தினக்கப்ஸா

This entry is part [part not set] of 7 in the series 20001126_Issue


வீரப்பனிடமிருந்து ராஜ்குமார் விடுதலை

ராஜ்குமார் சென்ற வாரம் விடுதலை ஆனது அனைவருக்கும் தெரிந்ததே. அவர் உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவர் முன்பைவிட வலிமையாகவும் பலமாகவும் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு பதில் சொன்ன ராஜ்குமார் தன்னை வீரப்பன் நன்றாக கவனித்துக்கொண்டான் என்றும், மான் கறி, காட்டுக்காய்கறிகள் என்றும் கொடுத்து நன்றாக உடல் நிலை முன்னேற உதவினான் என்றும் தெரிவித்தார். செருப்பில்லாமல் காட்டில் வெகுதூரம் நடந்து உடல்நிலை நன்றாக ஆகியிருக்கிறது என்றும் தெரிவித்ததாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

இது கேள்விப்பட்ட வேலையில்லாத பழைய நடிகர்கள் பலர் வீரப்பனைத் தொடர்பு கொண்டு தங்களையும் கடத்தும் படி கேட்டிருப்பதாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது வீரப்பன் தனது கூட்டத்தை காட்டுக்கொள்ளைக்காரர்களாக இருப்பதிலிருந்து பல ஹோட்டல் முதலாளிகள் போல நாட்டுக்கொள்ளைக்காரர்களாக மாற்றிவிடலாம் என்று யோசிப்பதாக தெரியவருகிறது. சந்தன ஹோட்டல் என்றாவது சந்தன் ஹில்டன் காண்டினண்டல் என்றாவது ஒரு புது ஹோட்டல் ஆரம்பிக்கலாமா என்றும் யோசிப்பதாக தெரியவருகிறது. ஆடம்பர ஹோட்டல் கட்டுவதிலும் ஹோட்டல் வாங்குவதிலும் மிகவும் அனுபவம் வாய்ந்த ஜெயலலிதாவிடம் யோசனை கேட்டிருப்பதாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சோனியா காங்கிரஸ் தலைவராக மீண்டும் தேர்வு

சோனியா காங்கிரஸ் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் கவலை தரும் விஷயமாக இருப்பது உண்மையே. இந்திரா காந்தி காலத்தில் காங்கிரஸ் அவரால் கடத்தப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. இது இன்னும் மீட்கப்படவில்லை என்பதால் இந்திய மக்கள் மிகவும் கவலைக்குள்ளாகி இருக்கிறார்கள். பாஜக போன்ற காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகளிலுள்ள பலர் இதனால் பல காங்கிரஸ் காரர்கள் வருவார்கள் என்று மிகவும் பீதிக்குள்ளாகி இருப்பதாகவும் நம்பத்தகாத வட்டாரங்களும் மாவட்டங்களும் தெரிவிக்கின்றன.

காங்கிரஸை விட்டுவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் தான் ஒரு அதிரடிப்படையை அனுப்பி காங்கிரஸை மீட்டுவிடுவேன் என்று சுப்பிரமணியம் சுவாமி சொல்லியிருப்பதாகவும் தெரிகிறது. இதனால் பயந்து சோனியா குடும்பம் காங்கிரஸை விட்டுவிடும் என்று நம்பப்படுகிறது. இது போன்று பயமுறுத்தியதால்தான் வீரப்பன் ராஜ்குமாரை விட்டுவிட்டான் என்று சுப்பிரமணியம் சுவாமி சொல்லியிருப்பதும் சோனியாவுக்கு கவலை தருவதாக இருப்பதாக நக்கீரன் கோபால் சொல்லியிருக்கிறார்.

பங்காரு லட்சுமணன் இன்று மங்கோலியா வரவு

பங்காரு லட்சுமணன் மங்கோலியர்கள் தமிழர்களே என்றும் அவர்கள் தேசீய நீரோட்டத்தில் இணைந்து இந்து என்று தங்களைத்தாங்களே அறிவித்துக்கொள்ளவேண்டும் என்றும் பங்காரு லட்சுணமன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மங்கோலிய தலைவர்கள் தாங்கள் இந்து அல்லவென்றும் இருந்தாலும் அவர்களையும் இந்தியாவையும் பிரிக்கும் பங்காரு லட்சுமணன் போன்ற சக்திகள் வெற்றியடையாது என்றும் சூளுரைத்திருக்கிறார்கள்.

தரங்கெட்ட திமுக தலைமை வகிக்கும் தேசீய கூட்டணியிலிருந்து பாமக விலகாது என்று ராமதாஸ் அறிவிப்பு

திமுக கேடுகெட்ட கட்சி என்று இன்று ராமதாஸ் அறிவித்தார். அது கெட்ட கட்சி என்றும் சில திமுக புல்லுறுவிகள் பாமகவை திமுக கூட்டணியிலிருந்து வெளியேற்ற சதி செய்கிறார்கள் என்றும் குறைசாட்டினார். மானங்கெட்ட திமுக அணியிலிருந்து தான் ஒரு போதும் விலகமாட்டேன் என்றும் அறிவித்தார். வைகோ போன்ற கூறுகெட்ட மனிதர்கள் இருக்கும் திமுக அணியிலிருந்தும், மோசமான மனிதரான கருணாநிதியிடமிருந்தும் தன்னை பிரிப்பதற்கு சில நல்லவர்கள் வேலை செய்கிறார்கள் என்றும் அவர் குறை கூறினார். தமிழ்நாட்டின் தானைத்தலைவியான ஜெயலலிதாவுடன் தான் எந்தக்காலத்திலும் கூட்டு வைத்துக்கொண்டதில்லை இனிமேலும் கூட்டு வைத்துக்கொள்ளப் போவதில்லை என்றும் சூளுரைத்தார். குழம்பு வைத்துக்கொள்வீர்களா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது அது தக்க நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

சோனியா காந்தி பிறந்தநாள் விழா – த.மா.க கொண்டாட்டம். ‘தமாகவே ஒரிஜினல் காங்கிரஸ் ‘ மூப்பனார் அறிவிப்பு.

இன்று சோனியா காந்தி பிறந்த நாளை கோலாகலமாக தமாக கொண்டாடியது. பட்டாசு வெடித்து புத்தாடை பூண்டு தமாகவினர் இன்று விழாக்கோலம் பூண்டு பாரம்பரிய முறையில் உட்கட்சி அடிதடி வேட்டி கிழிப்பு போன்றவையோடு கொண்டாடினர்.

இதனால் அதிர்ச்சியுற்ற தமிழக காங்கிரஸ் கட்சியினர் தாங்களும் அடிதடி வேட்டி கிழிப்பு போன்றவற்றில் இறங்கி சோனியா பிறந்தநாள் விழா கொண்டாட முனைந்தனர். இருந்தும் தமாகா போல அடிதடி போடமுடியவில்லை என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

மூப்பனார் பேசுகையில் ‘தமாகாவே உண்மையான காங்கிரஸ் கட்சி என்று சோனியா பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி தமிழ் மக்களுக்கு நிரூபித்திருக்கிறோம். இந்த ஐடியா கொடுத்த ஜெயகாந்தன் அவர்களுக்கு என் மனங்கனிந்த நன்றி ‘ என்று உரையாற்றினார்.

பின்னர் பேசிய சிதம்பரம் ‘நான் பாஜகவில் சேர்ந்துவிட்டதாக சிலர் பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள். நான் கேட்ட திருச்சி தொகுதி இன்னும் எனக்கு கொடுப்பது என்று வாஜ்பாயி முடிவு செய்யவில்லை என்பதை கணக்கிலெடுக்காமல் இது போல செய்யும் பொய்பிரச்சாரத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் ‘ என்று வாழ்த்துரை செய்தார்.

அமைச்சர் என்.கே.கே பெரியசாமி பொங்கலை முன்னிட்டு 1 1/2 கோடி பேருக்கு வேட்டி சேலை வழங்கல்.

மிக அருகில் சட்டசபைத் தேர்தல் வருவதால் பெரியசாமி இன்று பொங்கலை முன்னிட்டு ஒண்ணரை கோடி பேருக்கு வேட்டி சேலை வழங்கினார். இவர்கள் அனைவரும் திமுகவுக்கு ஓட்டு போடவில்லை என்றால் இந்த வேட்டி சேலைகள் கிழிந்து போய்விடும் என்று பயமுறுத்தினார். அருகில் இருந்த தொழில்நுட்ப அமைச்சர் இந்த வேட்டி சேலைகளில் கம்ப்யூட்டர் வைரஸ் போட்டிருப்பதாகவும் மக்கள் திமுகவுக்கு ஓட்டு போடவில்லை என்றால் வேட்டி சேலைகள் கிழிந்து போய்விடுமாறு புரோகிராம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜெயலலிதா உடனே தன் அருகில் இருந்த முன்னாள் தொழில்நுட்ப அமைச்சரை செருப்பால் அடித்து ஏன் எனக்கு இதுபோல் கம்யூட்டர் வைரஸ் பண்ணித்தரவில்லை என்று அடித்ததாக நம்பத்தகாத வட்டாரங்கள் மீண்டும் தெரிவிக்கின்றன.

சந்தன வீரப்பன் திருந்த வாய்ப்புத்தரவேண்டும் என்று மூப்பனார் பேச்சு

சந்தன வீரப்பன் நல்லவன் என்று தான் சொல்லவில்லை என்றும் பத்திரிக்கையாளர்கள் அப்படி தவறாக பிரசுரித்துவிட்டார்கள் என்று மூப்பனார் இன்று கூறியிருக்கிறார். அவன் திருந்த வாய்ப்புத்தரவேண்டும் என்று கூறினார். பின்னர் அடுத்த வரியிலேயே அவன் திருந்த வாய்ப்புத்தரவேண்டும் என்றுதான் கூறவில்லை என்றும் அப்படி பத்திரிக்கையாளர்கள் திரித்து எழுதப்போகிறார்கள் என்றும் தெரிவித்தார். அவனுக்கு திருந்த வாய்ப்புத்தரவேண்டுமா கூடாதா என்று கேட்டதற்கு ‘அரசுதான் முடிவு செய்யவேண்டும் ‘ என்று கூறினார். அவன் திருந்துவானா என்று கேட்டதற்கு ‘வீரப்பன் தான் முடிவு செய்யவேண்டும் ‘ என்று கூறினார். நீங்கள் என்ன சொன்னதாக நாங்கள் பத்திரிக்கையில் எழுதவேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு ‘அதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும் ‘ என்று தெரிவித்தார்.

தலைமுடியை பிய்த்துக்கொண்டு அங்கேயே சில பத்திரிக்கையாளர்கள் பைத்தியமானார்கள் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் காதில் குசுகுசு என்று கூறின.

Series Navigation

செய்தி

செய்தி