சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெறும் பா. ஆனந்த குமார்

This entry is part [part not set] of 24 in the series 20090226_Issue

பாவண்ணன்



இந்த ஆண்டுக்குரிய சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பா.ஆனந்த குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழுலகம் நன்கு அறிந்த மொழிபெயர்ப்பாளர் பா.ஆனந்தகுமார். ஏற்கனவே குஞ்šண்ணி கவிதைகளையும் மற்றும் சிறுகதைகள், கவிதைகள் என பல படைப்புகளையும் மொழிபெயர்த்து கடந்த பத்தாண்டுகளாக தொடர்ச்சியாக இயங்கி வருபவர். கல்வித்துறையைச் சார்ந்தவர் என்றாலும் சமகால இலக்கியங்களுடன் நன்கு அறிமுகமும் ஈடுபாடும் கொண்டவர்.

மலையாள மொழியில் எழுதப்பட்ட மலயாற்றூர் ராமகிருஷ்ணனின் இயந்திரம் என்னும் நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக ஆனந்தகுமாருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் மலையாளத்தில் எழுதப்பட்ட நாவல் பல நூறு பக்கங்களை உடையது. பிறகு, மலையாள வாசகர்களுக்காகவே நானூற்றிசொச்ச பக்க அளவில் கே.கே.பி.நாயர் அவர்களால் அந்த நாவல் சுருக்கப்பட்டு வெளிவந்தது. அந்த வடிவத்தில்தான் மலையாற்றூரின் நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. நல்ல வாசிப்பனுபவத்தை வழங்கக்கூடிய இந்த நாவலை மிகச்சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் ஆனந்தகுமார். சாதாரணமாக ஒரு தொழிற்சாலையில் இயங்கக்கூடிய ஓர் இயந்திரம் பலநூறு பற்சக்கரங்களைக் கொண்டது. எல்லாச் சக்கரங்களும் ஓயாமல் ஒன்றுசேர்ந்து ஓடிக்கொண்டே இருப்பதால்தான் இயந்திரமும் பழுதடையாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட அரசு என்பதுவும் கருணையற்ற ஓர் இயந்திரம். அந்த இயந்திரத்தில் பற்சக்கரங்களாக இருப்பவர்கள் அதிகாரிகளும் ஊழியர்களும். சமூகவாழ்வில் மனிதர்களுக்குரிய அனைத்து குணங்களுடன் வாழ்பவர்கள்தாம் இந்த அதிகாரிகளும் ஊழியர்களும். ஆனால் இயந்திரங்களின் பற்சக்கரங்களாக மாறிய கணத்திலிருந்து மெல்லமெல்ல தன் இயல்பான குணங்களை இழந்து உண்மையான இரும்புப் பற்சக்கரங்களாகவே மாறிவிடுகிறார்கள். புற அளவில் நிகழும் இந்த மாற்றம் அதே விகிதத்தில் அகஅளவிலும் ஏற்படுகிறது. அநேகமாக கதையில் இடம்பெற்றிருக்கிற எல்லாருமே தம் சுயத்தையே மெல்லமெல்ல இழந்து வேறுவிதமான மனிதர்களாக மாறிவிடுகிறார்கள். அதிகாரம் அவர்களை உருமாற்றிவிடுகிறது. ஆட்சியர் பணிக்கான பயற்சியை முடித்துவிட்டு வேலையில் சேர வருகிற இளம் அதிகாரிகள் முதல் மாநிலச் செயலகத்தில் செயல்படுகிற உயர்செயலர் வரைக்குமான எல்லா அதிகாரிகளும் நாவலின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வந்துபோகிறார்கள். குடும்பம் ஓர் இயந்திரமாக மாற்றமடையும்போது இனிய இல்வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படுகிறது. பல தளங்களுக்கு மாறி விரிவுபெறும் இந்த நாவல் தமிழுலகுக்கு மிகவும் முக்கியமான வரவு. அதைத் தமிழாக்கம் செய்து தந்திருக்கும் ஆனந்தகுமார் பாராட்டுக்குரியவர். அவருக்கு இவ்வாண்டுக்குரிய மொழிபெயர்ப்பாளர்க்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கும் இத்தருணத்தில் அவரை வாழ்த்துவது நம் கடமை.


Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்