நாகூர் ரூமியின் இலியட் குறித்து…

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

ஜடாயு


மேற்குலகின் முக்கியமான தொன்மைக் காவியம் ஒன்றை முழு வடிவில் தரும் முயற்சிக்காக நாகூர் ரூமிக்குப் பாராட்டுக்கள். இலியட் பற்றி பல இடங்களில் கேள்விப் பட்டிருக்கும் தமிழ் வாசகர்கள் அதனை நேரடியாகப் படித்து அனுபவிக்க இது உதவும். சென்ற திண்ணை இதழில் இந்த ஆக்கம் பற்றி அவர் கூறியிருப்பது குறித்து சில விமரிசனங்கள் –

// ரூமி: “நிம்மதியாக ஒரு நீண்ட பெருமூச்சை நான் விட்டுக்கொள்ளும் நேரம் இது. ஆமாம். கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக என் கைவிரல்கள், முதுகெலும்பு, முழங்கை எலும்பு ஆகியவற்றுக்கு சொல்ல முடியாத வலியையும் வேதனையையும் கொடுத்த வேலை முடிந்துவிட்டது. அந்த பெருமை ஹோமருக்கே போய்ச்சேர வேண்டும்! Classic என்று உலகம் போற்றும் ஹோமரின் ‘இலியட்’ காவியத்தை தமிழ்ப்படுத்தும் காரியத்துக்குத்தான் இந்த எட்டு மாதங்கள். எனது முழு இரவுகளும் பகுதி பகல்களும் இதற்காக செலவிடப்பட்டன.” //

இந்தப் பெரிய இலக்கியம் ஏற்படுத்திய அக ஆழ்தல்கள், அனுபவம் பற்றி இல்லாமல் இப்படி ஆரம்பிக்கிறாரே.. புற உறுப்புக்களை மட்டும் தான் இந்த உழைப்பில் ஈடுபடுத்தினாரோ? ஒரு பெரிய படைப்பை எழுதி முடித்த அனுபவம் பற்றி ஒரு கலைஞன்/எழுத்தாளன் இவ்வளவு தான் சொல்ல முடியுமா? இது போன்ற சந்தர்ப்பத்தில் ஜெயமோகன் என்ன சொல்லியிருப்பார் என்று கற்பனை செய்து பார்க்கிறேன்..

// ரூமி: ஆனால் கம்பனைப் பொறுத்தவரை தாமரை வெறும் கற்பனை சார்ந்த விஷயிமாகவே உள்ளது. ஆனால் ஹோமரின் வெண்கலம் சமுதாய வாழ்வு சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கலாம். //

இது மிகவும் பழுதுபட்ட புரிதல். கம்பனின் தாமரை என்பது வெறும் கற்பனை உருவகம் அல்ல. “மையறு மலரின் நீங்கி யாம் செய் மாதவத்தின் வந்து செய்யவள் இருந்தாள்” (மிதிலைக் காட்சிப் படலம்) என்ற பாடலில் அது ஏன் “மையறு மலர்” ஆகிறது? இந்திய இலக்கிய மரபில் அதி அற்புதமான ஆழ்மனப் படிமங்களும், ஆன்மிகக் குறியீடுகளும் கொண்ட படிமம் தாமரை மலர். அதனால் தான் இந்த மலரைக் குறிக்க ஏராளமான சொற்கள் தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் உருவாயின. மேலும் இந்திய ஞான, ஆன்மிக சிந்தனைகள் இந்தியக் காவியங்களுடன்பின்னிப் பிணைந்தவை. அதனால் தான் இந்திய ஆன்மிகம் பற்றிய எதிர்மறைப் பார்வையும், முன்முடிபுகளும் கொண்ட ரூமிக்கு தாமரை வெறும் கற்பனையாகத் தோன்றுகிறது போலும்!

// ரூமி: … ஒரு தாய் தன் மகனிடம் இப்படிச் சொல்லும் இடம் எனக்கு ஆச்சரியமளித்தது. காரணம், ஒரு மகனிடம் இப்படி ஒரு தாய் சொல்வாளா என்பதனால் அல்ல. எனக்கு மறுபடியும் கம்பராமாயணம் நினைவு வந்ததுதான். காணாமல் போன தன் மனைவியின் அடையாளங்களை அனுமனிடம் சொல்லியனுப்பும் ராமன், சீதைக்கு ‘தேர்த்தட்டு போன்ற அல்குல்’ இருக்கும் என்று சொல்லியனுப்புகிறான்! இப்படிப் பேசுவது காவிய மனிதர்களுக்கே உரிய குணம் போலும். இந்த ஒற்றுமைதான் என்னை ஆச்சரியப்பட வைத்தது //

காமம் பற்றிய விக்டோரிய, அரேபிய, இஸ்லாமிய கருத்தாக்கங்களால் முழுமையாக ரூமி ஆட்கொள்ளப்பட்டிருப்பதைத் தான் இது காட்டுகிறது. அதுவும், கம்பராமாயணத்தில் இருந்து இதற்கு நேரடியாகத் தொடர்பில்லாத இந்த உதாரணத்தைச் சொல்வது வக்கிரம் கலந்த விஷமத்தனம். தமிழ் இலக்கியத்தின் அழகியல் பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் ஒரு காலத்தில் ராமாயணத்தைக் கிண்டல் செய்து வந்த மூன்றாந்தர திராவிடக் கழக ஆசாமிகள் வழக்கமாகச் சொல்லும் விஷயம் இது. ஒரு இலக்கியவாதி சொல்வது போல இல்லை.

காமம் பற்றி தாய்க்கும், மகளுக்குமான எத்தனையோ உரையாடல்கள் தமிழ் இலக்கிய மரபில் உள்ளன. திருமூலர் ஆன்மிக அனுபவத்தின் பூரணமான அகவயத்தன்மை பற்றிச் சொல்கையில்,

“முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய் தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல் என்றால் எங்ஙனம் கூறுமே?

என்று பாடுகிறார். சிறகுகளை வெட்டாத, சுதந்திரமான, தளைகள் இல்லாத சூழலில் இப்பேர்ப்பட்ட கருத்துக்கள் காவியங்களில் வருவது சர்வ சாதாரணம் தான். இத்தகைய சூழலில் பிறந்து வளர்ந்தும் தனது மதிப்பீடுகளை ஷரியத் மூலமும், மத்திய கால அரேபிய சமூக நடைமுறைக் கண்ணாடிகள் மூலமுமே பார்க்க விரும்பும் ரூமிக்கு வேண்டுமானால் இது ஆச்சரியம் போன்று தோன்றலாம்!


http://jataayu.blogspot.com

Series Navigation

ஜடாயு

ஜடாயு