இளங்கோ மெய்யப்பன்
“வாட் ஆர் யூ வியரிங்?”
தூக்கிவாரிப்போட்டது வித்யாவிற்கு. என்ன இப்படிக் கேட்கிறான். இந்த மாதிரி யாரும் அவளை கேட்டதில்லை. அதுவும் ஒரு ஆண். அதுவும் கணவனின் நண்பன்.
இதற்குமுன் ஒரே ஒரு முறைதான் இதுமாதிரியான கேள்வி. சுமதி கேட்டிருக்கிறாள். “என்னப்பா, கிளம்பியாச்சா? நல்ல வேளை, நீ கிளம்பறதுக்கு முன்னாடி, உன்னை பிடிச்சுட்டேன். என்ன போட்டிருக்க?”
“நான் என்ன போட்டிருந்தா என்ன?”
“நாங்க எல்லாம் புடவை கட்டலாம்னு முடிவெடுத்திருக்கோம்.”
“புடவை வேணாம்பா. இழுத்துவிட்டுக்கிட்டே இருப்பேன். அதையே சரிபார்த்துக்கிட்டே இருப்பேன். நான் சுடிதாரே போட்டுக்கிட்டு வரேன்.”
“ஏய், அதெல்லாம் பின் போட்டுக்கலாம்பா. என்னமோ புடவையே கட்டாத மாதிரி.”
“அப்போ என்னை ஓரத்தில உட்காரவிடக்கூடாது. இந்தப் பக்கம் பூரா மணிவண்ணன் கோஷ்டி உட்காரும்பா. பாத்துக்கிட்டே இருப்பானுங்க. கையை எடுத்து மேஜைலகூட வைக்க முடியாது. கீழயே நேரா வைச்சு கையே வலிக்கும்பா.”
“பாத்தா பாக்கட்டும்பா. ஜொள்ளு விடட்டும். இதுக்காக ஒரு மாறுதலுக்கு புடவையே கட்டவேண்டாம்னா எப்படி? தினமும் சுடிதார் போட்டு போர் அடிக்குது. அலட்டாதே. போட்டுக்கிட்டு வா.”
“சரி. விடமாட்டியே”
எப்பவும்போல பிளவுஸ் வரைக்கும் தூக்கிக் கட்டிகிட்டு வராதே. கொஞ்சமாவது கீழே கட்டிட்டுவா. அப்பதான் புடவை கட்டின மாதிரி இருக்கும். இல்லைன்னா ஒரு போர்வைய மேல போட்டுக்கிட்டு வந்த மாதிரி இருக்கும்.
லோ ஹிப்பா போடச் சொல்ற?
உடனே “இது நம்ம ஆளு” ஷோபனா மாதிரி கட்டிக்கச் சொல்றேன்னு நினைச்சுக்காதே. லோ ஹிப், நோ ஹிப் இரண்டும் வேண்டாம்.
விதவிதமா போட்டுக்கறதுக்கோ கட்டிக்கறதுக்கோ ஆசையில்லாம இல்லை. ஆண்கள் வெறிச்சுப் பாக்கிறது வித்யாவிற்கு எரிச்சல் மூட்டும். கோபம் வரும். என்னமோ முன்ன பின்ன பாக்காத மாதிரி அப்படிப் பாப்பானுங்க. சினிமா பாக்கும்போதே எரிச்சல் வரும். மெல்லிசா புடவை கட்டி மழையில நனையவிடுறது, எல்லா இடத்தையும் க்ளோஸப்ல காட்டுறது, முந்தானைய சரியவிடுறது; எப்படா நீங்கெல்லாம் அவளை ஒரு அறிவாளியா, ஒரு மனுஷியா காமிக்கப்போறீங்க?
காரைக்குடில இருக்கிறவரைக்கும் வீட்டிலதான் எல்லா உடைகளையும் போட்டு பாத்திருக்கா வித்யா. அப்பா மாதிரி எல்லா ஆம்பிளைங்களும் இருக்கக்கூடாதா? வரப்போறவன் அப்பா மாதிரி இருப்பானா? அம்மாகிட்டக்கூட “அப்பா மாதிரி மாப்பிள்ளை பாரும்மா” எனக்கு என்றுதான் வித்யா சொல்வாள்.
“ஆமா, இவரைக் கட்டிக்கிட்டு நான் அழுகிறது பத்தாதா? எது வாங்கித்தாங்கனு கேட்டாலும், ‘அதெல்லாம் சந்தோஷத்தைத் தராது வள்ளி. தேவைக்கு மேல எல்லாமிருக்கு. கண்ணதாசனோட அர்த்தமுள்ள இந்துமதம் பத்துப் பகுதிகளும் ஒரு தொகுப்பாப் போட்டிருக்கானாம். அதை வாங்கித்தரேன் உனக்கு’ அப்படிங்குறாரு. நீயாவது ஞானியைக் கல்யாணம் பண்ணிக்காம மாமா மாதிரி ஆளாப் பாத்து கல்யாணம் பண்ணிக்கோ. இந்த லீவுக்கு பிள்ளைகளைக் கூட்டிட்டு தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் டூர் போறாங்களாம். இந்த மனுசனை காரைக்குடியை விட்டு வெளியே கிளப்பு பாக்கலாம்.
வித்யாவிற்கு மாமாவைப் பிடிக்காது. ஏ ஜோக்ஸ் மாமா. பெரிய நகைச்சுவை மன்னன்னு நினைப்பு. எல்லாம் பெண்களைப் பத்தியும், ஆண் பெண் உறவை சம்பந்தப்பட்ட ஜோக்ஸ். எல்லாரும் சிரிப்பாங்க. வித்யாவிற்கு எரிச்சல் வரும். இப்படி இதைப் பத்தியே ஜோக்ஸ் அடிக்கிறவன் இதையே நினைப்பானோ? சீ. அப்படி நினைக்கக்கூடாது. மாமா தானே. தெரியுது. புரியுது. ஆனால் மாமா வந்தவுடன் அறைக்குள் சென்று சுடிதாருக்கு மாத்திக்கிட்டுதான் வெளியே வருவாள்.
இப்ப மணி போன்ல கேட்கிறான். என்ன சொல்வது? “எப்பவும் போல தான். எதுக்கு கேட்கிறீங்க?”
“இல்லை. தினமும் ஓடலாம் என்று முடிவெடுத்திருக்கீங்க. இந்தியாவில்தான் எல்லாத்துக்கும் ஒரே மாதிரியான உடை போட்டுப்பாங்க. வேலைக்கு போடுற அதே சட்டை பேண்டை, கொஞ்சம் பழசாப் போனா, நடக்கிறதுக்குப் போட்டுப்பாங்க. இங்க அப்படியில்லை. எல்லாத்துக்கும் ஒரு உடையிருக்கு. அதைப் போட்டுக்கிட்டாதான் எந்த உடற்பயிற்சியையும், விளையாட்டையும் நீண்ட நாட்களுக்கு எந்தவித காயமும் இல்லாமல் செளகரியமாகச் செய்யலாம்.”
சொல்றது சரிதான். இப்படிப் போட்டா நல்லதுனு சொல்லு. நான் என்ன போட்டிருக்கேனு எதுக்கு தெரிஞ்சுக்கணும்? அநாவசியம். நவீன நாகரிகம் என்கிற பெயரில் இன்றைய இளைஞர்கள் எதையும் யதார்த்தமாகவும், வெளிப்படையாகவும், எதிலும் தவறில்லை என்று மேம்போக்காக பேசும் விதமும் அணுகுமுறையும் வித்யாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அதிலும் இந்த சென்னை பசங்க தான் ரொம்ப மோசம். நுனி நாக்கு ஆங்கிலத்தில எதையும் முற்போக்குத்தனம் என்கிற போர்வைல அழகாக போர்த்துற சொல்வல்லமை.
“ஓடுவதற்கு வேண்டியவற்றை இனிமேல்தான் போய் வாங்கனும்”
“எனக்கும் சிலவற்றை வாங்கவேண்டியிருக்கு. இன்றைக்கு நாலு மணிக்கு போகலாம்னு இருக்கேன். நீங்களும் வரீங்களா?”
இல்லையென்று சொல்ல தைரியம் வராமல், சரி என்றாள். மணியிடம் மட்டும்தான் இந்தக் குழப்பம். சரிதான் போடானு முகத்தில அடிச்ச மாதிரி சொல்ல முடியலை. கணவனின் ஆருயிர் நண்பன். மணியும் சிவாவும் இரண்டாம் வகுப்பிலிருந்து நண்பர்கள். அண்ணாநகர். சாந்தி காலனி. ஒரே பள்ளி. பிறகு ஒரே கல்லூரி. மேல்நிலை படிப்பிற்கு ஒன்றாக டெக்ஸஸ் வந்தார்கள். இப்பொழுது இருவரும் பிரிமாண்ட்டில். இணைபிரியாத நண்பர்கள். ஆனால் வேறு வேறு மனிதர்கள். சிவா அமைதி. எதிலும் அலட்டல் இல்லை. ஆர்வம் என்று பெரிதாக எதிலும் இல்லை. வேலை வீடு என்றிருப்பான். அதனால்தானோ என்னவோ சிவாவிற்கு மணியை மிகவும் பிடிக்கும். தனக்கு இல்லாத குணங்களை மணியிடம் ரசிப்பான். மணி எல்லோரிடமும் சகஜமாய் பழகுவான், நிறைய நண்பர்கள், சினிமா, புத்தகம், உடற்பயிற்சி, கூடைப்பந்து, மராத்தான் ஓட்டம் என்று 24 மணி நேரத்திற்குள் அடங்கா ஆசைகள், ஆர்வங்கள்.
சிவாவைத் திருமணம் செய்து அமெரிக்கா வந்தவுடன், மணிதான் விமான நிலையத்துக்கு வந்தான். அந்த ஆரம்ப நாட்களில் மணியின் நட்பு ஒரு பரவசமாகத்தான் இருந்தது. இந்தியாவில் உள்ள அனைவரையும் பிரிந்து வந்த வித்யாவிற்கு, மணி நம்பிக்கையான உறவானான். “ஹிட் இட் ஆப் வெல்” என்பதை முதல் முறையாக வித்யா உணர்ந்தாள். மணிக்கும் வித்யாவிற்கும் நிறைய பொதுவான விருப்பங்கள். தான்தான் கிரிக்கெட் பைத்தியம் என்று நினைத்தவளுக்கு, மணியின் கிரிக்கெட் அறிவு பிரமிக்கவைத்தது. இருவரும் டென்டுல்கரின் ஒவ்வொரு மகத்தான சதத்தைப் பற்றியும் அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். மூவரும் உலகக்கோப்பையை ஒன்றாகதான் பார்த்தார்கள். சிவா விளையாட்டு ஆரம்பித்தவுடன் தூங்கிவிடுவான். வித்யாவிற்கு விளையாட்டைவிட மணியின் நேரடி வர்ணனை பிடிக்க ஆரம்பித்தது. படம் பார்க்கும்பொழுதுகூட, அவனின் விமர்சனம் சுவையாக இருக்கும். அவனின் “சென்ஸ் ஆப் யூமர்” அவளை சிரித்துவைத்துக்கொண்டே இருக்கும்.
இருவரின் நேரத்தையும் நாடியவன், இப்பொழுதெல்லாம் அவளின் நேரத்தை மட்டும் நாட ஆரம்பித்தான். சிவா இல்லாத நேரங்களில்தான் போன் செய்வான். வீட்டில் இல்லை என்று தெரிந்தும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி வர ஆரம்பித்தான். சிவாவைவிட தனக்குதான் அவளை நன்றாகத் தெரியும், புரியும் என்ற எண்ணம் அவனுக்கு வந்துவிட்டது போலும். அவளுக்கு எது நல்லது கெட்டது என்று அவன் அறிவுறை கூற ஆரம்பித்தான். கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வகையான “பொஸஸிவ்னஸை” வித்யா அவனிடம் பார்க்க ஆரம்பித்தாள். வித்யாவிற்கு வித்யாசங்கள் தெரிய ஆரம்பித்தன. அம்மா அடிக்கடி சொல்லுவாங்க, “துஷ்டரைக் கண்டால் தூர விலகு. நேரடியா எதையும் கேட்காதே”. விலகணும்.
4 மணிக்கு வரேன் என்று சொன்னவன் 3.45க்கே வந்துவிட்டான்.
“ஹை வித்யா”. கை கொடுத்தான். கை எடுப்பதற்கு சற்று தாமதாமாகிற்று. கொஞ்ச நாளாவே எங்கு பார்த்தாலும் எதுக்கெடுத்தாலும் கை கொடுப்பது. தொட்டுத் தொட்டு பேசுறது. தொடுவது தவறில்லை. தோழமையுணர்வோடு ஒரு மகிழ்ச்சியான உரையாடலின் தொடர்ச்சியாக தொடுவதற்கும், தொடவேண்டும் என்று தொடுவதற்கும் உள்ள வேறுபாட்டை பெண் அறிவாள்.
மிக நெருக்கமாக வந்து நின்றான். “என்ன கிளம்பலாமா”. கண்கள் சட்டென்று கழுத்துக்குக் கீழே போனது. முகத்தைப்பாத்து பேசுடா என்று சொல்லவேண்டும்போல் இருந்தது.
“நல்லா கிளம்பலாம்”. வித்யா எப்பொழுதும் பிறரின் கண்களைப் பார்த்துதான் பேசுவாள். அவன் அப்பொழுது கண்களுக்கு உள்ளே ஆழ்ந்து கூர்ந்து பார்த்தான். வித்யாவால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. கண்களை வேறு திசையில் செலுத்தினாள். இப்படி உற்றுப் பார்க்கிறானே.
அன்றிரவு சிவாவிடம் பேச்சை எடுத்தாள். மனம் திறந்தாள். எண்ணங்களைக் கொட்டினாள். வார்த்தைகள் தெளிவாக வந்தன. வாக்கியங்கள் கோர்வையாக அமைந்தன. இதைப்பற்றி வித்யா நன்கு யோசித்துதான் பேசுகிறாள் என்று சிவாவிற்கு தெரிந்தது. தெளிவான சிந்தனையும், தெளிவான கருத்துக்களும் இருந்தால்தானே தெளிவான வார்த்தைகள் வரும்? இருந்தாலும் சிவாவிற்கு அவள் சொல்வதில் நம்பிக்கை வரவில்லை.
“கண்டதையும் போட்டு குழப்பிக்கற. எனக்கு அவனைத் தெரிஞ்ச மாதிரி யாருக்கும் அவனைத் தெரியாது. அவனுக்கு எத்தனை நண்பர்கள் தெரியுமா? அதில் எத்தனை பேர் பெண்கள் தெரியுமா? நீ சொல்ற மாதிரிதான் அவன்னா, இவ்வளவு நண்பர்கள் இருந்திருக்க முடியுமா? அவன் சுபாவம் அப்படி. வெளிப்படையாகப் பேசுவான். இங்கே ரொம்ப நாளா இருந்துட்டான். கை கொடுக்கறது, தொட்டுப் பேசுறது, பாக்கிற இடத்தில கட்டிப்பிடிக்கறது இங்கே தவறு கிடையாது”
“தவறுன்னு நான் சொல்லல. சரி தவறுன்னு எதுவுமே இல்லை. எங்க பாட்டி காலத்தில, மாமனார்கிட்ட பேசுவது கூட இல்லை. எங்க அம்மா காலத்தில மாமனார்கிட்ட பேசியிருக்காங்க. ஆனால், சமமாக உட்கார்ந்ததில்லை. உங்க அப்பாவோட நான் ஒரே சோபாவில் உட்கார்ந்து பேசியிருக்கேன். ஒண்ணா சாப்பிட்டிருக்கேன். ஏன், சென்னையில், கார்ல முன்னாடி உட்காரவைத்து என்னை கடைக்கு கூட்டிட்டுப்போயிருக்காங்க. இதுல யார் செய்தது சரி? யார் செய்தது தவறு? என் பாட்டி, அம்மா, நான் செய்தது எதுவும் சரியோ தவறோ இல்லை. எங்கள் அறிவிற்கும், மனதிற்கும், அறிந்தது, தெரிந்தது, கற்றது, பெற்றது அனைத்திற்கும் உடன்பாடுள்ளவைகளைச் செய்தோம், முரண்பாடுகள்ளவைகளைத் தவிர்த்தோம்.”
“நாம மூணு பேரும் எத்தனையோ தடவை ஒண்ணா சாப்பிட்டிருக்கோம், படம் பாத்திருக்கோம், மணிக்கணக்கா உட்கார்ந்து பேசியிருக்கோம். ஒரு தடவை கூட அவன் தப்பான வார்த்தையை சொன்ன மாதிரி எனக்குத் தெரியலை.”
“நீங்க அவர் சொன்ன வார்த்தைகளின் அர்த்தங்களை மட்டும் பார்க்கிறீங்க. நான் சொல்லாத வார்த்தைகளின் அர்த்தங்களையும் பார்க்கிறேன்”
“அது கற்பனை வித்யா. உறவுகளில் நிஜமாக நடக்கின்ற சம்வங்களைவிட அதை ஒட்டி வரும் கற்பனைகளே பாதகமாக அமைகின்றன. ஏன் அப்படி சொன்னான்? எதற்காக? இதனாலோ? அதனாலோ? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் கற்பனைகளே. சில நாட்களில் கற்பனைகள் கர்ஜனையாக மாறுகின்றன. நீ அவன்கிட்ட நேரடியாப் பேசிப்பாறேன்”
“என்னால அதையும் நிரூபிக்க முடியாது. வாதத்தில தோத்திடுவேன்.”
“பாத்தியா. நான் சொன்னேன்ல”
“வாதத்தை வெல்லலாம். உண்மையை வெல்லமுடியுமா?”
“எப்படி உண்மைனு நம்புற?”
“என்னுடைய பெண்மை காட்டும் உண்மை அது. வாழ்க்கைங்கிறது நதி மாதிரி. போற வழியில நிறைய பள்ளங்கள், மேடுகள், ஏற்றம், இறக்கம், சில இடத்தில வேகமாப் பாயனும், சில இடத்துல மெல்ல ஊர்ந்து போகனும். அதையெல்லாம் எனக்குத் தெளிவாகக் காட்டி, அபாயங்களைத் தவிர்த்து, என்னை வளைத்தும், நெளித்தும் ஒரு இலக்கை நோக்கிக் கொண்டு செல்வது என் பெண்மை தரும் உள்ளுணர்வுதான். வேறு எது கைவிட்டாலும் அது என்னைக் கைவிட்டதே இல்லை.”
அருகில் இருந்தவளை தன் வலது கையால் இழுத்து தன் தோளோடு சேர்த்துக்கொண்டான். அவள் முகத்தை சற்றே தூக்கி உற்றுப் பார்த்தான். என்றைக்கும் இல்லாமல் வித்யாவின் முகம் தெளிவாக பட்டது அவனுக்கு. ஒரு பெண்ணின் அறிவுதான் அவள் அழகு. அவள் பேச்சுதான் காமம். “இப்ப என்ன செய்யலாம்னு இருக்க?”
“ஒரு தார்மீக வேலியைப் போட்டுக்குவேன்.”
ஆண் பெண் நட்பு கொஞ்சம் சிரமம். எண்ணங்களும், அதன் பிரதிப்பலிப்பான வார்த்தைகளும், பார்வையும், மற்றும் விளக்க முடியாத எண்ணற்ற அணுகுமுறைகளும் இந்த வேலிகளை எழுப்புகின்றன. நட்பின் நெருக்கத்தை நிர்ணயம் செய்கின்றன. அதைப் புரியாத ஆண்கள் பெண்களுக்கு “புரியாத புதிர்” என்ற பட்டத்தை சூட்டிவிட்டு வேலிக்கு வெளியிலேயே இருக்கிறார்கள்.
ஆண் பெண் நட்பு எல்லைகளைக் கொண்டது. அந்த எல்லைகளைப் புரிந்து கொள்ள அறிவும் அனுபவமும் தேவை. மண்ணுக்கு எப்படி மழை பெய்து ஒரு மண்வாசனை தருகிறதோ, பெண்ணுக்கு வாசம் தருவது ஆண் தரும் மதிக்கின்ற நேசம்தான்.
போன் அடித்தது.
“சொல்லுடா. இன்னிக்கா? என்னால முடியாதுடா. இரண்டு நாளா லேட் நைட் கான்பரன்ஸ் கால்ஸ். படம் போட்டா தூங்கிடுவேன். அவளா? நில்லு கேட்டு சொல்றேன்”. போனை மியூட் செய்து, வித்யாவைப் பார்த்து,
“ராதா மோகனோட அபியும் நானும் டீ.வி.டீ வந்திருக்காம். நம்ம வீட்டுக்கு மணி எடுத்துக்கிட்டு வரானாம், பார்க்கிறியா அவனோட?”
“அடுத்த வாரம் நாம இரண்டு பேரும் சேர்ந்து பாக்கலாம்”
“எதுக்குத் தள்ளிப்போடுற? உனக்குதான் பிரகாஷ் ராஜ்னா ரொம்பப்பிடிக்குமே. ரொம்ப நாளா இந்தப் படத்தை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கிற.”
“இரண்டு பேருக்கும் களைப்பா இருக்கு, தூங்கப்போறோம்னு சொல்லிடுங்க.” பட்டென்று வந்தது பதில்.
அங்கே ஒரு தார்மீக வேலி எழுந்தது.
- கலில் கிப்ரான் கவிதைகள் காதலியோடு வாழ்வு << குளிர் காலம் >> கவிதை -2 (பாகம் -4)
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -30 << வீணாக்குபவள் நீ ! >>
- உயிர்க்கொல்லி – 1
- Tamil Literary Seminar at Yale University
- எழுத்தாளர்விழாவில் தமிழ் மாணவர்களுக்கு பயனுள்ள கருத்தரங்கு
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 2008ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தேர்வும் சிறுகதைக் கருத்தரங்கமும்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -5 பாகம் -3
- வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்…
- தார்மீக வேலிகள்
- நர்கிஸ் மல்லாரி நாவல் கட்டுரைப் போட்டி முடிவுகள்
- கடந்த வாரத்திய மொழிபெயர்ப்பு கதை குறித்து
- புத்தகச் சந்தை
- அன்புள்ள ஜெயபாரதன்
- விவரண வீடியோப் படக்காட்சி
- அரசியல்ல இதெல்லாம் சாதா……ரணமப்பா !!!
- இன்னொரு சுதந்திரம் வேண்டும் !
- கந்த உபதேசம்
- “எழுத்தாளர் சுதிர் செந்தில் அவர்களுடன் ஓர் இலக்கிய கலந்துரையாடல்”
- வந்து போகும் நீ
- யாழ்ப்பாணத்தில் அண்மைக்கால நூல் வெளியீட்டு நிகழ்வுகள்
- சங்கச் சுரங்கம் – 8 : சிறுபாணாற்றுப் படை
- பாரி விழா
- ஓட்டம்
- பாலம்
- ஐந்து மணிக்கு அலறியது
- கவிதை௧ள்
- கவிதையை முன்வைத்து…
- வேத வனம் விருட்சம் 30
- சிட்டுக்குருவி
- திண்ணைப் பேச்சு : அன்புள்ள சாரு நிவேதிதா
- சென்னை நகர்புற சேரி முஸ்லிம்கள் : கவிஞர் சோதுகுடியானின் கள ஆய்வியல் வரைபடம்
- சதாரா மாலதி
- நினைவுகளின் தடத்தில் – (28)
- என் மகள் N. மாலதி (19-ஜூன் 1950—27 மார்ச் 2007) – 2
- “பிற்பகல் வெயில்”
- உயிர்க்கொல்லி – 2
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தொன்பது இரா.முருகன்
- கழிப்பறைகள்