என் வி சுப்பாராவ்
1. தமிழ் சினிமா விபச்சாரத்தை வளர்த்து சீரழிக்கிறது சமுதாயத்தை.
2. மனிதனுடைய சிந்தனையை தவறான வழிக்கு திருப்புவதே தமிழ் சினிமாதான். தன்னம்பிக்கை அற்றவனாக, நடத்தையில் தரங்குறைந்தவனாக, சகோதர பாசத்தை கேள்வி எழுப்புவனாக தமிழ்சினிமா வளர்க்கின்றது.
3. தமிழ் சினிமா என்பது திரையில் தோன்றி மறையும் கற்பனை. அது ஒரு மாயை. அதில் வருவதெல்லாம் பொய். சினிமாவினால் நன்மை ஏதுமில்லை
4. ஆயிரக்கணக்கான குழந்தைகளின் அறிவுக்கண் குருடானதற்கு காரணம் தமிழ் சினிமா தான்
5. சினிமாக்கலை சமுதாயத்தை சீரழிக்கும் சிலந்திவலை
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் மேற்கோள்கள் பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கம் (Consumers Association of Penang/87 Janan Contonment, 10250 pulau Pinang/Malaysia 1992) வெளியிட்டிருக்கும் தமிழ் சினிமா என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
இந்த மேற்கோள்களிலிருந்து அந்தப் புத்தகம் தமிழ் சினிமா குறித்து எவ்வகையான கருத்துக்களை கொண்டிருக்கின்றது என்பதை யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
சமூகத்தின் பல தவறான கருத்துகளுக்கும், அபிப்பிராயங்களுக்கும். அநியாயங்களுக்கும் முக்கியமான காரணமாக சினிமாவை, குறிப்பாக தமிழ்சினிமாவை, பார்ப்பது இந்நூலின் அடிப்படை கருத்தாகும்.
நாற்பதே பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகம் எனினும் சினிமாவோடு சம்பந்தமுடைய பல பிரச்னைகளைப் பற்றி பேசுகின்றது. சமூகத்தில் சினிமா நட்சத்திரங்களுக்கென இருக்கும் மதிப்பு, முக்கியமாக குழந்தைகள் மீதும், இளைஞர்கள் மீதும் சினிமா ஏற்படுத்தும் பாதிப்பு, சினிமாவின் மூலமாக சமூகத்தில் பரப்பப்படும் வன்முறை, சமூகத்தின் நல்ல மதிப்பீடுகள் சினிமாவினால் பாதிப்புக்குள்ளாகி அதன் புனிதத்துவம் இழந்து போவது, சினிமா எனும் சாதனத்தின் மூலம் சுயநலம் கொண்டோர் செய்யும் ஏமாற்றுகள், ரசிகர் மன்றங்கள், இன்றைய தமிழ் சினிமாவின் நிலை போன்றவைகள் குறித்து காரசாரமான கருத்துக்களை உரத்துக் கூறியிருக்கின்றது.
பயனீட்டாளர் உரிமை, சூழலியல் போன்ற துறைகளில் முன்மாதிரியாக இருக்கும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தமிழ் சினிமாவை குறித்து கவலைப்படுவதன் மூலம் அது சமூகத்தின் மீது கொண்டிருக்கும் அக்கறையை மேலும் அதிகரித்துக் கொள்கின்றது. இந்த அக்கறை வரவேற்கப்படவேண்டியது என்றாலும், தமிழ் சினிமாவைக் குறித்து அவர்களுடைய அணுகுமுறை அறவியல் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. இந்தப் புத்தகம் (தமிழ்) சினிமாவை சமகால கலாச்சார, அரசியல், பொருளாதார நிறுவனங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வெளியிடப்படும் படைப்புக்களின் ஓர் அங்கமாக பார்க்காமல், தனித்துப் பார்க்கின்றது.
சினிமா எனும் சாதனம் சமூகத்தில் இயங்குவது முழுக்க அதன் சுயவிருப்பம் சார்ந்த விஷயமல்ல. சினிமாவை பிற நிறுவனங்களோடு வைத்து நோக்கும்போதுதான் சரியான ஒரு முடிவுக்கு வரமுடியும்.
உதாரணமாக, சினிமா வன்முறையை பரப்புகின்றது என்பதை ஒரு வாதமாக கொள்வோமெனில் சினிமாவில் வரும் வன்முறை காட்சிகளை ஒழித்து விட்டால் மக்களிடையே வன்முறை இல்லாது போய்விடும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.
சமூகக்கட்டமைப்பிலுள்ள வன்முறை (structural violence) யை சினிமா என்னும் சாதனம் எந்த அளவுக்கு நியாயப்படுத்துகின்றது என்பதைப் புரிந்து கொண்டு அந்த வன்முறையைப் போக்குவதே சரியான செயலாக இருக்குமன்றி, சினிமாவில் வரும் வன்முறைக் காட்சிகளை ஒழித்துவிடுவதால் மட்டும் வன்முறை ஒழிந்துவிடாது.
தொடர்புச் சாதனப் படைப்புகளில் சினிமாவோ அல்லது ஒரு வாரப் பத்திரிக்கையோ அல்லது ஒரு தொலைக்காட்சித் தொடரோ அது ஒரு குறிப்பிட்ட சிலரால், குறிப்பிட்ட காரணங்களுக்காக உருவாக்கி வெளியிடப்படுவதாகும். இவ்வாறு வெளியிடப்படும் படைப்புகள் சமூகத்தில் என்ன மாதிரியான நோக்கங்களையும், செயல்பாடுகளையும் கொண்டு இயங்குகின்றன என்பதை புரிந்து கொள்வதே தொடர்புச் சாதனம் குறித்து நாம் செய்யவேண்டிய முதல் காரியமாகும்.
தமிழ் சினிமா குறித்து எல்லா வகையிலும் மாயைகள் உருவாக்கப்பட்டு, அவைகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில் மக்களை குறைகூறி எந்தப் பயனுமில்லை. சினிமா என்றால் என்ன என்பதை எடுத்துக் கூறாத நிலையில் விமரிசனப் பார்வை ஏதுமின்றி சினிமாவை நிஜம் என்று நம்பும் ஒரு மக்கள் கூட்டமே உருவாகும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
சினிமாவைப் பற்றி சரியான முறையில் அணுகக்கூடிய கட்டுரைகள், புத்தகங்கள், வெளியிடப்பட வேண்டும். படங்கள் உருவாக்கப்படவேண்டும். சுருக்கமாக சினிமாக் கல்வி எல்லா மக்களுக்கும் வழங்கப்படவேண்டும். ‘தமிழ் சினிமா ‘ சொல்வது போல சினிமாவை ஒழிக்க முடியாதுதான். ஆனால் சினிமா பைத்தியங்களை உருவாக்காமல் இருக்க முடியும். இதற்கு முக்கியமான தேவையாக இருப்பது தமிழ் சினிமா குறித்தான சரியான அணுகுமுறையும், அதன் அடிப்படையிலமைந்த திரைப்படக் கல்வியும்தான்.
–
ஊடகம் ஜனவரி 94
திண்ணை
|