சிதம்பரமும் தமிழும்

This entry is part [part not set] of 31 in the series 20060728_Issue

செல்வன்



சிதம்பரம் கோயிலை வைத்து அரசியல் களைகட்டுகிறது.இவ்விஷயங்களை பொறுத்தவரைதிண்ணையில் வெளியான முகமூடியின் கட்டுரை பல விஷயங்களை அலசி காயப்போட்டுள்ளது.

தமிழ் என்பது என்ன?சிவன் என்பது யார்?

தமிழ் என்பது சிவபெருமான் உருவாக்கிய மொழி.சிவனின் டமருக்கில் ஒலித்த நாதத்தில் பிறந்த மொழியே பிள்ளைத்தமிழ்.தமிழின் அழகில் மயங்கிய சிவன் உலகம் முழுவதுக்கும் தான் கடவுள் என்பதை மறந்து “தென்னாடுடைய சிவனே போற்றி” என சொல்லும் அளவுக்கு அதன் மேல் காதல்கொண்டு மேருமலையை மறந்து தமிழ்நாட்டில் தங்கிவிட்டான்.

சைவத்தில் சிதம்பரம் மிகவும் புகழ் பெற்ற ஸ்தலமாகும்.கோயில் என சைவர்கள் சொல்லுவது சிதம்பரத்தைத்தான்.சிதம்பரம் என்றால் “சித்தம் பரம்” என சித்தம் முழுவதும் எங்கும் நிறைந்த அந்த பரத்தையே தியானிப்பது என்றுதான் பொருள்.”சதா சிவம்” என்பதும் அந்தப்பொருளில் தான் வரும்(சதா சிவம் என இருப்பது சதாசிவம்)

சிதம்பரம் நடராஜன் முத்தமிழுக்கும் தலைவன்.குறிப்பாக ஆடல் கலையின் நாயகன் நடராஜனே.நடராஜன் என்றாலே ‘நடனத்துக்கு ராஜன்’ என்றுதான் பொருள்.நடராணி என பார்வதி தேவியை சொல்லுவதில்லை என்றாலும் அவள் சிவனை விஞ்சிய ஆடல்ராணி என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் மேல் காதல் கொண்ட சிவன் தமிழ்நாட்டில் சும்மா தங்கவில்லை.மதுரையில் பிறந்த ஒரு மாணிக்கத்தை,மதுரை மக்கள் ராணி என அழைக்கும் தடாதகை பிராட்டியை திருமணம் செய்து மதுரையில் தமிழ்சங்கத்தை ஏற்படுத்தி அதன் தலைவனாக தானே இருந்து சிறப்பு சேர்த்தான்.

தடாதகை எனும் மீனாட்சியை திருமணம் செய்ததோடு அவன் தமிழ்பற்று அடங்கியதா?தமிழ் என்பது அவன் குழந்தையாச்சே?அது எப்படி பிள்ளைப்பாசம் விடும்?தமிழ்சங்கத்தை நிறுவியதோடு நில்லாமல் மதுரையம்பதியின் மன்னனாய் பொறுப்பேற்று உக்கிரபாண்டியப்பெருவழுதி எனும் பெயரோடு பாண்டிய அரசனாய் பொறுப்பேற்று மீனாட்சி தேவியுடன் அரசாண்டார் சிவன்.

இப்படி செய்துபார்த்தும் சிவனின் பிள்ளைப்பாசம் அடங்கியதாய் தெரியவில்லை.தமிழை குழந்தையாய் கொஞ்சிப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் தவிப்பாய் தகித்தது.அந்தப்பிள்ளையை பெறும் பெருமையை கூட தன் மனைவிக்கு அவன் தரவில்லை.முழுக்க முழுக்க அது தன் பிள்ளையாய் இருக்க வேண்டும் என்றெண்ணி தன் ஞானத்தை தன் நெற்றிக்கண்ணில் செலுத்தி தமிழை தன் மகவாய் பெற்றெடுத்தான்.அந்த செல்வன் தான் தமிழ்க்கடவுளாம் முருகன்.

கார்த்திகைப்பெண்கள் வளர்த்து சரவனப்பொய்கையில் பிறந்த அந்த கன்னித்தமிழின் கடவுளை கண்டதும் சிவன் ஆனந்தத்தில் ஆழ்ந்தான்.”அழகே” என்று தமிழை பெயர் சொல்லி அழைத்தான்.அழகுக்கு தூய தமிழில் ‘முருகு’ என்று பெயர்.

தமிழாய் வளர்ந்த என் முருகன் தன் அப்பனை மிஞ்சிய ஞானவானாய் திகழ்ந்தான்.சிவன் முன்பு தமிழை டமருக்கு நாதத்தில் பிரணவ மந்திரமாய் படைத்தான்.அதே தமிழை மீண்டும் முருகனாய்,பிரணவநாதனாய் படைத்தான்.தன் குழந்தை தன்னை விட ஞானியாய் திகழ்வதை கண்டு அவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.

“பிரணவ மந்திரத்தை சொல்லுடா முருகா” என அழைத்தான்.சுப்பய்யன் சும்மா சொல்லுவானா?”என்னிடம் கைகட்டி,வாய்பொத்தி உட்கார்ந்து கேள்.அப்போதுதான் சொல்லுவேன்” என பிள்ளைத்தமிழில் சொன்னான் சரவணபவன்.

தமிழ்முன் மண்டியிட்டு அமர்ந்தான் சிவன்.அப்பனுக்கு பாடம் சொல்லி சாமிநாதன் சிவகுருநாதனாய் திகழ்ந்தான்.அது தன் பிள்ளையிடம் விளையாடிய தகப்பனின் அன்பு மட்டுமல்ல.தான் பெற்றெடுத்த மகவான தமிழிடம் மயங்கிய கவிதை ரசனை.

குழலினிது,யாழீனிது என்பர் தம்மக்கள்
மழலை சொல் கேளாதவர்

எனும் ஐயன் குறளுக்கேற்ப மூவுலகுமும் அடிபணியும் சிவபெருமான் தன் மழலையின் தமிழுக்கு மயங்கிய சம்பவம் அது.

அத்தோடு விட்டான சிவன்?தன் மகனுக்கு மணப்பெண்ணையும் தமிழ்நாட்டிலேயே தேர்ந்தெடுத்தான்.என்னாட்டவர்க்கும் இறைவனான அந்த சிவன் தென்னாடுடையவனாக மாறி வேடுவர் குலப்பெண் வள்ளியை முத்தோன் கணேசன் மூலம் தனது மருமகளாக்கிக்கொண்டான்.

இயல் இசை நாடகம் எனும் முத்தமிழ் தேனையும் பருக சிவனுக்கு அவ்வளவு ஆனந்தம்.இயற்றமிழயும்,இசைத்தமிழையும் மதுரயம்பதி தமிழ் சங்கத்தில் பருகினான்.நாடகத்தமிழை எங்கே பருகுவது?சிதம்பரத்துக்கு வந்தான்.

நாட்டிய சபை ஒன்றை அமைத்து சபாநாயகனாக தானே அமர்ந்தான்.”சபாபதி” என்ற பெயர் அவனுக்கு வந்தது அப்போதுதான்.சபாபதி,சபாநாயகன் என்று எந்த பெயரில் அழைத்தாலும் அது சிவனைத்தான் குறிக்கும்.

வைணவம் மட்டும் இளைத்ததா?அரங்கத்துக்கு நாயகனாக அரங்கநாதனை கொண்டது வைணவம்.சிவனின் ஆனந்த நடனத்தில் தன்னை மறந்த அரஙகத்து நாயகனான அரங்கநாயகன் ‘நடராஜா’ என தன் மச்சினனை அழைத்து அரங்கத்து அம்மா கால் பிடிக்க,தும்புரும்,நாரதனும் கீதமிசைக்க பாம்பணையில் பாற்கடலில் பள்ளிகொண்டபடி தங்கையின்,தங்கை கணவனின் களிநடத்தை ரசிக்க தொடங்கிவிட்டான்.

இயல் இசை நாடகம் என முத்தமிழையும் இப்படி வளர்த்தவன் சிவன்.சிவன் மட்டுமல்ல அவன் குடும்பமே தமிழ் தான்.

விஷயம் இப்படி இருக்க சிதம்பரத்தில் ஏன் இந்த கலாட்டா?

தேவாரப்பாடலை சிவன் கேட்க கூடாது என்று எந்த மவுடீகன் சொன்னான்?

தன் மழலையின் சொல்லை கேட்க பிடிக்கவில்லை என்று எந்த தகப்பன் சொல்வான்?

ஜாதி,மதம் அனைத்தையும் கடந்த தமிழ்பைத்தியம் சிவன்.வேடுவர் குலப்பெண்ணை மருமகளாய் எடுத்த அந்த பித்தன்,தேனையும் தினைமாவையும் வரதட்சினையாய் பெற்ற அந்த கிறுக்கன் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும்தான் அர்ச்சகராய் இருக்க வேண்டும் என்றா சொல்வான்?

வேட்டுவனாம் கண்ணப்பன் காளத்தியில் எச்சில் துப்பி பூஜை செய்தான் காளத்திநாதனுக்கு.ஏற்காமலா போனான் என் ஆதிசிவன்?

தமிழை பக்தியோடு யார் பாடினாலும் உயிரையே தருவான் பாம்பாட்டிகளின் கடவுள்.

ஆதிசிவன் முன் ஜாதி என்ன,மொழி என்ன?

செல்லுங்கள் அவன் கோயிலுக்கு.கருவறைக்குள் நுழைந்து கட்டிப்பிடித்து ஆலிங்கன தரிசனம் செய்யுங்கள்.தமிழால் பாடுங்கள்..ஆடுங்கள்..நாத்தழும்பேற அவன் புகழை பாடிக்கரையுங்கள்.ஆடவல்லான் ஆடத் துவங்கிவிடுவான்.

சிவன் முன் ஜாதி பேசும் மடையன் எவன்?

முயலகனைபோல் தன் காலில் போட்டு மிதித்துவிடுவான் என் தகப்பன்.

சிவனும் தமிழும் தமிழனின் செல்வங்கள்.பக்தியோடு உளம் உருக யார் வேண்டினாலும் அவன் அருள் புரிவான்.அதற்கு எந்த பேதமும் கிடையாது.அன்பே சிவமான அந்த ஈசன் பக்திக்கு உயிரையே தருவான்.
பக்தி இல்லாதோர் அவன் ஆலயத்துக்கு பக்தராயும் செல்ல வேண்டாம்,பூசாரியாயும் செல்ல வேண்டாம்.

சிதம்பரம் கோயிலில் ஆகம விதிகள் என்ன ஏது என எனக்கு தெரியாது.அங்கு பூஜை செய்ய தகுதி உள்ளவர் யார் என எனக்கு தெரியாது.அந்த கோயிலுக்கு நான் ஒருமுறை கூட போனதில்லை.தீட்சிதர்,சித்சபை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

ஒரு பக்தன் என்ற முறையில் என் நம்பிக்கையை சொல்கிறேன்….

1.ஜாதிகள் இல்லை,இல்லை,இல்லவே இல்லை.மனிதன் என்ற ஒரு ஜாதியை தவிர வேறு எந்த ஜாதியிலும் எனக்கு நம்பிக்கை இல்லை.

2.சிவனுக்கு பூஜை செய்யும் தகுதி மனிதனாய் பிறந்த,பக்தியும்,பூஜை நெறிமுறையும்,வேதமும்,தமிழ்மறையும் அறிந்த அனைவருக்கும் உண்டு.ஜாதிபேதம் இதில் கிடையாது.

3.தில்லை வாழ் அந்தணர் தம் அடியாருக்கும் அடியேன் எனப்பாடினார் சம்பந்தர்.அவர் கூறியதுபோல் தில்லை வாழ் அந்தணர் தம் பாதமலரடியை என்னாளும் தொழ நான் தயார்.அவர் அந்தணர் என்பதால் அல்ல.அவர் நெற்றியில் அணிந்த நீரால்.நான் சிவபக்தன் என சொல்லும் எந்த ஜாதியை சேர்ந்த எந்த அடியாரின் பாதத்தையும் மானசீகமாய் இங்கிருந்தே வணங்குகிறேன்.திறுநீற்றையும்,திருமண்ணையும் அணிந்த யாரும் என் வணக்கத்துக்குரியவர்களே.

4.கருவறையில் அனைவரும் சென்று வடநாட்டு கோயில்களை போல் தொழுது,கடவுளை ஆலிங்க தரிசனம் செய்ய வேண்டும் என்பது என் விருப்பம்.இது என் விருப்பமே அன்றி வேறேதுமல்ல.அதற்காக அதை அனுமதிக்காத கோயில் கர்ப்பகிரஹங்களிலும் புகுந்து கடவுளை கட்டி அணைக்க நான் விரும்பவில்லை.என் நெஞ்சில் வாழும் இறையை என் மனதிலிருந்தே தொழ என்னால் முடியும்.அதுவே சிறந்த வழியும் கூட.ஒரு பக்தன் என்ற முறையில் பக்தர் விரும்பும் அனைத்து முறையிலும் வழிபட உரிமை வேண்டும் என்ற என் விருப்பத்தை தான் பதிவில் வெளிப்படுத்தினேன்.இது என் விருப்பம்/பேராசை அவ்வளவே.இதை அடுத்தவர் மீது திணிக்க நான் விரும்பவில்லை.

தீட்சிதர் என்பதால் மட்டுமே ஒருவர் நல்லவரோ கெட்டவரோ ஆவதில்லை.பிறந்த ஜாதியால்,செய்யும் தொழிலால் எந்த உயர்வோ தாழ்வோ கிடையாது.

அர்ச்சகர் ஆக ஜாதி தடையாக இருத்தல் கூடாது.நீறணிந்த அனைவரையும் சிவனாய் காண்பதே சைவ மரபு.கள்வன் திருநீறணிந்து வந்தபோதிலும் அவனை சிவனாய் எண்ணி வணங்கியோர் நாயன்மார்கள்.அந்த பக்திக்கு முன் வேறேதும் பெரிதல்ல.அர்ச்சகர் ஆக தகுதியாக நான் இருக்க விரும்புவது பின்வருவன மட்டுமே

1.உண்மையான பக்தி
2.வேதம்,தமிழ்மறை ஞானம்
3.நற்குணங்கள்

எந்த திருக்கோயில் இறைவனையும் தமிழிலும்,சமஸ்கிருதத்திலும் வழிபடலாம்.இரண்டில் எந்த மொழியும் வேண்டாம் என்பது தவறு.

http://groups.google.com/group/muththamiz
www.holyox.blogspot.com
www.holyape.blogspot.com

Series Navigation

செல்வன்

செல்வன்