வ ஐ ச ஜெயபாலன்
5
இலங்கையில் வளர்ந்து வரும் சிங்கள இனவாதத்துக்கும் அச்சுறுத்தும் துண்டுப் பிரசுரங்களுக்கும் கரண கர்த்தா சிங்களவரான ஜினதாச மாமாதான் என அப்பா அடிக்கடி திட்டுவார். அந்த துண்டுப் பிரசுரத்தை ஜினதாச மாமாவுக்கு எழுதிக் கொடுத்தது குணவர்த்தன மாஸ்டர்தான் எனவும் அப்பா சொன்னார். குணவர்த்தன மாஸ்டார் புதிதாக எங்கள் பளிக்கு வந்த சிங்கள ஆசிரியர். அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்றும் அப்பா கருதினார். இழைஞனான அவர் பார்க்க உயர் வகுப்பு மாணவனைப் போல இருப்பார். முன்னர் அடிக்கடி எங்கள் கடைக்குச் சாமான் வாங்க வருவார். ஜினதாச இஸ்ரோஸ் திறந்தபின் அவர் எங்கள் கடைக்கு வருவதில்லை. அவர் அடிக்கடி ஜினதாச மாமாவின் கடையில் சிங்களப் பேப்பர் படித்தபடி ஆவேசமாக எதாவது பேசிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். எப்போதும் போலவே அவரைக் காணும்போதெல்லாம் நான் குட் மோனிங் சேர் சொல்வேன் . ஆனால் அவர் மாறிப்போயிருந்தார்.
தேனீர்க் கடையும் பேக்கரியும் வைத்திருந்த ஜினதாசமாமா சில மாதங்களுக்கு முன்னர்தான் எங்கள் கடைக்கு எதிரில் போட்டியாக சாப்புச் சாமான்கள் விற்க்கும் கடை ஆரம்பித்திருந்தார். கடை திறந்தபோது தெரு நீழ நீலக் கொடிகள் தோரணங்கள் எல்லாம் கட்டி கூட்டம் வைத்தது எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. எங்கள் கடைக்கு முன் நீலக் கொடி தோறணங்கள் பறக்கவிட அப்பா அனுமதிக்கவில்லை. சண்டியரான முனியாண்டி மாமாவை ஏவிவிட்டு அதனைத் தடுத்துவிட்டார்.
ஊரில் தமிழர்கள் கூடும்போது ‘அடக்கு முறைக்கு அஞ்சமாட்டோம் ‘ என்று கோசம் போடுவதுபோல ஜினதாச மாமாவின் கடைத் திறப்பு விழாவில் கூடியிருந்த சிங்களவர்கள் ‘அப்பே ரட்ட, அப்பே ஆண்டுவ ‘ எனக் கோசம் போட்டார்கள். அதற்கு ‘எங்கள் நாடு எங்கள் ஆட்சி ‘ என்று கருத்தாம். கிருபாகரன் அண்ணாதான் என்னிடம் கோபத்தோடு சொன்னார். ‘தமிழர்களிடம் சிங்களவர்கள் வாலாட்ட முடியாது. தமிழ்நாடு கொதிச்சு எழும்பினால் இவர்களால் ஒன்றும் செய்ய இயலாது ‘ என கிருபாகரன் அண்ணா சொன்னார். ‘ஜினதாச மாமாவுக்கும் பண்டார நாயக்காவுக்கும் எதிராக அவர் ஒரு கட்டுரை எழுதி வைத்திருந்தார். அதனை அறிஞர் அண்ணாத் துரைக்கு அனுப்பப் போவதாகவும் ‘என்ன நடக்கப் போகிறதென்று இருந்து பார் ‘ என்றும் சொன்னபோது அவர் மிகவும் உணர்ச்சி வசப் பட்டார்.
ஜினதாச மாமாவின் கடைத் திறப்புவிழா தேர்தல் கூட்டம் போல நடை பெற்றது. கடைத் திறப்புக்கு நிறையப் பொலிஸ்காரர்கள் வந்திருந்தார்கள். எங்கள் கடை வாசலில் நின்ற பொலிஸ்காரர்களோடு அப்பா பேசினார். அவர்களுக்கு சோடா கொடுக்கும்படி கடைச் சிப்பந்திகளுக்கு உத்தரவிட்டார். ஜினதாச மாமாவின் கடையைத் திறந்துவைக்க பண்டாரநாயக்க ஊர்வலம்மாக வந்துகொண்டிருப்பதாக அப்பாவிடம் பொலிஸ்காரர்கள் சொன்னார்கள். அதுவரை ஜினதாசா அண்டப் புழுகன் அவன்ர கடைத் திறப்புக்கெல்லாம் பண்டரநாயக்க வரமாட்டார் என்று சொல்லிக் கொண்டிருந்த அப்பா கொஞ்சம் கலவரமடைந்தார்.
முன்னர் எல்லாம் ஜினதாசமாமா எங்கள் அப்பாவின் நெருங்கிய நண்பராக இருந்தவர்தான். எனக்குச் சின்ன வயதாய் இருக்கையில் அப்பாவோடு யாழ்ப்பாணம் எல்லாம் வந்து வீட்டிலும் தங்கிப் போயிருக்கிறார். அவர்தான் முதன்முதலாக எங்களுக்கு மங்குஸ்தான் பழம் கொண்டுவந்து தந்தவர். நெடுநாட்களுக்கு நானும் தங்கையும் மங்குஸ்தான் பழத்தை ‘சிங்கள மாமா தந்த பழம் ‘ என்றுதான் குறிப்பிட்டோம். அம்மா மங்குஸ்தான் கோதுகளை எல்லாம் வயிற்று வலிக்கு நல்ல மருந்து என்று சொல்லிச் சேகரித்து வைத்திருந்தாள்.
சிங்களவர்கள் நன்றி கெட்ட சாதி என்று அப்பா சொல்லத் தொடங்கினார். ஜினதாச மாமா முன்னர் ஒன்றுக்கும் வழி இல்லாமல் தெருவில் அலைந்தாராம். அப்பா இரக்கப் பட்டு அவருக்கு வலியப் போய் உதவி செய்தாராம். அப்பா கடனாகக் கொடுத்த சுருட்டுப் பெட்டிகளை ஊர் ஊராகச் சைக்கிளில் கொண்டுதிரிந்து விற்றே ஜினதாச மாமா பணக்காரரானாராம். ஜினதாச மாமாவுக்கு பேக்கரியும் தேனீர்க் கடையும் வைக்க அப்பாதான் பணம் கொடுத்து உதவியிருக்கிறார். இதை எல்லாம் அப்பா ‘பாம்புக்குப் பாலை வார்த்து விட்டோமோ ‘ என்கிற கவலையோடு சொல்வார். ஜினதாச மாமா பற்றி அப்பா சொல்லாத சில விடயங்கள் பிறர்மூலம் எனது காதுகளில் விழுந்தது. மத்துகமவில் அப்பாவின் வியாபாரம் ஒங்கியதற்க்கு ஜனதாச மாமாவின் சண்டித்தனமும் அறவிட முடியாத கடன்களையும் வசூல் செய்து விடுகிற அவரது சாமர்தியமும் ஒரு முக்கிய காரணமென்றார்கள். அதனால் சிங்களவர்களுக்கு கடன் கொடுக்க அப்பா ஒருபோதும் தயங்கியதில்லையாம். அப்பாவும் ஜினதாசவும் நண்பர்களாக இருந்த காலத்தில் இருவரும் நிறைய பெண்வேட்டை ஆடி இருக்கிறார்கள் என கடைச் சிப்பந்திகள் இரகசியம் பேசிக் கொண்டிருந்ததை ஒருநாள் தற்செயலாகக் கேட்டேன்.
கடைத் திறப்பு விழா அன்று சின்னச் சித்தப்பா கோபமாக இருந்தார். ‘ஜினதாச பேக்கரி வைக்க அண்ணர்தான் காசு கொடுத்தவர். பேக்கரியை அண்ணர்தான் திறந்தும் வைச்சவர். அந்த வேச மகன் கஸ்டப் பட்ட போதெல்லாம் இந்த பண்டாரநாயக்க வரவில்லை ‘ என சின்னச் சித்தப்பா பொரிந்து தள்ளினார். அதுவரை ஜினதாச மாமாவின் பேக்கரியில் இருந்துதான் எங்கள் கடைக்குத் தினசரி காலையும் மாலையும் தேனீரும் கேக்கும் வந்து கொண்டிருந்தது. அப்பா மத்துகமவில் இருந்தால் பெரும்பாலும் இரவு கடை மூடும் சமயங்களில் ஜினதாச மாமா ஊர் உலகப் புதினங்கள் பேசுவதற்க்காக கடைக்கு வந்துவிடுவார். இந்த ஒட்டும் உறவும் எங்கள் கடைக்கு முன் ஜினதாச ஸ்டோர் என்கிற அந்தப் புதிய கடை வருகிற வரைக்கும்தான் தொடர்ந்தது. பின்னர் ஜினதாசவும் அப்பா மாதிரி மத்துகமவில் பெரிய முதலாளியாகி விட்டிருந்தார். இப்படித்தான் நண்பர்கள் பிரிந்தார்கள். இது நடந்த சில மாதங்களின் பின்னர் இனி சிங்கள ஊர்களில் குடும்பத்தையோ பிள்ளைகளையோ வைத்திருக்க முடியாது என்று கூறி அப்பா என்னை நெடுந்தீவுக்கு அழைத்து வந்துவிட்டார். இரண்டு வருடங்களின் பின்னர் 1958ம் ஆண்டு இனக் கலவரத்தில் சிங்களப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் வேட்டையாடப் பட்டபோது முற்கூட்டியே என்னை ஊருக்கு அழைத்து வந்துவிட்ட அப்பாவின் சமோசித புத்தியை ஊரே மெச்சியது. அந்தக் கலவரத்தில் சிங்களக் குண்டர்களால் எங்கள் கடை உடைக்கப் பட்டது. அப்போது அங்கிருந்த இரண்டு சித்தப்பாக்களையும் அவர்களது சிங்கள நண்பர்கள் பின் வாசலால் காப்பாற்றி ரப்பர் வியாபாரியான ஒரு முஸ்லிம் நண்பரிடம் சேர்த்தார்களாம். பின்னர் அந்த முஸ்லிம் நண்பர் சித்தப்பாக்களை தனது லாறியில் ரப்பர் மூடைகளுக்கு மத்தியில் ஒழித்துவத்து கொழும்பிலுள்ள அகதிகள் முகாமுக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். வழியில் அவர்கள் மறைந்திருந்த ரப்பர் லாறி சிங்களக் காடையர்களால் மறிக்கப் பட்டபோதும் விபரீதம் ஒன்றும் இடம்பெறவில்லை. முஸ்லிம்களின் லாறி என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு போக விட்டு
விட்டார்களாம்.
வானொலிச் செய்திகளையும் பயங்கரமான வதந்திகளையும் கேட்டு அப்பாவுக்கு கொஞ்சம் விசராக்கிவிட்டது. கலங்கிய கண்களுடன் யாழ்ப்பாணம் போனார். அங்கு அவர் வெறி பிடித்தவர்போல வாடகைக் காரில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் காங்கேசந்துறை துறைமுகம் என அலைந்தாராம். அகதியாகக் கப்பலில் வந்து சேர்ந்த சித்தப்பாக்கள் சொன்ன கதைகள் பயங்கரமாக இருந்தன. எங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்த களுத்துறைக் கோவில் ஐயரை உயிருடன் உருக்கிய தார்ப் பீப்பவுள் போட்டுக் கொன்றுவிட்டார்களாம். அதைக் கேட்டு சோகம் தாளாமல் நான் அழுதேன். அன்பும் கருணையும் உபசரிப்புமாக மத்துகம கிராமத்து வயல் வெளிகளில் நான் கண்ட சிங்கள மக்களது முகங்கள் எல்லாம் ஒரே கணத்தில் மறைந்துபோனது. கதறக் கதற களுத்துறை ஐயரை விரட்டிப் பிடித்து உருக்கிய தார்ப்பீப்பாவுள் அமுக்கும் கொடூரமான முகங்கள் மட்டும்தான் கண்களுள் நிறைந்தது. என்னைத் தவிர எங்கள் பாடசாலையில் படித்த யாருக்குமே அன்பான சிங்களவர்களது முகமே சேதிகளோ தெரியாது. அவர்கள் எப்போதாவது யாழ்ப்பாணத்து பேக்கரிகளில் ரொட்டி சுடுகிற சிங்களவர்களை மட்டும்தான் கண்டிருந்தார்கள். தென் இலங்கையில் தமிழர்கள் தாக்கப் படும் சேதி கேட்டு ஆத்திரமடைந்த கும்பல்களால் யாழ்ப்பாணத்திலும் சிங்களவர்களின் பேக்கரிகள் சில உடைக்கப் பட்டதாகச் சேதி வந்தது. அது பற்றிப் பேசியவர்கள் சிங்களவர்களைப் போல தமிழர்கள் யாரும் கொள்ளையடிக்கவில்லை என்றார்கள்.
(தொடரும்)
- இன்னொரு முற்றுப்புள்ளி….
- முத்தம்
- ‘அன்னை இட்ட தீ ‘ புத்தகத்தின் முன்னுரை
- வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம் ‘.- ஒரு பார்வை.
- ஆப்பம்
- ஏன் போர்கள் நடக்கின்றன ? (அத்தியாயத்தின் இறுதிப் பகுதி)
- கணினி வலையம் (Computer Network)
- கிறுக்கல்கள்
- பாரதி மன்னிக்கவும்!
- பேரரசிற்கொரு வேண்டுகோள்!
- கொட்டாவி
- குழப்பக் கோட்பாடு
- காளியாய்க் கீழிறங்கி,கன்னிபோல் நெளிந்து ஆடி…..
- குயிலே..குயிலே…
- வரையாத ஓவியம்
- ஏன் போர்கள் நடக்கின்றன ? (அத்தியாயத்தின் இறுதிப் பகுதி)
- அமெரிக்கப் பொருளாதாரத்தில் கிரீன்ஸ்பான் அவர்களின் பங்கு. (டாக்டர் காஞ்சனா தாமோதரனுக்கு ஒரு பதில்)
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 30,2001 (சிமி, ஆஃபன், பன்னீர்செல்வத்தின் போட்டோ, உள்ளாட்சித் தேர்தல் அணிகள், தடா)
- சேவல் கூவிய நாட்கள் – 5 – குறுநாவல்
- சொந்தக்காரன்