டிரைவருக்கு சலாம்

This entry is part [part not set] of 33 in the series 20080724_Issue

புதியமாதவி, மும்பை



இப்போ எல்லாம் காரில் பின்சீட்டில் உட்கார்ந்து நிம்மதியா புத்தகம் படிச்சிட்டு வரமுடியலை. அட செல் போன் அடிச்சா கூட எடுத்து பேசி ஊர்வம்பளக்க முடியலை.

கோவாக்கு போய்ட்டு வருவதற்குள் பகவானே உசிரு போயி போயி வந்துச்சுனு சொன்னா உங்களுக்கு சிரிப்பு வரும்.

எல்லாம் இந்த டிரைவிங் லைசன்ஸ் எபிசோடுக்குப் பிறகுதான்..

என்ன பண்ரது.. எங்க ஊரிலே எல்லா பொண்ணுகளும் அம்மாக்களும் பாட்டிகளும் சர் சர் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருனு காரிலே போகிறதைப் பாத்துட்டு இதென்ன பெரிய காரியமானு வாய்ச்சவாடல் வழக்கம்போல விட்டு மாட்டிக்கிட்ட பிறகு ஏற்பட்ட பிராண அவஸ்தை.

3000 ரூபாய் கொடுத்திட்டா போதும் டிரைவிங் லைசன்ஸ் வாங்கிடலாம். ஆனா வண்டியை எடுக்க முடியுமானு யோசிக்காமா டிரைவிங் க்ளாஸில் போய்ச் சேர்ந்து வச்சேன்.
சேர்ந்தவுடனேயே அவன் என்னை ஆண்ட்டி ஆண்ட்டினு கூப்பிட்டது ரொமபவே எரிச்சல் படுத்தியது. அந்த எரிச்சலில் ஆக்ஸிலேட்டரை அமுக்கி கண்ணா பின்னானு ஸ்பீடு எடுத்து ஹைவேயில் காரை எடுத்து…சாலையோரத்தில் என் காரின் ஸ்பீடைப் பார்த்து பயந்த நாய்கள் மற்ற நாய்களுக்கு சிக்னல் கொடுக்கிறமாதிரி ஊளையிட்டதை நினைச்சா அப்படியே ஹாலிவுட் பிக்சர் மாதிரி இருந்திச்சு.
நல்லவேளை டிரைவிங் சொல்லிக்கொடுக்கும் வாத்தியார் காலுக்கடியில் பிரேக் இருந்ததினால் தப்பிச்சு வண்டி.
அதன் பிறகு ஒரு நாள் கூட ஹைவேயில் எனக்கு டிரைவிங் க்ளாஸ் கிடையாது என்று முடிவு செய்துவிட்டார்கள்.

சரியாக பகல் 3 மணிக்கு டிரைவிங் க்ளாஸ். ரோட்டில் அதிக நடமாட்டம் இருக்காது. ரிசர்வ் வங்கி குடியிருப்பைச் சுற்றி இருக்கும் ரோட்டில் சுத்தி சுத்தி வரனும். அவ்வளவுதான். எனக்கு நல்ல வண்டியைத் திருப்புவதற்கு சொல்லிக்கொடுப்பதாக
அந்தப் பசங்கள் சொன்னார்கள். டிரைவிங் டெஸ்ட் அதைவிட ஈஸியா இருந்துச்சு. வண்டியில் உட்கார்ந்து ஸ்டார்ட், அப்புறம் ஒரு ரைட் அல்லது லெப்ட் டேர்ன் .. ஓகயா டெஸ்ட்.
டிரைவிங் லைசன்ஸ் கிடைச்சாச்சு.
சிக்கலே இந்த டிரைவிங் லைசன்ஸ் வாங்கினப்பிறகுதான் ஆரம்பிச்சுது. அதுக்குப் பிறகும் வண்டியை எடுக்க நான் செய்த பல முயற்சிகள் கஜினி முகமதுவை விட இரண்டு மடங்கு அதிகமாக நான் கண்ட டிரைவிங் போர்க்களங்கள்.. ம்ம்ம்..
படுதோல்வி அடைந்ததுதான் மிச்சம்.

“உன்னை விட சின்னப் பிள்ளைங்க எல்லாம் வண்டி எடுக்கிறாங்க.. வாய்க்க்ழிய பேசறியே ..ம்ம்ம்.. வண்டியை உன் கண்ட்ரோலில் வை.. ஏய் இப்போ ஏன் இவ்வளவு ஸ்பீடா போரே.. க்கியரை மாத்து.. சீக்கிரம்.. .. ச்ச்சீ நீ எல்லாம் இந்த ஜென்மத்தில் வண்டி எடுத்துக்கிட மாட்டே.. சரி இறங்கு இறங்கு…” னு பாதியிலேயே என் கணவர் இறக்கிவிட்டப்போ கோபமும் அவமானமும்.. அன்னிக்கு முடிவு செய்தேன்.. நான் இனி வண்டி ஓட்ட முயற்சி செய்வதில்லைனு. பின்னே எதுக்காக பணம் செலவு செய்து டிரைவிங் லைசன்ஸ் வாங்கி வச்சிருக்கே நாக்கு வழிக்கவானு கேட்காதீங்க.

டிரைவிங் லைசன்ஸ் கிட்டத்தட்ட பாஸ்போர்ட் மாதிரி நமக்கு அரசு வழங்கும் நம் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையாக்கும்!
பேங்கில் அக்கவுண்ட் திறப்பதிலிருந்து யாருக்காவது சாட்சி கையெழுத்து போடுவது வரை டிரைவிங் லைசன்ஸ் நமக்கு வழங்கப்பட்டிருக்கும் க்கீரின் சிக்னல்.

இப்போதெல்லாம் என்னுடன் டாக்ஸியிலோ ஆட்டோவிலோ உடன் பயணம் செய்ய என் குழந்தைகள் விரும்புவதில்லை. நான் கொஞ்சம் அரைலூசு மாதிரி நடந்துக்கிறேனாம். வேறேன்ன திருப்பத்தில் கண்களை மூடிக்கொண்டு முருகா முருகானு சொல்வதும்
எப்போதும் மறக்காமல் டிரைவர்களுக்கு தேங்க்ஸ் சொல்வதும் அவர்களுக்குப் பிடிக்கலையாம்..!!! இருந்துட்டு போகட்டுமே..
எவ்வளவு காலத்திற்குத்தான் அவர்களுக்குப் பிடித்ததை மட்டுமே செய்து கொண்டிருக்க முடியும்? சொல்லுங்கள்.

பஸ் டிரைவர், ரிக்ஷா டிரைவர், டாக்ஸி டிரைவர் இப்படி யாரைப் பார்த்தாலும் இப்போதெல்லாம் ஒரு மதிப்பும் மரியாதையும் வந்திடுது. நம்மால் முடியாதக் காரியத்தை யார் செய்தாலும் அவா நம்மை விட பெரியவாதானே. அதிலேயும் பாருங்கள்..இந்த டிரெயின் ஓட்டற எஞ்சீன் டிரைவர், விமானம் ஓட்டற பைலட் இவர்கள் எல்லோரையும் விட இந்த டிரைவர்கள் தான் ரொம்பவும்
பெரியவானு எனக்கு அடிக்கடி தோனும். தண்டவாளத்தில் சிக்னலைப் பார்த்து ஒரே சீராக ஓட்டறது ஈஸி தானே.
அதைவிட ஈஸி.. கண்ட்ரோல் ரூமில் இருப்பவர் சொல்ற மாதிரி பிளைட்டை டிராபிக் அதிகமில்லாத ஆகாயத்தில் ஓட்டுவது.
எஞ்சீன் டிரைவரும் பைலட்டும் ஆட்டோமெடிக் டிரைவிங்கில் போட்டுட்டு கொஞ்சம் நேரம் தூங்கிக்கலாம் தெரியுமா உங்களுக்கு,.
இப்படித்தான் போன மாசம் துபாயிலிருந்து மும்பை வழியா கோவா போக வேண்டிய ஏர் இந்தியா விமானம் மும்பையில் இறங்காமல் கோவாவுக்குப் பாதி தூரம் போயிடுச்சாம். என்னடா இந்த விமானம் மும்பையில் இறங்கலையேனு மும்பை
ஏர்போர்ட் கண்ட்ரோல் ரூமில் எல்லோரும் ரொம்பவும் டென்ஷன் ஆகிட்டாங்களாம்.

எவ்வளவோ சத்தமா கத்தி பைலட்டை கூப்பிட்டு பாத்தாங்களாம்.. ம்கூம்.. ஒரு சத்தமும் வரலைனு கடைசியா பைலட்டின்
அறையில் இருக்கும் அலாரத்தை மணி அடிக்கும்படி செய்தார்களாம்.. (ஆமாம்.. பைலட்டின் எஞ்சீன் ரூமில் எதுக்குங்க
தூக்கத்திலிருப்பவர்களை எழுப்பும் அலாரம்?) ஒரு வழியா பைலட் பதறி அடிச்சி கண்ணை முழிச்சு பார்த்தா விமானம் கோவாவை நோக்கி பறந்துகிட்டு இருந்ததாம். பிறகென்ன.. போதும்பா.. மும்பையில் விமானத்திலே இருப்பதில் முக்கால் வாசி பேர் இறங்குவார்கள்.. அதனாலே திருப்பு வண்டியைனு கண்ட்ரோல் ரூமிலிருந்து கத்தினார்களாம்.தூக்க கலக்கத்தில் இருந்த பைலட் கண்களைத் துடைத்துக் கொண்டு அப்படியே அழகான விமான பணிப்பெண்ணிடம் ஒரு சூடான ப்ளாக் டீ வாங்கி குடிச்சிட்டு விமானத்தை மும்பைக்குத் திருப்பினாராம்.

இந்தச் செய்தி எங்க ஊரு பத்திரிகையில் ஏர் இந்தியா கதையை நாறடிச்சுது. ஆனா இதை எல்லாம் வாசிச்சப்போ எனக்கு
எங்கள் டிரைவர்கள் மீதிருக்கும் மரியாதையும் மதிப்பும் அதிகமாயிடுச்சு. தூங்காமல், தண்ணீ அடிக்காமல் (!!) முன்னாலேயும் பின்னாலேயும் கூட்டம் நெரித்து தள்ள அதற்கு நடுவில் வாயை ஆனு பிளந்து கொண்டிருக்கும் முனிசிபல் கார்ப்பரேஷனின் குண்டு குழிகளைத் தாண்டி திறந்து கிடக்கும் சாக்கடைக்குள் தடுமாறி விழுந்து விடாமல் சர் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு வண்டியை லாவகமாக ஒட்டிக்கொண்டிருக்கும் டிரைவர்களுக்கு சலாம் போடறது பைத்தியக்காரத்தனமா? சொல்லுங்க


Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை