தேவமைந்தன்
“வாயிலிருந்து வரும் சொற்கள் மோசமாகத்தான் இருக்கும்” என்று மொழி அடையாளப் படுத்தப்பெறும் முனுசாமிக்கிழவன் தன் ஊருக்கே கதைசொல்லி ஆனவன். “தேரு புடிக்கும்டா, தேருல சாமி பாக்கப் புடிக்காது, அது பெரிய கதை” என்று தொடங்கிச் சொல்லப்படும் சிறுகதைதான், இத்தொகுதிக்கான தலப்பைத் தந்தது. பதினாறு கதைகள் இதில் உள்ளன.
‘தேரு பிறந்த கதை,’ கோயில் கட்டிய சாதாரண மக்களைக் காண அவர்களின் வீடுதேடிவரும் கடவுளின் கதை. அவராக வரவில்லை. எட்டாத உயரத்திலேயே எளிய மக்களுக்கு அவர் என்றும் இருக்கும்படியாக, சமூகத்தின் ஆதிக்கவாதிகள் திட்டமிட்டுத் தேர்த்திருவிழாக்காட்டும் நுண்ணரசியல் அது.
தன் பிள்ளைகளிடம் விழிப்புடன் இருக்க முடியாமல் ஏமாந்துவிட்டு, கடன்கொடுத்தவர்களை ஏமாற்றப் பார்க்கிறவர்களை மிரட்டுவதற்காக அவர்களிடம் காசுபெற்று அடுத்த நாளைய பொழுது ஓடுமாறு பார்த்துக் கொள்ளும் சுல்தான் பாய். “தமிழ்ப் படிக்கிறவன் யாரும் உருப்பட்டான்?” என்பவரின் மகனாகப் பிறந்து சவுளிக் கடையில் உட்கார்ந்திருக்க வேண்டி வந்தபொழுதும் – ஊரில் தமிழ் வளர்க்கவும் திருக்குறள் பரப்பவும் சக இளைஞர்களின் ‘ஊர் சுற்றும் வழக்கம்’ மாற்றவுமாக ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடிப்பதில் வெற்றிபெற்றுவந்த கோவிந்தன் திடீரென “நெருநல் உளனொருவன் இன்றில்லை” என்ற திருக்குறளுக்குத் தானே இலக்காகி திடுமென மறைந்த அவலம். ஒரு சாதாரண மனிதக் கதைப்பாத்திரம் + நெஞ்சை நெருடும் சக மானுட இழப்பு. இரண்டும் குழைய உருவான கதையே ‘கால மாற்றம்.’
இந்த உலகில் சாதாரணமான மனிதனாக உலவுவது கூட “ஐயே! மெத்தக் கடினம்” என்பதை உணர்த்தும் தொன்மச் சார்புடைய கதை – ‘சில சிதைவுகள்.’
சாதி மாறித் திருமணம் பண்ணிக் கொண்ட ஒரே காரணத்துக்காக, “என் மவன் கூட எவன்டா போட்டிக்கு வர்றது. நீங்கள்லாம் கா காணி அண்டை வெட்டறத்துக்குள்ள எம்மவன் முக்காகாணி வெட்டுவான்டா!” என்று மார்தட்டிய தந்தையாலேயே விரட்டப்பட்டும்; தாய்மாமனால் உயிருக்குக் குறிவைக்கப்பட்டும் வாட்டமுற்று வேற்றூருக்குச் சென்று குடியேறுகிறான் முருகன். கரும்பு வெட்டுவதில் மிகுந்த தேர்ச்சிபெற்றவனாக இருந்தும் பயனில்லை. அவனைச் சாதிமாறிக் கல்யாணம் பண்ணிக்கொண்ட பவளக்கொடிக்கும் தன் சொந்த ஊரில் அவமானமே. கிராமங்களில் சாதிக்கட்டுமானத்தின் பிடி, ஆகவும் கோரமானது. வந்தேறிய ஊரிலும் குடிசை கட்டிக் கொண்ட இடம் – பாதிரியார் பள்ளிக்கூட இடமா? புவனகிரி கோயில் இடமா என்று பத்து வருஷங்களாக நீடித்த தாவாகூட – முருகனும் பவளமும் வந்து ஊரில் குடியேறிக்கொண்ட ‘நேரம்’ – உடனே தீர்ந்து போகிறது. பள்ளிக்கூடம் பக்கம் தீர்ப்பாகிறது. ஆட்சியர் ஆணை, முருகனை இடமற்றவன் ஆக்குகிறது. மைதானத்துக்கும் சாலைக்கும் இடையிலிருந்த எட்டடியில் ஒண்டுகிறான், தன் மூன்று மாதக் கருவைச் சுமக்கும் மனைவியுடன். வந்த ஊரில் ஒரு பத்தடி இடம் பெறுவதற்காக அந்த ஊரின் சிறிய-பெரிய நாட்டாண்மைகளைக் கெஞ்சுகிறான். இருவரும் சம வயது சம வலிமை சம தலைக்கட்டு உடையவர்கள் என்பது மட்டுமல்ல; சுயநலத்திலும் சமமாகச் சாமர்த்தியம் காட்டுபவர்கள்தாம். வெளியூர்க்காரனுக்கா இடம் கொடுப்பார்கள்? பத்தடி என்றாலும்கூடக் கொடுத்து விடுவார்களா? நிச்சயமற்ற நிலைமையை மட்டும் கொடுத்து அனுப்புகிறார்கள். ‘இடம்’ – இத்தொகுதியின் சிறந்த சிறுகதை.
இது பொருளாதார உலகம். சந்தை உறவுகளே சமூகம் எங்கும், பணத்துக்குப் பின்னே நெஞ்சிளைக்க ஓடுகிற நிலை பலருக்கும் வாய்த்துவிட்டது. பணம் பண்ணாதவன் பாடு, பரிதாபம். திருமணம் என்ற சமூக நிறுவனத்தின் முறையியலில் பணமே பிரதானம். ‘குறை’ என்ற கதை இதைத்தான் படம் பிடிக்கிறது. ‘கடன்’ என்ற சிறுகதையும் – குடும்ப உறவுகளுக்குள்ளும் பணம் விளையாடும் குரூரத்தைத்தான் சித்திரிக்கிறது.
‘சில சிதைவுகள்’ போன்றே ‘நயனபலி’ என்ற சிறுகதையும் தொன்மச்சாயல் படிந்தது. வங்க தேசத்து ‘நவீன பாரதம்’ போன்று, இந்த நிகழ் உலகத்தின் நிலைப்பாட்டைப் பகைப்புலம் ஆக்கி, பழங்கால உலகின் கதை நிகழ்வை ஆய்வு முடிபுக்கு உட்படுத்தும் கதை. திருத்தொண்டர் மாக்கதையின் இலை மலிந்த சருக்கம் தரும் கண்ணப்பன் கதை இங்கு மறுவாசிப்புக்கு உள்ளாகிறது. முதியவர் வினாவுக்கு விடையாக, “இந்த உலகிற்கே வந்தாகி விட்டது; [இந்த] மலைக்கு வந்ததா தப்பு?” என்று அவன் “பேசிக் கொள்வது” குறிப்பிடத்தக்கவாறு ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்தது.
மனிதரின் ஆழ்மனத்தில், காலங்காலமாய்த் தொன்மக் கதைகளின் கூறுபாடுகள் சில தேவையில்லாமல் தம் தடம் பதித்துள்ளன. அவற்றுள் கருடன் ஒரு குறியீடு. ஆந்தை[கோட்டான்] முதலானவை மற்ற நம்பிக்கைக் குறியீடுகள். ‘கருடன்’ கதையில், யதார்த்தப் பிரச்சினைக்கு வானத்தில் ‘கருடப்பட்சி தேடிப்’ பரிகாரம் அடைய முற்படும் முருகேசனுக்கு – அவருடைய எல்லா ‘லாஜிக்’குகளயும் ஏமாற்றிவிட்டுக் கருடப்பறவை எதுவும் தென்படாமலேயே போய்விடுவதும் நிகழ்வில் இழப்பு நேர்ந்த செய்தி அவரை நாடி வருவதும் அதற்குப் பின்னே வானப் புலத்தில் கருடன் ஒன்று வட்டமிட்டுக்கொண்டே தொடர்வதும் ஆழ்மன அவசத்தோடு இயற்கையான செயல் இணவதை நேர்த்தியாகப் புனையும் கதாசிரியரின் உத்தியாகும்.
இவ்வாறான, வளவ. துரையனின் ‘தேரு பிறந்த கதை’ என்ற சிறுகதைத் தொகுதி கிடைக்கும் இடம் :-
மருதா,
226 (188) பாரதி சாலை, இராயப்பேட்டை,
சென்னை – 600 014.
பக்கம் : 112
விலை : ரூ.60/-
****
karuppannan.pasupathy@gmail.com
- காகம்
- டாக்டர் ருத்ரனின் உயிர்… ஓர் உரத்த சிந்தனை
- அக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் – தாமிரபரணியும்
- புறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை
- பகலில் வரலாற்றை உருவாக்குகிறேன்
- கீதாஞ்சலி (85) – தீவிரப் படைகளின் மீட்சி ..!
- புதுமைப் பித்தனை பேசுவதற்கான அரங்கம்
- சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -8
- வகாபிய புரோகிதர்களுக்கு
- சாந்தன் என்கிற எழுத்துக் கலைஞன்
- ஏணிப்படிகளில் ஒரு பயணம் – பாரதிபாலனின் ‘உடைந்த நிழல்’ -நாவல் அறிமுகம்
- இணைய இதழா? அச்சுப் பதிப்பா? எது சிறந்தது?
- சாதாரணமான மனிதர்கள் மேல் ஆதிக்கசக்திகளின் நுண்ணரசியல் – தேரு பிறந்த கதை – வளவ. துரையனின் சிறுகதைத் தொகுதி அறிமுகம்
- கடித இலக்கியம் – 17
- ஓவியத்தின் குறுக்கே கோடுகள்
- திரு நேசகுமாருக்கு பதில்
- தேசிய மக்கள் கலை பாதுகாப்பு மையம் – தமிழ் விமர்சகர் கலை ஆய்வாளர் இந்திரன் பங்கேற்பு
- லண்டனில் நடக்கவிருக்கும் 33வது இலக்கிய சந்திப்பு
- கலை இலக்கிய ஒன்றுகூடல்
- கடிதம்
- கடிதம்
- தவிப்பும் தத்தளிப்பும் (கனவில் வந்த சிறுமி – பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு அறிமுகம் )
- வாசிப்பவருக்கு நெருக்கமான கவிதைகள்
- மாரியம்மன் கதை
- ‘வினாடிக் கணக்கு’
- பெரியபுராணம் – 99 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- என் தேசத்தில் நான் — சிறிய இடைவேளைக்குப் பின்னர்
- விழித்தெழும் பாரதத்தை நோக்கி..
- பிரபல அமெரிக்க நடிகையின் திருட்டு
- வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள்
- நான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை – பகுதி 1
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 11. சடங்குகள்
- வண்ணச்சீரடி
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-13)
- மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 33
- திருமுகப்பில்…..