தமிழ் ஒழிக!

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

சோதிப் பிரகாசம்


தமிழ் வாழ்க!

ஓங்கிக் குரல் கொடுத்தான் அவன்.

அவன்தான் பாமரன் — பசுமரத்தைப் போன்றவன்!

அவன் முன்னால் தோன்றினான் இன்னொருவன்.

அவன்தான் தலைவன் — பசுமரத்தில் ஆணி அடிப்பவன்!

தமிழ் வாழ்க என்று நீ சொல்இ விட்டால் தமிழ் வளர்ந்து விடுமா ?

தமிழுக்கு மூன்று எழுத்து என்பதும் அது மூன்று தமிழ் என்பதும் உனக்குத் தெரியுமா ?

வசனங்களைக் கவிதைகளாய் கவிதைகளை வசனங்களாய்ப் பொழிந்து தள்ளினான் தலைவன்!

“முத்தமிழ்” என்பது பின்பு “ஐந்தமிழ்” ஆகி விடக் கூடும் என்பது முன்பே அவனுக்குத் தெரிந்து இருக்க வில்லை போலும்!

எப்படியும், முத்தமிழ் பேசிய தலைவனை மிகவும் பிடித்துப் போயிற்று பாமரனுக்கு!

தமிழ் மூன்றாய் இருந்தால் என்ன! ஐந்தாய், ஆறாய், அறுபதாய் இருந்தால்தான் அவனுக்கு என்ன! அவனுக்குத் தெரிந்த தமிழ், பேச்சுத் தமிழ்; கொஞ்சம் வசனத் தமிழ்; அவ்வளவுதான்!

தமிழ் வளர்ப்பேன் என்றான் தலைவன்; என் உயிர் உள்ள வரை உயிரைக் கொடுத்தும் தமிழ் காப்பேன் என்று அவன் வாக்குறுதியும் அளித்தான்.

திரு வள்ளுவர் கூற வில்லையா ? எதனை எவன் செய்து முடிப்பானோ, அதனை அவனிடம் விட்டு விட வேண்டும் என்று!

சிந்திக்கத் தெரியாத பாமரன் துணிச்சலுடன் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தான்–

தமிழ் காப்பான் இவன் என்றால், இவன் அல்லவா நெடு நாள் உயிர் வாழ்ந்திட வேண்டும்!

இவன் இருக்கும் வரை தமிழும் இருக்கும் என்றால் —

தமிழ் இருக்கும் வரை இவனும் இருந்து விட்டால் —

தமிழைத் தலையில் சுமந்து திரிகின்ற வேலை பாமரனுக்கு இனிமேல் இருக்காது அல்லவா!

பாமரனுக்குத் தெரியாதாம் சிந்திப்பதற்கு! படித்தவர்கள் சொல்கிறார்கள்!

பாமரன் இப் பொழுது ஓங்கிக் குரல் கொடுத்தான்–

தமிழினத் தலைவன் வாழ்க! தன்மானத் தமிழன் வாழ்க!

இப்படி–

பாமரன் சுவனன் ( ரசிகன் ) ஆகின்ற பொழுது தலைவன் கலைஞன் ஆகி விடுகிறான்; பாமரன் ஏழை ஆகின்ற பொழுது தலைவன் வள்ளல் ஆகி விடுகிறான்; பாமரன் மூடன் ஆகின்ற பொழுது தலைவன் அறிஞன் ஆகி விடுகிறான்.

அப்படி என்றால், பாமரன் குடிமகன் ஆகின்ற பொழுது தலைவன் அமைச்சன் ஆகிட வேண்டாமா ?

இறுதியில் ஒரு நாள் அரியணையில் ஏறி அமர்ந்து விடுகிறான் தமிழினத் தலைவன்!

தன்மானத்தை விற்று விட்டுப் பணக் காரத் தலைவனாகவும் அவன் மாறி விடுகிறான்!

பொறுக்க வில்லை இது இன்னொருவனுக்கு! அவன்தான் புலவன் — செந்தமிழ் அறிஞன்!

பாமரனைப் பார்ந்த்து அவன் கேட்கிறான்:

ஏ, பாமரனே, தமிழின் தீஞ்சுவை தெரியுமா, உனக்கு ? சங்கத் தமிழ் தெரியுமா ? தமிழின் தொன்மை தெரியுமா ? தொல்காப்பியம்தான் உனக்குத் தெரியுமா ?

குறிஞ்சி தெரியுமா ? முல்லை தெரியுமா ? தினைதொறும் மரீஇய திணைநிலைதான் தெரியுமா ?

விழித்தான் பாமரன்! கொஞ்சம் அவனுக்குத் தெரிந்தது போல் இருந்தது; எனினும் எதுவும் புரிய வில்லை.

தமிழ் அறிஞன் வாழ்க!

பாமரன் இப்படிக் குரல் கொடுப்பான் என்று எதிர் பார்த்தான் தமிழ் அறிஞன்.

ஆனால், பாமரனுக்கு ஒன்று தெளிவாகத் தெரிந்தது — தனக்குத் தெரியாத புலமைத் தமிழ், தனது தலைவனுக்கு நிச்சயம் தெரியும் என்று!

மீண்டும் அவன் ஓங்கிக் குரல் கொடுத்தான் —

தமிழ் இனத் தலைவன் வாழ்க!

கோவத்தால் கொதித்துப் போனான் தமிழ் அறிஞன்; அல்ல, சினத்தால் சினந்து போனான்.

அவன் வாயில் இருந்து தமிழ் அருவி புரண்டோடி வந்தது:

சூடு இல்லாதவனே, சுரணை கெட்டவனே, தமிழ் உணர்வு இருக்கிறதா, உனக்கு ?

நீ பேசுவது தமிழா ? தெலுங்கா ? சம்ஸ்க்ருதமா ? அல்லது ஆங்கிலமா ? என்றுதான் உனக்குத் தெரியுமா ?

உனது கொச்சைப் பேச்சால் செந் தமிழுக்குத் தீட்டு அல்லவா, ஏற்பட்டு விட்டது!

பாமரனுக்கு ஒன்றும் புரிய வில்லை.

தனக்கு விருப்பமானதை “ஆசை” என்று சொல்இக் கொண்டு வந்த பாமரன், மற்றவர்களுக்காகத் தான் விரும்பியதை “ஆசி” என்று சொல்இக் கொண்டு வந்தான்.

ஆனால், “ஆசை”யைத் தமிழ் என்று ஏற்றுக் கொண்ட தமிழ் அறிஞன், “ஆசி”யைச் சம்ஸ்க்ருதம் என்று சொல்இ விட்டான்!

காட்டப் படுவதைக் காட்சி என்று தெரிந்து வைத்து இருந்த பாமரன், சாட்டப் படுவதைச் “சாட்சி” என்று பேசிக் கொண்டு வந்தான்.

“நிறுவுதல்” என்பது “நிறுவனத்திற்கு” ஆகிப் போய் விட்டதால், அதை “நிருபித்தல்” என்று அவன் நிலைப் படுத்திக் கொண்டு வந்தான்.

“இசைவு” என்பதும் இப்படித்தான் “இஸ்டம்” ஆகி இருந்தது.

ஆனால், பாமரத் தமிழன் வளர்த்துக் கொண்டு வந்த தமிழை எல்லாம் சம்ஸ்க்ருதம் என்று புலமைத் தமிழன் இடித்துக் கூறி விட்டதால், இறுதியில் இடிந்து போனான் பாமரன்!

ஏ, தமிழ் அறிஞனே, “உயர்த்தி” என்பதை “ஒசத்தி” ஆக்கிய நாங்கள், பின்னர் அதனை “ஒஸ்தி” ஆக்கிய உடன், “ஸ்” என்னும் எழுத்தை நீ உண்டாக்கி இருக்க வேண்டாமா ?

எங்கள் ஒஇப்பின் எண்ணிக்கை கூடக் கூட, எழுத்தின் எண்ணிக்கையை நீ கூட்டிக் கொண்டு வந்து இருக்க வேண்டாமா ?

பேச்சு வழக்கில் சொற்களை நாங்கள் கொச்சைப் படுத்தி வந்து இருக்க வில்லை என்றால், திரிந்து திரிந்து தமிழ் மொழிதான் வளர்ந்து வந்து இருக்க முடியுமா ?

சம்ஸ்க்ருதம், சம்ஸ்க்ருதம், என்று ஒரு பக்கம் அதைத் திட்டுவதும் மறு பக்கம் அதைக் கண்டு அஞ்சுவதும், ஆகத் தடுமாறிக் கொண்டு இருக்கிறாயே நீ, அது என்ன வென்று எப் பொழுதாவது நீ எண்ணிப் பார்த்து இருக்கிறாயா ?

இப்படி எல்லாம் அறிஞனைக் கேட்டு இருக்க வேண்டும் பாமரன்!

அவன்தான் பாமரன் ஆயிற்றே!

அவனுக்கு ஐயம் வந்து விட்டது — தனது தாய் தனக்கு ஊட்டியது தமிழ்ப் பாலா ? அல்லது சம்ஸ்க்ருதப் பாலா ? என்று!

சூறாவளியின் சுழற்சியில் சங்கப் பலகையில் போய் ஒட்டிக் கொண்டு இருந்த தமிழ் அறிஞர்களின் சான்றிதழைப் பெற்ற பின்னர்தான், தமிழைத் தான் பேசிட வேண்டுமோ என்று அவன் பயந்தும் போய் விட்டான்!

இறுதியில், தமிழ்ச் சொற்களை உருவாக்குவதை விட்டு விட்டு, அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக ஆங்கிலச் சொற்களை அவன் பயன் படுத்தத் தொடங்கினான்.

“ரூபாய்” என்பது சம்ஸ்க்ருதம் என்று தமிழ் அறிஞன் சொல்இ விட்டதால் “ருப்பி” என்று அதை அவன் ஆங்கிலத்தில் உச்சரித்தான்.

“ராங் காட்டாதே” என்றான்; “அது ஈஸி” என்றான்; “ப்ளாக் மெய்ல்” என்றான்; “ந்ச்சீட்டிங்” என்றான்; “பேப்பர்” என்றான்; ஆங்கில வார்த்தைகள் தாராளமாக அவனுக்குக் கிடைத்துக் கொண்டும் வந்தன.

எனினும், மொழி வளர்க்கும் பணியை மட்டும் அவன் விட்டு விட வில்லை.

“ச:ப்-அர்:பன் (ள்ன்க்ஷ-ன்ழ்க்ஷஹய்)” என்பதை “சப்ரப்பன்” என்றான்; “தேங்க்ஸ்” என்பதை “டாங்க்ஸ்” என்றான்.

இது தமிழ் அறிஞனுக்குப் பிடிக்க வில்லை; தமிழ் நாட்டு ஆங்கில அறிஞனுக்கும் பிடிக்க வில்லை.

தலையைப் பிய்த்துக் கொண்ட பாமரன், இறுதியில் ஒரு நாள் ஓங்கிக் குரல் கொடுத்தான்:

தமிழ் ஒழிக!

இதை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தவர்கள் ஓடோடி வந்தார்கள் —

நல்லது, ஹிந்தி வாழ்க! என்று சொல்!

ஆங்கிலம் வேண்டும்! என்று சொல்!

என்று அவனுக்கு அறிவுரை கூறத் தொடங்கினார்கள்.

பாமரனுக்கு எல்லாம் புரிந்து விட்டது — அனைத்தும் வெங்காயம், என்று!

வெங்காயத்தை உரித்துப் பார்த்து விட்ட இளைஞன் ஒருவன் அங்கே வந்தான்!

பார்த்தாயா ? ஒன்றும் இல்லை!

என்று பாமரனுக்கு அதை அவன் உரித்தும் காட்டினான்!

எதுவும் புரியாமல் பாமரன் விழித்துக் கொண்டு இருந்த பொழுது, இளைஞன் கூறினான்–

எல்லோரும் ஏமாற்றி விட்டார்கள்!

தமிழ் பற்றியது அல்ல நமது பிறழ்ச்சனை!

தமிழனைப் பற்றியது!

ஏன், நான் தமிழன் இல்லையா ?

பரிதாபமாகக் கேட்டான் பாமரன்.

இல்லை!

நீ ஒரு சாதிக் காரன்!

உனக்கு ஒரு சாதி!

எனக்கு இன்னொரு சாதி!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சாதி!

பாமரனுக்குப் புரிந்து விட்டது —

தமிழன் என்று எவனும் இல்லை என்று!

ஓங்கிக் குரல் கொடுத்தான் அவன் —

தமிழனத் தலைவன் ஒழிக!

தமிழ் அறிஞன் ஒழிக!

சாதி இல்லாத தமிழனை உருவாக்கிடத் தமிழால் முடியாது என்றால் —

தமிழும் ஒழிக!

***

(சோதிப் பிரகாசம்)

62, கிழக்கு மாட வீதி,

வில்இவாக்கம்,

சென்னை – 600 049.

தொலைபேசி: அலுவலகம்: 26172823.

வீடு: 26444637.

sothipiragasam@yahoo.co.in

(புதிய கோடாங்கியில் வெளிவந்தது)

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்