சுந்தர ராமசாமியின் கோரிக்கை பற்றி

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

கோவிந்த்


தரமாக தமிழில் படைப்பிலைக்கியம் காண்பது கடினமானது. இப்பொழுதாவது இணையத்தின் துணையில் எல்லோரும் நிறுத்தக்குறி இல்லாமல் எழுதித் தள்ள முடிகிறது. அதிலும் அது பார்வையாளனால் படிக்கப்படுகிறதா இல்லையா என்பதே பட்டணத்தில் பூதம் மட்டுமே அறியும் இரகசியம்.

ஆனால், எழுத்து என்பது தாள் அச்சு வடிவை மட்டுமே சார்ந்து இருந்தபோதும் , சில வணிக வெற்றி பத்திரிக்கைகளைத் தாண்டி, பல சிரமங்களுக்கிடையே தரமான எழுத்துக்களை தந்த நம் முன்னோடிகளில், சுந்தரராமசாமியும் ஒருவர்.

அவர் கருத்துக்களிலும், எழுத்துக் கட்டமைப்பு வடிவங்களிலும் ஒருவருக்கு கருத்து வேறு பாடு இருக்கலாம்.

ஆனால், அவர் நல் எழுத்துக்கள் தந்தவர்களில் ஒருவராகிறார்.

அவருடைய கோரிக்கைக்கு ஒரு வினய குசும்பு அர்த்தம் காண்பது நமக்கே நட்டம். அவருக்கல்ல.

திருவிழா கூட்டத்து அறிவிப்பில், ‘ மக்களே, திருடர்கள் இந்தத் திருவிழாவில் உங்களுடன் கலந்திருப்பார்கள், அதனால் ஜாக்கிரதையாக இருக்கவும் ‘ -என்று குழாயில் அறிவிப்பு கேட்டிருப்போம்.

உடனே, திருவிழாவிற்கு முதல் மரியாதை பெற வந்திருக்கும் பெரிய மனிதர்களை சொல்லுகிறார் என்றோ, இல்லை திருவிழா கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்திருக்கும் பூசாரிகள் திருடர்கள் என்றோ தான் அந்த அறிவிப்பாளர் சொல்கிறார் என்றால் , அது எந்த அளவிற்கு விதண்டாவாத , குசும்பு பேச்சாக இருக்குமோ அது போல் தான், சுந்தரராமசாமியின் கடிதத்தை திரித்துச் சொல்வது.

அவர் சொல்வது உண்மை. தமிழக முதல்வர், தனது கரங்களை எல்லா மட்டத்திலும் இருக்கும் புல்லுருவிகளை களையெடுக்க வேண்டும்.

பல பத்திரிக்கைகள் – வணிகமோ, சிறிதோ, பெரிதோ – பல நல் பணிகள் செய்யும் போது, அதிலும் இருக்கும் சில தீயவர்களை தண்டிக்க வேண்டும் என்று அவர் சொல்வது சகஜமான ஒன்றே. எவருமே, அவர் சார்ந்த துறை பற்றிக் கவலைப்படுவது இயல்பு.

எழுத்தாளர்கள் பற்றிய கறாரான எணணங்கள் அவர் கொண்டிருந்தார் என்றால் அது மரியாதையான விஷயம் தான்.

வளைகுடா பகுதிக்கு, பிரபஞ்சன் வருகிறார் என்பது அறிந்து அழைப்பு பற்றிய எண்ணம் எதுவும் இல்லாமல் அவராகவே வந்து பார்வையாளக் கூட்டத்தில் அமைதியாக அமர்ந்து பிரபஞ்சன் பேச்சைக் கேட்டுச் சென்றது , தரமான தமிழ் எழுத்திற்கு அவர் காட்டும் மரியாதையை காட்டியது.

நல்ல எழுத்தாளர்களை மரியாதை செய்ய வேண்டிய நாகரீகம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களை கொச்சைப்படுத்தாதீர்கள்.

சங்கராச்சாரியார் இடத்தில் யார் இருந்தாலும் அவர்கள் பற்றி இதே மாதிரி தன் கருத்தைச் சொல்ல சுந்தரராமசாமியிடம் நேர்மையும் உண்மையும் இருக்கிறது.

அதும் போக, சங்கராச்சாரியர் பற்றிய நேர்மை நிரூபிக்க அவர் சார்ந்தவர்கள் முயல வேண்டுமே தவிர, ‘அவர் யோக்கியமா.. ? இவர் யோக்கியமா.. ? ‘ என்பது அவர்களின் பதட்ட பயமான நிலையையே காண்பிக்கிறது.

சுந்தரராமசாமி யானாலும், ஜெயமோகன் , கருணாநிதி யானாலும், காழ்ப்புணர்ச்சியுடன் அவர்களைக் கொச்சைபடுத்தாதீர்கள். அவர்களின் படைப்புகள் பற்றிக் கருத்தோ, விமர்சனமோ செய்யுங்கள். அது மூளையிலிருந்து, இதயம் வழியே உங்கள் விரல் நுனியில் வரட்டும்.

அதை விடுத்து வயிற்றெரிச்சல், காழ்ப்புணர்ச்சியில் வேண்டாம்.

எழுத்தாளராக சுந்தரராமசாமியும் , கருணாநிதியும் தங்கள் கருத்தை சங்கராச்சாரியார் விஷயத்தில் தெளிவுபடுத்தியதற்கு தமிழ் உலகு நன்றி சொல்லட்டும்.

கோவிந்த்

gocha2004@yahoo.com

Series Navigation

கோவிந்த்

கோவிந்த்