த.தவமிருந்து ::: திரையில் ஒரு கிராமத்து ‘மெட்டி ஒலி ‘

This entry is part [part not set] of 34 in the series 20051209_Issue

டி.ஜி.கே


பிள்ளைகளுக்காக தங்கள் வாழ்வை தேய்க்கும் பெருவாரியான பெற்றோர்கள் கதை… நல்ல விஷயம் தான்..

ஆனால், அவார்ட் படம் இப்படித்தான் இருக்கும் என்று யார் சொன்னார்களோ, படத்தில் ‘மெமமமதுவாக நகரும் காட்சி ‘ அமைப்பு அதிகம். நல்ல வேளை முயல் பிடிக்கும் சிறுவர்கள் ஆமை பிடிக்காமல் விட்டார்கள். இல்லாவிடில் அதையும் சுலோ மோஷனின் காண்பித்திருப்பார்.

காசு கொடுத்து டிப்ளமோ படிக்கும் அண்ணனுக்கு ரூபாய்50,000 டெப்பாசிடுடன் சிவகங்கையில் 5,000 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. ஆனால், மெரிட்டில் அழகப்பா இன்ஜினியரிங்கில் பி.இ மெக்கானிக்கல் படித்த தம்பிக்கு சென்னையில் வேலையே கிடைக்காமல், அதுவும் டிவிஎஸ் முதல் அம்பத்தூரில் அத்துனை இண்டஸ்ட்ரியும் ஏறி, இறங்கி ஏமாற்றமே மின்சுகிறது. பின்… ?

கைவண்டி இழுத்து பெண்டாட்டிக்கு சோறு போடுகிறார். அப்புறம் கை எடுத்து கும்பிட்டு கண்கலங்க ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை அதுவும் எடுபிடியில் தொடங்குகிறது…. வேலை… ? அப்பாவின் குலத்தொழில் பிரிண்டிங் பிரஸ்…

‘அப்பா கத்துக் கொடுத்த வேலை காப்பாத்துகிறது ‘- என ஒரு டயலாக் வேறு…. மூதறிஞர் ராஜாஜியின் ரசிகர் போலும் சேரன்…

சரி அதுவிடுவோம்…. குழந்தை பெறும் வரை இந்த அழகப்பா மெரிட் இன்ஜினியருக்கு சென்னையில் வேலை கிடைக்காமல் போக, தன் தந்தை வந்து பார்த்தவுடன் வீடு வாழ்ந்த பாச வாழ்க்கை மனதை படுத்த மீண்டும் சிவகங்கை அருகே அவர் ஊருக்குப் போகிறார்…

மதுரையில் வேலை தேட…. அப்படிப் போடு என்னும் விதமாக,

– நல்ல ஃபிளாட்,

– ஹாண்டா காரு,

– ரீபாக் ஷூ..

கைநிறைய கட்டுக்கட்டாய் பணம்…. என ஒரு சூப்பர் வேலை கிடைக்கிறது… ‘கலக்கற சேரன்.. ‘

வேலை கிடைக்காமல் திரும்புகையில் சுந்தரம் கிளைட்டன் வாயிலைக் காண்பிக்கும் சேரன், பணம் கொட்டோ கொட்டு எனக் கொட்டும் மதுரை வேலை தந்த அந்த நிறுவனத்தைக் காட்டியிருக்கலாம்.. இன்ஜினியரிங் மாணவர்களுக்கு உதவியிருக்கும்…

இனி அழகப்பா மெரிட் இன்ஜினியருங்க சென்னை வந்து கைவண்டி இழுத்துக் கஷ்டப்பட வேண்டாம்.. மதுரைக்கு வாங்க மகராசன் ஆகலாம். அப்பா இருமினால் 20,000 ஆயிரம் கொடுத்து அப்போலா போகலாம் எனும் அளவு காசு கொட்டும்…. ம்ஹீம்.. சேரன் படமா எனும் சந்தேகம் வருகிறது.

திருவிளையாடல் படத்தில் நக்கீரன் சொல்வது போல் …. ‘இலக்கணப்பிழை அல்ல…. அர்த்தப் பிழை மன்னிக்க முடியாத ஒன்று ‘ என்பதை சேரன் அறிவாராக….

—-

படத்தில் எல்லோத்திற்கும் ஃபீல் பண்ணுகிறார்…. ஊர் பேர் என்ன என்றாலும்… அதற்கும் ரொம்ப ஃபீலிங்கோட பதில்…. தியட்டரில் கூச்சல் மிஞ்சுகிறது.

எல்லோத்திற்கும் இடையே… ஒரு தேர்ந்த நடிகர் மீண்டும் அடையாளம் காணப்படுகிறார்… ராஜ்கிரண்… அது தவிர பிரஸ் உதவியாளராக வரும் இளவரசு…. கலைப்படம் எடுப்பவர்கள் இருவருக்கும் தொலைபேசி போடலாம்…. சபாஷ்….

ஆனால், காட்சி காண்பித்த விதம்… யதார்த்தமற்ற ( ? ? ? ? ) கதை நகர்வு முறையால் ராஜ்கிரண் சாகும் காட்சியில் தியேட்டரில் கைதட்டல் காதை பிளந்து… ‘ஓ… படம் முடிஞ்சிருச்சு…. ‘ என்று கத்தும் ரசிகர்கள் மனநிலையின் காரணம் அறிவது சேரன் போன்ற தரமான படம் தர விரும்பும் இயக்குனர்களுக்கு நன்று…

ஆனால் ரசிகர்கள் நினைப்பை பொய்க்கிடும் விதமாக படம் தொடர்கிறது…. ‘சேரா.. படத்தை முடிம்மா… ‘ என்று பின்னிருந்து குரல்கள் கேட்கின்றன..

பாண்டவர் பூமி போன்ற அற்புத படத்தை தந்தவரா இம்மாதிரி கதை சொல்லும் முறையுடன் என்ற ஆச்சரியம் நம்மனதில் வருகிறது….

வாழ்வின் சம்பவ நேரத்திற்கும் ,திரை நேரத்திற்கும் 1=1 என்ற முறைப்படி எடுத்து நம்மளைப் படுத்துகிறார்.

இதை சேரன் புரிந்து கொள்ளுதல் நலம். இல்லாவிடில் நல்ல படம் தந்தால் பார்க்க மாட்டார்கள் என்று ரசிகர்களை தப்பிதமாக வசைபாடுவது தொடர்ந்துவிடும்… செய்வாரா சேரன்… ?

மத்தபடி இந்தப் படம் ஓடாவிடில், அதற்கு காரணம் படைப்பாளிகளே தவிர ரசிகர்கள் அல்ல…

….

சின்னத் திரையில் ஒரு வழக்கம் உண்டு… நீண்ட தொடர்மாதிரி இல்லாமல் சினிமா மாதிரி என்று ஒரு மணிநேர படம் எடுப்பார்கள்..

அது மாதிரி பெரிய திரையில் நீண்ட டி.வி.. தொடர்மாதிரி எடுக்கப்பட்ட படமே… த.த. பேசாமல் இதை 15நிமிட துண்டுகளாக சன்டிவியிலோ , ஜெயா டிவியிலோ தொடராக போட்டிருக்கலாம்.. நிச்சயம் பெருத்த வரவேற்புக் கிடைத்திருக்கும்….

ஆனால், பலவருடம் வந்த ‘மெட்டிஒலி ‘ கடைசியில் அந்தப் பெரியவர் இறந்தபோது பலருக்கும் ஏற்படுத்திய மனத்தாக்கம் இதில் ராஜ்கிரண் இறக்கும் போது வரவில்லை…. BLANK மனநிலையில் ஆயாசமாக ஒரு வழியா படம் முடிஞ்சுது என்ற எண்ணமே வந்தது.

மெட்டி ஒலியில் இருந்த கதை சொல்லும் நேர்த்தி, காட்சி அமைப்புகளின் தெளிவு தத-வில் இல்லாதது குறையே…. 31/2 மணி நேரம் காட்சிகளாக குவித்தாலும் மனதில் நிகழ்வுகள் ஒட்டவேயில்லை…

அளவிற்கு மிஞ்சியதால் நஞ்சானதோ என்னவோ…. ?

கொஞ்ச நேரமே வந்தாலும் அந்த பெரிய மருமகள் மனதில் நிற்கிறாள்.. அராத்து குணமுள்ள பாத்திரத்தை அற்புத முகபாவனையால் செய்துள்ளார். டிவி-க்கு ஒரு நல்ல அடங்காப்பிடாரி மருமகள் கிடைத்துவிட்டார்.

வானம் வசப்படும், மும்பய் எக்ஸ்பிரஸ் வழியில் த.த-வும் HD கேமிரா கொண்டு படமெடுக்கப்பட்ட திரைப்படம். அதனாலோ என்னவோ… டிவி தொடர் பார்க்கும் மனநிலைக்கு நம்மை முழுதாகத் தள்ளுகிறது. எனக்கு என்னவோ.. டிவி காட்சியை பெரிய திரையில் புரஜக்டரில் போட்டுப் பார்த்த ஃபீலீங் தான்.

‘சன் டிவி சிறப்புப் பார்வை – டாக்குமென்டரி…. ‘ மற்றும் ‘திரைப்படம் – டிவி நீண்ட தொடர் ‘ பற்றிய வித்தியாசங்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வது நன்று. இல்லாவிடில் ரசிகர்களை குறைசொல்வதே தொடரும்…

சும்மாவே கலைப்படம் என்றால் இருட்டிலிருக்கும் என்ற நினைப்பில் உள்ளவர்களுக்கு இந்த ஃபிலிம்மில் மாற்றும் HD படப்பிடிப்பு ரசிக்கக் கூடியதாக இருக்கலாம்…. நமக்கில்லையப்பா….

இன்னொன்று, அழுவாச்சியுடன் ஃபீல் பண்ணிப் பேசினால் தான் யதார்த்த, கலைப்படம் என்று இவர்களுக்கு யார் சொன்னார்களோ… கொஞ்சம் ‘Life is Beautiful ‘ பாருங்கள். சிரித்துக் கொண்டே காட்சி நகர்ந்து ஹிட்லரின் கான்சென்ட்ரேசன் காம்ப் கொடுமையை மனதில் பாரம் ஏற்றி சொன்ன முறையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மொத்தத்தில் காட்சிகள் நகர்ந்து படம் முடியும் போது ஃபீல் பண்ண வேண்டியது பார்ப்பவர்களே தவிர படத்தில் காட்சி நகர்த்தும் கதாபாத்திரங்கள் அல்ல…. என்பது அறியுங்கள்..

காசு மிஞ்சும் என்ற ஒரே கண்ணோட்டத்தில் HDயில் எடுத்து ஃபிலிமிற்கும் மாற்றுவது விடுத்து மற்ற அதீத செலவுகளைக் குறைப்பது நன்று.

மற்றபடி, பெருவாரியான குடும்ப நிகழ்வுகள் காட்சிகளில் உள்ளன… பூர்வீக வீட்டின் மூதாதையர் மதிப்பு அற்புத விஷயமே… அதுவும் தங்களின் பிறப்பு சரித்திரம்… முன்னோர்பற்றி கடைசியில் குழந்தைகள் தெரிவது முக்கிய ஒன்றே.. ஆனால் எதுவும் ஒட்டவில்லை…

படம் பார்க்க நெளியும்படி இருக்கிறது ஆனாலும் அவார்ட்டுகள் கிடைக்கும்…. ஏனென்றால் அவார்டுக்கு என்று ஒரு தப்பிலக்கணம் இருப்பதாக அவார்டு கமிட்டியில் இருக்கும் பலருக்கும் நம்பிக்கையிருக்கிறது.

படம் முடிந்து வரும் போது நாமும் ஃபிலீங்குடன் வெளிவருகிறோம்… ‘அடுத்தக் காட்சிக்குப் போக நிற்பவர்கள் பேசாமல் வீடு போய் ‘மெட்டிஒலி ‘- தொடரை இன்னொரு தடவைப் பார்க்கலாமே.. என்ற ஃபிலீங்குடன்….


tgkgovindarajan@gmail.com

Series Navigation

டி ஜி கே

டி ஜி கே