வ ஐ ச ஜெயபாலன்
3.
எமது ஊருக்கு லாம் மாஸ்டரும் மனைவியும் வந்த அன்று மத்தியானம் வரை பாடசாலைப் பகிஸ்க்கரிப்பு தொடர்ந்தது. நண்பர்களும் நானும் வகுப்புகளுக்குப் போகாமல் வெளியிலேயே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பாவும் அம்மாவும் தமிழரசுக் கட்சி என்பதால் எனக்கு வீட்டில் திட்டு விழாது. எனினும் பாடசாலைக்குப் புதிசு. ஆசிரியர்கள் என்ன சொல்வார்கள் என்பது தெரியவில்லை. தலைமை ஆசிரியரான நவரட்ணசிங்கம் மாஸ்டருக்கு அரசியல் எல்லாம் பிடிக்காது. அவர் போட்டிருந்த கண்ணாடியால்
பின்பக்கம் நடக்கும் காட்சிகளைக்கூடப் பார்க்கமுடியும் என மாணவர்கள் நம்பினார்கள். எப்போதும் கண்ணாடியில் ஒரு கையும் பிரம்பில் மறு கையுமாகத் திரியும் அவர் எப்டியோ அரசாங்கத்தின் உதவிகளை எல்லாம் பெற்று பள்ளிக்கூடத்தை மேம்படுத்துவதில் மட்டுமே கவனமாக இருந்தார். மாணவர்களைச் சற்று சிரமப் படுத்தினாலும் பள்ளிக் கூட வளாகத்தை பாலைவனப் பசும் சோலையாக வைத்திருந்தார். எப்படியோ நமது பள்ளிக்கு சென்னையில் படித்த திறமையான உடற்பயிற்ச்சி ஆசிரியர் ஒருவரை தேடிக் கொண்டுவந்தார்.
அதைத் தொடர்ந்து கரபந்தாட்டத்தில் நெடுந்தீவு நடுநிலைப் பள்ளி யாழ்ப்பாண மாவட்டத்திலேயே முதலாவதாக வந்தபோது ஊரில் எல்லோருமே பெருமைப் பட்டார்கள். வெளியூர்க் காரராக இருந்தும் நெடுந்தீவின் முன்னேற்றத்தில் நவரட்ணசிங்கம் மாஸ்டர் காட்டிய அக்கறை எல்லோராலும் பாராட்டப் பட்டது. அதனால் அவர் என்ன செய்தாலும் ஊரில் கண்டு கொள்வதில்லை. அவரைப் பற்றி மறைவாகக் கிசு கிசு பேசுகிறவர்கள்கூட அவர்மீது வன்மம் பராட்டி நான் கண்டதில்லை.
ஊரில் பெரும்பாலானவர்கள் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களாக இருந்தபோதும் தமிழரசுக் கட்சி அரசிலை ஏற்றுக்கொள்ளாத நவரத்தினசிங்கம் மாஸ்டர்மீது அவர்கள் அதீத மதிப்பு வைத்திருந்தார்கள். அகிம்சைப் போராட்டம் பற்றி பேசிவிட்டு கருத்து வேறுபட்டவர்களை எல்லாம் கழை எடுக்கப்பட வேண்டிய துரோகிகள் என்று திட்டுகிற தமிழரசுக் கட்சியின் தாடிக்காரப் பேச்சாளர்கள்கூட நவரட்ணசிங்கம் மாஸ்டரைத் திட்டுவது கிடையாது. இது எப்பவுமே எனக்கு ஆச்சரியம் தருவதாக இருந்தது.
அன்று மத்திய இடைவேளை மணி அடித்த பின்னர்தான் தமிழரசுக் கட்சிக் காரர்கள் கலைந்து போனார்கள். அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டும் தெருவில் விழையாடிக் கொண்டுமிருந்தோம். ஊரில் நல்லதண்ணீர் வளங்கும் கந்தையா லாரி ததும்பிச் சிந்தும் தண்ணீரும் பூம் பூம் சத்தமுமாகத் தெருவில் வந்துபோன ஒவ்வொருதடவையும் அதனை வழி மறித்தோம். அதன் சாரதியான லாறிக் கந்தையருக்கு ஒவ்வொரு தடவையும் துண்டுப் பிரசுரம் கொடுத்து ‘தமிழரசுக் கட்சிக்கு ஜே ‘ என்று கோசம் போடுமாறு வற்புறுத்தினோம். அவரும் சிரித்தபடியே ஒவ்வொரு தடவையும் லாரியை நிறுத்தி தமிழரசுக் கட்சிக்கு ஜே எனக் கோசம் போட்டு விட்டு கைகளை அசைத்தபடியே நம்மைக் கடந்து போனார். தோழர்கள் தடுத்தும் கேளாமல் வழியில் வந்த தபால்காரரை வழிமறித்தபோது பிரச்சினையாகி விட்டது. தமிழரசுக் கட்சிக்கு ஜே என்று கோசம்போட அவர் மறுத்து விட்டார். நான் அரசாங்கம். என்னை மறித்தால் பொலிஸ் வரும் என அவர் மிரட்டியபோது உண்மையிலேயே பயந்து போனோம். அதன் பின்னர்தான் போவோர் வருவோரை வழிமறிப்பதைக் கைவிட்டு விட்டு தெரு மாடுகளின் பக்கம் கவனத்தைத் திருப்பினோம்.
தொம் தொம்மென பனம் பழம் விழுகிற சத்தத்தைக் கேட்டதும் முந்திக் கொண்டுபோய் அவற்றைத் தின்பதற்காக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த மாடுகளை ஏமாற்றுவது வேடிக்கையாக இருந்தது. ஒரு பெரிய கல்லைத் தூக்கிப் எங்காவது எறிய வேண்டியதுதான் தாமதம் கல்விழுந்த திசைக்கு மாடுகள் ஓடிச் செல்லும். அவற்றுள் பெரிய மாட்டுக்கு பண்டார நாயக்க என பெயர் வைத்தேன். வேறொரு மாட்டுக்கு நான் வைத்தபெயர் ஜினதாச மாமா. கல் விழும் சத்தத்தைக் கேட்டு முந்தி அடித்து ஒடிவந்து ஏமாந்து
போகிற பெரிய மாட்டைப் பார்த்து நாமெல்லாம் பண்டாரநாயக்காவை ஏமாற்றிவிட்டோம் பண்டார நாயக்க தோற்றுப்போனார் என கோசமிட்டுக்
கும்மாளம் அடித்தோம்.
மதியம் சாலை மறியல் செய்த தமிழரசுக் காரர்கள் கலைந்து போனதும் என்ன செய்வதென்று தோழர்களுக்கும் எனக்கும் புரியவில்லை. சிறு தயக்கத்துக்குப் பிறகு நாமெல்லோரும் பளிக்கூடத்துக்குப் போனோம். அன்று மாலை வகுப்புகள் நடக்கவில்லை. காலையில் பின்பக்கத்து வேலி பாய்ந்து பள்ளிக்கு வந்துவிட்ட மாணவர்கள் ‘உங்களுக்கு நல்ல பிரப்பம் பழம் கிடைக்கப் போகிறது ‘ என்று நம்மை மிரட்டினார்கள். இந்தியாவில் இருந்து புதிதாக இரண்டு ஆசிரியர்கள் வந்திருப் பதாகச் சொல்லி அவர்களைத் தாங்கள் பார்த்துவிட்டதாகவும் பெருமை அடித்துக் கொண்டார்கள். நல்ல வடிவான ரீச்சர் வந்திருக்கிறதாக வேறு சொல்லி எங்கள் ஆவலைத் தூண்டினார்கள்.
திடாரென மாணவர்களைப் பாடசாலை முன்றலுக்கு அழைக்கும் தாளத்தில் மணி அடித்த போது எனக்குப் பயமாக இருந்தது. வீட்டுக்கு ஓடி விடலாமா என்றுகூட எண்ணிணேன். மாணவர்கள் எல்லோரும் வாதுமை மரங்களும் பூங்கன்றுகளும் சூழ்ந்த பாடசாலை முன்றலில் கூடினார்கள். மேடையில் நவரட்ணசிங்கம் மாஸ்டர் கண்ணாடியைச் சரிசெய்தபடியே பிரம்போடு நின்றார். காலையில் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு மேடையில் வைத்துப் பகீரங்க பிரம்படி கிடைக்கப் போகிறது என எண்ணி நாங்கள் அச்சமடைந்தோம்.
‘தூக்குமேடை பஞ்சு மெத்தை ‘ என யாரோ துணிச்சலான பெரிய வகுப்பு மாணவன் ஒருவன் உரத்துச் சொன்னது கேட்டது. அதைத் தொடர்ந்து மெல்லிய சிரிப்பலையும் அசட்டுத் துணிச்சலும் பரவியது. நவரட்ண சிங்கம் மாஸ்டர் அன்று எங்கள் யாருக்கும் அடிக்கவில்லை. மாணவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று மட்டும் கடுமையாகச் சொன்னார். காலை வகுப்புகளுக்கு வராதவர்கள் ஒன்று கூடல் முடிந்ததும் பாடசாலைப் பூந்தோட்டத்துக்கு தண்ணீர் உற்றிவிட்டுத்தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற போது சற்று நிம்மதியாக இருந்தது. பின்னர் எங்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கவும் விஞ்ஞானம் கற்பிக்கவும் இந்தியாவில் இருந்து இரண்டு ஆசிரியர்கள் வந்திருப்பதாகச் சொன்னார். லாம் மாஸ்டரும் அவரது மனைவியான லாம் ரீச்சரும் மேடைக்கு வந்தபோது எல்லொருமே பிரமித்துப் போனோம். திருமதி லாம் ரீச்சரின் அழகை வர்ணிக்க ஒரு வேழை மலையாளத்தில் வார்த்தைகள் இருக்கக்கூடும். காற்று வெளியில் தீபம்போல அவரது முகத்தில் அழகு அசைந்தது. அப்படி நீரோட்டம்போல எங்களை எல்லாம் அடித்துக் கொண்டுபோய் திக்குமுக்காட வைக்கிற அழகை மீண்டும் என் வாழ்நாளில் எதிர் கொண்டதில்லை. பின்னர் எனது வாலிபம் முழுக்கச் சந்தித்த தேவதைகளுக்கு எல்லாம் எங்காவது ஒரு அசப்பில் லாம் ரீச்சரின் சாயல் இருந்தது.
நவரட்ணசிங்கம் மாஸ்டர் புதிய ஆசிரியர்களை அறிமுகப் படுத்திய போது காலைச் சம்பவங்கள் பற்றியும் எதாவது பேசுவார் என மாணவர்கள் எல்லோருமே எதிர்பார்த்தோம். தனது பேச்சின் இடையில் காலையில் பாடசாலை முன்றலில் மறியல் செய்த தமிழரசுக் கட்டிசிக்காரரை நையாண்டி செய்தார். சுத்தத் தமிழர் சுத்தச் சிங்களவர்ரென்பதெல்லாம் அரசியல் வாதிகள் பேசுகிற சுத்தப் பொய் என்றார். இலங்கைத் தமிழர்களான நாம் பாதி மலையாளிகள் என்றவர் நமது பாடசாலைக்குப் புதிய ஆசிரியர்களாக வந்திருக்கிற லாம் தம்பதிகள் முழு மலையாளிகள் என்றார். நவரட்ணசிங்கம் மாஸ்டரின் தமிழர் பற்றிய கோட்பாட்டைச் சின்னத்தம்பி மாஸ்டர் இரசிக்க வில்லை என்பதை அடிக்கடி கோணிப் பிதுங்கிய அவரது உதடுகள் காட்டியது. அதன் பின்னர் காலையில் வகுப்புக்கு மட்டம் போட்ட தோழர்களோடு பூங்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தபோது நவரட்ணசிங்கம் மாஸ்டர் என்னை மட்டும் அலுவலகத்துக்கு அழைத்தார். மனசு துணுக்குற்றுப்போய் அடிவிழப் போகிறது என்கிற அச்சத்தோடு ஒரு பூனைபோல மெதுவாகவே போனேன்.
‘தந்திக்காரனை வேலை செய்யவிடாமல் தடுத்தாயா ? உன்னைப் பிடிக்க யாழ்பாணத்தில் இருந்து பொலிஸ் வரப்போகுது என்றார். ‘ என அவர் உரப்பிய போதே எனது கால்கள் நடுங்கத் தொடங்கி விட்டது. பின்னர் மெதுவாக இதுதான் கடைசி எச்சரிக்கை என்ற படி என்னை அருகே அழைத்தார். ‘இனி இப்படியெல்லாம் நடக்கதே ‘ என்றார். அவர் எனது கால்களைத் தடவியபடி அழுத்தமாகக் கன்னத்தில் முத்தமிட்டபோது இனம் புரியாத ஆச்சரியத்தில் துணுக்குற்றுப் போனேன்.
- காதல் புனிதமென்று
- மூன்று பேர் – 3 (தொடர் நிலைச் செய்யு:ள்)
- துணை
- கருப்புச் செவ்வாய்
- புதுமைப் பித்தன் படைப்புகள் செம்பதிப்பு : சில கேள்விகள்
- முட்டை — ரவாப்பணியாரம்
- சிக்கன் பெப்பர் மசாலாக்குழம்பு
- உலகத்தின் வரலாறு
- வாடகை வாழ்க்கை…
- விடிவெள்ளி
- சேவல் கூவிய நாட்கள் – 3 (குறுநாவல்)
- சித்ர(தே)வதை
- எங்கிருந்தாலும் வாழ்க
- இயற்கையைச் சுகித்தல்
- டி.எஸ் எலியட்டும் கள்ளிக்காட்டுக் கனவுகளும்………(5)
- நட்பை நாகரீகமாக்குவோம்…
- மலேசியப்பாவாணர் ஐ. உலகனாதனின் கவிதைகள்
- இந்த வாரம் இப்படி — செப்டம்பர் 16, 2001
- உலக வர்த்தக மையம் மீது தாக்குதல்
- இன்னொரு மனசு.
- சலனம்
- பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு.