ஜே.ஜே. சில விளக்கங்கள்

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


எழுத்தாளனென்பவன் சமூக அவஸ்தைகளுக்குத் தன்னையும் உட்படுத்திக் கொள்ளவேண்டுமென்கிற கட்சியைச் சேர்ந்தவன். அந்நியமண்ணிலிலிருந்தாலென்ன, ஐம்புலன்களின் தேவைக்குப் பூர்வீகமண்ணையே கூடுதல் அளவில் நம்பியிருப்பதால், படுகின்ற வதைகளிலும் இந்திய மண்ணின் காரண, காரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சமீபகால, செய்திகளின் தாக்கத்தில் எழுத உட்கார்ந்தபோது அதிகாலை நான்கு மணி. வீட்டுக்குள் அழைப்பு மணி ஒலித்தது. அகால நேரத்தில் என்னைத் தேடிவருவபவர்கள் யாராக இருக்க முடியும் என்று யோசித்தேன். இங்குள்ள உறவினர்களென்றால், குறைந்தது ஐந்துமணி நேர பயணத்திற்குப் பிறகே என்னைச் சந்திக்க வர முடியும். உள்ளூரிலிருக்கும் ஒன்றிரண்டு நண்பர்களும் என்னைப்போனற பிறவிகளைத் தேடிவருவதோ அரிதோ அரிது. அப்படியே தேடிவருவதாக இருந்தாலும் இந்த அகால நேரத்தில்!.யோசித்தேன், கற்பனை சிலந்தி விபரீத வலைகளைப் பின்னிகொண்டு அதன் மத்தியில் உட்கார்ந்துகொள்கிறது. மனதைத் திடப்படுத்திக்கொண்டு கதவைத் திறக்கிறேன், திறந்துதான் தாமதம், நின்றிருக்கும் நபரினால் பிளவுபட்ட டிசம்பர்மாதத்துக் குளிர் என்னைத் துவம்சம் செய்துகொண்டு உள்ளே நுழைகிறது.

இடையிலும், மழித்த தலையை மூடியவண்ணமும் காவி ஆடை. கையில் கம்பு, கால்களில் பாதக்குறடு, உடலில் விபூதி மணம்.

‘நீங்கள் ? ‘

‘நான் ஜே.ஜே. ‘

எனக்குத் தெரிந்து இரண்டு ஜே.ஜே.க்கள் உண்டு: ஒருவர் ஜெயகாந்தன் அறிமுகபடுத்திய ஜகத்குரு ஜகத் ரட்ஷகர் சுவாமிகள்*, மற்றவர் சுந்தர ராமசாமியால் சொல்லப்பட்ட ஜோசஃப் ஜேம்ஸ்**. இந்த இரண்டுபேருல நீங்க ? ‘

‘நானந்த எழுத்தாளன் ஜோசஃப் ஜேம்ஸ் இல்லை, காமாசோமாவென்று, உலக நியதிகளை எதிர்க்கிற சுந்தர ராமசாமியின் ஜே.ஜே., ஒரு மாதிரியான விதூஷகன், முரண்பட்டவன், சூறைகாற்றினை எதிர்க்கப் பழகி சுவாசகாற்றிடம் தோற்றுப்போனவன் அவன். அவனையும் என்னையும் சம ஆசனத்தில் அமர்த்திவிடாதே. என்னோட சரீரத்தையும், வஸ்திராபரணத்தையும் பார்த்தும், யாரென்று, நீ அறியாமலிருப்பது ஆச்சரியம். நான் ஜெயகாந்தன் ஆசாமி. ஜகத்குரு ஜகத்ரட்சகர் சுவாமிகள். ‘

‘வாங்க உள்ளே போய் பேசுவோம், குளிர் காலத்துல பிரான்சுக்கு வெற்றுடம்புடன் வந்திருக்கீங்க. என்னதான் இந்தியாவில காசி, கேதாரிநாத்னு ஸ்தலங்களுக்கு பக்குவப்பட்ட உடம்பென்றாலும், ஐரோப்பிய குளிர்கொஞ்சம் அதிகமென்பது தெரியாதா. ‘

ஜே.ஜே. சுவாமிகள் உள்ளேவர ஒதுங்கிக்கொண்டு கதவைச் சாத்தினேன். சுவாமிகள், தண்டத்தை சாத்திவிட்டு வசதியாக சோபாவில் அமர்ந்தார். அவர் முகத்தில் கறைபடிந்திருந்தது. கண்கள் கணத்து, பார்வை தாழ்ந்திருக்கிறது. அவர் நெஞ்சத்தில் எரிமலையொன்று இடைவெளியில்லாமல் வெடித்துக்கொண்டிருக்கிறதென்பதை அனுமானிக்க முடிகிறது. தீக்குழம்பினை, வழித்து வாய்வழியே கொட்டும் முயற்சியில் வழிவிட்ட உதடுகள், ஒசையேதுமின்றி அதிர்கின்றன. அவரைச் சாந்தப்படுத்தும் வகையில்,

‘ஜோசஃப் ஜேம்ஸின் வாழ்க்கை முறையில் உங்களுக்கு எதிர்மறை அபிராயங்கள் இருக்கலாம். உங்களுக்கு உடன்பாடான விஷயங்களும் அவனிடம் உண்டு. அவனிடம் மாத்திரம் அல்ல, உங்களுக்கு என்னிடமும், எனக்கு உங்களிடமுங்கூட எதிர்மறை மற்றும் உடன்பாட்டு சங்கதிகள் உண்டு. ஆனால் மனித மனங்களின் சாபக்கேடு அடுத்தவர்களிடத்தில் எதிர்மறைகளை மாத்திரம் கண்டு வைரிகளை உருவாக்கிக்கொள்கிறது. ‘

‘அப்படியென்ன, எனக்கு உடன்பாடான சங்கதியை அவனிடத்திற் கண்டாய் ? ‘

‘உங்களைப்போலத்தான் அவனுக்கும் புறப்படும் இடம் தெரிந்தும் போகுமிடம் தெரியாமலும் இருந்திருங்கின்றது. அவனை நீங்கள் விரோதியாகக் கொள்வதற்கான காரணம் புரிகிறது: வேடதாரிகளை எதிர்ப்பவனாக இருந்திருக்கிறான். போலிகளைக் கண்டு ஏமாறவேண்டாமே என்று எச்சரிக்கை செய்திருக்கிறான். அவன் சுட்டிய போலிகளில் கபட சன்னியாசிகளும் அடக்கமோ ? ஒருவேளை உங்கள் எதிர்ப்புக்கு அதுதான் காரணமோ ? ‘

‘எப்படி வேண்டுமானாலும் நீ வியாக்கியாணம் பண்ணிக்கொள். எனக்கதில் அக்கறையில்லை. நான் ஜெயகாந்தனால சிருஷ்டிக்கபட்ட ஜே.ஜே. ‘

‘அதனாலென்ன, ‘பால்ய வயது சிநேகிதப் பெண்ணை மனதில் நினைத்துக்கொண்டு காவியும், இளமைத் தாடியும் கையிற் பிடித்த கம்புமாய், பொய்யாய் அபயஹஸ்தம் காட்டியதாகத்தானே, ஜெயகாந்தன் உங்களைச் சொல்லியிருக்கிறார். ‘

‘வாஸ்த்துவம், மறுக்கலை. மனதிற் அவஸ்தையுடன்தான் இதுவரை இருந்திருக்கிறேன். துறக்க முடியாததை துறந்ததாகத் தெரிவித்து உங்களை மாத்திரமல்ல என்னையே ஏமாற்றிக்கொள்ள முடிந்திருக்கிறது. மனக்குரங்கு பிய்த்துப் போடுகின்ற பிரக்ஜையற்று, மாலைகளுக்காக அலைந்திருக்கிறேன். நிதானமாக நடந்திருந்தாலோ அல்லது அப்பர் மாதிரியான திடமான உறுதியிருந்திருந்தாற்கூட போகுமிடத்திற்குப் போய்ச்சேர்ந்திருப்பேன். என்னாலே முடியலை. ஆத்மாவை மறந்துட்டு, எலும்பு தசை நரம்புண்ணு எத்தனை நாளுக்கு வாழ்வது. அதுதான் புறப்பட்டு வந்துட்டேன். ‘

‘மடத்து சம்பிராதாயப்படி, சமுத்திரம் தாண்டலாகாதுண்ணு சொல்றாங்களே சுவாமி. இவ்வளவு தூரம் வருவதற்கு மடத்து சட்ட திட்டங்கள் அனுமதிக்கிறதா ? ‘

‘எனக்கு அலுத்துப்போச்சு. சம்பிரதாயம் சாஸ்திரங்கள்ணு, மறுபடியும் நாற்சந்தியிலே நிறுத்திடாதே. பூர்வாசிரமத்துக்குத் திரும்பிடலாமாண்ணு யோசிக்கிறேன். ‘பாலிய விவாகத்தைக் கொடுமையென்று தடை செய்ய ஒரு சாரதா சட்டம் வந்ததே, இந்தப் பாலிய சந்நியாசம் என்னும் கொடுமையைத் தடுக்க ஒரு சட்டம் ‘ இல்லையாண்ணு ஜெயகாந்தன் என்னைப்பற்றி எழுதனப்போ இந்த மனுஷன் இப்படி அனாச்சாரமா எழுதறாரேண்ணு வருத்தப்பட்டதுண்டு. ஆனா ஒரு கட்டத்துல, அது உண்மைண்ணு புரிஞ்சுது. வேதகோஷமிட்டு, சாஸ்திர விற்பன்னர்கள் என்னை ஹோமத்தீயில் தள்ளிவிட்டார்கள் அதுதான் நடந்தது. துணிச்சலோட வெளியேவந்திருக்கணும். எனக்குத் தைரியம் காணாது. சம்பிரதாயங்களும் சடங்குகளும் கண்களைப் பொத்திக்கொள்ள, ஸ்தல விருட்ஷத்து கிளைகளுக்குள்ள சுதந்திரங்கூட எனக்கில்லாமற் போனது. ‘ ‘

‘நிஜமான வாக்கு. சுயமாய் சிகரத்தைத் தொட்டவர்களுக்கு, இறங்கிவருவதற்கான துணிச்சலும் வீரமும் உண்டு. அடுத்தவர் சுமக்க மலையேறியவர் நீங்கள். தேவைகளுக்கு பாவமில்லைண்ணு தவறான இடத்தில் கால்வைத்து இடறி, மலையின் அடிவாரத்தில் இன்றைக்குச் சிதறிக் கிடக்கிறீர்களே சுவாமி. ‘

‘சுவாமிண்ணு, அழைக்காதே. என் தகப்பனார் லோகநாத ஐயர் எனக்குவைத்த பெயர் நாமகரணம் ஜெயராமன். அப்படியே அழைக்கலாம். எனக்கதில் ஆட்சேபணையில்லை. என்னைக்குற்றம் சொல்லாதே. என்னைக் குற்றவாளியாக நிறுத்தியதில் உங்கள் சமூகத்திற்கும் பங்குண்டு. தங்கள் மேன்மைக்காக என்னை ஹோமத்தீயிலிட்ட பந்துக்களும், தங்கள் அநுக்கிரகத்துகாக என்னைக் கடைந்து, செல்வங்களும் அமிர்தத்தையும் அவர்களுண்டு, விஷத்தை எனக்குக் கொடுத்த சனங்களும், அதில் அடக்கம். ‘

‘மிஸ்டர் ஜெயராமன், சனங்கள்னு நீங்க சொல்லவறவங்க, நாங்க இல்லைண்ணு உங்களுக்குத் தெரியும். உங்களை நெருங்கி நின்றவர்கள் யார் ? தாங்கள் சரி ஆசனம் கொடுத்தது எவருக்கு ? சொர்ணாபிஷேகமும், பாதைபூஜையும், மலர்க்கிரீடங்களும், நடத்திக்கொண்டது எங்களுக்காகவோ நீங்கள் நம்பும் பரமேஸ்வரனுக்கோ அல்லவே. தேவர்களையும் அசுரர்களையும் பகுத்தறிய, நீங்கள் கற்ற வேதசாஸ்திரங்களும், ஆகமங்களும் உதவவில்லையெனில் உதறிவிட்டு வரவேண்டாமா ? கிராமக் கோவில்களுக்குக்கூட நீங்கட் தேடிசென்று உதவியதும், ஒடுக்கபட்ட மக்களுக்கு உதவிகரம் நீட்டியதும் அசலாகவா ? நாங்கள் நம்புவதிருக்கட்டும், உங்கட் செய்கைகளில் உங்களுக்கே நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறதா. மனத்தை விசாரியுங்கள். அதுவொன்றே நம்பிக்கைக்குரிய சாட்சியம். ‘

‘அபச்சாரம். தப்பு வேதங்களிலோ ஆகமங்களிலோ அல்ல என்னுடையது. இந்த ஜே.ஜே. வினுடையது. புலன் இன்பங்களை முற்றாக நிராகரித்து ஒன்றிருவர் ஜெயித்திருக்கலாம். நான் தோற்றுட்டேன். நகுஷன் தோற்கலையா ? இந்திரலோகத்தை அடைய சந்தர்ப்பமிருந்தும், இந்திராணியை மோகித்து சர்ப்பமாகிப்போகலையா. நகுஷன் சரித்திரத்தை கவனத்தில் கொள்ள மறந்துட்டேன். ‘

‘எழுத்தாளர் ஜெயகாந்தனைப் போய்ப் பாருங்க, ஏதாகிலும் அனுக்கிரஹம் பண்ணுவார். என்ன இருந்தாலும் உங்களைப் படைத்த பிரம்மன் அவர்தானே. ‘

‘அப்படி நினைச்சுத்தான் அவரிடம் போனேன். அந்த மனுஷன் இப்போதெதுவும் எழுதுவதில்லையாமே ? ‘

….

* கழுத்தில் விழுந்த மாலை – ஜெயகாந்தன்

** ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி

***

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா