திருமதி கொப்பலின் குற்றச்சாட்டு

This entry is part [part not set] of 29 in the series 20070510_Issue

எஸ் என் நடேசன்


திருமதி கொப்பலானின் ஆறடி உயரமும், ஆண்கள் போன்ற இடைவெளிவிடாத இடையமைப்பும் கடுகடுப்பான முகமும் எனது கவனத்தை ஈர்த்தது. அவருக்கு பின்னால் பதினாலு வயது இளம்பெண் தாயின் மறுபதிப்பாக சிறிய ரெரியர் நாய்க்குட்டியை மார்புடன் இறுக்கமாக அணைத்தபடிவந்தாள்.

இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்துசென்றேன்.

தங்களது மிருகவைத்தியரிடம் அப்பொயின்மன்ட் கிடைக்காததால் வந்தோம் என தாயார் கூறினார். அவர்கள் வார்த்தையில் உள்ள தொனியை ரசிக்கமுடியவில்லை. ஆனாலும் அந்த இளம் பெண்ணிடம் நாய்க்குட்டியை எனது மேசையில் வைத்துவிட சொன்னேன்.

எனது வேண்டுகோளை அலட்சியம் செய்தாளோ அல்லது புரியவில்லையோ? அந்த நாய்க்குட்டியை மேலும் இறுக்கமாக அணைத்துக்கொண்டார்.

ஏதாவது மனநல குறைபாடு உள்ளவர்களும் தங்களது பொருளை இறுக பிடித்திருப்பது உண்டு. அப்படி குறைபாடுள்ள ஒரு பெண்ணாக இருக்கலாம் என்று நினைத்து அவனது அணைப்பில் உள்ள நாய்க்குட்டியை பரிசோதித்தேன்.

பெயரைக்கேட்டபோது ‘ஒஸ்கார்’ என்று பதில் வந்தது. தாயார் முகத்தில் எதுவித சலனமும் அற்று, நான் பரிசோதிப்பதை பார்த்துக்கொண்டிருந்தாள். மாணவர்களின் பரீட்சை நடக்கும்போது கண்காணிக்கும் ஆசிரியரது பாவனை தெரிந்தது.

குட்டியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருந்ததால் விரிவான சோதனை செய்யமுடியவில்லை. வயிற்றுப் பகுதியை பார்க்கவேண்டும் என கூறிவிட்டு நாய் குட்டியை அந்தப்பெண்ணிடம் இருந்து பிரித்து மேசையில் விட்டுவிட்டு முன்னங்கால்களை தூக்கி குடல் இறக்கம் உள்ளதா என பார்த்தேன்.

நாய்க்குட்டி கத்தியது. பொதுவாக சில நாய்க்குட்டிகள் இப்படித்தான் என்பதால் நான் அதை பொருட்படுத்தவில்லை. என்னிடம் இருந்து நாய்க்குட்டியை பறித்துக்கொண்டு தன்னுடைய நெஞ்சில் மீண்டும் அணைத்துக்கொண்டாள் அந்த இளம்பெண். தடுப்பூசிபோடும்போது அந்த நாய்க்குட்டி பெண்ணின் மார்புக்கு அருகாமையில் இருந்தது சிறிது தயக்கத்தைகொடுத்தது. நான் போடும்போது குட்டி அசைந்ததால் ஊசி விலகி மருந்து வெளியே வந்துவிட்டது. நான் மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் ஒரு ஊசியைபோட்டேன். இப்பொழுது நாய்க்குட்டி குரைத்தது. ‘தடுப்புமருந்து ‘குளிர்பதனப்பெட்டியில் இருந்துவந்ததால்தான் அழுதது’ என விளக்கம் கொடுத்தேன்.

உணர்வுகளை வெளிப்படுத்தாமல் திருமதி. கோப்லின் பார்த்துக்கொண்டிருந்தாள்.

வானொலி ஒலிபரப்பாளர்; எந்தவித எதிர்பார்ப்பும் அற்று ஒலிபரப்புக்கருவியில் பேசுவார்கள். அதேபோல் இங்கே , இந்த இருவர் இருந்தாலும் எந்த எதிர்கேள்விகளையும் இல்லாமல் நான் நாய்க்குட்டியின் உணவு, சுகாதாரம் போன்றவற்றை விளக்கினேன்.

பத்து நிமிடத்தில் மட்டும் நான் இவர்களுடன் கழித்த அந்தநேரம் பத்துமணித்தியாலம் போல மிக நீண்டதாக இருந்து. எனது சேவைக்குரிய பணத்தை கொடுத்துவிட்டு சென்றனர்.

இரண்டு வாரங்களுக்குபின் மிருக வைத்திய சபைமூலம் எனக்கு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் நான் நாய்க்குட்டியை முழுமையாக பரிசோதிக்கவில்லை. தூக்கித் துன்புறுத்தினேன். ஊசிபோடும்போது தேவைக்கு அதிகமான வலியை நாய்க்குட்டிக்கு உண்டுபண்ணினேன் என மூன்று குற்றச்சாட்டுக்கள் இருந்தன.

இந்த அதிகார சபையே எனக்கு மிருகவைத்தியராக வேலைசெய்யும் லைசன்சை தந்தது. எனவே நான் விளக்கமாக பதில் எழுதினேன.; எனதுவிளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டு எனது தொழில்முறையில் தவறு இல்லை என்று பதில் வந்தது.

எனது தொழில்முறையில் தவறு இல்லை என்று மிருகவைத்திய அதிகாரசபை கூறினாலும், எப்படி திருமதி கொப்பலினால் தவறு காணப்பட்டது எப்படி என புரிந்துகொள்ள முயன்றேன்.

அவரது வழக்கமான மிருகவைத்தியர்போல் நான் நடக்கவில்லை போலும். ஏன் எனது நடை, உடை, பேச்சு வேறுபாடாக இருந்திருக்கலாம். என்னை மிருகவைத்தியராக மனத்தளவில் அங்கிகரிக்காததால் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

ஆரம்பத்தில் திருமதி கொப்பலின் மீது காட்டமாக இருந்து, ஆத்திர உணர்வு ஏற்பட்டது. இப்பொழுது நன்றி உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

நோயற்ற ஆரோக்கியமான மிருகங்களை பரிசோதிக்கும்போது சிரத்தை எடுப்பது குறைவு. அதைவிட குறிப்புகளை சுருக்கமாக எழுதிவிடுவது எனது வழக்கம். இந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து என்னை விடுவித்தது நான் எழுதிய குறிப்புத்தான். இதன் பின்பு மேலும் விரிவாக குறிப்பு எழுதுவது எனப்பழக்கமாகிவிட்டது.

குற்றச்சாட்டுகள் விமர்சனங்கள் எம்மை நேர்படுத்த உதவுகிறது என்பதை கண்டுகொண்டேன். இருபத்தியேழு வருட அனுபவத்தில் எழுத்துமூலமாக செய்யப்பட்ட இந்த குற்றச்சாட்டு என்னை சீர்படுத்த உதவியது.

பொறுப்புகளை எடுத்து நடக்கும் எம்போன்றவர்கள் எல்லா சரியாக வந்தது என்று அஜாக்கிரதையாக நடப்பது மனித இயல்பு. இந்த விடயம் வைத்தியர்கள், சட்டத்தரணிகள் போன்றவர்களுக்கும் பொருந்தக்கூடியது.

அரசியல்வாதிகள் மட்டும் எல்லா நாடுகளிலும் விதிவிலக்காக விளங்குகிறார்கள்போல் தெரிகிறது.


uthayam@optusnet.com.au

Series Navigation

எஸ் என் நடேசன்

எஸ் என் நடேசன்