அதிரை தங்க செல்வராஜன்
ஒரு வார மழையில் ஆணையாங்குளம் சற்று நிரம்பியிருந்தது.
அரசு மருத்துவமணையின் கழிவுகளும், மனித நரகலும், குளத்தை கடப்பவரை முகம் சுழிக்க வைத்தது.
மாடு குளிப்பாட்டுமிடம் சற்று சுத்தமாய் இருந்தது. கரையில் மோதும் மெல்லிய அலையில் மீன் குஞ்சுகள் ஓரம் வருவதும் உள்ளே போவதுமாய் ஆடிக்கொண்டிருந்தது.
முகுந்தனுக்கு வகுப்பில் மனமில்லை, மாலையில் மீன் குஞ்சுகளுடன் விளையாட வேண்டும். மாலை, எறிந்த பையும், உறிஞ்சிய காபியுமாய் புத்தி குளத்திற்கு ஓடியது.
கரையின் ஓரத்தில் சிறிய குழி தோண்டி, நீரை நிரப்பிவிட்டு
காலால் எத்தி பிடித்த மீன் குஞ்சுகளை தேக்கிய நீரில் விட்டான். குஞ்சுகள் தரையில் மோதி தண்ணீருக்குள் திரும்புவது வேடிக்கையாய் இருந்தது.
கால் அகட்டி ஈர மண்ணில் உட்கார்ந்தான். சில் காற்றும், சிறுமழையும் துவங்கியது. தூரல் பள்ளத்து நீரில் வட்டம் போட்டது. மீன் குஞ்சுகளுடன் லயித்த போது, அப்பாவின் வருகையை புத்தி கவணிக்க தவறிவிட்டது. முதுகில் விழுந்த உதையில் வயிறு எக்கி பிடித்தது, மண்ணும் கல்லும் உரசியதில் எரிச்சலும் செத்தோம் என்ற எண்ணமும் தோன்றியது.
முடியை பிடித்து தர தரவென இழுத்து வந்தது அவமானமாய் இருந்தது. சாலையோரம் கொட்டியிருந்த கருங்கல்லில் ஒன்றை அப்பா எடுத்த போது அடிவயிறு கலங்கியது. ஓவென கத்தி திமிறி ஓட முயன்ற போது, அம்மாவும், தாத்தாவும் வந்தனர்.
நிமிட நேரத்தில் விரல்கள் ரத்தம் சொட்டின, அம்மா அசையாது பார்த்து கொண்டிருந்தார்கள். தாத்தா அப்பாவிடமிருந்து என்னை பிடுங்கி வீட்டிற்குள் தூக்கிச்சென்றார். உதடு பிதுங்கி எச்சிலும், கண்ணீரும் ஒன்றாயின.
சைவனாடா நீ, சைவனாடா நீ, என கத்தி கொண்டே அப்பா வெளியே சென்று விட்டார். யாரும் அப்பாவை ஒன்றும் சொல்லவில்லை.
தாத்தா அம்மாவிடம், என்ன சரசு இது, காட்டான் மாதிரி புள்ளையை கொல்றான், நீ பேசாம இருக்கே என்றார்.
என்ன செய்யறதுப்பா அவுங்க புள்ளையை அவுங்க கண்டிக்கிறாங்க என்றபடி, என்னை இழுத்துக்கொண்டு அடுப்பாங்கரைக்கு வந்தாள்.
மஞ்சளும் உப்பும் கலந்து சூடுபன்னி நசுங்கிய விரலில் தடவி விட்டாள். அப்படியே அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டபோது பயம் சற்று குறைந்தது போலிருந்தது.
ஏன்டா இப்படி தெனம் அடி வாங்குற, எல்லா புள்ளைகளும் இங்கதான வெளையாடுது, நீ மட்டும் ஏன் குளத்துக்கு போன? அம்மா தலையை கோதியபோது சமாதானமாயிருந்தது.
மீன் குஞ்சு அழகா இருந்துச்சும்மா, அதான் அதோட வெளையாடலாம்னு போனேன் தப்பாம்மா.
மீனெல்லாம் நாம தொடக்கூடாதுடா, நாம சைவம்டா.
சைவம்னா என்னம்மா?
சைவம்னா யாரையும் எதுக்காகவும் கஷ்டபடுத்தக்கூடாது.
அப்படின்னா அப்பா சைவமாம்மா?
அம்மா ஒரு நிமிஷம் ஒன்றும் பேசவில்லை, என் மேல் விழுந்த அம்மாவின் கண்ணீரை துடைத்து விட்டார்கள்.
தம்பி குட்டி மீனெல்லாம் நீ அதோட அம்மாகிட்டேயிருந்து பிரிச்சிட்டியே அது பாவம்தானே, அம்மா மீன் கஷ்டபடும்தானே. அதனாலதான் உன்னை அப்பா அடிச்சாங்க, இனிமே இப்படிசெய்யக்கூடாது என்ன.
சரிம்மா என்றேன்.
சாப்பிட்டவுடன் ஏதேதோ நினைவுகளில் பாதி தூக்கத்தில் இருக்கும் போது அப்பா கடையிலிருந்து திரும்பினார், கைலி மாற்றிக்கொண்டே பெரியவன் சாப்டானா என்றார்.
அம்மாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
என் விரல்களை எடுத்து விளக்கு வெளிச்சத்தில் பார்த்தார்.காய்ந்த மஞ்சள் பத்து சிறிது உதிர்ந்தது. ச்சு, திருந்தவேமாட்டேங்கிறான் என்றபடி கொல்லைக்கு சென்றார்.
மறு நாள் காலை ஐந்தரை மணிக்கு எப்போதும் போல்அப்பாவின் சத்தத்தில் தூக்கம் கலைந்தது.எழும்போது விரலும் கையும் அசைக்க முடியாத அளவுக்கு வலித்தது.
அழுதால் அடி விழும், மெதுவாக அம்மாவின் பின்னால் போய் நின்றேன். என்னடா வலி குறைஞ்சுதா, விரல் எப்படி இருக்கு காமி என்று அம்மா திரும்பிய போது தேம்பலாய் அழுகை வெடித்தது.
சீக்கிரம் சாப்பிட்டு கிளம்புடா, ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு ஸ்கூல் போகனும் என்ற அப்பாவின் குரலுக்கு ம் என்றேன். கடைசி இட்லியில் தண்ணீர் ஊற்றி சாப்பிட ஆரம்பித்தபோது அப்பாவின் குரல் மீன்டும் கூப்பிட்டது.
வணக்கம் சார் என்றபடி மருத்துவரிடம் என்னை கூட்டிச்சென்றார்.வரிசையில் நிற்காது நேராக உள்ளே சென்றதை விரும்பாத சிலர்ஏதோ முனுமுனுத்தனர். அப்பா அதை கண்டு கொண்டதாகவேதெரியவில்லை.
மருத்துவரைவிட ஊசி போடும் நர்ஸம்மாவை நினைத்தால்தான்பயமாகவுள்ளது. ஊசி போடுமிடத்திலும் நர்ஸை நலம் விசாரித்துக்கொண்டே எல்லோருக்கும் முன்னால் போய் நின்றார்.வெந்நீரில் வெந்து கொண்டிருந்த ஊசியை எடுத்து மருந்தைநிரப்பிய போதே என் உயிர் பாதி போய்விட்டது.
ஆஸ்பத்திரி வேலை முடிந்ததும், சீக்கிரம் போய் ஸ்கூலுக்குகிளம்பு என்றபடி கடைக்கு கிளம்பினார்.
விரலில் கட்டும், கையில் பையுமாய் பள்ளிக்குச் செல்லும்போதுமீன் குஞ்சுகளின் ஞாபகம் வந்தது. சுற்றிலும் பார்த்து அப்பாஇல்லை என உறுதியான பின் குளத்தின் கரைக்கு போனான்.
நேற்று தோன்டிய குழியில் தண்ணி இல்லை. இறந்த மீன்குஞ்சுகளை எறும்புகள் இழுத்து போய் கொண்டிருந்தன.
பார்க்க பாவமாயிருந்தது.
அம்மா சொன்னது சரிதான் பாவம்தான் என நினைத்தபடி பள்ளிநோக்கி நடக்க ஆரம்பித்தான்.
ts23071965@yahoo.co.in
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -37 << வறுமையும் சொத்தும் >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< மனித விதிக்கூண்டில் சிறை >> கவிதை -9
- ஈசா விண்வெளியில் ஏவிய ஹெர்செல்-பிளாங்க் பூதத் தொலைநோக்கிகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -3
- மே 2009 வார்த்தை இதழில்…
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 1
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 2
- கடவுளிடம் இருந்த கடைசி சைக்கிள்
- திரு நாகூர் ரூமி என்கின்ற பேராசிரியர் ஏ.எஸ்.முஹம்மது ரஃபி அவர்களுக்கு
- கலைவாணர் நூற்றாண்டு விழா/புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா
- தமிழ் வகுப்பு ஐந்தாம் ஆண்டு விழா
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
- சங்கச் சுரங்கம் — 15: ஆறடி ஆறுமுகன்
- இந்திரா பார்த்தசாரதியின் “ஏசுவின் தோழர்கள்”
- நிதர்சனம் நாளை!கனவுகள் பொசுங்கிய உலகம்
- வேத வனம் -விருட்சம் 35
- ஏற்புடையதாய்…
- என்கவிதை சுட்டுவீழ்த்தியதில் பிணங்கள்
- புள்ளிகளை பரிகாசிக்காதீர்கள் !
- நினைவுகளின் தடத்தில் – (31)
- சைவம்
- பூ உதிர்ந்த ரோஜாச் செடி
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – நான்காவது அத்தியாயம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தாறு