தேடாதே, கிடைக்கும்

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

மலர் மன்னன்


பூமி பிளந்து சீறிக் கிளம்பி உறைந்துபோன வால் நட்சத்திரம்போல் அகலமாய் நிலைத்து நின்ற கட்டிடம் ஒன்றின் பன்னிரண்டாவது தளத்தில் தமக்கென்றே பிரத்தியேகமாக ஆக்கிரமித்துக்கொண்ட விசாலமான அறையில் கணினியின் முன் அமர்ந்து, சுருதிப்பெட்டி மாதிரி ரீங்கரித்துக் கொண்டிருந்த குளிர் சாதனத்தின் ரகசிய தொனியை அனுபவித்தவாறே பங்குச் சந்தைகளின் போக்கை அனுமானித்துக் கொண்டிருக்கையில்தான் பொட்டில் தெறித்த மாதிரி துர்காதாஸுக்கு அப்படியொரு எண்ணம் மின்னலிட்டது கூறாமல் சந்நியாசம் கொண்டால் என்ன?

அப்படித் தோன்றிய அந்தக் கணமே, கணம் என்ன, அதன் அணுப்பிரமாண அவகாசத்திலேயே அவர் தமது இருக்கையிலிருந்து எழுந்துகொண்டு விட்டார். கோட்டைக் கழற்றி வீசினார். கழுத்தில் சுருக்குக் கயிறாக இறுகிக் கிடந்த பட்டியைத் தளர்த்தி, முடிச்சை அவிழ்த்து, சவுக்கைச் சுழற்றுவதுபோல ஒரு சுழற்றுச் சுழற்றி எறிந்தார். உடனேயே ஏதோ பெரிய விடுதலை கிடைத்துவிட்ட மாதிரி உணர்ந்தார். ஏனெனில், அவசியம் கருதி தினசரி தாம் அணிந்தாக வேண்டிய உடைகளிலேயே அவருக்கு மிகவும் அவஸ்தையாகத் தோன்றுவது இந்தக் கழுத்துப் பட்டிதான். சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறான் ஆங்கிலேயன், டை, கட்டு, என்பதாக என்று ஒவ்வொரு முறை பட்டியைக் கட்டிக் கொள்ளும்போதும் சலித்துக்கொள்வார். சொல்லப்போனால் இத்தனை வயதாகியும் அவருக்குத் தாமாக அதைக் கட்டிக் கொள்ளத் தெரிந்ததில்லை. ஒவ்வொரு தடவையும் மனைவிதான் அவர் முன்னால் சிறிது எம்பி நின்று, அவர் தலை குனிந்து காட்டும் கழுத்தில் சுருக்கிட்டு இறுக்குவாள், முப்பது வருஷங்களுக்கு முன்ன நீங்க ஒரேயொரு வாட்டி எங் கழுத்துல கட்டினதுக்கு இப்ப தினம் தினம் பிராயச்சித்தமாட்டிருக்கு என்று சில சமயங்களில் கிண்டலாகச் சிரித்துக்கொண்டு.

அவள் தமக்குத் டையைக் கட்டிவிடும் சந்தர்ப்பங்களை துர்காதாஸ் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறுவதேயில்லை. அவள் பட்டியைச் சுருக்கிட்டு முடிச்சுப் போடும் தருணம் சட்டென அவளது இடுப்பைத் தமது இரு கரங்களாலும் வளைத்துப் பிடித்து, ஒரு இழு இழுத்து அணைத்துக் கொள்வார், இணை சேர்ந்து எத்தனையோ வருஷங்களாகிவிட்ட பிறகும்!

இதுக்குத்தான் டை கட்டிக்கத் தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா என்பாள் அவள், தன்னை அவரது பிடியிலிருந்து வலுக்கட்டாயமாக விடுவித்துக் கொண்டு. சேச்சே, நிஜாமாவேதான் கட்டிக்க வர மாட்தேங்குதுமா, நீ கட்டிவிடறதால பதிலுக்கு நானும் எனக்குத் தெரிஞ்ச கட்டிக்கிற வித்தை எதாச்சும் செய்துகாட்ட வேணாமா, அதான் என்று இவர் சிரிப்பார். அந்தப் போக்கிரித்தனத்திற்குத் தண்டனையாக அவள் அவரது கன்னத்தில் ஒரு தட்டுத் தட்டிவிட்டுப் போவாள்.

வீசியெறிந்த கழுத்துப்பட்டி எந்த மூலையில் விழுந்தது என்று கூடப் பார்க்காமல் அடுத்தபடியாக அவர் தமது சட்டையைக் கழற்றிப் போட்டார். பிறகு கால்சட்டை. இப்போது வெறும் உள்ளாடைகளுடன் நிற்கிறோம் என்பதை மறந்தவராய், ஆஷா, கொஞ் சம் வரமுடியுமா, என்று தம் காரியதரிசியை இன்டர்காமில் அழைத்தார். இதோ, என்றுஅவள் பதில் குரல் கொடுத்தாள்.

ஆஷா அவரது அறையினுள் நுழைந்தபோது அவர் குனிந்து காலணிகளைக் கழற்றுவதில் முனைந்திருந்தார். தன் எஜமானர் வெறும் உள்ளாடைகள் மட்டும் தரித்தவராக நிற்பார் என்று அவள் சிறிதும் எதிர்பார்த்திருக்க முடியாதுதான். கதவைத் திறந்து உள்ளே நுழைந்தும் நுழையாமலே கல்லாய்ச் சமைந்து போனாள்.

துர்காதாஸ் தற்செயலாய்த் தலை நிமிர்ந்து, ஆ, வந்துவிட்டாயா, நல்லது. எனக்கு ஒரு பெரிய டவல் கிடைக்குமா? இடுப்பை முழுவதும் சுற்றிக் கட்டிக் கொள்கிற அளவுக்கு இருக்கவேண்டும். எனது ரெஸ்ட் ரூமில் இருப்பது அத்தனை பெரிதாக இருக்காது என்றார், சகஜமாக.

ஆஷா வார்த்தை வராமல் ஸார், ஸார் என்று திணறினாள். போ, போ, சொன்னதைச் செய் என்று பனியனைக் கழற்றத் தொடங்கினார், துர்காதாஸ். ஆஷா அவசரமாகப் பின் வாங்கினாள்.

ஆஷா சென்ற சில நிமிடங்களில் பனியனைக் கழற்றியானதும் அன்டர்வேரையும் கழற்றிவிடலாமா என்று துர்காதாஸ் யோசித்துக் கொண்டிருக்கையில், வைஸ் பிரெசிடன்ட், கம்பெனி செக்ரெட்டரி, லீகல் அட்வைஸர், ஜெனரல் மானேஜர் என்று ஒரு சிறு பட்டாளம் அவரது அறைக்குள் பிரவேசித்து, பிரமித்து நின்றது. அறை வாசலில் நிழலாடியதால் அன்டர்வேரைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்ட துர்காதாஸ், வாருங்கள், எங்கே ஆஷா, எங்கே நான் கேட்ட டவல்? என்றார்.

இதெல்லாம் என்ன என்று நாங்கள் தெரிந்துகொள்ளலாமா? என்று பவ்வியமாகக் கேட்டார், வைஸ் பிரசிடென்ட் சலபதி. துர்காதாசுக்கு அவர் தூரத்து உறவு. வயதில் கொஞ்சம் பெரியவருங்கூட. அந்தத் துணிவில்தான் அவரால் அப்படிக் கேட்க முடிந்தது.

நாஸ்டாக் சந்தையில் பங்குகள் மூவ்மெண்ட்டைக் கொஞ்ச நேரம் முன்ன பார்த்தேன். எனக்குக் கிட்டத்தட்ட அறுபதாயிரம் டாலர் வரை லாபம் வரும்போலத் தெரியுது என்றார், துர்காதாஸ்.

ஆ, அறுபதாயிரம் டாலர்! மஹா அதிர்ஷ்டம்! என்று தம்மை மறந்தவராய்க் கூவினார், சலபதி.

அதான் சந்நியாசம் வாங்கிக்கலாம்னு தோணிச்சு. எங்கே டவல்? அதுகூட வேண்டியிருக்காதுதான். ஆனா போலீஸ்காரன் பார்த்தா பிடிச்சுக்கிட்டுப் போய் மென்டல் ஆஸ்பத்திரியிலே கொண்டுபோய்த் தள்ளிடுவானேன்னு பாக்கறேன் என்று சிரித்தார் துர்காதாஸ்.

எவருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. எந்தக் கோலத்தில் போவதாக இருந்தாலும் இந்த லட்சணத்தில் போகவேண்டிய இடம் அதுவாகத்தானே இருக்கமுடியும் என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கக் கூடும். ஆனால் அதைப்பற்றியெல்லம் பொருட்படுத்தும் மனநிலையில் துர்காதாஸ் இல்லை.

அதற்குள் ஆஷா தயங்கித் தயங்கிக் கொண்டு ஒரு பெரிய துண்டுடன் உள்ளே வந்து சிறிது அச்சத்துடன் அவரை அணுகினாள். துர்காதாஸ் கையை வீசி அதைப் பற்றியிழுத்து அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறபோதே இடுப்பில் சுற்றிக் கொண்டு உள்ளே கையைவிட்டு அன்டர்வேரைக் கழற்றிப் போட்டார். பிறகு, எதுவுமே நடக்காத மாதிரி, அப்ப வரட்டா என்று புன்னகைத்தவாறு வெளியேறினார். யாருக்கும் அவரைத் தடுத்து நிறுத்தவேன்டும் என்கிற பிரக்ஞை கூட இல்லாதபடி பிரமை தட்டிப் போயிருந்தது.

பைரவ் குழுமம் எவ்வளவு பிரமாண்டம்! வித விதமாக எத்தனை நிறுவனங்கள் அதற்குள்ளே! எத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கும் அப்படியொரு பிரமாண்டத்தைக் கட்டியெழுப்ப! எத்தனை விதமான ஜாலங்கள், தந்திரங்கள், சறுக்கல்களும், அதற்காகத் துவண்டுவிடாத தைரியங்களும் தேவைப்பட்டிருக்கும் அதற்காக! சம்பளத்திற்காகத்தான் என்றாலும் எவ்வளவு பேருடைய சாமர்த்தியங்களும் , கடும் உழைப்பும் தாரை வார்க்கப்பட்டிருக்கும்! எத்தனை காவுகள் வாங்கியிருக்கும், ஓர் அசுர நிறுவனக் கூட்டமைப்பாக அது உருவாவதற்குள்ளாக! அதன் சர்வ வல்லமை மிக்க தலைவர்தான்
சந்நியாசம் கொள்கிறேன் என்று சர்வ சாதாரணமாக, நான் வரமாட்டேன் போ என்று பாதியாட்டத்தில் சொல்லிவிட்டுப்போகிற சிறுவன் போல் சொல்லிவிட்டு, முழு நிர்வாணாமாகப் போக முடியாததே ஒரு குறையாக வருந்திக்கொண்டு போகிறார்!

+++
துர்காதாஸின் திடீர் விலகலால் அவரது பைவரவ் குழுமமே நிலைகுலைந்துதான் போயிற்று.
பங்குச் சந்தையில் அதன் சீர்குலைவு சகிக்க முடியாத அளவுக்குக் கேவலமாகி விட்டது.

துர்காதாஸ் வெறும் துண்டைக் கட்டிக் கொண்டு தமது ராட்சச அலுவலகத்திலேயிருந்து வெளியேறி வீடு சென்ற சிறிது நேரத்திற்கெல்லாமே குழுமத்திற்கு வரப் போகும் இந்த நாசத்தை உணர்ந்தவர்களாய் சலபதியும் பிற பரிவாரங்களும் அவரது வீட்டிற்குப் படையெடுத்தார்கள். தகவல் எட்டி, குழுமத்தின் இயக்குனர்கள் சிலரும் வெவ்வேறு திக்குகளிலிருந்து விரைந்து வந்து சேர்ந்தார்கள்.

வெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு நடந்தே வந்து சேர்ந்த துர்காதாஸைக் கண்டு வீடும் களேபரப் பட்டுப் போயிருந்தது. வெளியாட்கள் வந்த சமயம், அதிர்ச்சியால் உறைந்துபோய்விட்டிருந்த துர்காதாஸின் மனைவி சௌபாக்கியத்தை ஒரு வைத்திய நிபுணர் தீவிரமாகப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். துர்காதாஸோ அதுபற்றிச் சிறிதும் கவலையின்றி, கட்டிய துண்டோடு மீண்டும் வெளியேற முற்பட்டிருந்தார்.

துர்கா, இதெல்லாம் என்ன விளையாட்டு? நிஜமாகவேதான் இப்படி எல்லாத்தையும் விட்டுவிட்டுப் போகப் பார்க்கிறாயா? நீ என்ன ஊர் பேர் இல்லாத அனாமத்து ஆளா? நீ இப்படிப் போறது தெரிஞ்சா பைரவ் கதி என்ன ஆகும் தெரியுமா? வெளியே தெரியாத ஏதோ பெரிய கோளாறு பைரவ்ல நடந்திருக்கணும், அதனாலதான் சேர்மன் சொல்லாமக் கொள்ளாம ஓடிப்போயிட்டாருன்னு வதந்தி பரவும். பைரவுக்கு எதான சங்கடம் வராதா, அத வெச்சு நாம தலையெடுக்க வேளை வராதான்னு காத்துக்கிட்டிருக்கிறவங்க வேற இன்னும் ஊதி ஊதி கனியர நெருப்பைக் கொழுந்துவிட்டு எரிய வைப்பாங்க. பங்குச் சந்தையிலே பைரவ் அதல பாதாளத்திலே விழும். அப்பறம் தலையெடுக்கிறது என்ன லேசா? உன்னை நம்பி எவ்வளவுபேர் இருக்காங்க, எத்தனையெத்தனை வியாபாரங்கள் எல்லாம் இருக்குங்கறது மறந்து போச்சா? துர்கா, நீயெல்லாம் நினைச்சாப்பல சந்நியாசியாகிட முடியாது. மன பாரம் எதுனாச்சும் இருந்தா வேணா பத்து நாள், ஏன், ஒரு மாசங்கூட எங்கேயாவது போய் இருந்துட்டு வா என்று பாதி கெஞ்சலாகவும் பாதி கண்டிப்பாகவும் சொன்னார், சலபதி.

துர்காதாஸ் அத்தனையையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, என்ன சொன்னே, பைரவ்வா? ஆஹா, பைரவ். கால பைரவ். காஷ்மீரிலே வைஷ்ணோ தேவி கோயில் கிட்டவே இருக்கு பைரவருக்கும் ஒரு கோயில். சிவகணமில்லே, சிவனோட தெற்குப் பார்த்த சொரூபந்தான் பைரவர்! என்று சிரித்தவாறு வாசலை நோக்கி நடந்தார்.

சலபதி குருட்டாம்போக்கான துணிவுடன் துர்காதாஸின் கையை எட்டிப் பிடித்தார்.

படவா, மறுபடியும் என்னை சாக்கடைக்குள்ள இழுக்கப் பாக்கறியா என்று உறுமி, கையை உதறித் தம்மை விடுவித்துக்கொண்டு சிறிது வேகமாக நடந்தார், துர்காதாஸ்.

இதற்குள் சிறிது பிரக்ஞை திரும்பிவிட்டிருந்த சௌபாக்கியம், ஐயோ, அவர்பாட்டுக்குப் போறாரே, யாரான அவரைத் தடுங்களேன் என்று அரற்றலானாள். துர்காதாஸ் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் போய்க்கொண்டே இருந்தார்.

+++
நமஸ்காரம் என்று வாயாலல்ல, மனதால் வரித்து வணங்குகிறேன் எனச் சர்வாங்கமும் தரையில் பட விழுந்து வணங்கினார், துர்காதாஸ். எதிரில் ஒரு கல்லின் மீது முழு நிர்வாணமாகக் கால் மீது கால் போட்டு ஒரு பேரரசன் மாதிரி கமையுடன் அமர்ந்
திருந்தவரோ அதைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. துர்காதாஸ் சில நிமிடங்கள் மரக்கட்டைபோலத் தரையிலேயே கிடந்துவிட்டுத் தாமாகவே எழுந்துகொண்டார். அமர்ந்திருந்தவரின் காலடியில் பாதபூஜை செய்யப் போகிறவர் மாதிரி மண்டியிட்டு உட்கார்ந்தார்.

அவர்கள் இருந்தது உள்ளடங்கிய ஒரு குகைதான் என்றாலும் வெளிச்சம் வெளியிலிருந்து வராமல் உள்ளுக்குள்ளேயே உற்பத்தியாகியிருந்தது. உள்ளேயிருந்து வந்துகொண்டிருந்த ஒளியால் ஈர்க்கப்பட்டுத்தான் துர்காதாஸ் அதனுள் பிரவேசித்தார். உள்ளே வந்து பார்த்தால் ஒரு கல் மேடையில் பளிங்குச் சிலை மாதிரி ஒரு மனிதர். வெளிச்சம் ஒருவேளை அவருடம்பிலிருந்துதான் உற்பத்தியாகிறதா என்று துர்காதாஸுக்குச் சந்தேகமாயிருந்தது. இருண்டு கிடக்க வேண்டிய குகையுள் நன்றாகப் புலப்படுகிற மாதிரி ஒரு மனிதர்… அதுவும் தக தக எனப் பொலிந்துகொண்டு! எப்படி சாத்தியம்? துர்காதாஸ் அந்த மனிதரின் எதிரில் வெட்டுண்ட மரமென அனிச்சையாய்ச் சாய்வது தவிர வேறொன்றும் செய்ய இயலாதவரானார்.

ஒரு யுக பரியந்தம் காத்திருப்பதாய் துர்காதாஸ் நினைதிருக்கையில் தட்சிணாமூர்த்தி போல் அமர்ந்திருந்தவர் கண் விழித்தார். காலடியில் பணிந்துள்ள துர்காதாஸ் மீது பார்வையைச் செலுத்தி, ஏதோ நன்கு அறிமுகமானவர்போல் என்ன, இங்கே வந்துவிட்டாய் என்று சிறிது கண்டிப்பான தொனியில் துர்காதாஸ் தம் வீட்டில் பேசும் தமிழ் கலந்த அழுக்கு மராட்டியில் கேட்டார்.

துர்காதாஸும் ஓர் அன்னியரிடம் பேசுகிறோம் என்கிற உணர்வின்றி, என்னவோ வரத் தோன்றியது, வந்துவிட்டேன். இதுவே கால தாமதமாகத்தான் வந்திருக்கிறேனோ என்னவோ என்றார் அதே கலப்பட மராட்டியில் தம் குடும்பத்தில் ஒருவரிடம் பேசுகிற மாதிரி.

காலதாமதமாகவா? காலத்தை அளக்கப் பார்க்கிறாயா என்ன? வெளியே போய்ப்பார். வடகிழக்கு மூலையில் பிரகாசமாக ஒரு நட்சத்திரம் தெரியும். நீ பார்க்கிறஅதன் ஒளி எப்போது அதனிடமிருந்து புறப்பட்டு வந்தது தெரியுமா? கௌதம புத்தன் சித்தார்த்தன் என்கிற தனது தோலை உரித்துக் கொண்ட சமயத்தில்! அதாவது அந்த நட்சத்திரத்தைப் பார்க்கிற தருணத்தில் நீ இருப்பது புத்தனின் காலத்தில். தென் மேற்கே உச்சியில் பார், இன்னொரு பிரகாசம் தெரியும்; வேத காலத்திற்கே போய்விடலாம், அதன் ஓளி விழுந்ததும்! இப்போது நீ பார்க்கிற நானும் எனது தற்கால வடிவில் அல்ல; ஏன் சொல்லு பார்க்கலாம். இரு, நானே சொல்கிறேன். உன் கண்களிலிருந்து உனது பார்வையலை புறப்பட்டு என் மீது படிவதற்கு அணுப்பிரமாண அவகாசமேனும் அவசியமல்லவா? அப்போது நிஜத்தில் நீ என்னைக் காண்பது கடந்துபோன எனது இறந்த காலத் தோற்றத்தில்தானேயல்லவா? ஆக, யாரும் யாரையும் பார்ர்ப்பது இறந்த காலத்தில்தான்! இதில் கால தாமதம் என்ன, உரிய காலம் என்ன? என்று சிரித்தார் அவர்.

காலம் என்பதே அர்த்தமற்ற வெறும் பிரமை. எல்லாம் நம் சௌகரியத்திற்காகச் செய்துகொண்ட ஏற்பாடு என்பதைப் புரிந்துகொண்டேன். என்னவோ வேளை வந்து வந்து சேர்ந்தேன். அந்த வேளையே இங்கு கொண்டுவந்தும் விட்டது. எங்கே போய்விடு என்று சொல்லிவிடுவீர்களோ என அச்சமாக இருக்கிறது என்றார், துர்காதாஸ், சிறிது கவலையுடன்.

அதற்குள் என்ன அவசரம் என்று சிரித்தார் தட்சிணாமூர்த்தியாய் அமர்ந்திருந்தவர். இரு ஒரு படம் காட்டுகிறேன் என்றவாறு துர்காதாஸின் உச்சந் தலையில் தமது வலக் கரத்தை வைத்து ஓர் அழுத்து அழுத்தினார்.

துர்காதாஸ் அந்தக் கணம் கன வேகமெடுத்துப் பின்னோக்கிப் பறக்கலானார். பார்த்த படத்தையே இரண்டாம் தடவை பார்க்கிற மாதிரி நடந்துபோன நிகழ்ச்சிகள் திரும்பவும் கண்முன் தெரியலாயின.

உடுத்தியிருந்த உடைகளை ஒவ்வொன்றாகக் களையும் துர்காதாஸ்…இடுப்பில் வெறும் துண்டோ டு வீட்டைவிட்டு வெளியேறும் துர்காதாஸ் … ஏதோவொரு துறவியர் கூட்டத்தோடு கலந்து எங்கெங்கோ அலைந்து திரியும் துர்காதாஸ்… அப்புறம் கடைசியாக இங்கு குகையுள் ஒடுங்கி உட்கார்ந்திருக்கும் துர்காதாஸ்!

உனக்கு என்ன பெரிய ராஜா என்கிற நினைப்போ? நீ என்ன நிஜ ராஜாவா பட்தத்தைத் துறக்க? அது வெறும் வேஷம் அல்லவா? உனக்கு நாடகத்தில் ராஜா வேஷம் கொடுக்கப் பட்டிருக்கிறது, அவ்வளவுதானே? அதை ஒழுங்காக நடித்துவிட்டுப் போவதைவிட்டுப் பாதியிலேயே போட்டுக் கொண்டிருக்கிற வேஷத்தைக் கலைத்துக்கொண்டால் என்ன அர்த்தம்? நாடகம் முடிந்ததாக யார் உனக்குச் சொன்னது? இடைவேளை விடப்பட்டிருக்கலாம் ஒருக்கால்! திரை நடு நடுவிலும் விழுகிறதுதானே? நீ பாட்டுக்குக் கிரீடத்தைக் கழற்றிவிட்டால் எப்படி? என்று அதட்டினார், எதிரே அமர்ந்திருந்தவர்.

கிரீடமா? முள்முடியல்லவா அது என்று தலையை உதறிக்கொண்டார் துர்காதாஸ்.

பொன்முடியோ, முள்முடியோ சூட்டினது சூட்டியதுதான். தலையில் விழுந்த முடி, கழற்ற முடிவதில்லை! வேன்டுமானால் ஒரு சின்ன வித்தை சொல்லித் தருகிறேன், வலி தெரியாமல் இருக்க என்றார், அவர்.

சொல்லித்தாருங்கள், என்றார், துர்காதாஸ் அவசரமாக.

நீ இடைவிடாமல் சுவாசித்துக்கொண்டிருக்கிறாய் அல்லவா?

ஆமாம்.

வெளியே விடுகிற மூச்சு, உள்ளே இழுத்துக் கொள்கிற மூச்சு என்று இரண்டையும் அவதானிப்பதுண்டா?

இல்லை, ஆனால் இப்படி இருவிதமான காற்றோட்டந்தான் சுவாசம் என்பதை அறிந்திருக்கிறேன்.

வெளியேறுகிற மூச்சு, உள்ளே நுழைகிற மூச்சு. இரண்டுக்கும் நடுவே இருக்கிறது ஓர் இடைவெளி! அப்போது நீ சுவாசிப்பதில்லை. அந்த இடைவெளி எவ்வளவுதான் கொஞ்சமே கொஞ்சமான அவகாசமாயிருக்கட்டுமே, அந்தக் கொஞ்ச நேரமே நீ சலனமறுக் கிடக்கிறாய் என்பதைக் கவனி. அதுவே உன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள உனக்குத் தரப்பட்டிருக்கிற அவகாசம். முடிந்தால் சிறுகச் சிறுக அந்த அவகாசத்தை அதிகரித்துக் கொள்ள முயற்சி செய். வெளியேறும் மூச்சு, உள்ளேகும் மூச்சு, நடுவே நுட்பமாய் ஓர் இடைவெளி. அது நீ சுவாசிக்காத அமர தருணம். உயிர் தரித்திருக்கையிலேயே சாத்தியமாகிறமரணம் எனும் மோட்சம். அதை நீட்டித்துக் கொள்ளப்பார். தலையில் கிரீடம், தோள் பட்டைகளில் புஜ கீர்த்தி, இடுப்பில் வாள், மார்பில் கவசம், கழுத்தில் ஹாரம், உடம்பில் பட்டுப் பீதாம்பரம் எல்லாமே இருந்தாலும் பிறந்த மேனியாய், முழு நிர்வாணமாய் வளைய வரலாம், சிறு குழந்தையாக, விகல்பம் அறியாமல், விளையாட்டாக! போ, öõய் விளையாடிவிட்டு வா, கொஞ்ச நேரம், நானும் பார்ர்த்து ரசிக்கிறேன் சிறிது நேரம் என்றவாறு அந்த தட்சிணாமூர்த்தி தமது கையை துர்காதாஸின் தலையிலிருந்து எடுத்ததும்,

பூமி பிளந்து சீறிக் கிளம்பி உறைந்துபோன வால் நட்சத்திரம்போல் அகலமாய் நிலைத்து நின்ற கட்டிடம் ஒன்றின் பன்னிரண்டாவது தளத்தில் தமக்கென்றே பிரத்தியேகமாக ஆக்கிரமித்துக்கொண்ட விசாலமான அறையில் கணினியின் முன் அமர்ந்து, சுருதிப்பெட்டி மாதிரி ரீங்கரித்துக் கொண்டிருந்த குளிர் சாதனத்தின் ரகசிய தொனியை அனுபவித்தவாறு பங்குச் சந்தையின் போக்கை அனுமானித்துக் கொண்டிருந்த துர்காதாஸ், நஸ்டாக் பங்குச்
சந்தையில் தமக்கு அறுபதயிரம் டாலர்வரை லாபம் வர வாய்ப்பிருப்பது பொட்டில் தெறித்து, ஒரு துள்ளுத் துள்ளி, இன்டர்காமில் ஆஷா, ஆஷா என்று தம் காரியதரிசியை அழைக்கலானார்.

( அமுதசுரபி தீபாவளி மலர் 2006 )


Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்