ஜெயகாந்தன்
அந்த சத்திரத்தின் வாசற்கதவுகள் சாத்தி, பூட்டப்பட்டிருக்கும்; பூட்டின்மீது ஒரு தலைமுறைக் காலத்துத் துரு ஏறி இருக்கிறது. கதவின் இடைவெளி வழியாகப் பார்த்தால் உள் சுவர்களைக் கிழித்துக்கொண்டு கம்பீரமாய் வளர்ந்துள்ள அரசஞ்செடிகளும் காடாய் மண்டிக்கிடக்கும் எருக்கம் புதர்களும் தெரியும். சத்திரத்துக்கு எதிரே அதாவது சாலையின் மறுபுறத்தில் நான்கு புறமும் படித்துறையுள்ள ஆழமில்லாத குளம்; குளத்திற்கு அப்பாலும், குளத்தைச் சுற்றிலும் செழிப்பான நஞ்சை நிலப்பகுதி, வரப்பினூடே நடந்து ஏறினால், சற்றுத் தூரத்தில் ரயில்வே லைன் மேட்டுப் பகுதி. ரயில்வே லைனுக்கு மறுபுறம் – ‘இந்தப் பக்கம் செழித்துத் தலையாட்டிக் கொண்டிருக்கும் பயிர்களை வளர்த்ததன் பெருமை என்னுடையதுதான் ‘ என்று அலையடித்துச் சிலு சிலுக்கும் ஏரி நீர்ப்பரப்பு கண்ணுக்கெட்டிய தூரம் பரந்து கிடக்கிறது.
அதற்கப்புறம் ஒன்றுமில்லை; வெறும் தண்ணீர்தான்; தண்ணீர் பரப்பின் கடைக்கோடியில் வானம்தான் தண்ணீரும் வானமும் தொட்டுக்கொண்டிருக்கின்ற இடத்தில் நிலவின் பெருவட்டம் மங்கிய ஒளியை ஏரிநீரில் கரைத்து மிதந்து கொண்டிருக்கிறது…நிலவு மேலே ஏற ஏற அதன் உருவம் குறுகிச் சிறுத்தது; ஒளி பெருகிப் பிரகாசித்தது. ஒரு கோடியில் எழுந்து, ரயில்வே லைன் மேட்டின் மேலேறிய நிலவு வீசிய வெளிச்சம், மறுகோடியில், சத்திரத்துத் திண்ணையில் உட்கார்ந்து உணவருந்திக்கொண்டிருந்த அந்த வியாதிக்காரப் பிச்சைக்காரனின் புத்தம் புதிய தகரக் குவளையின் மீது பட்டுப் பளபளக்க, அதன் பிரதிபிம்பம் அவன் முகத்தில் விழுந்தது.
திண்ணையில் அவனைத் தவிர யாரும் இல்லை. அவன் அந்தத் தனிமையிலும், தகரக் குவளையில் ஊறிக் கிடந்த ரசத்து வண்டல் சோற்றிலும் லயித்துத் தன்னை மறந்த மகிழ்ச்சியுடன் பாடிக்கொண்டே ஒவ்வொரு கவளமாய்ச் சாப்பிட்டான். அவன் பார்வை நிமிர்ந்து நிலவில் பதிந்திருந்தது. வாய் நிறையச் சோறுடன் அவன் பாடுவது தெளிவாய் ஒளிக்கவில்லை. கேட்கத்தான் அங்கு வேறு யாரிருக்கிறார்கள் ‘
தகரக் குவளையை வழித்து நக்கிச் சுற்றிலும் இறைந்து கிடந்த பருக்கைகளை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கி விரலோடு சேர்த்து உறிஞ்சிச் சாப்பிட்டானதும் தனது–விரல்கள் குறைபட்ட–இரண்டு கைகளாலும் தகரக் குவளையை இடுக்கி எடுத்துக் கொண்டு சாலையின் குறுக்காய், குளத்தை நோக்கி நடந்தான். கால்விரல்களுக்குப் பிடிப்பு இல்லாததால் குதிகால்களை அழுந்த ஊன்றித் தாங்கி தாங்கித்தான் அவனால் நடக்க முடியும் — குளத்தின் மேல்படியில் காலிலிருந்த கான்வாஸ்ஷஉஸ் நனையாமல் நின்றுகொண்டு, தகரக் குவளையை அலம்பி, ஒரு குவளைத் தண்ணீரைக் குடித்தான். தண்ணீரை ‘மடக் மடக் ‘ கென்று குடிக்கும்போது அவசரத்தில் குவளைக்கும் வாய்க்குமிடையே இரண்டு பக்கத்திலும் தண்ணீர் வழிந்து அவன்மேலிருந்த கோட்டின் காலரை நனைக்கவே அவசர அவசரமாகத் தண்ணீரைத் தட்டிக்கொண்டே கோட்டின் மார்புப் பையிலிருந்த பீடியையும் நெருப்புப் பெட்டியையும் எடுத்து வேறு பைக்கு மாற்றிக்கொண்டான். மேலேறி வந்த பிறகு தகரக் குவளையைக் கீழே வைத்துவிட்டு, நின்று ஒரு பீடியைப் பற்றவைத்துக் கொண்டான். புகையோடு சேர்த்துத் திருப்தியுடன் ஏப்பம் விட்டவாறு அவன் முனகிக் கொண்டான்.
‘நல்லாத்தான் இருக்கு… ‘ என்று வாய்விட்டு முனகிக் கொள்ளும்போதே மனசில் ‘–என்ன நல்லாருக்கு ? ‘ என்ற கேள்வியும் பிறந்தது.
‘எல்லாம்தான். தோ… இந்த நெலா, இந்தக் குளம்… அடிக்கிற காத்து, குடிக்கிற தண்ணி…பசி,சோறு, தூக்கம்-எல்லாந்தான். வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கு… பீடிச் சொகம் ஒண்ணு போதுமே ‘ ‘ என்று நெருப்புகனியக் கனியப் புகையை வாய் நிறைய இழுத்து ஊதினான். சிறிது நேரம் நின்று ஏதோ யோசனைக்குப்பின் சத்திரத்துத் திண்ணைக்கு வந்து ஒரு மூலையில் தகரக் குவளையைக் கவிழ்த்து வைத்து விட்டு, சுவரோரமாகக் கிடந்த கந்தல் துணியால் தரையைத் தட்டிவிட்டு உட்கார்ந்தான்.
‘உலகம் இவ்வளவு அழகாயிருக்கு. இதைப் பார்க்கற எம் மனசு சந்தோஷப்படுது. ஆமா, எல்லாப்பொருளும் பார்த்தவங்க மனசை சந்தோஷப்பட வைக்கும்போது, நான்…நான் என்னைப் பார்த்தவுடனே ஒவ்வொருத்தர் முகத்திலேயும் ஏற்படற மாற்றம் இருக்கே, வியாதியாலே மரத்துப்போன என் உடம்புக்குத் தெரியாத வேதனை, பாவம் அவங்க மனசுக்குத் தெரியுது. அன்னக்கி ஒரு நாளு, ஒரு வீட்டுக்கு முன்னாடி போயி
அம்மா தாயே ‘ பசிக்குது ‘ன்னு நின்னப்ப, சாப்பிட்டுட்டு எச்சில் இலை கொண்டுவந்து வெளியே போட்ட ஒரு பொண்ணு என்னைப் பாத்துட்டு வாந்திவர்ரமாதிரி குமட்டிக்கிட்டு உள்ளே ஓடினப்புறம், ஒரு ஆளு வந்து எட்டிப் பார்த்துட்டு சொன்னானே… ‘அம்மா, வெளியே ஒரு தரித்திரம்வந்து நிக்குது; ஏதாவது போட்டு அனுப்பு. இவனெல்லாம் ஏன் தான் உசிரை வெச்சுக்கிட்டு இருக்கானோ இந்தத் தீராத நோயோடே ‘ ன்னு…
‘அந்த வார்த்தையைக் கேட்டவுடனே அங்கே நிக்க முடியாமத் திரும்பினப்போ, ‘இந்தப்பா பரதேசி ‘ ன்னு கூப்பிட்ட அந்தக் குரல் இருக்கே, அதிலே இருந்த ஆறுதல்தான் உலகத்திலே வாழணும்னு ஆசை குடுத்திடிச்சி… ராமலிங்கசாமி மாதிரி காதோரத்திலே முக்காட்டுத் துணியைச்செருகிக்கிட்டு கையிலே சோத்தோட எதிரே ‘ என் பையன் கொஞ்சம் வாய்த்துடுக்கு…சாகறதும் இருக்கறதும் நம்ம கையிலா இருக்கு ‘ ன்னு சொல்லிக்கிட்டே கொவளையிலே சோத்தைப் போட்டாங்க.. நான் அந்த அம்மா முகத்தையே பார்த்துக்கிட்டு நின்னேன்.
தன் மகனைப் பார்த்து, ‘நீ சாகக்கூடாதா ‘ ன்னு யாரோ கேட்டுட்ட மாதிரி அவங்க கண்ணில தண்ணி கொட்டிக்கிட்டே இருந்தது… ‘
–அன்றைக்குப் பிறகு அவன் பகலில் பிச்சைக்குப் போவதில்லை. இருட்டிய பிறகு யார் கண்ணிலும் படாமல் தலையில் முக்காடிட்டுக்கொண்டுதான் போவான். மூன்று வேளைக்கும் முதல் நாளிரவு ஒருவேளை எடுத்த பிச்சைதான் சில நாட்களில் அதுவே அதிகமாகி அடுத்த நாளைக்கும் இருந்துவிடுவதும் உண்டு.
தூணில் சாய்ந்து உட்கார்ந்திருந்த பிச்சைக்காரன் நிறைவாக இருந்த வயிற்றைத் தடவி விட்டுக்கொண்டான். ‘சாப்பாடு கொஞ்சம் அதிகம்தான்… ‘ என்று மறுபடியும் ஒரு ஏப்பம் விட்டவாறு, ‘முருகா ‘ என்று எழுந்தான். தரையில் விரித்த கந்தலை எடுத்துத் தலையில் முண்டாசாகக் கட்டினான். மூலையில் இருந்த தடியையும் கையில் எடுத்துக்கொண்டு ஏரிக் கரையை நோக்கி நடந்தான்.
‘ம்…உடம்பிலே வியாதி இருந்தா என்ன ? உசிரு இருக்கறது நல்லாத்தான் இருக்கு. நாக்குக்கு ருசியா திங்கிற சொகம்; கண்ணுக்குக் குளிர்ச்சியா பாக்கற சொகம்; காதுக்கு எதமா கேட்கற சொகம்…வியாதி இருந்தால் இதெல்லாம் கெட்டுப்பூடுதா ?… ‘
ஏரிக்கரையின் ஓரமாக ரயில்வே லைன் மேட்டுச் சரிவில் தடிக்கம்பை ஊன்றியவாறு உட்கார்ந்திருந்த பிச்சைக்காரன் பீடிப் புகையைக் காற்றில் ஊதிவிட்டான்…
‘அப்பாடா ‘ சாப்பிட்டவுடனே வயித்திலே என்னமோ ஒரு வலி ‘ திங்கறதிலே ஒண்ணும் சொகமில்லே: ஆனா, தின்னாத்தான் சொகம். ஒடம்பிலே சேத்துக்கறதா சொகம் ? உடம்பிலேருந்து எல்லாத்தையும் போக்கிக்கறதிலேதான் சொகம். உடம்பையே போக்கிக்கிட்டா ?… சொகந்தான் ‘ ஆனா, உடம்பிலே இருக்கிற சொரணையே போயிட்டா, சொகம் ஏது ? ‘
இப்பொழுது அவன் முழங்காலளவு தண்ணீரில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்தான். நிலவும் நட்சத்திரங்களும் அவன் கண்களுக்கும் அழகாகத்தான் தெரிந்தன.
‘ம்….தோ… அதான் சப்தரிஸி மண்டலம். அந்த நாலு நச்சத்திரம் சதுரமா இருக்கு; அதுக்கு ஓரமா வாலு மாதிரி மூணு நீட்டிக்கிட்டு இருக்கே; அந்த மூணுலே நடுவாலே இருக்குதே, அதுக்குத் தள்ளி மங்கலா.. அதான் அருந்ததி நச்சத்திரம்…சர்த்தான், நமக்கு ஆயுசு கெட்டி ‘ அருந்ததி தெரியுதே… அம்மாஞ் சுளுவா எல்லாருக்கும் தெரியுமா அது ? லேசா எழுதிக் கலைச்சிட்ட மாதிரி… புள்ளி மானத்திலே இருக்கா, கண்ணுலே இருக்கான்னு கண்ணைக் கசக்கிட்டு எங்கியுமில்லேன்னு சொல்லிடுவாங்க பலபேரு… அருந்ததியைப் பாத்தவனுக்கு ஆறுமாசத்துக்குச் சாவு இல்லேம்பாங்க… ‘
நிலவொளியில் பளபளத்துக்கொண்டிருக்கும் ஏரி நீரில் புரண்டு எழுந்து குளுமை பெற்றுவரும் தென்றல் காற்று அந்த வியாதிக்காரனின் உடலையும் தழுவத்தான் செய்தது. நீரின் அலைகள், சின்னஞ் சிறு கால்கள் சலங்கை அணிந்து சதிராய் நடந்து வருவதுபோல் தரையில் மோதி மோதித் தளதளக்கும் இனிய நாதத்தை அவன் செவிகளும் கேட்டன. கரையோரத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த காட்டுப் பூக்களின் நெடிமிக்க போதை மணம் அவனது நாசியையும் துளைக்கத்தான் செய்தது… அவன் வாழ ஆசைப்படுவதில் என்ன தவறு ?
வெகு நேரத்திற்குப் பிறகு தண்ணீரிலிருந்து கரையேறி வந்து, அங்கு கழற்றிப் போட்டிருந்த கான்வாஸ் ஷஉஸை எடுத்து குனிந்து நின்று காலில் அணிந்துகொண்டான்; அப்படியே அவன் தலை நிமிரும்போது…எதிரே…
நீண்டுசெல்லும் இருப்புப் பாதையில் வளைந்து திரும்பும் அந்தக் கண்ணுக்கெட்டிய எல்லையில் வெளிச்சம் தெரிந்தது…ஒரு துண்டு வெளிச்சம்தான். அந்த ஒளிக்கீற்றின் அசைவால் தரையில்செல்லும் இருப்புப்பாதையிலும், வானில் செல்லும் தந்திக் கம்பிகளிலும் ஒரு ஜொலிப்புத் துண்டம், விட்டு விட்டுத் தாவிச் செல்லுவது போலிருந்தது. தூரத்தில் ரயில் வருகின்ற ஓசை லேசாகக் கேட்டது.
‘அடேயப்பா ‘ மெயிலு வரானோ ? மணி பன்னனெண்டா ஆயிடுச்சி ‘ ‘ என்று தண்டவாளத்தைக் கடப்பதற்காகக் கைத்தடியைச் சரிவில் ஊன்றித் தட்டுத் தடுமாறி ரயில்வே லைன் மேட்டின் மீது ஏறும்போது தூரத்தில்…
நீண்டு செல்லும் இருப்புப் பாதையின் வளைந்து திரும்பும் கண்ணுக்கெட்டிய எல்லையில் இரண்டடி உயரத்திற்கு, வெள்ளையாய் அசைகின்ற உருவம்…ஏதாவது மிருகமா ? அல்லது…
கால்களை மண்டியிட்டு தரையில் ஊர்ந்து வந்த அந்த மனித உருவம், ரயில்வேலைன் மீது ஏறியதும் எழுந்து நின்றது. சுற்றிலும் ஒருமுறை பார்த்து, தன் பின்னால் பிச்சைக்காரன் வரும் திசையைப் பார்க்கத் திரும்பியபோது அதற்குள் நிற்க முடியாமல் கால்கள் நடுங்க, மெல்லக் கைகளைத் தரையில் ஊன்றித் தண்டவாளத்தின்மீது உட்கார்ந்துகொண்டது. பிறகு உறுதியுடன் இரண்டு தண்டவாளங்களுக்கும் குறுக்காக விறைத்து நீட்டிப் படுத்துக்கொண்டது.
‘அடச்சே, மனுசப்பயதான் டோய் ‘ உசிரை வெறுத்துட்டான் போல… ஐயையோ ‘ உங்களுக்கு ஏண்டா புத்தி இப்படி போவுது ? வெளிச்சம் வேகமா வருதே ‘ ‘ என்று பதறியவாறு, விரல்களில்லாத பாதங்களுக்குப்பாதுகாப்பாய் இருந்த கான்வாஸ் ஷஉஸ் தேயத் தேய இழுத்தவாறு தாவித் தாவி ஓடிவந்த பிச்சைக்காரனின் செவிகளில் தூரத்து ரயில் சத்தம் பேரோசையாகக் கேட்டது.
ரயிலின் ஓசை சமீபித்துவிட்டது. பிச்சைக்காரன் ஓடி வந்த வேகத்தில், கண்களை இறுக மூடித் தண்டவாளத்தின் குறுக்காக விறைத்து நீட்டிக் கிடந்தவனின் விலாவுக் கடியில் கைத்தடியைக் கொடுத்து, மயானத்தில் பிணத்தைப் புரட்டுவது போல் நெம்பித் தள்ளினான். அவனைத் தள்ளிய வேகத்தில், வியாதிக்காரன் இரண்டு உள்ளங் கைகளாலும் பற்றிப் பிடித்திருந்த கைத்தடி எகிறி விழுந்தது. தண்டவாளத்திலிருந்து உருண்டு எழுந்த அந்த இளைஞன் ஒன்றும் புரியாமல் எதிரிலிருப்பவனை வெறித்து விழித்தான். மறுபடியும் தன்னைத் தள்ளிவிட்டு அவன் ரயிலின் முன்னே போய் விழுந்துவிடுவானோ என்ற பயத்துடன் தனது கைகள் இரண்டையும் அகல் விரித்துக்கொண்டு அவன் மீது பாய்வதுபோல் நின்று, ‘வேணாம் ஐயா, வேணாம் ‘ உசிரு போனா வராது… ‘ என்று கெஞ்சினான் வியாதிக்காரன். அவன் முன்னே இரண்டு கால்களும் வெடவெடக்க உடலே நடுங்க நின்றிருந்தான் அந்த இளைஞன்.
அப்பொழுது ‘ஹோ ‘வென்ற பேரிரைச்சலோடு வந்த மெயில்வண்டி, அந்த இருவரின் மீது தன் நிழலை ஏற்றி இழுத்தவாறு கடகடத்து ஓடியது. ரயிலின் பேரோசை அருகே அதிர்ந்து நகரும்வரை மெளனமாய் நின்றிருந்த இருவரும், ரயில் அவர்களை கடந்து போனபின் அதன் பின்புறத்தைப் பார்த்தனர். செக்கச் சிவந்த ஒற்றை விளக்கு ஓடி ஓடித் தூரத்தில் மறைந்தது. நின்றிருந்த இளைஞன் கால்கள் நிலைக்காமல் உட்கார்ந்துக்கொண்டான். வியாதிக்காரன் கையிலிருந்து எகிறிப் போன கைத்தடியைத் தேடி எடுத்துக் கொண்டு வந்தான். ‘யோவ் ‘ உன்னைச் சொல்லி குத்தமில்லை ஐயா…இந்த எடத்து ராசி அப்படி ‘ ஆமா, இந்த எடத்துக்கு ஒரு காவு வேணுமினு இருக்கு. ஒண்ணு ரெண்டு உன்னோட மூணு ஆச்சு, நாளைக்கிப் பொழுது விடியட்டும்; ரெண்டு எலுமிச்சம் பழத்தையாவது வாங்கி வெக்கணும். முந்தாநாளு அப்படித்தான்–ஏரிக் கரையிலே யாரோ ஒரு அம்மாவும் ஐயாவும் கொழந்தையை விட்டுட்டு கட்டுச்சோத்தை அவுத்து வெச்சிச் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க… அதுக்கென்னா தெரியும் –பச்சைபுள்ளை ‘ நடந்து நடந்து வந்து தண்டவாளத்திலே ஏறிட்டுது…இந்த இடம்தான். ரயிலு வார நேரம்…அப்புறம், நான் பாத்துட்டேன்…வேற யாரையுங்காணோம். சர்த்தான், ஆபத்துக்குப் பாவமில்லேன்னு தொட்டுத் தூக்கிட்டேன்… ‘ என்று சொல்லிவிட்டு ஒரு வநாடி மெளனமாகி நின்றான். பிறகு எதையோ நினைத்துப் பெருமூச்சுடன், ம்…..இருக்காதா…பெத்தவங்களுக்குத்தான் தெரியும் புள்ளை அருமை ‘ ‘ என்று தன் நினைவுக்கு அவனே சமாதானம் சொல்லிக்கொண்டு தொடர்ந்தான்; ‘எதுக்குச் சொல்ல வந்தேன்னா, இந்த இடத்து ராசி அப்படி இன்னக்கிக் காத்தாலே கூட ஒரு எருமை மாடு… ஆபத்துன்னு வந்தா மனுசனுக்கே புத்தி மாறிப்பூடுது. எருமை என்னா பண்ணும் ? கூடுஸஉ வண்டி வந்துட்டான். இஞ்சினுக்காரன் ஊதறான்…ஊதறான்…இது என்னடான்னா, லைனைவுட்டு நவுறாம, நேரா ஓடிக்கினே இருக்குது. அவன் வந்த வேகத்திலே பிரேக் போட்டாப் புடிக்கிதா, என்னா எழவு ?…ரயிலும் ஓடியாருது, எருமையும் ஓடுது. நானு ஒரு பக்கத்திலே ஓடி, கல்லுங்களை எடுத்து அடிச்சிக்கினே இருக்கேன். அப்புறம், சும்மா ஒரு மயிரிழையிலே தப்பிச்சிதுன்னு வெச்சிக்கியேன்… ‘ என்று அந்த இடத்தின் ராசியை விவரித்தான் வியாதிக்காரன்.
அந்த இளைஞன் தலையைக் குனிந்து மெளனமாய் உட்கார்ந்திருந்தான். வியாதிக்காரன் ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டான். ‘நா ‘ ஒருத்தன் இந்தப் பக்கந்தானே சுத்திக்கிட்டிருக்கேன் ‘ இப்ப என்னடான்னா, ஏதாவது ஆடு கீடு வந்து நிக்குதோன்னு ஓடியாந்தேன்…நல்லவேளை; ஒரு மனுஷனைச் சாவுலேருந்து தடுத்தாச்சி…ம்…நாம்பளா தடுக்கறோம் ?…ஒனக்கு இன்னம் ஆயுசு இருக்கு…என்னமோ, தடுக்கணும்னு இருக்கு, தடுத்தாச்சி…இல்லாட்டி, மனுசன் தடுத்தா வர்ர சாவு நின்னுடப்போவுது ? ‘ என்று வாயில் புகையும் பீடியுடன் தோளில் கிடந்த துண்டை எடுத்துத் தலைப்பாகையைச் சுற்றிக்கொண்டான். பிறகு, மண்ணில் தலைகுனிந்தவாறு காலை மடக்கிப்போட்டு உட்கார்ந்திருந்த அந்த இளைஞனை மெளனமாக உற்றுப் பார்த்தான். அவன் அழகாக இருந்தான்; நல்ல நிறம். தலைமயிர் நிலா வெளிச்சத்தில் கருகருவெனப் பளபளத்தது. வெள்ளை ஷர்ட்; எட்டுமுழ வேட்டி உடுத்தியிருந்தான். அவன் தன்னைப் போல் பரம ஏழையோ, பிச்சைக்காரனோ, வியாதிக்காரனோ அல்லவென்று தோன்றியது. ‘வறுமையோ பட்டினியின் கொடுமையோ அந்த இளைஞனிடம் தெரியவில்லை. பின் எதற்காகத் தற்கொலை செய்து கொள்ள வந்தான் ? ‘ என்று தெரிந்துக்கொள்ளத் துடித்தது வியாதிக்காரனுக்கு.
‘சர்த்தான், எந்திரிச்சி வாய்யா ‘ தோ…அங்கே சத்தரத்துத் திண்ணையிலே போயிக் குந்துவோம்…இந்தச் சத்தரம் இருக்கே… ‘ என்று பேசிக்கொண்டே நடந்து திரும்பிப் பார்த்த பிச்சைக்காரன், அவன் இன்னும் எழுந்திருக்காமல் தூரத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டான். ‘என்னாயா, குந்திக்கினே இருக்கியே ? இனிமே அடுத்த ரயிலு காத்தாலே ஆறு மணிக்கு வடக்கே போற பார்சலுதான்; வா போவோம் ஒலகத்துலே மனுசன்னு பொறந்துட்டா கஸ்டமும் இருக்கும் சொகமும் இருக்கும். கஸ்டத்துக்குப் பயந்து செத்துபூட்டா, சொகத்தை அனுபவிக்கிறது யாரு ? கஸ்டத்தைப் பார்த்து சிரிக்கணுமய்யா. ஏன்னா, கஸ்டம் வருதுன்னா பின்னாடிச் சொகம் காத்துக்கிட்டு இருக்குதுன்னு அர்த்தம்…ம், எழுந்திரு, போலாம்… ‘ என்று உற்சாகமாகப் பேசும் பிச்சைக்காரனை நிமிர்ந்து பார்த்துக் கலங்குகின்ற கண்களோடு முகத்தில் பரிதாபகரமான புன்சிரிப்போடு அந்த இளைஞன் எழுந்திருப்பதற்கு முன்னால் உதவிக்குக் கை நீட்டினான்.
‘தெய்வமே ‘… இவன் கையை புடிச்சி நான் தூக்கறதாவது ? ‘ என்று விலகிக்கொண்டான் பிச்சைக்காரன். அந்த இளைஞன் தன் முயற்சியால் கைகளை ஊன்றி ஒருவாறு எழுந்து நின்றான். பிறகு நிதானித்து, காலைப் பதனமாக ஊன்றி மறு காலை உயர்த்தும்போது தடுமாறி விழ இருந்தவன், பிச்சைக்காரனின் தோள்களைப் பிடித்துக்கொண்டு நின்றான். அவன் பிடித்த வேகத்தில் நிலைகுலைந்த பிச்சைக்காரன் சமாளித்தவாறு, அப்பொழுதுதான் அந்த இளைஞனின் கால்களைப் பார்த்தான். அவை பார்ப்பதற்கு ஒழுங்காக இருப்பன போன்று தோன்றின. என்றாலும் கணுக்காலில், தொடைகள் சேர்கின்ற இடம் முழுதும் — முழங்கால் மூட்டுக்கள் உறுதியற்று நடுங்கிக் கொண்டிருந்தன. முழங்காலுக்கு கீழே நான்கு புறமும் மடங்கும் தன்மையுடன் கால்கள் தொளதொளத்துச் சூம்பிக் கிடந்தன.
சற்று நேரத்துக்குமுன் தூரத்துப் பார்வைக்கு இரண்டடி உருவமாய்க் குறுகித் தெரிந்த அந்த உருவம் நினைவுக்கு வந்தது பிச்சைக்காரனுக்கு. அந்த இளைஞன் நடக்க முடியாமல் மண்டியிட்டுத் தவழ்ந்து வந்திருக்கிறான் என்பதை யூகித்து, ‘இந்தாய்யா ‘ இந்த கம்பை வச்சிக்கிட்டு நடக்கிறியா ? ‘ என்று கைத்தடியைக் கொடுத்தான்.
‘ஊஹஉம், முடியாது. இப்பிடியே வர்ரேன்…நீ நடந்தா நானும் வருவேன்… ‘ என்று அவன் தோள்களை இறுகப் பற்றியவாறு கூறினான் நொண்டி.
வியாதிக்காரன் லேசாகச் சிரித்தான். ‘கம்பு இல்லாம நானும் நடக்கமுடியாது…இருந்தாலும் சமாளிச்சிக்கிடலாம்னுதான் குடுத்தேன்…கையிலே கம்பு இருந்தா உன்னைத் தூக்கிக்கிட்டுகூட நடப்பேன்…வா போவோம் ‘ என்று கைத்தடியைப் பூமியில் உறுதியாய் ஊன்றித் தாங்கித் தாங்கி நடந்த வியாதிக்காரனின் தோளில் தொங்குவதைப்போல் பிடித்துக்கொண்டு ஊனக் கால்களைத் தத்தித் தத்தி இழுத்தவாறு நகர்ந்தான் நொண்டி.
‘ஐயா… ‘
‘ம்…. ‘
‘ரொம்பப் பாரமா இருக்கேனா ?….உம்….உம்…பார்த்து…. ‘
‘அதெல்லாம் ஒண்ணுமில்லே….பயப்படாம வா… ‘
‘இப்பிடி எல்லாருக்கும் பாரமா இருக்கப் பிடிக்காமத்தான்…பிடிக்காமத்தான்… ‘ என்று விம்மினான் நொண்டி.
—உசிரையே விட்டுடலாம்னு பாத்தியா ? ஏய்யா எப்பப்பார்த்தாலும் உன்னைப் பத்தியே உனக்கு நெனப்பு ?… ‘
‘என்னாலே எல்லாருக்கும் கஷ்டம்தான்… ‘
அவர்கள் இருவரும் தட்டுத் தடுமாறிப் போய்க்கொண்டிருந்தார்கள்.
நொண்டியும் வியாதிக்காரனும் நிலா வெளிச்சம் இறங்கிக் கொண்டிருக்கும் திண்ணையில் படுத்திருந்தனர். வியாதிக்காரன் பாதிபடுத்தும் பாதி படுக்காமலும் தூணில் சாய்ந்து கால்களை நீட்டிக்கொண்டு பீடி புகைத்துக்கொண்டிருந்தான்..
‘பீடி குடிக்கிறியா ஐயா ? ‘
‘வேண்டாம்; பழக்கமில்லை… ‘ என்று குப்புறப் படுத்திருந்த நொண்டி பதில் சொன்னான். திடாரென்று குப்புறக் கிடந்த முகத்தைத் திருப்பி வியாதிக்காரனைக் கேட்டான் நொண்டி: ‘கஷ்டத்துக்கு அப்புறம்தான் சொகம்னு சொன்னியே…எனக்கு இனிமே ஏது சொகம் ? சொகமே வராதுன்னு தெரிஞ்சும் எதுக்கு நான் இருக்கணும் ? ‘
‘சொகமே வராதுன்னு முடிவு சொல்லறதுக்கு நீ யாரு ? கஷ்டம் வரப் போவுதுன்னு நீயா முன்கூட்டியே சொன்னே ? அது திடார்னு வந்தமாதிரி இது வராதா ‘….அதெல்லாம் அவன் பார்த்துச் சொல்லணும் ‘ என்று வானத்தை நோக்கிப் புகையை ஊதினான் பிச்சைக்காரன்.
வியாதிக்காரனுக்கே தான் சொன்ன பதில் நொண்டியின் மனச் சமாதானத்துக்குத்தான் என்று தெரிந்தது.
‘சாகப் படாது ஐயா…அதான் ஒரு நாளைக்கு எல்லாருமே சாகப் போறமே ?… அதுவரைக்கும் இருந்துதான் சாவமே… ‘ என்று சமாதானம் கூறினான். ‘அது சரி; நீ பாட்டுக்குச் சாகறதுக்கு வந்துட்டியே…உனக்கு தாயி, தகப்பன், குடும்பம்னு ஒண்ணுமில்லியா ? என்னை மாதிரி அநாதைதானா ? ‘ என்றான் வியாதிக்காரன்.
‘அம்மா… ‘ என்று பெருமூச்செறிந்தவாறு எழுந்து உட்கார்ந்த நொண்டி, சில விநாடிகள் மெளனமாய்த் தலை குனிந்திருந்துவிட்டு, விம்மி விம்மி அழ ஆரம்பித்தான்.
‘வருத்தப்படாதே ஐயா ‘ என்று ஆறுதல் கூறினான் பிச்சைக்காரன். முகத்தைத் துடைத்துக் கொண்டு சொன்னான் இளைஞன்.
‘அதோ தெரியுது பாரு ‘ என்று ரயில்வே லைனுக்கு நேரே வரிசையாகத் தெரியும் சில வீடுகளின் கொல்லைப்புறத்தைக் காட்டி, ‘அங்கேதான் எனக்கு வீடு. அம்மா இருக்காங்க, தம்பி இருக்கான். தம்பிக்கிக் கல்யாணமாகிக் கொழந்தைகள்கூட இருக்கு. என்னாலேதான் யாருக்கும் உதவியுமில்லே, சந்தோஷமுமில்லே. நான் வயித்திலே ஜனித்ததிலிருந்து எங்க அம்மா என்னைச் சுமந்துகிட்டே இருக்காங்க. அம்மாவுக்கு ஒரே நம்பிக்கை–எனக்கு காலு வந்திடும்னு…எப்பப் பார்த்தாலும் தம்பிகிட்டே ‘அந்த டாக்டரைப் பார்க்கணும்னு ‘ பணத்தை வாங்கிக்கிட்டு டாக்டர்களைப் பார்த்ததுதான் மிச்சம். அவன் என்ன பண்ணுவான் ?…வரவரத் தம்பியும் குடும்பஸ்தனாக மாறிப் புள்ளைகளும் பெண்டாட்டியுமா ஆனப்புறமும் நான் ஒரு சொமையா இருக்கிறதா ? எனக்காக அம்மாவும் தம்பியும் தினம் சண்டை போடறாங்க…தம்பி கோவத்திலே என்னை நொண்டின்னு சொல்லிட்டான். அம்மா, ‘ஓ ‘ ன்னு அழுதுட்டாங்க ‘ என்று நொண்டி சொல்லும்போது வியாதிக்காரனின் மனசில், ராமலிங்கசாமி மாதிரி காதோரத்திலே முக்காட்டுத் துணியைச் சொருகிக்கொண்டு ‘பரதேசி ‘ ன்னு கூப்பிடும் அந்த குரலும் முகமும் தோன்றின. நீட்டிய காலகளின் முழந்தாள் முட்டுகளைப் பிசைந்துகொண்டே சொன்னான் நொண்டி:
‘நேத்து ஏதோ ஒரு நாட்டு வைத்தியர் இந்தமாதிரிக் குறையெல்லாம் தீத்து வைக்கிறார்னு யாரோ சொன்னாங்க — அம்மா கையிலே இருந்த காசை முந்தானையிலே முடிஞ்சுண்டு ‘வாடா ‘ ன்னு உசிரைவாங்கி என்னை அழைச்சிண்டு போறப்ப நான் என்ன பண்ணுவேன், சொல்லு, சரின்னு அம்மா தோள்லே தொத்திண்டு போனேன். அந்த வைத்தியன் இருக்கிற இடம் நாலு மைல் இருக்கு…பஸ்ஸிலதான் போகணும்…போனோம்…அம்மா ஆசையிலே, வழக்கம்போல இல்லாம ஒரே தடவையிலேயே மண்ணு விழுந்திட்டுது…என் காலைப் பாத்துட்டு முடியாதுன்னுட்டான் அவன். ‘இவன் ஒண்ணும் நல்ல வைத்தியன் இல்லே…ஊரை ஏமாத்தறவன் ‘ னு என்னை அழைச்சிண்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டாங்க அம்மா… பஸ்ஸிலே ஒரே கூட்டம்… ‘
ஒரு நிமிஷம் பேச்சை நிறுத்திக் கண் கலங்க எங்கோ பார்த்தவாறு வெறித்த விழிகளுடன் நெஞ்சில் பெருகி, தொண்டையில் அடைத்த துயரை விழுங்கினான் நொண்டி. அவன் வாழ்வின் மீது கொண்ட வெறுப்புக்கெல்லாம் எந்த ஒரு நிகழ்ச்சி காரணமாய் அமைந்து அவனைச் சாவின் பீடத்துக்குக் கொண்டு வந்து தள்ளியதோ — அந்த நிகழ்ச்சி மனசில் தெரிந்தது. அதை மனசால் பார்த்துக்கொண்டே வியாதிக்காரனிடம் விவரித்தான் நொண்டி.
அந்த காட்சி —
வெள்ளைப் புடவையுடுத்தி முக்காடிட்ட அந்த வயோதிகத் தாயின் தோளைப் பற்றி, தன்னுடலின் முழுப் பாரத்தையும் அவள் மேலே சுமத்திக்கொண்டு, ‘கட்டாலே போறவன்; யாராரோ சொன்னாளேன்னு நம்பி வந்தேன். இவன் ஒண்ணும் வைத்தியன் இல்லே; பில்லி சூனியம் வைக்கறவன்… நீ கவலைப்படாதேடா கண்ணா ‘ நான் உன்னை அடுத்த மாசம் வேலூர் மிஷன் ஆஸ்பத்திரிக்கி அழைச்சிண்டு போயி… ‘ என்று ஏதோ சொல்ல வரும்போது, அவள் தோளில் நெற்றியைத் தேய்த்துக்கொள்வதுபோல் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே சொன்னான் மகன்:–
‘எனக்குக் ‘காலில்லையே ‘ங்கற கவலைகூட இல்லேம்மா; நீ எனக்காகப்படற சிரமத்தைப் பார்த்தாத்தான் ரொம்பக் கஷ்டமா இருக்கம்மா… ‘ என்று விம்முகின்ற குரலோடு அவள் தோளில் நெற்றியைத் தேய்த்துக்கொண்டே இருக்கும்போது, பஸ் வந்தது.
‘கண்ணா, கெட்டியாப் பிடிச்சுக்கோ…பாத்து, பாத்து…இதோ, இப்பிடி உட்காந்துக்கோ ‘ என்று மகனைச் சுமந்து இழுத்தவாறு பஸ்ஸில் அவள் ஏறுவதற்குள், முன்பக்கத்தில் டிக்கட் கொடுத்துக் கொண்டிருந்த கண்டக்டர், ‘ஆச்சா ? எவ்வளவு நாழி ? ‘ என்று அவசரப்படுத்தினான். ஒருவாறு சிரமத்திற்குப்பின் பஸ்ஸில் ஏறியதும், எதிரில் இருந்த இருவர் உட்காரும் ஸீட்டில் மகனைப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு உட்கார்ந்தாள் அம்மா.
பஸ் போய்க்கொண்டிருக்கும்போது, அவனது தாய் சேலைத் தலைப்பிலிருந்த சில்லறையை எடுக்கும்போது, அவன் அகஸ்மாத்தாகத் திரும்பும்போது அவர்கள் ஸீட்டுக்கு மேலே எழுதியிருந்த ‘பெண்கள் ‘ என்ற வாசகம் அவன் கண்களில் பட்டது. அப்பொழுது ஒரு ஸ்டாப்பில் பஸ் நின்றது. அழகிய இளம் பெண்ணொருத்தி பஸ்ஸில் ஏறினாள். அவளைப் பார்த்தவாறே அருகில் வந்தான் கண்டக்டர். நொண்டி ஒரு விநாடி பெண்ணைப் பார்த்தான்; அவளது இடத்தில் தான் உட்கார்ந்திருப்பதை உணரும்போது அவனது ஆண்மை உணர்ச்சி அவனுள் ரகசியமாக வதைபட்டுக் கொண்டிருக்கும் அதே சமயம், அதைக் கொல்லுவதுபோல் கண்டக்டரின் குரல் ஒலித்தது: ‘இந்தாய்யா ஆம்பளே ‘ பொம்மனாட்டி நிக்கிறாங்க இல்லே ? ‘
அந்த நொண்டி திடாரென்று கால்கள் வந்துவிட்டது போல் எழுந்து நின்றான். அவன் எழுந்த வேகத்தில் அந்தப் பெண் அந்த இடத்தில் உட்கார்ந்துகொண்டாள். எழுந்து நின்ற நொண்டியின் கால்கள் நடுங்கின…
‘ஐயா ‘…ஐயா ‘ ‘என்ற தாயின் பரிதாபகரமான குரல் கண்டக்டரையும், அந்த பெண்ணையும் பஸ்ஸிலுள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இன்னொருவர் சொல்லித்தன் காதால் கேட்கப் பொறாத அந்த வார்த்தையை அவளே சொல்லவேண்டிய நிர்ப்பந்தம்… ‘ஐயா ‘ அவன் நொண்டி ஐயா ‘ நிக்க முடியாதையா ‘…. ‘ என்று சொல்லிக் கண்களில் வழிந்த கண்ணீருடன் எழுந்து தன் இடத்தைக்காட்டி, ‘கண்ணா, நீ இப்படி உக்காந்துக்கோடா ‘ என்று சொல்லும்போது தடுமாறி விழ இருந்த மகன், தாயின் தோளைப் பிடித்துக்கொண்டு சொன்னான்; ‘இல்லேம்மா, நான் நிப்பேன். ‘
‘உன்னாலே முடியாது கண்ணா ‘ என்று அந்தப் பெண்ணின் பக்கத்தில் மகனை உட்கார வைத்து அந்தத் தாய் நிற்கும்போது, அந்தப் பெண் எழுந்து அவன் தாயிடம் மன்னிப்புக் கேட்பதுபோல், ‘நீங்க உக்காருங்க அம்மா ‘ என்று வற்புறுத்திக் கெஞ்சினாள். கண்டக்டரின் முகம் அழுவதுபோல் மாறிவிட்டது ‘ஸார், மன்னிச்சுக்குங்க, எனக்கு முதல்லே தெரியலை ஸார்… ‘ என்று நொண்டியிடம் குனிந்து சொன்னான். நொண்டி யாருக்கும் ஒன்றும் பதில் சொல்லாமல், யார் முகத்தையும் பார்க்காமல், பக்கத்தில் அமர்ந்திருந்த தாயின் பின்னால் ஒரு குழந்தையைப்போல் முகம் புதைத்து, அழுகையை அடக்கி, நெற்றியை அவள் தோளில் தேய்த்துக் கொண்டே இருந்தான்.
பஸ் போய்க் கொண்டிருந்தது. பஸ்ஸிலிருந்த எல்லோரின் அநுதாபமும் அவன் நெஞ்சில் கனமேற்றி அவன் உயிரையே அரிப்பதுபோல்…
—நொண்டி சொல்லிக் கொண்டிருந்ததை எல்லாம் மெளனமாய்க் கேட்டவாறிருந்த வியாதிக்காரன் தன்னைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தான்.
‘இவனுக்கு இன்னும் வயசு இருக்கு, வாழ்க்கை இருக்கு… இவனுக்கு ஒரு கஸ்டம்னா வருத்தப்படறதுக்கு, உதவி செய்யறதுக்கு உறவுக்காரங்க இருக்காங்க. இவன் வாழணுன்னு ஆசைப்படறதுக்கு அன்பான தாய் இருக்கா…இவன் நொண்டின்னு தெரிஞ்சு அன்பு காட்ட, பரிதாபப்பட, பிரியம்காட்ட உலகமே இருக்கு….இவன் எதுக்கு சாகணும் ? ‘ என்று ஆரம்பித்த மனம் தன்னைப்பற்றி எண்ணும்போது…
‘எனக்கு யார் இருக்கா ? எனக்கு ஒரு கஸ்டம்னா, வருத்தப்படறதுக்கு, உதவி செய்யறதுக்கு உறவு இருக்கா ? உறவுங்கெல்லாம் உதறித்தள்ளி எத்தனையோ காலம் ஆயிடுச்சே ? நான் வாளணும்னு ஆசைப்படற ஜீவன் என்னைத் தவிர இன்னொண்ணு உண்டா ? எனக்கு அன்பு காட்ட, பரிதாபப்பட, பிரியங்காட்ட யார் இருக்கா ? உலகமே வெறுத்து முகம் சுளிச்சு என்னைப் பாக்குது ‘ என்றெல்லாம் எண்ணி மெளனமாய் உட்கார்ந்திருந்தான் வியாதிக்காரன்.
நொண்டியின் இமைகளைத் தூக்கம் அழுத்த, அவன் கொட்டாவி விட்டான். அந்த சப்தம் கேட்டு வியாதிக்காரன் நொண்டியைப் பார்த்தான், ‘இந்தாய்யா, நீ சாகப்படாது,….சொல்லிட்டேன். ஒனக்குக் காலு இல்லேங்கிற நெனப்பினாலேதான் நீ கஸ்டப்படறே, மத்தவங்களையும் கஸ்டப்படுத்தறே. ‘
‘நான்தான் சொல்றேனே, எனக்குக் காலில்லாம மத்தவங்களுக்குத் தான் பாரமா இருக்கேனே ‘ எங்கம்மா வைத்தியனுக்குன்னு தம்பியைப் பணம் கேக்கறப்போ அவங்க ரெண்டு பேருக்கும் என்னாலே எவ்வளவு சண்டை ‘ எவ்வளவு வருத்தம் ‘ ‘ என்று நொண்டி சொல்ல, குறுக்கிட்ட வியாதிக்காரன், ‘ஆமாய்யா, நீ சதாநேரமும் உங்கம்மா தோளைப் புடிச்சுத் தொங்கிக்கிட்டே இருந்தா அப்படித்தான் சண்டை வரும். காலு இல்லாட்டிப்போனா என்னாய்யா ? கையாலே இந்த உலகத்தையே வளைக்கலாமே ‘ வாழ்றத்துக்குக் காலும் கையும் வேணாமய்யா. நல்ல மனசு வேணும், அறிவு வேணும். மனுசனோட அறிவு யானையைக் காட்டிலும் சிங்கத்தை காட்டிலும் வலுவானது. இல்லேங்கறதுக்காகச் செத்து இருந்தா மனுச சாதியே பூண்டத்துப்போயிருக்கும். காலு இல்லாட்டி அது இல்லாத் கொறையை மாத்திக்கிட்டு எப்படி இருக்கிறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்னா, காலு இருக்கிறங்களைக்காட்டிலும் நீ வேகமா ஓடிடமாட்டியா ?
‘மனுசனுக்கு ரெக்கை இருந்திருந்தா அவனும் பறந்துகிட்டிருப்பான். ரெக்கை இல்லாததனாலேதான் ‘விர்ரு விர்ரு ‘ ன்னு இப்ப ஏரோப்ளேன்லே பறக்கிறான். இன்னும் மானத்துலே எங்கெங்கேயோ போயி என்னென்னாத்தையோ புடிக்கிறான். இல்லேன்னு சாவறதா ? உங்கம்மாவேதான், என் மகனுக்குக் காலு இல்லாட்டி என்னா, என்னென்னா காரியம் பண்றான்னு நெனைக்க வெச்சிட்டியினா அவுங்க ஏன் உன் தம்பிகிட்டே போயி வம்புக்கு நிக்கப் போறாங்க ? நீ என்னா என்னை மாதிரி தீராத நோயாளியா ? நானே வாழறப்போ நீ சாகப்போறேங்கறியே… ‘ என்று சொல்லும்போது வியாதிக்காரனின் தொண்டை அடைத்தது. அவனது பேச்சால் வியாதிக்காரனின் நெஞ்சிலிருந்து, வாழவேண்டுமென்ற ஆசை, வாழ முடியும் என்ற நம்பிக்கை நொண்டியின் இதயத்தில் தொற்ற ஆரம்பித்தது. நொண்டி புதியதோர் நம்பிக்கையுடன் தலை நிமிர்த்தி வியாதிக்காரனைப் பார்த்தான். வியாதிக்காரன் தொடர்ந்தான்.
‘நீ என்னமோ சொல்றியே, பஸ்ஸிலே உன்னை எந்திரிக்கச் சொன்னான், அப்புறம் உட்காரச் சொன்னான்னு… அதுக்காக உன் மனசு கஸ்டப்பட்டது, நாயந்தான். தோ, என்னைப்பாரு. என்னை அந்த பஸ்ஸிலே ஏறவுடுவானாய்யா ? நீ என்னைப் பகல்லே பாத்தா இப்பிடி பக்கத்திலே உக்காந்து பேசக்கூட மாட்டே, தோ… வெளிச்சத்திலே பாரு இந்தக் கையை ‘ என்று தன் குறைபட்ட கைகளை மேலே இருந்த கோட்டை இழுத்து விட்டுக் கொண்டு நிலா வெளிச்சத்தில் நீட்டி விம்மினான்: ‘இந்தக் கை கொஞ்ச நாளைக்கு முன்னே முழுசா இருந்தது. உனக்குக் காலு இல்லே– அவ்வளவுதான். எனக்கு இருக்கிறதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா இல்லாமாப் போயிக்கிட்டே இருக்கு… இந்தக் கையாலே முந்தாநாளு ஒரு கொழந்தையைத் தூக்கிட்டேன். கொழந்தையைத் தூக்கணும்கிற ஆசையினாலேயா தூக்கினேன் ? சீ அந்த ஆசை எனக்கு வரலாமா ? தண்டவாளத்திலே வந்து நிக்குதே, ரயிலு வர்ர நேரமாச்சேன்னு பதறித்தூக்கிட்டேன். நான் வியாதிக்காரந்தான். என் உடம்பிலே சொரணைன் அத்தே போயிடுச்சி. ஆனாலும் ஒரு குழந்தையை தூக்கறோம்கிற நெனைப்பிலேயே என் மனம் சிலிர்த்துப் போச்சு… ஆனா, ஆனா…. அதுக்காக அந்தப் பெத்தவங்க என்னை அடிக்க வந்துட்டாங்க, தெரியுமாய்யா ?… மனுசனாப் பொறந்தும், மனுசனுக்குள்ள எந்தச் சொகத்தையும், எந்த உரிமையையும் அநுபவிக்க முடியாம் நான் வாழறேனே… ஒரு பிசாசு மாதிரி தனியா குந்திக்கிட்டு, வாழறதா நெனச்சி என்னையே ஏமாத்திக்கிறேனே ‘ என்று சொல்லும்போது கொஞ்சம் கொஞ்சமாக விம்ம ஆரம்பித்து விக்கிவிக்கி அழுதான் வியாதிக்காரன்.
சற்று நேரத்திற்குப்பின் கண்களைத் துடைத்துக் கொண்டு ஒரு வரண்ட சிரிப்புடன் சொன்னான்:
‘ஆமா, பெத்தவங்களுக்குத் தெரியும் புள்ளை அருமை…. சாவைக் காட்டிலும் கொடியது இல்லையா, இந்த நோயி ? அப்புறம் விஷயத்தைச் சொன்னப்புறம் ஒருமாதிரி சமாதானம் ஆனாங்க…அப்பக்கூட, ‘ஒரு கொரலு, எங்களைக் கூப்பிட வேண்டியதுதானே…நீயா தூக்கறது ? ‘ன்னு கேட்டிச்சி —அந்த அம்மா. ‘நீங்க சொல்றது நாயந்தான். தெரியாம செஞ்சிட்டே ‘ ன்னு மன்னிப்பு கேட்டுகிட்டு வந்தேன், ஏன்னா, இது பொல்லாத நோயி, மனுசனுக்கு வரக்கூடாது; ஆரம்ப காலம்னா தீத்துடலாம். இது ரொம்ப முத்தின கேஸஉ ‘ இனிமே கொறையாது; பரவும். மத்தவங்க ஜாக்கிரதையாத்தான் இருக்கணும். ஒரு தாய்க்குத் தன் குழந்தை செத்தாலும் பரவாயில்லே; இந்த நோய்வரப் பொறுக்கமாட்டா ‘ என்று அவன் தன்னையுணர்ந்து தனக்குள் முனகுவதுபோல் பேசினான்.
சில நிமிஷ மெளனத்துக்குப் பிறகு நொண்டி இரண்டாவது முறை கொட்டாவி விட்டான்.
‘தூக்கம் வருதா ? படுத்துக்க, ஐயா ‘ தூங்கர்து ரொம்பச் சொகம். செத்தாத் தூங்கமுடியாது, கேட்டுக்க, பொழுது விடிஞ்சி பெத்த மகராசிக்குப் புள்ளையாப் போய்ச் சேரு ‘ உனக்கு நான் கடைசியாச் சொல்றது இதுதான்: காலு இல்லேன்னு நெனச்சி நீ யாருக்கும் பாரமா இருக்காதே. இப்ப யாரோட துணையுமில்லாம எப்பிடி சாக வந்தியோ, அந்த மாதிரி வாழப் போ. அதிலே ஒண்ணும் வெக்கப்படவேணாம். உன்னையே பாத்து உங்கம்மா மகிழ்ந்து போவாங்க, பாரு… ‘ என்று, அணைந்திருந்த கடைசிப் பீடியைப் பற்ற வைத்துக் கொண்டான் வியாதிக்காரன். படுத்த சற்று நேரத்துக்கெல்லாம் நொண்டி தூங்கிப் போனான். வியாதிக்காரன் தூக்கம் வராமல், கீழே கிடந்த துண்டுப் பீடிகளைப் பொறுக்கிப் பற்றவைத்துக் கொண்டு தூணில் சாய்ந்து வானத்தை வெறித்தவாறு உட்கார்ந்திருந்தான்.
‘அதோ, ரொம்ப தூரம் தள்ளி வந்திருச்சே சப்தரிஸி மண்டலம்…நாலு நச்சத்திரச் சதுரத்திக்கு ஓரமா, வாலு மாதிரி இருக்கற மூணுக்கு நடுவாலே, ஓரத்திலே, ஆமாமா, அருந்ததி…அருந்ததியைப் பார்த்தவனுக்கு ஆறு மாசத்துக்குச் சாவில்லே ‘ அடிச் செருப்பாலே ‘ இன்னும் ஆயுசு அதிகம் வேணுமா என் கட்டைக்கி ? ‘ என்று விரக்தியும் வேதனையும் குழைய முனகிக்கொண்ட வியாதிக்காரன், கையிலிருந்த பீடியைத் தரையில் நசுக்கித் தேய்த்தான். அவன் பார்வை சப்தரிஷி மண்டலத்தை வெறித்தது.
விடிந்து ஆறு மணிக்கு வடக்கே போகும் பார்சல் வண்டியின் அவலமான கூக்குரல் கேட்டு, சத்திரத்துத் திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த நொண்டி கண் விழித்தான்.
அவனருகே வியாதிக்காரனின் கறை படிந்த கந்தலும், பளபளப்பான புதிய தகரக் குவளையும் தனியாகக் கிடந்தன. அங்கே ஈக்கள் மொய்த்தன.
தூரத்தில், நீண்டு செல்லும் இருப்புப் பாதையின் வளைந்து திரும்பும் எல்லையில் புகை கக்கி அழுதவாறு பார்சல் வண்டி நின்றிருந்தது ‘ அங்கு மனிதர்கள் மொய்த்துக் கொண்டிருந்தனர்.
‘இங்கே சுத்திக்கினு இருப்பானே — அந்தப் பெருவியாதிக்காரன், ரயிலு முன்னாடி போயி விழுந்துட்டான் ‘… ‘
‘அவன் எனக்கு வாழக் கற்றுக் கொடுத்தான்; நான் அவனுக்குச் சாகக் கற்றுக் கொடுத்தேன். அவன் என்னைச் சந்திக்காமல் இருந்திருந்தால் ? ‘ –நொண்டியின் கண்கள் கலங்கின.
‘அந்த இடத்தின் ராசியோ ?–தன்னையே காவு தந்து இன்னொரு விபத்து ஏற்படாமல் தடுக்க முயற்சியோ ? அவன் மேனியிலிருந்ததா பயங்கர தொத்து வியாதி ?…இல்லை; என் மனசில் தோன்றியதே—தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் –அந்த ‘வாழ்க்கையின் வெறுப்பு ‘ த்தான் பயங்கர வியாதி…அதற்கு அவன் பலியாகிவிட்டான். ‘
திடாரென்று ரெயில்வே லைனுக்கு அப்பால் வரிசையாகத் தெரியும் வீடுகளின் கொல்லைப்புறக் கதவுகளைத் திறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோரின் நடுவே இருந்து, ‘ஐயோ ‘ கண்ணா ‘ ‘ என்ற அலறல் ரயில்வே லைனுக்கு அப்பால் வெகு தூரத்திலிருந்த நொண்டியின் வயிற்றைக் கலக்கியது.
‘அம்மா ‘ நான் இருக்கிறேன்….அம்மா ‘ ‘ என்று கோஷித்தவாறு வேகமாய்த் தவழ்ந்தோடினான் அவள் மகன்.
‘மகனே ‘….மகனே ‘… ‘ என்று ரயில்வே லைன் மேட்டின் மீது விழுந்து புரண்டு கொண்டிருந்த அவன் தாய் ‘நான் இருக்கேன் ‘ என்ற குரல் கேட்டு அவனைப் பார்த்து ஒன்றும் புரியாமல் அடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு கண்ணீருடன் சிரித்தாள். பிறகு, ‘யார் பெத்த மகனோ ‘ ‘ ரயில் சக்கரத்தைப் பார்த்து அழுதாள்.
அவள் அருகே வந்த அவள் மகன் அவள் தோளில் முகம் புதைத்து நெற்றியைத் தேய்த்து அழுதுகொண்டே சொன்னான்: ‘அம்மா ‘ நான் இருக்கேம்மா…அது உன் மகனில்லே… அது. அந்த மனுஷன்…அவன் செத்திருக்கக் கூடாது அம்மா….ஆ ‘…. ‘ என்று பெருங்குரலில் கதறி அழுதான் நொண்டி.