தழல் ததும்பும் கோப்பை

This entry is part [part not set] of 26 in the series 20080626_Issue

பாஸ்கர் (எ) ஒளியவன்


காலை ஏழு மணிக்கு வாசன் வீடு எங்கும் பரபரப்பாய் சுற்றிக் கொண்டிருக்கிறான். மாடி, அடுக்களை, மூன்று படுக்கையறை, குளியலறை எங்கேயும் தென்படவில்லை. உடல் முழுதும் வியர்த்திருக்கிறது அவனுக்கு. சத்தமிட்டு சத்தமிட்டு தொண்டை வறண்டுவிட்டது. படியிலிருந்து வேகமாக கீழே இறங்கியவன் கால் இடறி 17 படிகளிலும் உருண்டு கேழே விழுந்தான். பின்னந்தலையில் லேசான அடி. உடம்பு எல்லாம் செயலிழந்தது போல உணர்வு. உதடுகள் மட்டும் கனவு கண்டு புலம்புவது போல புலம்ப ஆரம்பித்தது. “எங்கே போனீங்க.. எங்கே போனீங்க… நான் என்ன தப்பு பன்னினேன்….” அப்படியே அந்த பேச்சும் அடங்கி விட்டது.

இதற்கு சரியாக ஒரு நாள் முன்பு…….

அவனுக்குப் பிடித்த ஆப்பம் சுட்டுத்தருமாறு அம்மாவைக் கேட்டுக் கொண்டே இருந்தான் வாசன். “சீக்கிரம்மா, இன்னைக்கு நாம வெளியில போறோம், உனக்கு எங்க போனும்னு தோணுதோ, அங்கே போகலாம். இரவுதான் திரும்பி வருவோம்”.

வழக்கத்துக்கு மாறாக என்ன இவன் இப்படிப் பேசுகிறான் என்ற லேசான அதிர்ச்சியோடு இருந்தாள் வாசுகி. “என்னப்பா, எங்கே போகனும், சித்ராவும் நேத்துதான் அவங்க அம்மா வீட்டுக்குப் போனா, பொண்டாட்டி இல்லைன்னதும் உனக்கு நேரம் போகலையா? அதுக்கு பெருசுங்க நாங்க இரண்டு பேருமா கிடைச்சோம்? எதுக்குப் பறக்குற?” என்று வழக்கமான சிரிப்போடு கேள்வி கேட்டாள் வாசனின் தாய். அந்த நேரம் வாசனின் தந்தை சண்முகமும் வந்துவிட்டார்.

“இல்லைம்மா எனக்கு இன்னைக்கு விடுமுறைதானே, நாம் மூன்று பேரும் வெளியே போய் நீண்ட நாள் ஆச்சு, அதனாலதான், இன்னைக்கு முழுசும் உங்க கூட சுத்தலாம்னு…” என்று கெஞ்சிக் கேட்டான் வாசன். சண்முகம் குறுக்கிட்டு “சரி விடுடி பிள்ளை ஆசப்பட்டு கூப்பிடுறான், போயிட்டு வருவோம்.”

மகிழ்வுந்து புறப்பட்டு மகாபலிபுரம் சென்றது. நல்ல நிழலோரமாகப் பார்த்து மதிய சாப்பாடு சாப்பிட்டு முடிந்த பிறகு அமர்ந்து கொண்டனர். அவ்வளவு நேரம் சுற்றியதில் கால் வலித்தது வாசுகிக்கும், சண்முகத்திற்கும். ஏதோ போல இருந்த மகனின் முகத்தை தந்தை கண்டுபிடித்து விட்டார். “இங்கே வா, என் மடியில் படுத்துக்கோ. என்ன ஆச்சு, இன்னைக்கு உன் நடவடிக்கையே சரியில்ல… நீ எதையோ எங்ககிட்ட இருந்து மறைக்குறா மாதிரி இருக்கு, எதுவா இருந்தாலும் அப்பாகிட்ட சொல்லுப்பா.”

தேக்கி வைத்திருந்த கண்ணீரைத் தாரை தாரையாக வடித்தான். அப்பா மடியில் தலையும், அம்மா மடியில் காலும் வைத்துக் கொண்டு விசும்பினான்.கண்களைத் துடைத்துக் கொண்டே தனக்கும் தனது மனைவிக்கும் நடந்த பிரச்சினையைக் கூறினான்.

“நீங்களா பார்த்துதான் எனக்கு கல்யாணம் செஞ்சுவச்சீங்க, நான் சித்ராவை எப்படிப் பாத்துக்குறேன்னு உங்களுக்கே தெரியும். ஆனால் அவளுக்கு எப்பவுமே நீங்க இரண்டு பேரும் என்கூட இருக்கிறதே பிடிக்கலை. தனிக்குடித்தனமாத்தான் இருக்கனும்ங்குறா. நானும் பலநாள் சமாதானப் படுத்திப் பார்த்துட்டேன். ஆனா நேத்து வெளியில சாப்பிடப் போனப்போ, நான் இன்னைக்கு குழந்தையோட எங்க வீட்டுக்குப் போறேன், தனிக்குடித்தனம் போகலாம்னா என்னைக் கூப்பிடுங்கன்னுட்டுப் போயிட்டாம்மா.” என்று கூறி மீண்டும் அழத் தொடங்கினான்.

நடந்ததையெல்லாம் உணர்ந்த இருவரும் அவனைச் சமாதானப்படுத்தி, அப்பா, அம்மாவும் இருக்கிற வரை உனக்கு எந்தக் கவலையுமில்லை. நாளைக்கே அவளை நம்ம வீட்டுக்குக் கூப்பிட்டு வந்துவிடுவோம் என்று ஆறுதலும்ம் சொன்னார் சண்முகம். அழுது அழுது இரவு 2 மணிக்குத் தூங்கிவிட்டான் வாசன்.

இன்று சரியாக காலை 11 மணிக்கு….

யாரோ தண்ணீர் தெளிப்பது போன்ற ஒரு உணர்வு மெல்ல வாசனுக்கு ஏற்பட்டது. அது மனைவி சித்ராதான். அவன் தெளிந்ததும் அவள் அவனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தாள். இதை உன்னிடம் கொடுக்கும்படி சொல்லியிருக்கிறார் மாமா. வீட்டு தபால் பெட்டியில் இது கிடந்தது. அதை வாங்கி வாசிக்க ஆரம்பித்தான்.

“அன்பு சித்ரா, சீக்கிரமாக நம், இல்லை உன் வீட்டுக்குப் போ. நாங்கள் கிளம்புவதை அவனிடம் சொல்லாமலேயே கிளம்புகிறோம். நாங்கள் எங்கே போகிறோம் என்று எங்களுக்கேத் தெரியாது, எங்களை அவன் தேடவேண்டாமென்று சொல். என் மகன் அழுது நான் பார்த்ததேயில்லை, நேற்று அவன் அழுததை எங்களால் தாங்க முடியவில்லை. எங்களை விட அவனை நீ நன்றாகப் பார்த்துக் கொள்ளுவாய் என்ற நம்பிக்கையோடு செல்கிறோம்.

அன்பு மகனே, தனிக்குடித்தனம் போக வேண்டுமெனின் நாங்களே உன்னை மகிழ்ச்சியோடு அனுப்பியிருப்போம். சித்ராவிடம் எந்தக் கோபமும் கொள்ளாது அவளுடன் அன்புடன் நடந்துகொள். இதில் அவள் தவறு எதுவும் இல்லை. நீங்கள் இருவரும் அன்போடு வாழவேண்டும் என்னும் ஒரே காரணத்திற்காகவே உன்னைவிட்டுப் பிரிகிறோம். இதற்கு பங்கம் விளைவித்துவிடாதே. இப்படிக்கு உன் அன்பு அப்பா, அம்மா.”

கண்ணீரோடு கலைந்து நின்ற சித்ராவைத் திட்டமுடியாமல், வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தான் அவளை. இருவரையும் 8 வயது மகன் சாரதி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.


http://oliyavan-baskar.blogspot.com/
http://oliyavan-sirukathaigal.blogspot.com/

அன்புடன்,
பாஸ்கர் (எ) ஒளியவன்.
mailme.baskar@gmail.com

Series Navigation

பாஸ்கர் (எ) ஒளியவன்

பாஸ்கர் (எ) ஒளியவன்