தனிமரம் நாளை தோப்பாகும் – 4

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

எஸ். ஷங்கரநாராயணன்



முழுவதும் விரிவடைந்துவிட்ட பலூன் போல இரவு உருப்பெருகித் திணறியது. மீண்டும் காற்றைப் பிடுங்கி ஆசுவாசப் படுகிற ஒரு பின்னரவின் துவக்கம். அவன் அந்நேரம் வரையிலும் தூங்காமல், தூங்க முடியாமல் கிடந்தான். அறைக்குள் இரவு வெளிச்சம் ஓர் ரகசியம் போல ஊடுருவி யிருந்தது.

பூரணி ஒரு நிழல்போலப் படுத்திருந்தாள். மிக அமைதியுடன் சீரான மூச்சுகளை உதிர்த்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள். நான் உன்னை ஏமாற்றுகிறேனா பூரணி? ஒருவேளை நான் இன்று செத்துப் போகலாம். பிழைத்துக் கொண்டாலும் ஒருவேளை ஜெயிலுக்குப் போக நேரலாம். விஷயங்கள் நாளை எப்படியும் மூடி திறந்து வெளியே வரும். அப்போது என் உருவம் எப்படியும் போகலாம் – நான் தியாகியோ கலகக்காரனோ?

ஆனால் என் கவலை அதைப்பற்றி அல்ல. என் குடும்பத்தின் பொறுப்புகளை நான் அறிவேன். ஆனால் யாருக்குத்தான் குடும்பம் இல்லை? பிரச்னையில்லை? உண்மையில் நம் போராட்டமே இந்தப் பிரச்னைகளுக்காகவே அல்லவா? அதற்கு பிரச்னையில்லாதவர்கள் வழிதேடித்தர எவ்வகையில் இயலும்?

புத்தர் சொன்னாரே, சாவே இல்லாத வீட்டில் அரிசி வாங்கி வா, என்று. சாவே இல்லாத வீடு ஏது? பிரச்னை இல்லாத குடும்பம் ஏது? பிரச்னைகள் அடிப்படைத் தேவைகளில் இருந்து எழுகின்றன. புதிய தேவைகள், புதிய பிரச்னைகள், அதற்கான புதிய சமாளிப்புகள் அல்லது தீர்வுகள், இப்படியாய் நகர்கிறது வாழ்க்கை… அடிப் பெண்ணே, பூரணி, பிரச்னை என்றால் இது என் பிரச்னை மட்டுமல்ல. முந்நூற்றுச் சொச்ச வயிறுகளின் பிரச்னை. சில கேள்விகளுக்கு நாம் பதில்பெற வேண்டியிருக்கிறது. என் குடும்பம் இந்த முந்நூறில் ஒன்றல்லவா? கிடைக்கிற பதில் முந்நூறு குடும்பங்களுக்குமான பதில் அல்லவா? நம் குடும்பத்தில் புதிதாய்க் கேள்விகள் – அது பிரச்னையல்ல. அத்தனை குடும்பங்களுக்குமான பதில் கிடைக்கிறதே! அதுதான் முக்கியம். ஊர்ப்பிரச்னையில் இது, நம்முடையது, சின்ன விஷயம். வேறு வழியும் இல்லை இதற்கு!

தூக்கம் வராவிட்டாலும் அவன் கண்மூடி சும்மா தூங்குவதுபோலக் கிடந்தான் அவளுக்காக. நன்றாய் அமைதியாய் உறங்கு பெண்ணே. நாளை இந்த உறக்கம், இந்த அமைதிக்கு உத்திரவாதம் இல்லை…

பிறகு மெதுவாய்ச் சத்தம் இல்லாமல் அவன் எழுந்து கொண்டான். வாசல் கதவைப் பூட்டாமல் தாழிடாமல் அவன் வைத்திருந்தான். மனதில் அடங்கிக் கிடந்து, படுத்துக் கிடந்த உணர்வுகள் எழுந்து கொண்டதுபோல். ஆகா, நேரம் வந்து விட்டது! விடைகொடு பூரணி. எல்லாம் சரியாய் நடந்தால் நான் மீண்டும் உன்னருகில் இருப்பேன். ஓ பூரணி! எத்தனை அருமையான பெண் நீ… அவன் குனிந்து அவளை முத்தமிட விரும்பியவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். உணர்ச்சிவசப் படக்கூடாது! அவளை எழுப்பிவிடக் கூடாது! எழுந்து நின்றான் அவன்… வழக்கமாய் எடுத்துப் போகும் தோள்ப்பையில் எறிகுண்டுகளை பத்திரப்படுத்தி உயரத்து மறைவில் வைத்திருந்தான். மூன்று குண்டுகள். அதுநாள்வரை அவன் அவற்றையெல்லாம் பார்த்ததேயில்லை. இப்படியெல்லாம் உலகத்தில் இருக்கின்றன என்பதையே அறியாதவன் அவன்… நிர்வாகம் அவர்களுக்குக் கற்றுத்தர விரும்பியது போலும்!

பையை கவனமாக மாட்டிக்கொண்டு தூளிக்குள் பார்த்தான். தூக்கத்தில் குழந்தை எதோ அதிசயத்தைக் கண்டாப்போலப் புன்னகைத்தது. மார்க்ஸ், மீண்டும் உன்னைப் பார்ப்பேனா?

விறுவிறுவென்று வெளியே வந்தான். தெருவே அடங்கிக் கிடந்தது. விட்டுவிட்டு இருமருங்கிலும் மரங்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டான். எரியாத தெருவிளக்குகளை இப்போது விரும்பினான். இந்த முழு இரவில் ஒருசிலர் மாத்திரம் விழித்திருக்கிறாப் போல அந்த விளக்குகள். வயிற்றின் அஜீரண மிச்சம் போல!

குமாரசாமி அபாரமான ஆள்த்தான். தலைவனுக்குரிய தகுதிகளுடன் அவன் வளர்ந்து வருகிறான். எவ்வளவு தெளிவாக நிதானமாக அவன் திட்டத்தை விவரித்தான்.

செம்பனார் ஊரணி. இந்தப் பக்கம் அய்யனார் கோவில். இடையில் சவுக்குத் தோப்பு. ஊவ் ஊவ்வென்று காற்று குரலெடுக்கும் தோப்பு. தோப்பை ஊடுருவி அய்யனார் கோவில்ப் பக்கம் முதலாளியின் வண்டியில் காசி ஏறிக் கொள்வான் – அப்படி அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் சவுக்குத் தோப்பில் சாகப் போகிறான்! அதேநேரம் சரவணன் வீட்டின் பின்புறம் ஒரு குண்டு வெடிக்கும். இன்னொரு புறம் ரத்தினத்தின் மனைவி ”ஐயோ திருடன்! திருடன்! ஓடறான் பிடிங்க! பிடிங்க!’ என்று தெருவில் ஒடி ஊரை எழுப்புவாள். குமாரசாமி காயம் பட்டுக் கொண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவான். சீனிவாசன்தான் குமாரசாமி சார்பில் போலிசில் புகார் கொடுக்கப் போகிறான்.

தொழிலாளிகளை, இதனைத்தும் முதலாளியின் வேலை, எனச் சொல்ல, புரளி கிளப்ப வைக்க வேண்டும்.

டிரைவர் காசிக்காக அய்யனார் கோவிலருகே காத்திருப்பான். திடீரென்று சவுக்கங் காட்டுக்குள் வெடிச் சத்தம். பதறிப்போய் டிரைவர் வண்டியெடுத்துக் கொண்டு ஓடுவான். எங்கே? எங்கேயோ. ஒருவேளை அது டிரைவருக்கே தெரியாது!

சரவணன் நேரே போலிஸ் ஸ்டேஷனுக்கு ஓட வேண்டும். எங்கள் தலைவர் காசியைக் கொன்று விட்டார்கள், என்று பிராது கொடுக்க வேண்டும். ஜீப் நம்பர் இதோ. யார் தெரியாது. யாரோ இருட்டில். நானும் எங்கள் தலைவர் காசியும் ரகசியம் பேச சவுக்கந் தோப்பு வந்தால், நல்லவேளை, நான் சற்று தள்ளியிருந்தேன். அப்போது திடீரென்று…” சரவணன் ஓவென்று கதறி அழ வேண்டும். முடியுமா? பரபரப்பான நிமிடங்கள். எல்லாம் நல்லபடியா முடிந்தால் கூட, அந்த வெடிமோதலுக்குப் பின், ஓட எனக்கு தைரியம் தெம்பு வருமா? நடத்தியாக வேண்டும்1…

”நீங்கள் சவுக்கந் தோப்புப் பக்கம் போனது கொலைகாரனுக்கு எப்படித் தெரியும்?”

”தெரியாது இன்ஸ்பெக்டர். ஒருவேளை அவன் எங்களைப் பின்தொடர்ந்திருக்கலாம்.”

”ஆனால் ஜீப்?”

”அது கொலையாளி ஓட்டி வந்ததா, ஏறிப்போனதா தெரியாது. எங்களில் யாரோ அவனுக்குத் தகவல் சொல்லியிருக்க வேண்டும். யார் என்று துருவிப் பார்க்க வேண்டும்.”

சரவணன் குமாரசாமியைப் பார்த்தான்.

”ஆக காசி தியாகியாகிறான்!”

”தூய தொழிற்சங்கவாதி அல்லவா அவன் இப்போது!” என்று சிரித்தான் குமாரசாமி. ”அதுதான் பிலிப்புக்கு இடைஞ்சல். தன்னிடம் பணம் வாங்கியதை அவர் வெளிச்சொல்ல முடியாது அவரால். விஷயத்தை மண்டையை உடைத்துக் கொண்டு விளங்கிக் கொள்ள அவர் முயல்வார். ஆனால் பயம் வரும் நம்மீது. தொழிலாளிகள் மத்தியில் நாம் காசியின் புகழ் பரப்பினால் அப்போது பிலிப்பின் குரல் எடுபடாது…”

சீனிவாசன் சிரித்தான். ”தேவைப்பட்டால் காசியின் படத் திறப்பு விழாவுக்கு பிலிப்பையே கூப்பிடலாம்!”

”சரி. பிலிப் தன்னளவில் விஷயஙகளை அவர் கண்டுகொள்வார் அல்லவா?”

”உண்மை அவர் அறிய வேண்டும். வெளியே சொல்ல முடியாது அவரால். பயம் வரும் நம்மீது. நமது தேவை அதுதான்.”

”ஆனால் கொலை? நாளை எப்படியும்…”

”வராது. விஷயம் பிலிப்பால் அடக்கப்படும். முதல்கட்டப் பிரச்சாரத்தில் அவரை நாம் குற்றவாளியாக தொழிலாளிகள் மனதில் எழுதியிருக்கிறோம்! ஆகவே விஷயத்தை அப்படியே அடக்கிவிட்டு, தனக்கு இதன் முடிச்சு எங்காவது பிடிபடுகிறதா, என அவர் ஆராய ஆரம்பிபார். அதற்குள்…”

”அதற்குள்?”

”அதற்குள் அவர் பயத்தை நாம் வளர்க்க வேண்டும். பழைய விஷயங்களை அவர் மறக்க விரும்பும் அளவுக்கு! முந்நு¡ற்றைம்பது பேரை அவரால் பகைத்துக்கொள்ள முடியாது. போகவர காறித் துப்புவார்கள் அவரை. விஜயகுமார் சாவுக்குக் காரணமானவரும் அவரே, என அவர்கள் அவரை ஏசுவார்கள். இந்த நாடகத்தில் நாம் வெற்றி பெற்றால் தொழிலாளர்கள் அனைவரும் நம் பின்னால், இல்லையா?”

”ஆமாம். முதலாளியின் ஆட்கள் நம்மைத் தாக்க வந்த வதந்தியும், காசிக்கு நாம் செலுத்தும் மரியாதையும் தொழிலாளிகளை நம்பக்கம் கொண்டுவரவே செய்யும்,” என்றான் சீனிவாசன். ”இதில் எனக்குப் பங்களிப்பு குறைவாகவே உள்ளது” என்றான் வருத்தத்துடன்.

”ஆனால் எல்லாரும் ஈடுபடுவது சந்தேகத்தைக் கிளப்பிவிடும் அல்லவா?” என்றான் குமாரசாமி.

>< சவுக்கந்தோப்பில் மரங்கள் சிறு காற்றுக்கும் பெருமூச்செறிந்தன. ஆளில்லாத நாட்டிய அரங்கேற்றம். நிலா இல்லாத இரவு. தோப்பை நெருங்கும்போதே மணல்வெளி ஆரம்பித்தது. கால் புதையப் புதைய நடந்தான். காலடித்தடங்கள் தெரியுமோ என்றிருந்தது. காற்று கலைத்துவிடும், கவலையில்லை என நினைத்துக் கொண்டான். உயர உயர மரங்கள். ஊடே புகுந்து நடந்தான். நெரிசலான மரங்கள். உள்ளே நடமாட்டம் து¡ரத்தில் தெரியாது. வெளிச்சமேயில்லை. மணல்மேடும் உட்குழிகளுமாய்ச் சீரற்றதாய் இருந்தது. கிட்டத்தட்ட நடுப்பகுதியில் பள்ளத்தில் படுத்துக்கொண்டான். பக்கத்தில் பையில் குண்டுகள். மூன்று குண்டுகள். காசி கிட்டே வரும்வரை அவன் காத்திருப்பான். திடீரென்று எழுந்து முதல்குண்டை வீசியெறிய வேண்டும். ஒரே மூச்சில் தீர்மான வெறியில் குறி தவறாமல் வீசியெறிய வேண்டும். சந்தேகத்துக்கு இரண்டாவது. மாட்டிக் கெள்கிறாப்போலிருந்தால் மூணாவதையும் சற்று பக்கத்தில் வீணடித்து விடலாம். ''ஒடம்புல சதையெல்லாம் நார் நாராக் கிழிஞ்சிரும் இல்ல?'' என்று சரவணன் எச்சிலைக் கூட்டி விழுங்கினான். ''அதற்கு அவனே காரணம், அல்லவா?'' என்றான் குமாரசாமி. காத்திருந்தான். மணி என்ன தெரியவில்லை. கைது¡க்கி கண்கிட்டத்தில் பார்த்தான். தெரியவில்லை. பழைய ரேடியம்போன வாட்ச். அடகுக்காரன் நிராகரித்த பொருள். பொதுவாக அதை அவன் அணிவதேயில்லை. ஒருவித வெட்கத்துடன்தான் அவன் அதை அணிய வேண்டியிருந்தது. வளப்பத்தை அல்ல, இளப்பத்தை அடையாளங் காட்டியது வாட்ச். கையில் சிறிய பென்சில் டார்ச் வைத்திருந்தான். என்னவோ மணி பார்க்கிற எண்ணம் வலுப்பட்டிருந்தது. சுற்றிலும் நோட்டம் பார்த்தபடி பென்சில் டார்ச் அடித்து கைக்குள் ஒளியைக் குவித்து மணி பார்த்தான். வெளிச்சம் கைக்குள் அடங்கி வெளித்தெரியாமல் மணி காட்டியது. மணி ஒண்ணு ஐம்பது. நேரம் நெருங்கி நெருங்கி, அருகே, கிட்டத்தில் வருகிறாப் போல இருந்தது. பதட்டப்படக் கூடாது, என நினைத்துக் கொண்டான். ஹாவென வாயை விரித்து மூச்சு விட்டான். காசியை நான் எவ்வளவு நம்பினேன் தலைவனாக. ஒரு சிறு கணநேரச் சலனம் அவனை, அவன் வாழ்வை எப்படித் திசைதிருப்பி விட்டிருக்கிறது. பணம்! கூடவே அது என்னென்னவெல்லாமோ கொண்டு வருகிறது. ஆசையின் விபரீதம். 'தோழர்' என அழைத்து உழைப்பின் பெருமையை எவ்வளவு அழகாகப் பேசுவான். எப்படியோ சட்டென்று நம்பவே முடியாமல் மாறிப்போனான். பூரணி, என நினைத்ததும் சட்டென்று உடம்பு து¡க்கிப் போட்டது. அவள் அருகில் நான் இல்லை, என இந்நேரம் கண்டுபிடித்திருப்பாளோ? சிறு அசைவுகூட இல்லாமல் எப்படி உறங்கிக் கொண்டிருந்தாள். என்மேல் கொண்ட நம்பிக்கை அது. நான்... நான்... என நினைவு விம்மியது. அவள் தலைக்கு ஒருமுழம் பூ வாங்கிக் கொடுத்ததில்லை. இன்றுவரை அவளும் எதுவும் வேண்டுமென்று கேட்டதில்லை. கேட்கவே மாட்டாள். தீபாவளிக்கு மலிவுவிலைப் புடவையில், ஆனால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாள். ஐயோ பூரணி, உன்னையே நீ இப்படி ஏமாற்றிக் கொள்கிறாயா. அவள் சிரிக்கும்போது அவனுக்குக் கூடவே அழுகை வரும். நீ என்னை அவ்வளவு நம்பாதே பூரணி. என்னுடன் சண்டைபோடு. இந்தக்காலப் பெண்கள் எப்படியெல்லாம் புருஷனுடன் சண்டைபோட்டு ஆசையைச் சாதித்துக் கொள்கிறார்கள். சரச சாகசம். தலையணை மந்திரம். ஒருமுறை அவளை மிகஅருகே கண்ணுக்குள் அவள் கனவுகளைப் பார்த்தபடி, ''என்னென்ன வேணும உனக்கு. வரிசையா லிஸ்ட் போடு, பாப்பம்,'' என்றான். குறைந்தபட்சம் டி.வி. என அவள் ஆரம்பிப்பாள் என எதிர்பார்த்தான். ''எனக்கு எதுவும் வேணாம்'' என்றாள். ''எதுவுமேயா?'' என்றான் ஆச்சரியத்துடன். ''ம்ஹ¤ம். இல்லை, வேணும்'' என்றாள். ''அதானே! சொல்லு'' என்றான் அவன். ''எப்பவும் நீங்க என் பக்கத்லியே இருக்கணும்.'' ஆக பூரணிக்கண்ணு... நான் உன்னை ஏமாற்றுகிறேன். சரியாக நான் விஷயங்களை உன்னுடன் பகிர்ந்துகொள்ளக் கூட இல்லை. அப்போதே நான் உன்னைவிட்டு விலக ஆரம்பித்துவிட்டேன் பூரணி. உனக்கு அது தெரியும். ஆ - எப்படித் தெரியாதிருக்கும்? பூரணி, நீ எப்படி... இதைத் தாங்கிக் கொண்டாய்... தான் அவளுக்கு எந்த சுகத்தையும் அளிக்கவில்லை, என அவன் துக்கத்துடன் நினைத்துக் கொண்டான். ஊவ் என்று காற்று லேசாய் உருமியது. நான் அழக்கூடாது. அழும் நேரமல்ல இது. அவளுக்கு என்னால் தர முடிந்தது, திருமணப் பரிசாக, மேலும் ஒரு சுமை. மார்க்ஸ். குழித்த வாய் திறந்து அவன் சிரிக்கையில் உலகமே துக்கங்களே மறைந்து போகின்றன. அவன் அழுதாலோ துடித்துப் போகிறது. பசித்து ஆவேசமாய் மார்க்ஸ் அவளிடம் பால் குடிக்கும்போது இவன் மெளனமாய்ப் பார்த்துக் கொண்டிருப்பான். ''நீ அதிர்ஷ்டக்காரி. குழந்தையிடம் அன்பை எடுத்துச் சொல்ல, பரிமாற பெண்களால் முடிகிறது!'' என்பான் ஒரு பரவச ஏக்கத்தோடு. ஐயய்ய, என தலையாட்டி மறுத்துக் கொண்டான் சரவணன். குழந்தைக்கு லாக்டோஜன் வாங்கச் சொன்னாள். எப்படி மறந்து போனேன். நிகழ்வுகள். பரபரப்புகள்... காலை எழுந்ததும் அழுவானே, என்றிருந்தது. பூரணியிடம் அவனுக்குப்போதுமான பால் இல்லை. அப்படியே குப்புறப் படுத்துக்கொண்டு சரவணன் அழுதான். நான் துரோகி. நான் துரோகி. என் குடும்பத்துக்குக் குறைந்தபட்ச அனுசரணைகூட என்னால் செய்யக் கூடவில்லை.... ஹா... நான்... நான் நிதானப்பட்டாக வேண்டும். நியதிகளின் சங்கிலி தெறித்து விழுந்திருக்கிறது. எல்லாக் குடும்பங்களிலும், முந்நு¡ற்றைம்பது குடும்பங்களிலும் மீண்டும் கண்ணிகளை இணைப்பது என் பணி. சாதாரணப் பணியல்ல என் பணி. முக்கியமானதும் பொறுப்பு மிக்கதும் ஆகும். நான் பாதி து¡ரத்தில் பலவீனப்பட மாட்டேன். பின்வாங்க மாட்டேன். நான் காசி அல்ல! நேரம் பறக்கிறது. அவனைநோக்கி அது ஓடி வருகிறது. வரட்டும். மணி என்ன இப்போது. மீண்டும் ஒளிக்குவிப்பில் டார்ச் அடித்து மணிபார்த்தான். இரண்டு பத்து. அதேநேரம் து¡ரத்தில் வாகனம் ஒன்று வரும் சத்தம். சட்டென்று விளக்கணைத்துவிட்டு தலையைத் து¡க்கிப் பார்த்தான். ஹெட்லைட் போடாமல் ஜீப் ஒன்று சிறு உருமலுடன் வந்து அய்யனார் சிலையருகே அரைவட்டமடித்துத் திரும்பி நிற்கிறதைப் பார்த்தான். கீழே இறங்கினால் ஓட்டி வந்த நபரை அடையாளங் கண்டு கொள்ளலாம். டிரைவர் கீழே இறங்கவில்லை. பிறகு அவன் காத்திருந்தான். காத்திருந்தார்கள்! - அய்யனார் சிலையருகே டிரைவரும், இங்கே இவனும்! மனக் குப்பைகளை ஒதுக்கித் தெளிந்திருந்தான். நேரம் டிக் டிக் என்று எட்டு வைத்துக் கிட்ட வருகிறதா? காசியின் கடைசி நிமிடங்கள் இவை. ஒருவேளை இவை என் கடைசி நிமிடங்களாகவும் இருக்கலாம். அமையட்டும். பல்லாண்டுகள் கோழையாக வாழ்வதைக் காட்டிலும், சில நிமிடங்கள் வீரனாகச் சாவேன். ஆ எத்தனை மகத்தான வாய்ப்பு இது! காட்டுக்குள் கரிய உருவம் ஒன்று ஊடுருவி உட்புகுந்து வந்தது. அந்த நடைச்சாயல், அந்த நிழலமைப்பு... அது காசிதான். வா காசி! இருவருமாய் இரவுகளில் காலாற நடந்தபடி என்னவெல்லாம் விவாதித்திருக்கிறார்கள்... காசி இவனை நோக்கி வரவில்லை. இவன்தான் எட்டிப் போகவேண்டுமாய் இருக்கும் போலிருந்தது. வருகிறேன் காசி. நானே வருகிறேன். பூரணி, உன் கணவன் வீரன்! சந்தோஷப்படு. வாழ்த்தி என்னை அனுப்பி வை. பைக்கள் குண்டுகளைத் தொட்டான். கூட எதோ காகிதம். என்ன இது? எப்படி வந்தது? பள்ளத்துள் பதுங்கினான். காகிதத்தைப் பிரித்து டார்ச் ஒளியில் வாசித்தான். ''உங்கள் முயற்சி வெல்லட்டும். வாழ்த்துக்கள் - பூரணி' குபீரென்று அசுரபலம் வந்தாப் போலிருந்தது. பரவசம். பையைப் பிடித்துக் கொண்டு ஆவேசமாய் எழுந்தான். குண்டைப் பல்லால் கடித்தபடி காசியை நோக்கி ஓடினான். மு ற் று ம் storysankar@gmail.com நன்றி - தாய் வார இதழ். 1990

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்