லதா ராமகிருஷ்ணன்
இன்று இலக்கிய உலகிலும் சரி, பிறவேறு துறைகளிலும் சரி, மொழிபெயர்ப்புக்கான முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கணிணி, அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி, தொலைக்காட்சி, கைபேசி என பல வகையிலும் நமது அன்றாட வாழ்விலும் கூட மொழிபெயர்ப்பின் துணை தொடர்ந்து தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆங்கில மோகம் தேவையில்லை. ஆனால், ஆங்கிலமே தேவையில்லை என்று கூறுவது இன்றைய காலகட்டத்துக்கு பொருந்துமா..? அவரவருக்கு அவரவர் தாய்மொழி மேல் பற்று இருக்க வேண்டியது மிக அவசியம். ஆனால், அது ஆங்கிலம் மீதான வெறுப்பாக மாற வேண்டியது அவசியமா..? ஆங்கிலம் படிக்காதீர்கள் என்று தமது தொண்டர்களுக்கு அறிவுறுத்திக் கொண்டே சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் சந்ததியினருக்கு ஆங்கில அறிவையும், புலமையையும் உலகின் மிகச் சிறந்த கல்விக் கூடங்களில் கிடைக்கச் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எத்தனை அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் படித்திருக்கக் கூடுமென்று தெரியவில்லை. தாய்மொழியில் மட்டுமே பயில வேண்டுமென்ற கொள்கை தொண்டர்களுக்கு மட்டும் தானா..? ஒருவகையில், சிலரிடம் மட்டுமே ஆங்கில அறிவு இருக்கட்டும் என்பதான ஆதிக்க மனப்பான்மையாகக் கூட இதை பகுக்க முடியும். இன்னொரு புறம், கணிணி மையங்களில் தமிழ் அச்சுரு கணிணிகளில் தயாராக ‘டவுன்லோடு’ செய்யப்பட்டிருப்பதே இல்லை. நிறைய வங்கிகளில் எந்த அறிவிப்புப் பலகையும் தமிழில் இல்லை. தாய்மொழியின் சிறப்பு பற்றி மாணாக்கர்கள் மனம் கொள்ளுமாறு கற்பிக்க பள்ளி, கல்லூரிகளில் போதுமான கவனம் செலுத்தப்படுவதில்லை. (கல்விக்கூடங்களில், குறிப்பாக பள்ளிகளில் 40, 50 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று இருக்கும் அவல நிலைமையே இன்னும் மாறவில்லை)…
இந்த மொழிபெயர்ப்பு யுகத்தில் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் இரண்டு மொழிகளிலாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகப் படுகிறது. சமீப காலமாக பல கல்லூரிகளில் மொழிபெயர்ப்புப் பட்டயப் பயிற்சி மாணாக்கர்களுக்கான வேலைவாய்ப்புக்கான வழிவகைகளில் ஒன்றாக நடத்தப்பட்டு வருகிறது.(சில தனியார் நிறுவனங்களும் இந்தப் பயிற்சியைத் தருகின்றன.). அப்படியான பயிற்சி வகுப்புகளை நடத்தும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றதில் மொழிபெயர்ப்புசார் நூல்கள் பல படிக்கக் கிடைக்கிறது. ஆங்கிலத்திலான இந்த நூல்களில் மேலைய நாட்டு மொழிகளில் நடந்தேறிய மொழிபெயர்ப்புகள், மொழிபெயர்ப்புசார் வளர்ச்சிப் போக்குகள், மலையாளம், ஹிந்தி, பெங்காலி முதலான இந்திய மொழிகளில் நடந்தேறியவை இடம்பெறும் அள்விற்குத் தமிழிலான மொழிபெயர்ப்பு முயற்சிகள் பற்றிய தகவல்கள் இடம்பெறவில்லை என்ற அவலமான உண்மை தெரிய வருகிறது. அப்படியே இடம்பெறும் ஒன்றிரண்டு மேற்கோள்கள் அல்லது கட்டுரைகளும் பழந்தமிழ்ப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் குறித்தே தகவல்களைத் தருகின்றனவே தவிர சமகாலத் தமிழிலான மொழிபெயர்ப்பு முயற்சிகள், மொழிபெயர்ப்பாளர்கள் குறித்த தகவல்களைத் தருவதேயில்லை எனலாம். தமிழ் மொழிபெயர்ப்பாளர்களில் முக்கியமான சிலர் மொழிபெயர்ப்புசார் தங்கள் அனுபவரீதியான கருத்தோட்டங்களைப் பற்றி எழுதிய கட்டுரைகளும், மொழிபெயர்ப்பாளர்களைப் பற்றிய விவரக் குறிப்புகளும் அடங்கிய தொகுப்பொன்று இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் முன்முயற்சியில் தொகுக்கப்பட்டு பாவை பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. திருச்சி பிஷப் ஹியூபர் கல்லூரியின் தமிழ்த் துறையைச் சேர்ந்த முனைவர் ராஜ்குமார் ‘அதர்ப்பட யாத்தல்’ என்ற தலைப்பில் அத்தகைய தொகுப்பொன்றை கடந்த வருடம் கொண்டு வந்தார். தமிழின் தற்கால மொழிபெயர்ப்பு முயற்சிகள் குறித்து இத்தகைய அகல்விரிவான தொகுப்பு ஆங்கிலத்தில் வெளியாகியிருப்பதாகத் தெரியவில்லை.
அவ்வாறே, தமிழின் தற்காலப் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது கூட ஒப்பீட்டளவில் குறைவாகவே நடந்தேறி வருகிறது எனலாம். இவ்விதமாய், ஒருசில எழுத்தாளர்கள் தவிர்த்து பிற பல நல்ல எழுத்தாளர்கள் இந்தியாவின் பிற பகுதிகளிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி பரவலாக அறிமுகமாகாமல் இருக்கும் நிலையே இன்றளவும் தொடருகிறது.
ஆனால், பிறமொழி இலக்கியங்கள் நம் மொழியில் வெளிவருவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நம் படைப்புகள் பிறமொழிகளில், முக்கியமாக ஆங்கிலத்தில் வெளிவருவதும் இன்றியமையாதது. குறிப்பாக, தற்காலப் படைப்புகள். இந்த வகையில் குறிப்பிடத் தக்கது 2005ம் ஆண்டில் “கதா” பதிப்பகத்திலிருந்து வெளீவந்திருக்கும் சமகாலத் தமிழ்க் கவிதைகளீன் ஆங்கில மொழியாக்கத் தொகுப்பு. ஏறத்தாழ 75 கவிஞர்களின் 130க்கும் மேற்பட்ட கவிதைகள் டாக்டர்.கே.எஸ். சுப்ரமணியனின் செறிவான ஆங்கில மொழிபெயர்ப்பில் இடம்பெற்றுள்ளன. ரசனையின் அடிப்படையிலான தேர்வில் இப்படி ஏறத்தாழ முன்னூறுக்கும் மேற்பட்ட தற்காலக் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார் திரு. கே.எஸ்.சுப்ரமணியன்.
அழகான அச்சாக்கத்தில் ‘கதா’ நூல் வெளியிட்டிருப்பது பாராட்டிற்குரியது. என்றாலும், This is the first ever volume of 20th centuryTamil Poetry being brought out in English Translation என்று பதிப்பகத்தார் குறிப்பில் கூறியிருப்பது சரியல்ல. அதே போல், மொழிபெயர்ப்பாளர் பற்றி¢யும் , தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிஞர்கள் பற்றியும் அதீதச் சுருக்கமாக விவரக்குறிப்புகள் தரப்பட்டிருப்பதும் சரியாகத் தோன்றவில்லை.’Copyright for individual poems held by the poets/copyright for the English translation rests with KATHA’ என்று தொகுப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு மொழிபெயர்ப்பு நூலில் மொழிபெயர்ப்பாளருக்கு எந்த உரிமையும் இல்லையா என்ற சர்ச்சை இன்று உலகமெங்கும் நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு படி அதிகமாய்,’ குமுதத்தில் வெளியாகும் படைப்புகளின் உரிமை குமுதத்திற்கே’ என்பதாக குமுதத்தில் வெளியாகும் வாசகம் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது.
டாக்டர்.கே.எஸ்.சுப்ரமணியம் ‘சிந்தனை அலைகள்’, ‘உரத்த சிந்தனைகள்’, இலக்கிய உலகில் ஒரு பயணம், ‘ஜெயகாந்தன் -ஒரு பார்வை'(ஜெயகாந்தன் ரீடர்) முதலிய கட்டுரை நூல்களை எழுதியிருப்பவர். தவிர, எழுத்தாளர் ஜெயகாந்தனின் நான்கு நாவல்களையும் , எழுத்தாளர் திலகவதியின் ஒரு நாவலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் இனிய நண்பர் திரு. கே.எஸ். சுப்ரமணியன். அவருடைய கட்டுரை நூலான சிந்தனை அலைகளில் இடம்பெற்றுள்ள அவரைப் பற்றிய சிறுகுறிப்பு கீழே தரப்பட்டுள்ளது:
கே.எஸ். என்று நண்பர்களால் அழைக்கப்படும் டாக்டர்.கே.எஸ்.சுப்ரமணியன் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பிறந்த ஆண்டு 1937. சிறுவயதிலேயே தந்தையை இழந்த கே.எஸ்.ஸின் கல்விக்கும், ஆளுமை வளர்ச்சிக்கும் அடித்தளமாக விளங்கியது ராமகிருஷ்ணா மாணவர் இல்லம் என்ற ஏழை மாணவர்களுக்கான இல்லம்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வரலாற்றுத் துறைகளில் முதுநிலைப் பட்டங்களும், அத்தினேயோ டி மணிலா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும், பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத் துறையில் பி.ஹெச்டி பட்டமும் பெற்றவர். இந்திய அரசுப் பணியில் (I.R.A.S) 15 ஆண்டுகளும், ஆசிய வளர்ச்சி வங்கியில் 22 ஆண்டுகளும் பணிபுரிந்தவர்.பணி ஓய்வுக்குப் பின் 1998ல் தாயகம் திரும்பிய கே.எஸ் தமிழ் இலக்கிய, சமுதாயக் களன்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.
கலைஞன் பதிப்பக வெளீயீடாக 2000த்தில் பிரசுரமாகியுள்ள உரத்த சிந்தனைகள் என்ற அவருடைய தொகுப்பில் வேரித்தாஸ் வானொலியில் நிகழ்த்திய உரைகளும், ‘தினமணி’ பத்திரிகையில் வெளிவந்துள்ள கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இந்த நூலின் முன்னுரையில் டாக்டர்.கே.எஸ்.சுப்ரமணியன் பின்வருமாறு கூறியுள்ளார்:
அயல் நாட்டில், ஒரு பன்னாட்டு வளர்ச்சி நிதி நிறுவனத்தில் 22 ஆண்டுகள் பணியாற்றிய போதிலும் – ஒரு வேளை அந்த பௌதிக இடைவெளியால் விளைந்த தற்சார்பற்ற பார்வைத் தெளிவினாலேயோ என்னவோ – எனக்கு இந்திய சமூக, கலாச்சார, வளர்ச்சிக் களன்கள் பாலும், தமிழ் மொழி, தமிழ்ச் சமுதாயப் பரப்பின் மீதும் உள்ளார்ந்த கரிசனையும்,ஆரோக்கியமான கவலைகளும் உண்டு.
தான் கூறியுள்ளது வெறும் வாய்வார்த்தை அல்ல என்பதை உணர்த்தும் விதமாய் திரு.கே.எஸ்.சுப்ரமணியன் தமிழ் இலக்கியம் சம்பந்தப்பட்ட, மற்றும், சமூகநலன் சார்ந்த பல விஷயங்களில் ‘வலது கை கொடுப்பதை இடது கை அறியாத விதமாய்’ தனது தொடர்ந்த ஆதரவையும், உதவியையும் அளித்து வருவது பலரும் அறிந்த உண்மை.
ramakrishnanlatha@yahoo.com
- கனவுகள்..காட்டாறுகள்.. சதாரா மாலதியின் கவிதைகள்
- பெரியபுராணம்- 111 – 35. ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- கீதாஞ்சலி (98) – வானக்கண் நோக்கும் என்னை!
- மரணத்தை சந்தித்தல்-2 ருரு-ப்ரமத்வரா (ப்ரியம்வதா) மகாபாரதம்-ஸ்ரீ அரவிந்தர்
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 10
- இரவில் கனவில் வானவில் – 11,12 (மு டி வு ப் ப கு தி)
- கோடிட்ட இடங்களை நிரப்புக :
- ஒரு நாள் முழுதும் இலக்கியம்
- வஹி – ஒரு விளக்கம்
- பதஞ்சலி சூத்திரங்கள்…..(3)
- ஹெச்.ஜி.ரசூலின் வார்த்தைகள் வகாபிய போதையை தெளியச் செய்யுமா…
- தஞ்சையில் அண்ணா பிறந்த நாள் விழா – மலர் மன்னன் சிறப்புரை
- கடித இலக்கியம் – கடிதம் – 31
- நளாயினி தாமரைச் செல்வன்:உயிர்த்தீ
- பெண்ணியாவின்‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!’ – ஒரு கருத்துரை
- டாக்டர்.கே.எஸ்.சுப்ரமணியன் – தமிழ் இலக்கிய வெளியிலும், சமூக வெளியிலும்
- பல்லு முளச்சு, அறிவு வந்துருச்சப்பு!
- இலக்கிய வட்டம், ஹாங்காங்
- வித்தியாசம் எதாவது…
- ஆனந்த விகடன் மற்றும் சுதர்சன் புக்ஸ் புத்தகக் கண்காட்சி
- ஸ்ரீ குருஜி நூற்றாண்டு விழா சிந்தனையாளர் அரங்கம்
- தேடாதே, கிடைக்கும்
- சுண்ணாம்பு
- அண்டம் அளாவிய காதல்
- மாசு களையும் இலக்கியங்கள் அல்லது குறள் இலக்கியங்கள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:3) சீஸர் பட்டாபிசேகத்தின் முந்தைய நாள்
- விடுதலைப் பட்டறை
- இடதுசாரி இந்துத்துவம்
- கடித இலக்கியம் – கடிதம் – 29
- மக்கள் புழங்கும் மரபுத் தொடர்கள்
- மடியில் நெருப்பு – 11
- முகவரிகள்,….
- அணு ! அண்டம் ! சக்தி !
- புல்லில் உறங்குதடி சிறு வெண்மணிபோல் பனித்துளியே!
- நானும் நானும்
- டாலியின் வழிந்தோடும் வெளிபோல்… (Holographic Universe)
- சாணார் அல்லர் சான்றோர்
- இஸ்லாம் – மார்க்ஸீயம் – பின்நவீனத்துவம்
- ஜாகிர் நாயக் என்னும் காலிப்பாத்திரம் – முஸ்லிம் அறிவுஜீவிகளின் தரம் இதுதானா?
- பேசும் செய்தி – 6