திண்ணையில் ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் குறித்து…

This entry is part [part not set] of 24 in the series 20090226_Issue

ஜடாயு


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

சென்ற திண்ணை இதழில் அ.முத்துலிங்கம் ஜெயமோகனுடன் நிகழ்த்திய உரையாடல் அருமை. இருவருமே நான் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர்கள். ஒரு தேர்ந்த எழுத்தாளர் இன்னொரு தேர்ந்த் எழுத்தாளரிடம் பேசினால் எப்படியிருக்கும் என்பது அதில் தெரிந்தது. இதனை வாசகர்கள் அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.

அ.முத்துலிங்கம் கேட்கும் கேள்விகள் எல்லாமே எழுதும் தொழில்நுட்பம் (craft) பற்றியதாகவே இருக்கிறது. பல எழுத்தாளர்களது (குறிப்பாக மேற்கத்திய படைப்பாளிகள்) பாணியை அடிப்படையாக வைத்து கேட்கப் பட்டவை. ஜெயமோகனின் எல்லா பதில்களுமே ஒரே மாதிரி தான் உள்ளன. – தன் எழுத்து அகவயமானவது. ஒரு கணத்தில் பீறிட்டு வருவது என்பதாக. ஒரு பூ அவிழ்வது போல இயல்பாக நிகழ்வது தான் உன்னதமான இலக்கியப் படைப்பு, அதில் திருத்தம் செய்வது என்பதற்கெல்லாம் இடமில்லை என்ற ஜெமோவின் கருத்து மனதை நிறைத்தது.

தொடக்கத்தில் ஜெயமோகனை அசிமோவ் உடன் ஒப்பிட்டு அ.மு எழுதியிருக்கிறார்.. எழுத்துக்களின் வீச்சு, பரவல் இவற்றைப் பொறுத்தவரை அது சரிதான்.. ஆனால் ஒரூ இலக்கிய கர்த்தாவாக அசிமோவை விட பல மடங்கு ஜெயமோகன் விஞ்சி நிற்கிறார். பின்தொடரும் நிழலின் குரல் போன்று ஒரு புதினத்தையும், ஆழ்ந்த கீதை விளக்கங்களையும் அவரால் ஒரே தீவிரத்துடன் எழுத முடிகிறது.

எப்படி இத்தனை விதமான அனுபவங்களை அவர் சமைக்கிறார் என்று அ.மு வியக்கிறார். ஜெயமோகனின் மிக ஆழ்ந்த, நுண்ணிய தத்துவ நோக்கு அவரது எழுத்துக்கள் அனைத்திற்கும் அடிநாதமாக இருக்கிறது.. அந்த நோக்கு கீதை, வேதாந்தம், இந்திய தரிசனங்கள் இவற்றை ஆழ்ந்து பயின்றதோடல்லாமல், ஒரு ஞான குருவின் அருகமர்ந்து உபநிஷதம் போல மனித வாழ்வு என்கிற மாயக் கனவின் வர்ண ஜாலங்கள் தோன்றி மறையும் அநித்தியத்தையும், அதில் மாறாத நித்தியத்துவத்துவையும் மெய்யுணர்வால் கண்டடையும் முயற்சிகளால் விளைந்ததாகவே நான் நினைக்கிறேன்.. ஒரு வியாசன் போல. ஜெ.மோ ஓரிடத்தில் எழுத்து தனது யோகசாதனை, தியானம் என்று கூறுவதையும் கவனிக்க வேண்டும்.

இலக்கிய சிருஷ்டி என்பது ஒரு மிக நேர்த்தியான நுண் இயந்திரத்தன்மை (மேற்கத்தியப் பார்வை?) என்ற அளவில் தான் அ.முவின் கேள்விகள் உள்ளனவோ என்று தோன்றுகிறது. தத்துவ நோக்கு பற்றி அவர் ஜெ.மோவிடம் ஒன்றுமே கேட்கவில்லை. ஆனால் இந்திய மரபில், ஒரு உன்னதமான இலக்கிய கர்த்தா என்பவன் பதிவு செய்பவனோ, வர்ணனையாளனோ மட்டும் அல்ல. அவன் ஞானியாகவும் தத்துவதரிசியாகவுமே இருக்க முடியும். வேத இலக்கியத்தில் கவி, ரிஷி என்ற இரு சொற்களும் ஒருவரையே குறித்தன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அன்புடன்,
ஜடாயு


jataayu.b@gmail.com

Series Navigation

ஜடாயு

ஜடாயு