சுதந்திரப் போராட்டமும் தமிழ் எழுத்தாளர்களும் – 2

This entry is part [part not set] of 34 in the series 20070906_Issue

வெங்கட் சாமிநாதன்



கா.சு.வேங்கடரமணி(1892-1952)வுக்கு லண்டன் டைம்ஸ் லிடரரி சப்ளிமெண்டில் வேலை கிடைத்தது. ஆனால் அவர் லண்டனுக்குச் செல்வதை அவரது தாயார் விரும்பவில்லை. வேங்கட ரமணியின் முதல் நாவல், தேச பக்தன் கந்தன், தமிழில் தான் எழுதப்பட்டது. அதன் கதாநாயகன் கந்தன், சீமையில் படித்து வந்தவன். அவனுடைய காதலுக்கும் கிளர்ந்தெழும் தேசபக்த உணர்வுக்கும் இடையேயான போராட்டம் தான் நாவலின் கதை. முதலில் காதலும், அரசியலுமாகத் தொடங்கி வளரும் கதை கடைசியில் தத்துவார்த்த விசாரணையில் முடிகிறது. முதலில் தேசவிடுதலைக்கான கிளர்ச்சியாக தொடங்கி பின் மெதுவாக, ஏதும் முரண் இன்றி, வெகு இயல்பாக அது தனி மனிதனின் ஆத்மீக விடுதலைக்கான ஒன்றாக உருமாறி தத்துவார்த்த உலகிற்கு இட்டுச் செல்வது என்பது அக்கால பெரிய கீர்த்திமான்களின் விதியாகவே இருந்துள்ளது ஒரு சுவாரஸ்யமான விஷயம். இது அரவிந்தரிலிருந்தே தொடர்கிறது. வேங்கட ரமணியின் அடுத்த நாவல் முருகன் ஒர் உழவன்(1927). இதை அவர் ஆங்கிலத்தில் தான் முதலில் எழுதினார். பின்னர் அவர் தானே அதைத் தமிழிலும் மொழிபெயர்த்தார். கிராமத்துக்குத் திரும்பிச் செல்வது தான் அதன் மையக் கரு. காந்தியடிகளுக்குப் பிரியமான விஷயம். வேங்கட ரமணி முழுக்க முழுக்க காந்தீய சிந்தனைகளால் கவரப்பட்டவர்.

வெ.சாமிநாதன் சர்மா(1895-1978) வெவ்வேறு கால கட்டங்களில் தேசபக்தன் (1917-1920), நவசக்தி, ஸ்வராஜ், குமரி மலர் போன்ற பத்திரிககளுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். இப்பத்திரிகைகளில் உலக நாடுகள் பலவற்றின் சுதந்திர போராட்டங்கள் பற்றியும், உலக சரித்திரம் பற்றியும் தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கில் நிறைய எழுதி வந்தார். காந்தி, மோதிலால் நேரு, திலகர், கார்ல் மார்க்ஸ், முஸ்த·பா கமால் பாஷா போன்ற தலைவர்களின் வாழ்க்கைச்சரிதத்தையும் மனித குலத்திற்கு அவர்கள் பங்களிப்பைப் பற்றியும் விஸ்தாரமாக எழுதினார். ப்ளேட்டோவின் ‘குடியரசு'(Republic), ரூஸோவின் சமுதாய ஒப்பந்தம் (Social Contract) போன்ற நூல்களை மொழிபெயர்த்தார். அவற்றோடு, எழுச்சியுற்ற புது சீனா, சோவியத் ரஷ்யா, கிரீஸின் புராதன வரலாறு, நாடாளுமன்றம் மூலம் ஜனநாயக அரசமைப்பு தோன்றிய வரலாறு, ஆசியாவும் உலக சமாதானமும், மனித சுதந்திரம் என்ற கருத்தாக்கத்தின் தோற்றம், இப்படி பல்வேறு விஷயங்களைப்பற்றி விரிவான புத்தகங்கள் எழுதினார். சுமார் கால் நூற்றாண்டுக்காலம், தமிழ் மக்கள் உலக சரித்திரம்பற்றியும், பல்வேறு நாடுகளில் நிகழ்ந்துள்ள சுதந்திர போராட்டங்கள், சமூக புரட்சிகள் பின் மாற்றங்கள் பற்றியும், தெரிந்து கொண்டார்கள் என்றால் அது வெ.சாமிநாத சர்மாவின் அயராத உழைப்பும், உத்வேகமும் தந்த விரிவான வரலாற்றுப் புத்தகங்களால் தான். அவர் காலத்தில் வாழ்ந்த,அவர் பழகி அறிந்த சுப்ரமண்ய பாரதி இன்னும் மற்ற எழுத்தாளர்கள், சுதந்திர போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர்கள் பற்றியும் தம் அனுபவங்களையும் எழுதியுள்ளார்.

கவிஞரும் யோகியும், பாண்டிச்சேரியில் அரவிந்தரின் ஆசிரமத்தில் நிறைய வருடங்கள் இருந்தவருமான, யோகி சுத்தானந்த பாரதியும் அப்படித்தான். லத்தீன், ·ப்ரெஞ்ச் இரண்டிலும் நல்ல தேர்ச்சி கொண்டிருந்த அவர் தாந்தேயின் Divine Comedy, விக்டர் ஹ¤யூகோவின் Les Miserable (ஏழை படும் பாடு) போன்ற ஐரோப்பிய இலக்கியங்கள் பலவற்றை தமிழுக்குத் தந்தார். 25 வருடங்கள் நீண்ட மௌன தவத்திலிருந்து மீண்ட அவர் பாரதி மகா சக்தி காவியம் என்னும் தலைப்பில் பாரத தேசத்தின் வரலாற்றையே ஒரு பெரும் காவியமாக எழுதினார். என் பள்ளிப் பருவத்தில் படித்த சுத்தானந்த பாரதியின் புத்தகங்களிலிருந்து தான் தமிழ் தேசிய உணர்வையும் தேச பக்த உணர்வையும் பெற்றேன் என்று சொல்ல வேண்டும். சென்ற நூற்றாண்டின் முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் இளம் தமிழ் வாசகர்கள் யோகி சுத்தானந்த பாரதியின் நூற்களைப் படிப்பதில் ஒரு பரவசமும் வெறியும் கொண்டிருந்தார்கள் என்றும் சொல்லவேண்டும். அவர் ஒரு தவ யோகிதான். இருப்பினும் அவர் நிறைய எழுதினார். அவர் எழுதிய 250 புத்தகங்களில், 173 புத்தகங்கள் தமிழில் எழுதியவை.

திரு.வி.க என்றே அறியப்பட்ட திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் பார்க்கப்போனால் ஒரு தமிழ் அறிஞர், தொழிற்சங்க வாதி. சிங்கார வேலருடன் சேர்ந்து 1918-ல் அவர் நிறுவிய தொழிற்சங்கம் தான் இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் தொழிற்சங்கம் என்ற பெருமை திரு வி.க வையே சாரும். அவர் பல முனைகளில் தீவிரமாக செயல்பட்டவர். அவர் பல பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்தார். அவர் கீழ் பயிற்சி பெற்ற பலர் பின்னாட்களில் தமிழ் பத்திரிகைத் துறையிலும், அரசியலிலும் இலக்கியத்திலும் பெரிய சாதனையாளர்களாக திகழ்ந்தனர். மகாத்மா காந்தி அந்நாட்களில் தென்னாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும்போது அவருடன் சென்று மகாத்மாவின் சொற்பொழிவுகளை தமிழில் மொழிபெயர்ப்பவராக இருந்தார் திரு.வி.க. அவர் மகாத்மா காந்தியின் தலைமையில் கண்ட சமூகம், தார்மீகம் அறம் சார்ந்த அம்சங்களைப் பற்றி, மகாத்மாவும் மனித வாழ்க்கையும், இந்தியாவும் சுதந்திரமும் போன்ற புத்தகங்களில் விரிவாக எழுதியுள்ளார். பெண்களின் சுதந்திரத்திரத்திற்கும் அவர்கள் உரிமைகளுக்கும் அவர் தீவிரமாக வாதாடியவர். அது பற்றியும் அவர் விரிவாக எழுதியிருக்கிறார்.

ராஜாஜி(1879-1971) தன் அரசியல் வாழ்க்கையில் நேரம் கிடைத்த போதெல்லாம் சிறு கதைகள், அரசியல் விமர்சனங்கள், சிறுவர்களுக்கான குட்டிக் கதைகள் என பல வடிவங்களில் எழுதுவது போக, பத்திரிகளுக்கு ஆசிர்யராகவும் இருந்திருக்கிறார். மொழிபெயர்ப்புகள் தந்துள்ளார். மார்க்கஸ் அரேலியஸ், ராம க்ரிஷ்ண பரமஹம்ஸர் போன்ற மகான்களின் உபதேசங்களைத் தொகுத்ததோடு, ராமாயணம், மகா பாரதம் இரண்டு இதிகாசங்களையும் சிறுவர்களுக்கான எளிய நடையில் ஒரு தார்மீக பார்வையில் எழுதியுள்ளார். தன் சிறை வாழ்க்கை பற்றிய குறிப்புகளையும் எழுதியிருக்கிறார். இருபதுக்களில் திருச்செங்கோடு கிராமத்தில் ஒரு ஆசிரமம் நிறுவி அங்கிருந்து விமோசனம் என்ற பத்திரிகையையும் வெளியிட்டு வந்தார். அதில் அவர் காந்தியம், விதவை மறுமணம், மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு பற்றியெல்லாம் கதைகள் எழுதி வந்தார். ஹன்ஸ் ஆண்டர்சனின் சீர்திருத்த நோக்கம் கொண்ட இன்னொரு அவதாரம் என்று சொல்ல வேண்டும் அவரை.

ராஜாஜியிடமும் திரு.வி.க.விடமும் பத்திரிகைத் துறை பயிற்சி பெற்றவர் தான் கல்கி என்ற பெயரிலேயே பெரும்பாலும் அறியப்பெற்றவரும் தமிழ் நாட்டின் பத்திரிகையாளரிலேயே ஜாம்பவான் என்று கருதப்படவேண்டியவருமான ரா.கிருஷ்ணமூர்த்தியும்(1899-1953). அவர் வாழ்ந்த காலத்தில் மிகப் பிரபலமானவரும் மிகுந்த செல்வாக்கும் கொண்டவருமான கல்கி சுமார் முப்பது வருட காலம் தமிழ் எழுத்திலும் பத்திரிகை உலகிலும் இணையற்ற ஒரு ஆளுமையாகத் திகழ்ந்தவர். 1921-லிருந்தே அவர் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக இயங்கியவர். மூன்று முறை, 1922, 1930, 1941 வருடங்களில் அவர் சிறை சென்றார். தமிழில் மிக பிரபலமான பத்திரிகை, ஆனந்த விகடனில் அவன் ஆசிரியர் பதவியை, மிகுந்த செல்வாக்கும் வசதிகளையும் தந்த பதவி அது, உதறித்தான் அவர் விரும்பியவாறு 1941-ல் சிறை செல்ல முடிந்தது. சிறை செல்ல வேண்டுமெனில் ஆசிரியப் பதவியைத் துறக்கத்தான் வேண்டும் என்று ஆனந்த விகடனின் அதிபராக இருந்த எஸ் எஸ் வாசன், சொல்லவே, அவர் அப்பதவியைத் துறக்கத் தயங்கவில்லை. மாந்தருக்குள் ஒரு தெய்வம் என்ற அவரது புத்தகம் காந்தியடிகளின் வாழ்க்கையைச் சித்தரிக்கும். யங் இந்தியாவிலிருந்து காந்தியின் எழுத்துக்களை தமிழுக்கு மொழிபெயர்த்தார். லாலா லஜபத் ராயின் வாழ்க்கையைப்பற்றியும், இந்திய தேசீய இயக்கத்தின் வரலாற்றைப் பற்றியும் எழுதியவர் நம் தாய்நாடு என்ற தலைப்பில் விவேகானந்தரின் எழுத்துக்களையும் தொகுத்துத் தந்துள்ளார். தியாக பூமி என்ற அவரது நாவல், தீண்டாமை ஒழிப்பு, மது விலக்கு, ஹரிஜனங்களை கோவிலுக்குள் அனுமதித்தல், ஹரிஜன முன்னேற்றம், தேசீய விடுதலை போன்ர காந்தீய கொள்கைச் சொல்ல எழுதப்பட்டது. பின்னர் அது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது ஆனால் அது உடன் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. 1945-ல் தான் அத்ததை நீங்கியது. கல்கியின் நாவல்களிலேயே மக்களிடையே மிகவும் விரும்பப்பட்டதும் பிராபல்யமானதுமான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. பல்லவர்களும், சோழ் மன்னர்களும் ஆண்ட காலத்திய தமிழ் நாட்டின் மகோன்னத வரலாற்றைச் சொல்ல வந்த இந்த நாவல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் நாட்டைப் பற்றியும் மொழியைப் பற்றியும் அவர்களது வரலாற்றின் புகழ் பெற்ற காலங்கள் பற்றியும் அவர்கள் மூதாதையரின் மகோன்னத சாதனைகளை அறியச் செய்து அது பற்றி அவர்கள் பெருமையும் கர்வமும் கொள்ள வேண்டும் என்ற நோக்கம், தேசீய விடுதலை போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட கல்கிக்கு இருந்தது


vswaminathan.venkat@gmail.com

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்