு நாள் அவன் ஒரு பத்திரிகையின் அச்சடித்த நான்கு பக்கங்களை என்னிடம் காட்டினான். “இதைப் பார்” என்று. அது கும்பகோணத்திலிருந்து வெளியாகும் “காவேரி” என்ற பத்திரிகையில் வெளியாகியிருந்த ஷண்முகம் எழுதிய கட்டுரை. அதில் அவன் எழுதிய கவிதைகளும் இருந்தன.” நான் ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போனேன். “இது பழைய பத்திரிகை. எந்த மாசத்தது பாத்தியா? நான் எழுதியது என் கிட்டவே இல்லை. பெரிய தெருவிலே நான் சாமான் வாங்கறப்போ இதை எனக்குப் பொட்டணம் கட்டிக்கொடுத்தான். அது நான் எழுதியதா இருந்ததா, “இது நான் எழுதினதுங்க”ன்னு சொல்லி, “கட்டுரையின் மற்ற தாட்களையும் கொடுன்னு அவனைக் கேட்டு வாங்கி வந்தேன்”. என்றான்.
எனக்கு கும்பகோணம் பாணாதுரைப் பள்ளியில் கிடைத்த அரிய, ஒரே நண்பன் ஷண்முகம். அவனுக்கும் என்னைப் பிடித்துப் போயிற்று. என்னிடம் அவன் என்ன கண்டான் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அந்த நாட்களில் எனக்கு ஷண்முகம் தான் எனக்கு ஹீரோ மாதிரி. என்ன காரணத்தாலோ தமிழ் வாத்தியார் தேமாங்காய் புளிமாங்காயை இரண்டொரு நாட்களிலேயே விட்டு விட்டார். அதெல்லாம் பெரிய வகுப்புகளுக்கு நடத்த வேண்டிய சமாச்சாரம் என்றோ என்னவோ தெரியாது. ஆனால் தேமாங்காயும் புளிமாங்காயும் போனாலும் அது எனக்குத் தந்த சண்முகம் என்ற நண்பன், நான் வேலை தேடி ஒரிஸ்ஸாவுக்குப் போன பிறகும் என்னை விட்டுப் போகவில்லை. அதற்கும் முன், முதல் வடநாட்டுப் பயணமாக ஜெம்ஷெட்பூருக்குப் போக கும்பகோணம் ரயில் நிலையத்தில் நான் காத்திருந்த போது யாரைப் பார்த்தேன்? ஷண்முகத்தைத் தான். 1948-ம் வருடம் ஜூலை மாதம் 27 அல்லது 28 தேதியாக இருக்கவேண்டும் அன்று. பின்னர் நான் ஒரிஸ்ஸாவில் ஹிராகுட்டில் வேலைக்குச் சேர்ந்தேன். எங்கள் தொடர்பு விட்டுப் போகவில்லை. ஷண்முகம் சிதம்பரத்திற்குப் பக்கத்தில் கிள்ளை என்று தான் நினைவு, அங்கு தொடங்கப்பட்ட காந்தி ஆஸ்ரமத்தில் சேர்ந்து படிக்கத் தொடங்கினான். நான் விடுமுறையில் ஒரு முறை தெற்கே வந்த போது, நான் கிள்ளை போய் ஷண்முகத்தைச் சந்தித்தேன். அதன் பிறகு எப்படியோ தொடர்பு விட்டுப் போயிற்று. அந்நாட்களில் சண்முகம் எனக்கு எழுதிய கடிதங்கள் செய்யுள் வடிவிலேயே இருக்கும். அந்த சிறு வயதிலேயே வெகு லாகவமாக, செய்யுள் இயற்றும் திறமை வாய்த்திருந்த சண்முகம் கவிஞனாக மலர்ந்தானா, இல்லை தமிழ் வாத்தியாராகி தேமா புளிமா சொல்லிக்கொடுக்கத்தான் விதி என்றாகியதா என்பது தெரியவில்லை. ஷண்முகத்திற்கு சொந்தம் மாயவரம் பக்கத்தில் மணல் மேடு என்ற ஊர். அந்த நாட்களில் ஒரு நாள் மணல் மேடு போகவேண்டும் ஷண்முகத்தைப் பார்க்க வேண்டும், இல்லை, அவனைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று நினைத்ததுண்டு. ஆனால் அது நடக்கவில்லை.
படித்துக் கொண்டிருந்த போது ஷண்முகம் தங்கியிருந்தது காவிரி தாண்டி மேலக்காவேரியைக் கடந்து சுவாமி மலை பாபுராஜபுரம் போகும் சாலையில் மேலக்காவேரிக்கு அடுத்து இருக்கும் கொட்டையூர் என்ற கிராமத்தில். நான் ஒரு முறை அவன் கொட்டையூர் வீட்டுக்குச் சென்று ஒரு புத்தகம் வாங்கி வந்தேன். என்ன புத்தகம்! அடால்ப் ஹிட்லரின் சுய சரிதம் “எனது போராட்டம்” (Mein Kemph) தமிழ் மொழிபெயர்ப்பில். சுமார் 500 பக்கங்கள் கொண்ட தடி புத்தகம்.
பாடபுத்தகங்களை விட இவற்றில் தான் எனக்கு மிகுந்த ருசி இருந்தது. அதற்கு ஏற்றாற் போல, ஒரு நாள் தலைமை ஆசிரியர் வகுப்பில் எல்லோருக்கும் சொன்னார், ‘நீங்கள் எல்லாம் பாட புஸ்தகமே கதீன்னு இருக்கப்படாது. லைப்ரரீலேருந்தும் வெளி புஸ்தகங்களைப் படிக்கணும். நான் லைப்ரரேரியன் கிட்டே சொல்லிருக்கேன். அவர் புஸ்தகம் கொடுப்பார். படித்து ஒழுங்கா கிழிக்காம திருப்பிக் கொடுக்கணும்” என்று சொன்னார். உடனே இடைவேளையில் நாங்கள் நாலைந்து பேர் லைப்ரேரியனிடம் ஒடினோம். “கதைப் புஸ்தகமெல்லாம் கொடுக்க மாட்டேன். இலக்கிய புஸ்தகம் தான் கொடுக்கச் சொல்லிருக்கார் ஹெட்மாஸ்டர்” என்றார் அவர். அந்த காலத்தில் மட்டுமல்ல, ரொமப காலத்துக்கு இலக்கிய என்றால், புறநானூற்றுச் சொற்பொழிவுகள், கம்பர் தரும் காட்சி போன்றவை தான் இலக்கியம் என்று சொல்லப்பட்டது. இலக்கியப் புகழ் வாய்ந்த கலைமகள் பிரசுர பட்டியலில் கூட, சிறுகதை, நாவல், வரலாறு என்ற தலைப்புகளைத் தாண்டி இலக்கியம் என்ற தலைப்புக்கு வந்தால், கி.வா.ஜ., பி.ஸ்ரீ., டி.கே. சிதம்பர நாத முதலியார், போன்றோரின் கம்ப ராமாயண, சங்க இலக்கிய சொற்பொழிவுகள், விளக்க கட்டுரைகள் தான் காணப்படும். ஒரு வேளை இன்றும் கூட அந்த நிலைதானோ என்னவோ.
அந்த அறிவிப்பினால் எனக்கு ஒன்றும் பாதகம் ஏற்படவில்லை. எனக்கு பிடித்தமான புத்தகங்கள் கிடைத்தன தான். இப்போது நினைவிலிருக்கும் புத்தகங்கள், எங்கள் பாணாதுரைப் பள்ளி லைப்ரரியிலிருந்து எடுத்துப் படித்தவை என்று சொல்லப்போனால், சுபாஷ் சந்திர போசின் ‘இளைஞன் கனவு” (இதன் ஆங்கில தலைப்பு என்னவென்று தெரியாது), வ.ரா. எழுதிய “தமிழ் நாட்டுப் பெரியார்கள்”, ஜவஹர் லால் நேரு அரசியல் நிர்ணய சபையில் ஆற்றிய சொற்பொழிவுகள் அடங்கிய அரசியல் நிர்ணய சபை என்னும் தொகுப்பு, வெ.சாமிநாத சர்மாவின் புத்தகங்களில் நினைவிலிருப்பது, முஸ்தபா கெமால் பாஷா, யோகி சுத்தானந்த பாரதியின் புத்தகங்கள் என்பன உடனே நினைவுக்கு வருபவை. இன்னும் சிரமப்பட்டு யோசித்தால் இன்னம் நாலைந்து நினைவுக்கு வரலாம். ஆனால் இந்த திட்டம் வெகு சீக்கிரம் கைவிடப்பட்டது, ஏனோ தெரியாது. ஆனால், சண்முகத்திடமிருந்து எனக்கு புத்தகங்கள் கிடைத்து வந்தன. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால், எனக்கு என் பள்ளி நாட்களிலேயே சிதம்பர ரகுநாதனைத் தெரியுமென்றால், அதற்குக் காரணம் ஷண்முகம் தான். நான் படித்த முதல் புத்தகம் சிதம்பர ரகுதானின் “ஓர் இரவு”. அப்போது அது தடைப்படுத்தப்பட்ட புத்தகம். ஆபாசமான புத்தகம் எழுதிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறை வாசம் கூட இருந்தார் என்று பத்திரிகைகளில் அப்போதோ அல்லது பின்னரோ படித்தேன். பாஸ்கரத் தொண்டைமான், “இவன் என் தம்பியே இல்லை” என்று கோபத்துடன் சொன்னதாகவும் செய்தி படித்தேன். அப்போது பாஸ்கரத் தொண்டைமானை எனக்குத் தெரியாது. சிதம்பர ரகுநாதனின் அண்ணன் என்பதை மட்டும் தெரிந்து கொண்டேன்.
வெங்கட் சாமிநாதன்/29.7.08
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865)காட்சி -3 பாகம் -4
- நிறைவுக்காக
- வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்
- கலில் கிப்ரான் கவிதைகள்<< என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே ! >> கவிதை -1 (பாகம் -3)
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் !அகிலக் கதிர்கள் (Cosmic Rays) பூமியைச் சூடேற்றுமா ?(கட்டுரை 51)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -23 << என் மௌனப் பசிகள் ! >>
- குறுங்கதைகள்
- சை.பீர்முகம்மது
- செய்திகள் மட்டுமே சித்திரமானால் – ஸ்லம்டாக் மில்லியனர் குறித்து
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 2 வ. உ. சிதம்பரம் பிள்ளை
- அவரும் இவரும் நீயும்!
- வேத வனம் விருட்சம் 23
- ‘போல்’களின்றி…
- நாற்காலிகள்…
- மும்பை அரோரா ஞாயிறுகள் – நான் கடவுள்
- சங்கச் சுரங்கம் -2 : குறிஞ்சிப் பாட்டு
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் 40. சாலை இளந்திரையன்
- விஸ்வரூபம்
- இடைவெளி
- கடவுள்
- இலங்கைத் தமிழன் – நேற்று இன்று நாளை
- கண்ணீரின் குரல்கள்
- உன் பழைய கவிதைகள்
- என் சின்னமகள் மற்றும் மனைவியின் விமர்சனக் குறிப்புகள்
- இலங்கைப்பிரச்சினையில் கலைஞர் மீது குறை சொல்வதா?
- மனிதனின் நீர் சார்ந்த வாழ்வியல் கோலங்களும், ஊடகங்களும், வந்து சென்ற சுனாமியும் !
- ஸ்கொட்டிஸ் வேட்டைக்காரரின் நாய்
- இணையத்தில் தமிழ்
- சாபம்
- மோந்தோ-4
- நினைவுகளின் தடத்தில் – (25)
- காதல் ஒரு விபத்து
- நடிகன்