முனைவர் க.துரையரசன்
முன்னுரை
உலகு தழுவி வாழும் தமிழ் மக்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பயன்கொள்ளும் வகையில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டு, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகம் அரிச்சுவடி முதல் ஆராய்ச்சி வரையிலான படிப்புகளை வழங்கும் செயல் திட்டத்துடன் இயங்கி வருகிறது. இப்படிப்புகளுக்கான பாடங்கள் கணிப்பொறியின் பல்லூடக வசதிகளைப் பயன்படுத்தி எழுத்து வடிவம், ஒலிவடிவம், ஒளி வடிவம் முதலியவற்றின் வாயிலாக படிப்பவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் அமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்ந்து பயில்வோர் மட்டுமின்றி விரும்புகின்ற அனைவரும் பயன்பெறுகின்ற வகையில் மிகச் சிறந்த மின்நூலகம் ஒன்று இப்பல்கலைக்கழக இணையத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நூல்களில் இடம்பெற்றுள்ள செய்திகளைப் பயனாளர் தேவைக்கேற்ப பெறுகின்ற வகையில் பல்வேறு தேடுதல் வசதிகளுடன் இம்மின்நூலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்ஙனம் தேடுதல் வசதிகளுடன் இந்நூலகம் அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பாகும். இந்நூலகத்தின் வசதிகளும் வாய்ப்புகளும் குறித்துத் தொடர்ந்து நோக்கலாம்.
மின் நூலகம்
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் மின் நூலகம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களின் ரோமன் வடிவம், அகராதிகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள், கலைச்சொற்களம், பிற இணையத்தளங்களுக்குரிய இணைப்புகள் ஆகிய கூறுகளை உள்ளடக்கி உள்ளது.
நூல்கள்
சங்க காலம் முதல் இன்றுவரையிலான இலக்கண, இலக்கிய நூல்கள் அனைத்தும் இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இதுகாறும் 93817 பக்கங்களைக் கொண்ட 208 நூல்கள் இணையத்தில் இடப்பெற்றுள்ளன. மேலும் 51852 பக்கங்களைக் கொண்ட 110 நூல்கள் இணையத்தில் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நூலகத்தில் இலக்கணம் என்ற தலைப்பின் கீழ், தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை, தண்டியலங்காரம், வீரசோழியம், நம்பியகப்பொருள் விளக்கம், நன்னூல் ஆகிய நூல்கள் உரைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன.
சங்க இலக்கியங்களும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் முழுமையாக உரைகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
காப்பியங்கள் என்ற தலைப்பின் கீழ், ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் பெருங்கதை, கம்பராமாயணம், வில்லிபாரதம், இரட்சணியமனோகரம், திருவிளையாடற்புராணம், கந்தபுராணம் ஆகியவையும் இதன்கண் உள்ளன.
சமய இலக்கியங்கள் என்ற தலைப்பில், சைவ இலக்கியங்களான பன்னிரு திருமுறைகள், வைணவ இலக்கியமான நாலாயிர திவ்ய பிரபந்தம், கிறித்துவ இலக்கியங்களான தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், திருஅவதாரம், இயேசு காவியம், இரட்சணியமனோகரம், இசுலாமிய இலக்கியங்களான சீறாப்புராணம், நெஞ்சில் நிறைந்த நபிமணி ஆகியவை இணையத்தளப் படுத்தப்பட்டுள்ளன.
சிற்றிலக்கியங்கள் என்னும் தலைப்பின்கீழ், குமரேச சதகம், அபிராமி அந்தாதி, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், தண்டலையார் சதகம், திருக்கருவைப்பதிற்றுப்பந்தாதி, கச்சிக்கலம்பகம், குற்றாலக்குறவஞ்சி, தியாகேசர் குறவஞ்சி, கொங்கு மண்டலச் சதகம், பாண்டிமண்டலச் சதகம், திருசெந்தூர் பிள்ளைத்தமிழ், சேக்கிழார் பிள்ளைத்தமிழ், புலவராற்றுப்படை, இரணியவதைப்பரணி, அரிச்சந்திரபுராணம், தணிகைப்புராணம், அஷ்ட பிரபந்தங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
திரட்டு நூல்கள் என்னும் தலைப்பின் கீழ், சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு, இராமலிங்க சுவாமிகள் நூல்கள், தாயுமானவர் சுவாமிகள் நூல்கள் ஆகியவை அமைந்துள்ளன.
நெறி நூல்கள் என்ற தலைப்பில், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை, உலகநீதி, நீதிநெறிவிளக்கம், அறநெறிச்சாரம் ஆகிய நூல்கள் தரப்பட்டுள்ளன.
இருபதாம் நூற்றாண்டு கவிதை இலக்கியங்கள் என்ற தலைப்பில், பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள், கண்ணதாசனின் இயேசுகாவியம், கவிமணியின் நீதிநூல் ஆகிய கவிதைகளும், இருபதாம் நூற்றாண்டு உரைநடை இலக்கியங்கள் என்ற தலைப்பின் கீழ், பாரதியார் கதைகள் மற்றும் கட்டுரைகள். சமணமும் தமிழும், பெளத்தமும் தமிழும், தம்மபதம், பெண்மதிமாலை, தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ்மொழி வரலாறு, பாவாணர் படைப்புகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
நாட்டுப்புற இலக்கியங்கள் வரிசையில் தமிழர் நாட்டுப்பாடல்கள், மலையருவி, காத்தவராயன் கதைப்பாடல் ஆகியவையும் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பலவும் தமிழ் இணையப் பல்கலைக்கழக இணையத் தளத்தில் உள்ளன.
உரைகள்
பழந்தமிழ் இலக்கண நூல்களும், சங்க இலக்கிய நூல்களும் அனைவரும் எளிதில் படிப்பதற்குரிய வகையில் பதம் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. அதுபோல் ஆய்வாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் துணை செய்யும் பல்வேறு உரைகளும் தளத்தில் இடப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக, தொல்காப்பியத்தைப் பொறுத்த வரை இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் ஆகியோர் உரைகள் தளத்தில் இடப்பட்டுள்ளன. மேலும், தெய்வச்சிலையார், கல்லாடர், பாவலர் பாலசுந்தரம், ஆ.சிவலிங்கனார் ஆகியோர் தம் உரைகளும் சேர்க்கப்பட உள்ளன.
அதுபோல் திருக்குறளுக்குப் பரிமேலழகர், மணக்குடவர், மு.வரதராசன், தேவநேயப்பாவாணர் ஆகியோரின் உரைகளும் ஜி.யு.போப், சுத்தானந்த பாரதி ஆகியோரின் மொழிபெயர்ப்புகளும் தளத்தில் இடப்பட்டுள்ளன.
தொல்காப்பியம், திருக்குறள் போன்றே பிற இலக்கண, இலக்கிய நூல்களுக்குப் பல்வேறு உரைகளையும், கடின நடை கொண்ட உரைகளைப் பதம்பிரித்தும் வழங்கும் எண்ணம் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்துக்கு உண்டு.
தேடுபொறி வசதிகள்
தமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகத்தின் சிறப்புக் கூறுகளுள் தலையாயது தேடுபொறி வசதிகள் அமைந்துள்ளமையாகும். இத்தேடுதல் வசதிகளின் துணை கொண்டு தேவையான நூல்களிலிருந்து வேண்டிய செய்திகளை எளிதில் பெறலாம். எடுத்துக்காட்டாக, திருக்குறளை எடுத்துக் கொள்ளலாம்.
திருக்குறளுக்கு மேற்சுட்டியவாறு அறுவரின் உரைகள் உள்ளன. இவற்றில் வேண்டிய உரைகளைத் தேர்வு செய்தும் தகவல்களைப் பெறலாம்; அல்லது அறுவரின் உரைகளையும் ஒருசேரப் பார்க்க வேண்டுமானாலும் தேர்வு செய்து பார்க்கலாம். அதாவது ஒருகுறளைப் படிப்பதற்கு முன் தேவையான உரைகளைத் தேர்வு செய்து கொண்டு படிக்கலாம். இது ஒரு முறை.
சில வேளைகளில் திருக்குறளைப் படித்துக் கொண்டே செல்கின்ற போது உரைகளின் மூலம் தெஒளிவு பெற வேண்டிய அவசியம் ஏற்படலாம் அவ்வேளையில் வேண்டிய உரைகளைப் பெறுகின்ற வசதியும் இத்தளத்தில் செய்து தரப்பட்டுள்ளது.
மேலும், எண் தேடல், சொல் தேடல், அதிகாரம் தேடல் ஆகிய தேடுபொறி வசதிகளும் திருக்குறளுக்குச் செய்து தரப்பட்டுள்ளன. சொல் தேடல் என்பதில் திருக்குறளில் பயின்றுவரும் ஏதேனும் ஒரு சொல்லைக் கொடுத்துக்கூட தேடிப்பெறலாம். இதன் மூலம் ஒரு சொல் திருக்குறளில் எத்தனை இடத்தில் பயின்று வந்துள்ளது; ஒரு சொல் குறளின் தொடக்கத்தில் – இடையில் – இறுதியில் எத்தனை முறை பயின்று வந்துள்ளது என்பன போன்ற புள்ளி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது திருக்குறளில் தெரிந்த ஒரு சொல்லை மட்டுமே கொண்டு ஒருவர், அது குறித்து தேவையான தகவல்களைப் பெறக்கூடிய வகையில் திருக்குறளில் தேடுதல் வசதி அமைந்துள்ளது சிறப்பாகும். இதுபோலவே எண் தேடல், அதிகாரம் தேடல் என்ற வகையிலும் கூட குறள்களையும் அவற்றிற்கான உரைகளையும் பெறலாம்.
மேலும் ஓர் எடுத்துக்காட்டு
எட்டுத்தொகையில் ஒன்றான நற்றிணை என்ற நூல், எண், பாடியோர், பாடப்பட்டோர், வள்ளல்கள், மன்னர்கள், திணை, கூற்று, பாடல் முதற்குறிப்பு, மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள், தானியங்கள், பழங்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள் முதலிய தேடுதல் வசதிகளுடன் இணையத் தளப்படுத்தப்பட்டுள்ளன. இத்தேடுதல் வசதிகளின் துணை கொண்டு நற்றிணையில் இடம் பெற்றுள்ள மலர்கள் எத்தனை – அவை எந்த பாடல்களில் எல்லாம் பயின்று வந்துள்ளன – எத்தனைமுறை பயின்று வந்துள்ளன என்றெல்லாம் கணக்கிட்டுவிட முடியும். இது போலவே மீன்கள், விலங்குள், பறவைகள் ஆகிய அனைத்தையும் கண்டறிந்து புள்ளி விவரங்களாக்கி விட முடியும். இவை மட்டுமின்றி நற்றிணையில் இடம் பெற்றுள்ள சில சிறப்புச் செய்திகளைக் கொண்டு – உதாரணமாக, புலியின் முன்னங்கால்கள் சிறியவை என்ற தகவலை மட்டுமே கொண்டுகூட அப்பாடலைக் கண்டறிந்து கொள்ளும் வகையில் தேடுதல் வசதி செய்து தரப்பட்டுள்ளமை வியக்கத்தக்க ஒன்றாகும்.
திருக்குறள், நற்றிணை போன்றே இத் தளத்தில் உள்ள வெவ்வேறு நூல்களும் ஆய்வாளர்களின் நலன் கருதி பல்வேறு தேடுதல் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
ரோமன் வடிவம்
தொல்காப்பிய நூற்பாக்கள் மற்றும் சங்க இலக்கியப் பாடல்கள் முழுவதும் ரோமன் வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பல நூல்கள் ரோமன் வடிவத்தில் வழங்கப்பட உள்ளன.
அகராதிகள்
மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் அகராதிகள் பெரிதும் பயனளிக்கக் கூடியவை என்பதில் கருத்து வேறுபாடுகள் கிடையாது. இக் கருத்தை ஒட்டியே தமிழ் இணையப் பல்கலைக்கழக மின் நூலகத்தில் தற்பொழுது நான்கு அகராதிகள் இடம் பெற்றுள்ளன. அவை;
(i) சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் – தமிழ் – ஆங்கிலப் பேரகராதி
(ii) பழனியப்பா சகோதர்களின் ஆங்கிலம் – தமிழ் – பால்ஸ் அகராதி
(iii) சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலம் – தமிழ் அகராதி
(iv) பேராசிரியர் மு.சண்முகம்பிள்ளை அவர்களின் தமிழ் – தமிழ் அகராதி.
இவ்வகராதிகள் சொல் தேடல், பக்கம் தேடல், அகரவரிசைப்படி சொற்களைப் பார்த்தல் ஆகிய தேடுதல் வசதிகளுடன் கூடியவை.
தமிழ்ச் சொற்களைத் தட்டச்சுச் செய்வது பலருக்கும் கடினமாக இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு இவ்வகராதிகளைப் பார்ப்பவர்கள் தமிழில் எளிதாகத் தட்டச்சுச் செய்யும் வகையில் தமிழ் விசைப்பலகை (Tamil Key Board) கணினித் திரையில் தெரியும். அவ்விசைப் பலகையில் உள்ள எழுத்துகளைச் சுட்டியின் (Mouse) துணைகொண்டு தேர்வு செய்து வேண்டிய சொற்களுக்கு உரிய பொருளைக் காணும் வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், இத் தளத்தில் தமிழ்-தமிழ், தமிழ்-பிறமொழி, பிறமொழி – தமிழ் என்ற பல வகையான அகராதிகள் இடம் பெற உள்ளன.
பண்பாட்டு நிகழ்ச்சிகள்
உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் அறிந்து கொள்வதிலும் பாதுகாப்பதிலும் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருக்கின்றார்கள். அவர்களது ஆர்வத்தை மதிக்கின்ற வகையில் தமிழர்களுக்கே உரிய பண்பாட்டு நிகழ்வுகளைக் காட்டும் ஒலி – ஒளிக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், புலியாட்டம், தெருக்கூத்து, பாவைக்கூத்து, நாதஸ்வரம், ஜல்லிக்கட்டு, பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. இவை போன்ற இன்னும் பிற தமிழ்நாட்டுக் கலைகள் இடம் பெற உள்ளன.
கோயில்களுக்குப் பெயர் போனது தமிழகம். அவ்வகையில் தமிழகத்தில் உள்ள தேர்ந்தெடுத்த கோயில்களின் படக் காட்சிகளும் (Photo Clippings), ஒளிக் காட்சிகளும் (Video Clippings) தமிழ் இணையப் பல்கலைக்கழக இணையத் தளத்தில் உள்ளன. இதுவரை 137 சைவ, வைணவக் கோயில்களின் படக்காட்சிகளும், ஒளிக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதன்கண் மேலும் பல கோயில்கள் சேர்க்கப்பட உள்ளன. சைவ, வைணவக் கோயில்கள் மட்டு மன்றி கிறித்தவ ஆலயங்கள் மற்றும் இசுலாமியரின் பள்ளிவாசல்களும் விரைவில் சேர்க்கப்பட உள்ளன.
கலைச் சொற்களம்
சமுதாயவியல், மருத்துவவியல், கால்நடை மருத்துவவியல், உயிரியல் தொழில்நுட்பவியல், கலை மற்றும் மானிடவியல், தகவல் தொழில் நுட்பவியல், பொறியியல் மற்றும் தொழில் நுட்பவியல், வேளாண்மைப் பொறியியல், அறிவியல், சட்டவியல், மனைஇயல் ஆகிய பல்வேறு துறைகளைச் சார்ந்த 2.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட கலைச் சொற்கள் இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ளன. மேலும் 61,786 சொற்கள் விரைவில் இடம் பெற உள்ளன. இக் கலைச் சொற்களம், கலைச் சொல்லாக்கத்தில் ஈடுபடுவோர்க்கும் அதனைத் தரப்படுத்த விழைவோர்க்கும் மிகுந்த பயனளிக்கக் கூடிய ஒன்றாகும்.
பிற இணையத் தளங்களுக்கான இணைப்புகள்
தமிழ் இணையப் பல்கலைக்கழக இணையத்தளத்திலிருந்து பிற இணையத் தளங்களுக்குச் செல்வதற்குரிய இணைப்பு வசதிகள் அமைத்துத் தரப்பட்டுள்ளன. இதன் வழி தற்பொழுது Project Madurai, Upenn, Tamilnet99 ஆகியவற்றிற்கான இணைப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன. மேலும், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தோடு இணைப்பு வசதி ஏற்படுத்திக் கொள்ள விரும்புவோர் கட்டணம் ஏதுமின்றி இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தமது இணையத்தளத்தில் பிற தளங்களுக்கான இணைப்புகளை வழங்கவும், பிற இணையத்தளங்களில் தமது தளத்திற்கு இணைப்பு வழங்கவும் தயாராக உள்ளது.
முடிவுரை
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் மின் நூலகம், தமிழ் நூல்களைக் கொண்ட பிற இணையத்தளங்கள் அளிக்கின்ற வசதிகளை விட, கூடுதலான வசதிகளைக் கொண்டதாக உள்ளதைக் குறிப்பாக சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ் நூல்களைக் கொண்ட இணையத் தளங்கள் பெரிதும் தமிழ் நூல்களின் பட்டியலைத் தரக் கூடியனவாக உள்ளன அல்லது தமிழில் உள்ள சில நூல்களைப் பக்கம் பக்கமாகப் பார்த்துப் படிக்கின்ற வகையில் அமைந்துள்ளன. ஆனால், தமிழ் இணையப் பல்கலைக்கழக மின் நூலகம், தமிழ் இலக்கண, இலக்கிய நூல் களின் பாடுபொருள்களைப் பயனாளர் தேவை கருதி ஒரு சில வினாடிகளில், அவர்கள் தேடிப் பெறுகின்ற வகையில் தேடுதல் வசதிகளுடன் அமைந்துள்ளது. தமிழக அரசின் நிதியுதவியுடன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் ஒரு பகுதியாக செயல்படும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம், அதன் மின் நூலகத்தை மிகுந்த பொருள்செலவில் வடிவமைத்துள்ளது. இருப்பினும்கூட இப்பல்கலைக்கழகத்தின் மின்நூலகத்தைப் பயனாளர்கள் எவரும் – எங்கிருந்தும் – எப்பொழுதும் – எவ்விதக் கட்டணமுமின்றி பயன்படுத்திக்கொள்ள இணையக் கதவுகளைத் திறந்தே வைத்துள்ளது.
இணையக் கதவின் திறவுகோல் : www.tamilvu.org
தமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகத்தைப்
பார்ப்பீர்… பயன்பெறுவீர்… கருத்துரை வழங்குவீர்…
முனைவர் க.துரையரசன்
உதவி இயக்குநர்
த.இ.ப., சென்னை – 113.
darasan2005@yahoo.com
—-
- கவிதைகள்
- அவுரங்கசீப்…. ? !!!
- சன் டிவி
- கடிதம்
- ‘விளக்கு ‘ குறித்து சில விளக்கங்கள்
- இஸ்லாமியப் பெண்ணியம் – ஹெச்.ஜி.ரசூல் நூல் வெளிவந்துவிட்டது
- உயிர்நிழல் கலைச்செல்வன் நினைவு-கூடல்
- வகாபிகளின் நவீன தீண்டாமை
- கடிதம்
- ரஜினி வாய்ஸ் ! ஒரு கற்பனை
- கழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன்
- மாஜிகல் ரியலிசம் : கற்பனைகளின் எல்லைகளை கடந்து
- ரிகர்சனிசம்:பின்நவீனத்தின் இன்னொரு முகம்
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -4 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-1 [The Approaching Global Thermage
- கவிதைகள்
- ரா கு கே து ர ங் க சா மி -4
- மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்
- பெரியபுராணம் – 83 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கவிதைகள்
- அந்தக் கணம்
- கீதாஞ்சலி (67) வானும் நீ! கூடும் நீ! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- உள்ளுணர்வில் பலரும் ஹிந்துக்களே
- மகாத்மாவை இனி பரமாத்மா என்றே அழைப்போம்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகம் – வசதிகளும் வாய்ப்புகளும்
- ரஃபீக் ஜகாரியா எழுதிய ‘நல்லிணத்துக்கான பாதை : எங்கே வழி தவறினர் இந்திய இசுலாமியர் ? ‘ – நூல் அறிமுகம்
- ஷரீஅத் குற்றவியல் – ஒரு மறுவிவாதம்
- கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 1
- என் கணவரின் மனைவி!
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 15
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-15) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- தண்டனை