சுண்ணாம்பு

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா


“உன்னைப் பிடித்துச் சுண்ணாம்புக் கால்வாயில் போடனுமய்யா !” என்று சொன்னாலும் சொல்வீர்கள். யாரைப் போடவேண்டுமென்று பாருங்கள்.

மிரண்டவனுக்கு அனைத்தும் பேய் மாதிரி வெள்ளையாக எதைப் பார்த்தாலும் எனக்குப் பேயாக இருக்கின்றது.

வெள்ளைக் காரப் பெண்களைச் சொல்லவில்லை. வெள்ளைக்கார ஆண்களையும் சொல்லவில்லை.

அதாவது, சுண்ணாம்பு வெற்றிலைப் பாக்கோடு, சீவலோடு குதப்பி “த்தூ” என்று லாகவமாக நாக்கினைத் துருத்தி, துப்பிவிட்டு, கையில் மிச்சம் வைத்திருக்கும் சுண்ணாம்பினை பேய் பிசாசுக்களைப் போன்று சிறு சிறு படமாக சுவற்றிலோ, மேசையிலோ தீற்றி விட்டால், எப்போது பார்த்தாலும் அது வெள்ளைப் பிசாசைப் போல பல்லிளிக்கும்.

சம்பத் என்று எனக்குத் தெரிந்த பெரிய மனிதர் இருந்தார். பெரிய தொப்பை. வாயில் குதப்பிக் கொண்டே இருப்பார். நெற்றியில் திருமண். சீவல் என்றால் கொள்ளைப் பிரியம். சுண்ணாம்பென்றால் “ஆகா !” போட்டுத் தேய்ப்பார், தேய்ப்பார் ….
வெற்றிலையே காணாமல் போகுமளவிற்குத் தேய்ப்பார். அப்படியே தேய்த்து நெற்றியில் போட்டுக் கொள்வாரென்றால், அப்படியே பக்கத்தில் இருக்கும் அழகு மரமேசையினில் டிராயர் பக்கம் அப்படியே ஒரு “சுய்ங் ! சொய்ங்க்க்க்க்க்க்” என்று தேய்த்து விடுவார். அடுத்த வருடம் அரசாங்க செலவில் மீண்டும் மேசைகளுக்கு வார்னீஷ் அடிக்கும் வரையில் அப்பேய்கள் அங்ஙனமே உறையும். வாழும்.

எல்.ஐ.சி.யில் குமாஸ்தாவான அவர், நாற்காலியில் சரிந்து ! “அப்புறம் சொல்லுங்க சார் !” என்று சொன்னால் போதும்.

அடுத்த சீவல்/வெற்றிலைக்காக அவர் நாக்கு அடிபோடுகிறது என்று பொருள். அர்த்தம்.
கோபுர மார்க் சுண்ணாம்பு இல்லையென்றால் அவருக்கு “டென்ஷன்” ஆகிவிடும். அப்படி இப்படி தேடுவார். இன்ஷ¤ரன்ஸ் பைல்களைக் கடாசுவார். “சனியன் ! நேரத்தில் கிடைக்க மாட்டேங்கிறது ! பல்லவன் பஸ் கிடைத்து ஆத்திற்கு கூடப் போயிடலாம் ! சுண்ணாம்பு டப்பி கிடைக்க மாட்டேன்றது . . . ” என்று அக்கம் பக்கத்தில் வெற்றிலைச் சாறினைத் தெறித்துப் பேசுவார். அதைத் தடுக்கவாவது சம்பத் கிட்டே சுவற்றுச் சுண்ணாம்பினை வழித்து, தண்ணீரில் கலக்கி, கொடுக்கலாம் போலிருக்கும்.

செளகார்பேட்டையில் சுண்ணாம்பு போடாமல் பான் பராக் போட்டு, வெற்றிலைச் சாந்துக் கலர் சவுக்கியதைத் துப்புவது இப்போதெல்லாம் அதிகம். சென்னை நடைபாதைகளில் அனேக இடங்களில் சந்துகளில் சாந்து சிந்து பாடியிருப்பதைக் காணலாம். அதே மாதிரி பல்லவன் பேருந்தில் கம்பி ஓரத்தில் சுண்ணாம்பு தடவி, சுண்ணாம்பு தடவி துருபிடித்தக் கம்பிகளுக்கு வெள்ளை நிறம் பூசியிருக்கும். நமது கை அதில் வைக்க அது சுரசுரப்பாக இருக்கும்

எல்லாம் அந்தச் சுண்ணாம்பு பண்ணுகின்ற மாயை. கோவிலில் கூட விபூதி, குங்குமம் மற்றும் சுண்ணாம்பு சரியான விகிதத்தில் கலந்து, தூண்களில் “இப்படி ஒன்று” “அப்படி ஒன்றாக” தீற்றியிருக்கும். கூர்ந்து நோக்குங்கள்.

முருகன் முன்னால் கண்ணத்தில் அரோகரா போட்டு விடு, கையில் விபூதியினை வாங்கி மெலிதாக நெற்றிக்கிடையில் இட்டு விட்டு (பட்டையாகத் தீட்டினால் அநாகரீகம் ! வயசானவன் நாமம் போட்டு மேலுலகம் டிக்கெட் வாங்கப் போகிறவன் என்று பொருள் !), நவநாகரீகமாக தூணில் தடவி விட்டு அல்லது கொட்டி விட்டு நகர்வார்கள். குங்குமமும் அப்படியே ! ஆனால் கொஞ்சம் அடர்த்தியாக இருக்கும். கோவிலில் ஜெயலலிதா சாப்பாட்டினைச் சாப்பாட்டு விட்டு, சுண்ணாம்பினை அப்படியே கல் தூணில் இரவு பகலாக அரும்பாடுபட்டு செதுக்கியிருக்கும் நர்த்தன நாயகியின் கால் சிலம்பினில் தடவி விடுவார்.

வெள்ளையடிக்க வேண்டாமில்லையா ?. ஆயிரம் கால் மண்டபம் கட்டி ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டனவாம். வந்த வெள்ளைக்காரனுக்கு கைடு சொன்னான். ஆயிரங்கால் மண்டபத்தில் தூண்களில் பத்தாயிரம் “வண்ணத் தீற்றல்கள்” எங்கும் தெரிந்தன.

இதற்கு மோனாலிசா மாதிரி கைதேர்ந்த ஓவியத்தினை வீட்டினில் மாட்டி, சாப்பிட்டுவிட்டு, சாம்பார் தெறிக்க ஓவியத்தின் கண் மீது காறித் துப்பலாம்.

வீட்டில் வெள்ளையடிக்க வேண்டும். கைதேர்ந்த ஓவியனாய் வெள்ளையடிக்கும் ராஜேந்திரனை வர வைத்தேன். அவன் வயதானவன். தென்னை மட்டை, பனை மட்டை வைத்து, நாரினால் இருக்கும் வெள்ளையடிக்கும் பிரஷ்ஷினை வைத்து
வீடுகளுக்கு வெள்ளையடிப்பதில் கில்லாடி. மெதுவாக வருவான். பீடியை வளிப்பான். அமைதியாக இருப்பான். உடம்பில் துணியிராது. அப்புறம் அனைத்தும் “வெள்ளையும் சொள்ளையுமாகி விடுமில்ல ?” சிறு பட்டி நாடா போட்ட டிராயர் அணிந்திருந்தான். வீட்டிற்கு வந்து பார்த்தான்.

வீடு முழுவதும் கறுப்பாயிருந்தது. விளக்குக் கரி படிந்து பூஜையறையில் வெள்ளையடித்தாலும் கரி போக முடியாதவண்ணம் மனைவி பக்டி மயமாக்கியிருந்தாள். உள்ளம் கரி படிந்து கடவுளைக் கும்பிடுகையில் இக்கரி மனதைத் தொட்டது.
ராஜேந்திரன் இந்த இடத்தை மட்டும் இருபது தடவை வெள்ளையடித்துவிட்டு “போகாத ஊருக்கு வழி தேடாதீங்கம்மா !” என்று தத்துவமாகப் பேசினான்.

கண்ணதாசன் தோற்றுவிட்டார் போங்கள் !

வீட்டினை மட்டும் எப்படியெல்லாம் வெள்ளையாக்குகிறோம் ? தட்டு முட்டு சாமானெல்லையாம் பரணிலிருந்து கஷ்டப்பட்டு தும்மி, பாத்திரங்களையெல்லாம் எடுத்து வெளியே வராண்டாவினில் வைத்து, “ராஜேந்திரா ! இப்ப அடி !” என்று ஏவுகிறோம்.

“யப்பா ! அந்த கதவிடுக்கினில் சுண்ணாம்படிக்கவில்லை பாரு ! பேய் மாதிரி தீற்றாதே ! நல்லா பாத்து இழுத்திச் சார்த்தி அடி !” என்றும் ஏவுகிறோம். திருமணமாகி பரிசுப்பொருளாக வந்த அலுமினியக் குக்கர் கூட அன்று மங்கிப் போய் “எனக்கும் வெள்ளையடியுங்கள்” என்று தெரிவித்தது.

“கட்டிலுக்கு அடியில் குனிந்து அடிப்பா ” அந்தச் சுண்ணாம்புக்கறையின் மீது நன்றாக அடி ! வீடு பளிச்சென்றிருக்கும்.

நாறியிருக்கும் வீ¢ட்டினை வெள்ளையடிப்பதால் தான் “நார்” துணை கொண்டு சுண்ணாம்படிக்கிறார்கள் என்று நினைக்கின்றேன். சுண்ணாம்புக் குளம்பில் எப்படி தண்ணீர் விட்டுக் கலக்கி, கை வெந்து விடாமல் ராஜேந்திரன் வெள்ளையடிக்கிறார் என்று கவனியுங்கள். கையில் உறை போடாமல், துளிகள் பட்டு தோல் வெந்திருந்தாலும் பொருட்படுத்தாமல் தரும் ரூ 800க் காக வீடு முழுவதும் சுற்றி கயில் வாளியினைத் தூக்கி தும்மல் வந்தாலும் அடக்கிக் கொண்டு அனைத்து இடங்களிலும் வெள்ளை ஓவியங்களைத் தீட்டி, காரியமே கண்ணாய் ராஜேந்திரன் வேலை பார்க்கும் அழகினை வேடிக்கை பார்க்கலாம்.

“என்ன தம்பி பாக்கற் . . .”

“இல்லை ! நீங்க எப்படி இப்படி அடுத்தடுத்து லாகவாமாய் தோய்ப்பதும் இழுப்பதும் சரி பண்ணுவதுமாக இருக்கிறீர்கள் ?” இதே மாதிரி நகரம் முழுவதும் கோடு போட்டு வெள்ளையடித்தால் நல்லாயிருக்கிமில்ல ” என்று கூறினேன்.

சிரித்தபடியே “யாரு துட்டு கொடுக்கறது . . .” என்று வெள்ளந்தியாகச் சிரித்தான்.

கழிவறையில் அருகே இருக்கும் சுவற்றினில் நம்மைச் சிந்தி, சந்துவில் சிந்து பாடியிருப்போம். அங்கேயும் ராஜேந்திரன் அடிக்க வேண்டும். “யப்பா ! நாளைக்கு மாப்பிள்ளை வருகிறார் ! நல்லா பாத்து அடி !” என்று பூடகாமாய்ப் பேசுவோம்.

மாப்பிள்ளைக்கும் கழிவறைக்கும் என்ன சம்பந்தமென்று என் சிறிய மூளைக்கு ரொம்ப நாள் எட்டவில்லை. 10.30 மணிக்கு படுக்கைக்குப் போன பெண், மாப்பிள்ளை படுக்கையறையருகே 10.45 ஐக்கு கழிப்பறையில் “லைட்” எரிந்த போது தான், என் மூளையில் “பல்ப் ஒளி” பரவியது.

மாப்பிள்ளை வருகிறாரென்று வெள்ளையடிக்கும் காரணம் புரிகிறது. தூயவர்களாக நம்மைக் காண்பிக்கும் முயற்சி தான்.

ஆக மொத்தம் வீட்டில் வெள்ளையடித்து, தூயமாக இருக்கிறோம் ! மாப்பிள்ளை கோபித்துக் கொள்வாரே ! இதற்கும் சுண்ணாம்பு !

வெளியே அதேச் சுண்ணாம்பினை அன்புடன் தடவுவோம் ! நாம் தான் இந்நாட்டிற்கே “மாப்பிள்ளைகளாயிறே !”

அப்படியே ஒரு தடவு தடவு தான் !

“உன்னைப் பிடித்துச் சுண்ணாம்புக் கால்வாயில் போடனுமய்யா !” என்று சொன்னாலும் சொல்வீர்கள்.


kkvshyam@yahoo.com

Series Navigation

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா