‘சிந்தனா சுதந்திரம் ‘ என்ற அறக்கட்டளை தொடக்கம்

This entry is part [part not set] of 34 in the series 20051209_Issue

அறிவிப்பு


என் பாட்டன் வெட்டிய கிணறு என்பதால் அதில் உள்ளது உவர் நீராயிருந்தாலும் நான் பருக வேன்டுமோ ?

சுப்ரமண்ய பாரதியின் சிந்தனை

மனிதன் சிந்திக்கத் தெரிந்த மிருகம். சிந்திக்கத் தொடங்கிய மிருகம்.

மற்ற மிருகங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது அவனுக்கு இருக்கிற சிந்திக்கும் இயல்புதான்.

வேளண்மை, பஞ்ச பூதங்கள் மற்றும் விலங்குகளைத் தனக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளல், தத்துவம், கலை, இலக்கியம், அறிவியல், பண்பாடு, மருத்துவம், சமூக விதிமுறைகள், நீதிநெறி நடைமுறைகள் முதலான நாகரிகத்தின் தோற்றுவாய் சிந்திக்கும் இயல்பின் பயனாக விளைந்தவைதான்.

எல்லாவற்றையும்விட முக்கியமாக, மனிதரிடையே இறையுணர்வு விழித்ததே சிந்தனையால்தான்.

மிருகங்களுக்கு பசி, தாகம், இனப்பெருக்க நாட்டம், நட்புறவு, பயிற்சி உணர்வு முதலானவை தோன்றுவது நரம்பு மண்டலத்திற்கும் மூளைக்கும் இடையிலான தகவல் பரிமாற்றங்களின் விளைவேயன்றிச் சிந்தனையோட்டத்தால் அல்ல. சிந்தனை என்பதாக ஒன்று மிருகங்களுக்கு இருக்குமாயின், மனிதனைவிட உடல் வலிமையும், புலனுணர் திறனும் மிக்க அவை, சுய நலமியான மனிதன் இழைக்கும் தாங்கொணாத கொடுமைகளுக்காக என்றோ ரத்தப் புரட்சி செய்து, மனித இனத்தையே பூண்டோடு அழித்து

விட்டிருக்கும்.

ஆகையால் மனிதனாகப் பிறந்துவிட்டால் தொடர் வளர்ச்சியை முன்னிட்டும், சாதக பாதகங்களை மறுபரிசீலனை செய்து உரிய திருத்தங்களைச் செய்துகொள்ளவோ, அல்லது இருக்கும் சமூக, பொருளாதார அரசியல் நடைமுறைகளைத் தொடர்ந்து அனுசரிக்கவோ, முக்கியமாக ஆன்ம நேய உணர்வு முதிர்வடைவதற்காகவோ சிந்தித்துக் கொண்டே இருந்தாக வேண்டும். அந்தச் சிந்தனை சுதந்திரமானதாகவும் இருக்க வேண்டும். மேலும், அந்தச் சிந்தனையின் வெளிப்பாட்டைத் தனக்குள்ளேயே ஒளித்து வைத்துக் கொண்டிருக்காமல் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும் சுதந்திரம் இருக்க வேண்டும்.

சில சமுதாயங்களில் சுயமாகச் சிந்திப்பதற்கோ பிறருடன் அதனைப் பகிர்ந்து கொள்வதற்கோ மூர்க்கத்தனமாக சுதந்திரம் மறுக்கப் படுகிறது. இதனால் அத்தகைய சமுதாயங்களில் சிந்தனையின் விளைவான வளர்ச்சி எல்லாத் துறைகளிலும் மந்தமாக இருக்கிறது. ஆனால் சிந்திப்பதற்கு அவசியமில்லாதிருப்பது சவுகரியமாக இருப்பதாலும், சிந்திக்காமல் இருப்பது பழகிப்போய் விட்டதாலும் சிந்தனைச் சுதந்திர மறுப்பு ஓர் இழப்பாக உணரப் படுவதில்லை. இந்தப் பழக்கத்தின் விளைவாகச் சிந்தனைச் சுதந்திரத்தைக் கண்டிக்கும் எதிர்ப்புணர்வுகூடச் சிலருக்குத் தோன்றிவிடுவது இதில் ஒரு பெரும் சோகமேயல்லவா ?

துரதிர்ஷ்ட வசமாக, ஆரோக்கியமான சமுதாயங்களில் கூட இப்போதெல்லாம் சுதந்திரச் சிந்தனைக்கும் அதன் பகிர்தலுக்கும் பலாத்காரமாகத் தடைவிதிக்கும் போக்கு தோன்றியுள்ளது. இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியதாகும். வளரவிட்டால் பிறகு வெட்டி அப்புறப்படுத்துவது மிகவும் சிரமமாகிவிடும். பார்த்தீனியம் போல் வெளியிலிருந்து வந்து நம்மிடையே புகுந்து பரவிவரும் நச்சுக் கொள்கை இது. உடனே இதனை வேரடி மண்ணோடு பிடுங்கி எறியத் தவறினால் எங்கும் புதராய் மண்டிவிடும். அவ்வாறு களைய முற்படும் எளிய முயற்சியாகச் ‘சிந்தனா சுதந்திரம் ‘ என்ற அறக்கட்டளை தொடங்கப் பட்டுள்ளது. எழுத்து, பேச்சு, சட்டம் ஒழுங்கிற்கு இடையூறு இல்லாது அமைதியான முறையில் எது பற்றியும் தெரிவிக்கப்படும் மவுன மறுப்பு அல்லது வன்முறையைத் தூண்டாத கண்டனக் கூட்டம் ஆகியவற்றுக்குச் சிந்தனா சுதந்திரம் தன்னாலியன்ற எல்லாவிதமான ஆதரவுகளையும் அளிக்கும்.

இம்முயற்சி தொடர்வதோ, இடையிலேயே தொய்வடைந்து போய்விடுவதோ, அறிவு சம்பந்தப்பட்ட எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி ஒரு தொடர் இயக்கமாக இருந்து வரும் பொருட்டுச் சிந்திப்பதற்கும், அதனைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கும் சுதந்திரம் மிகவும் அவசியம் என்று நம்புபவர்கள் தரும் ஆதரவைப் பொருத்திருக்கிறது.

இந்த அறிவிப்பு தற்போது தகவலுக்காக மட்டுமே வெளியிடப்படுகிறது.

மலர்மன்னன்

நிர்வாக அறங்காவலன்

malarmannan97@yahoo.co.uk

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு