சாணார் அல்லர் சான்றோர்

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

அ. கணேசன்


புதிய பார்வை அக்டோபர் 1-15, 2006 இதழில் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களின் “கரையேறுமா மீனவர் சமூகம்?” என்ற கட்டுரை வெளிவந்துள்ளது. மீனவர் சமூகத்தின் முன்னேற்றம் குறித்து அவருக்குள்ள ஆழ்ந்த அக்கறையும், அச்சமுகத்தின் பிரச்சினைகளுக்குரிய தீர்வு காண்பதில் அவர் காட்டும் ஈடுபாடும் செயற்கைத் தன்மையின்றி வெளிப்பட்டுள்ளன. அது குறித்து இக்கட்டுரை ஆசிரியரைப் பாராட்டுகிறோம்.

ஆனால், நாடார் சமூகத்தின் முன்னேற்றத்துடன் ஒப்பிட்டு அவர் எழுதியுள்ள எழுத்தில் வரலாற்றுப் பிழைகள் மலிந்துள்ளன. குறிப்பாக, “வளர்ச்சியடைந்த உலக சமூகங்களை உற்று நோக்கினால் நமக்குப் புலப்படும் பாடம் இதுதான். தாமே எழுப்பிக்கொண்ட சுவர்களைத் தகர்த்துக்கொண்டு வருவாய் ஈட்டும் புதிய களங்களில் கால் பதித்தால் ஒழிய மீனவர்களுக்கு நிலைத்த வளர்ச்சி என்பது சாத்தியமல்ல” – என்ற தீர்வினை கான்ஸ்தந்தின் மீனவர் சமூகத்தின் முன் வைக்கிறார். இதை இன்னும் சற்று விளக்கமாக “ஒரு மீனவன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று சொல்லிச் சொல்லியே வளர்ச்சிக்குப் புறமுதுகிட்டு நிற்கும் சமுதாயமாக இன்று குமரி மாவட்ட மீனவர்கள் நிற்கிறார்கள்” என்றும், “ஒரு பனையேறி என்பதில் பெருமை கொள்கிறேன் என்று நாடார் சமூகம் இது போன்ற ஒரு நிலையை எடுத்திருந்தால் அந்தச் சமூகம் அடையாளம் இல்லாமல் போயிருக்கும் என்று ஜான்சன் ராஜ் தெரிவிக்கிறார்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

குமரி மாவட்டக் கடல் மீனவர் சமூகம் கடலில் மீன் பிடித்து விற்று வாழ்வதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்ட ஒரு சமூகமாகும். ஒட்டுமொத்த நாடார் சமூகம் என்பதே பனையேறி பதநீர்-கள் இறக்கி அதனை நேரடியாகவோ, கருப்பட்டியாகக் காய்ச்சியோ விற்றுப் பிழைத்த ஒரு சமூகம் என்ற கண்ணோட்டமே தவறான ஒரு புரிதலில் தோன்றியதாகும்.

முதலில் நாடார் என்ற சொற்பிரயோகமே சரியானதன்று. தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் மீனவர்களான பரதவர்களைப் பெர்னான்டஸ் (பறனாந்துமார்) என்று குறிப்பிடுவர். இது தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் கடலோர வட்டார வழக்காகும். கி.பி. 16ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பிரான்சிஸ் சேவியர் தொடங்கி போர்ச்சுக்கீசியப் பாதிரிமார்களால் மதம் மாற்றப்பட்டுப் போர்ச்சுக்கீசியக் குடும்பப் பெயர்களை தமது குடும்பப் பெயராக ஏற்று, அதனைப் பெருமைக்குரியதாகக் கருதி தங்களது சாதிப்பெயராகவே இன்று வரை அம்மக்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், உண்மையில் பெர்னான்டஸ் அல்லது பறனாந்துமார் என்பது பரதவர் சமூகத்தின் சில முதன்மையான கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குடும்பங்கள் ஏற்றுக்கொண்ட குடும்பப் பெயரே தவிர சாதிப்பெயர் ஆகாது. பரதவர் அல்லது பரவர் என்பதுதான் அவர்களது சாதிப்பெயர். குமரி மாவட்டத்தைப் பொருத்தவரை பெரும்பான்மைப் பரதவரும், சிறுபான்மை முக்குவரும் இச்சமூகத்தில் அடங்குவர். சவளக்காரர் எனப்படும் மிகச் சிறுபான்மை இனத்து மக்களும் இவர்களோடு கலந்துள்ளனர். சான்றாகக் கோட்டாறு சவேரியார் கோயிலைச் சுற்றி சவளக்காரர் குடியிருப்பு இன்றும் உள்ளது. அவர்கள் அடிப்படையில் படையாச்சி இனத்தவர் ஆவர். குளச்சல் அருகில் இந்து சவளக்காரர்கள் அரையர் என்ற பட்டத்துடன் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் பரதவர், முக்குவர், சவளக்காரர் என்ற சாதிப் பெயர்களால் அவர்களைக் குறிப்பதே சரியானதாகும் என்பதை கான்ஸ்தந்தின் ஏற்றுக்கொள்வார் எனக் கருதுகிறோம். அது போன்றுதான், நாடார் சமுகம் என்று குறிப்பிடப்படுகின்ற சாதியின் பெயர் சான்றோர் சமூகம் என்பதாகும். சான்றோர் என்ற சொல் சான்றார் என வழங்கத்தொடங்கி பேச்சு வழக்கில் சானார், சாணார் என்று வழங்குகிறதே தவிர நாடார் சமூகம் என்ற சொல் வழக்கு சரியானதன்று. அதாவது நாடார், நாடாக்கமார் என்ற பட்டங்களும் சாதிப் பெயர் ஆகமாட்டா.

வரலாற்றுக் குறிப்பு என்ற பெயரில் பெட்டிச் செய்தி ஒன்றும் இக்கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ளது. அச்செய்தியில், சாணார் என்ற சாதிப் பெயர் தொன்று தொட்டு இருந்து வந்தது என்றும் சாணார் என்ற பெயரால் தம்மைக் குறிப்பிடக்கூடாது என்று அந்தச் சமூகத்தினர் ஆங்கிலேய அரசிடம் மனுக் கொடுத்தனர் என்றும் அதன் அடிப்படையிலேயே சாணார் என்ற சொல்லுக்குப் பதிலாக நாடார் என்ற சொல் பிரயோகிக்கப்படுகிறது என்றும் முத்துக்குளித்துறை மீனவர் வரலாறு என்ற நூலை மேற்கோள் காட்டிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செய்தியும் பிழையானதே.

சான்றோர், சான்றார் என்ற சொற்கள்தாம் சாணார், சானார் எனத் திரிந்துள்ளன என்பதனைப் பல ஆராய்ச்சியாளர்கள் எழுத்தில் பதிவு செய்துள்ளனர். அவ்வாறிருக்க, சாணார் என்ற சாதிப்பெயர் தொன்று தொட்டு இருந்து வந்தது என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் குறிப்பிட்டுள்ளார் என்பதைத் தெரிவித்தாக வேண்டிய கட்டாயம் கான்ஸ்தந்தினுக்கு இருக்கிறது. சாணார் என்ற சாதிப் பெயர் வழக்கு இழிவானதாகக் கருதப்படுகின்றது என்பது உண்மையே. ஏன் அவ்வாறு இழிவானதாகக் கருதப்படுகிறது என்பது பல்வேறு தளங்களில் ஆராயப்பட வேண்டியதே தவிர, காலம் காலமாக இந்தச் சமூகம் இழிவானதாகவே கருதப்பட்டது என்ற கற்பனைக்கு அதனை ஆதாரமாகக் காட்டுவது தவறானதாகும்.

கொச்சை வழக்குகள் என்று நாம் கருதக்கூடிய சொல் வழக்குகள் பலவற்றை மொழியியல் ஆய்வின் அடிப்படையில் பார்த்தால், கொச்சையானவையாக இருக்காது. நீண்ட காலத்திற்கு தொனிப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு, காலப்போக்கில் இழிவுச் சாயல் பெற்றுவிட்ட சொற்கள் பல. அத்தகைய சொற்கள் போன்றதே சாணார் என்ற இவ்வழக்கும். அவ்வாறு சாணார் என்ற வழக்கு இழிவாகப் பயன்படுத்தப்பட்ட காலகட்டத்தில், நாட்டை ஆள்பவர் நாடாள்வார் என்பதன் மரூஉ மொழியான நாடான் என்ற சொல்லையே தமக்குரிய மரியாதையான சாதிப் பட்டமாகவும், சாதிப் பெயராகவும் பயன்படுத்தத் தொடங்கினர்.

நாடாள்வான் என்ற சொல் 12ஆம் நூற்றாண்டிலேயே சில கல்வெட்டுகளில் ‘நாடாவான்’ என வழங்கியுள்ளது. திருத்துறைப்பூண்டி வட்டம் வடகாடு கோயிலூர் கல்வெட்டு (Annual Report on Epigraphy 191/1908, தமிழ்நாடு அரசு 1978ஆம் ஆண்டில் பதிப்பித்த திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் தொடர் எண் 198, வரி 253), கி.பி. 1644ஆம் ஆண்டைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் மடத்து அச்சம்பாடு கல்வெட்டில் நாடவான் என்ற இச்சாதிப் பட்டம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (வரலாறு இதழ் 9-10, பக்கம் 5-10, 1999-2000, இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையம், திருச்சி – 17). சந்திராதிச்ச நாடான், திருப்பாப்பு நாடான், அருதக்குட்டி ஆதிச்ச நாடான், திருக்கைவேல் ஆதிச்ச நாடான், குளந்தை வீரமார்த்தாண்ட நாடான், மற்றுண்டான நாடாக்கள் என்று இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் இக்கல்வெட்டின் இறுதியில் சந்திராதிச்ச நாடவான், திருப்பாப்பு நாடவான், அருதக்குட்டி ஆதிச்ச நாடவான், வீரமார்த்தாண்ட நாடவான், திருக்கைவேல் ஆதிச்ச நாடவான் என்றே கையப்பமிட்டுள்ளனர். இதே போன்று 1639ஆம் ஆண்டைச் சேர்ந்த திருச்செந்தூருக்கு அருகிலுள்ள குதிரைமொழித்தேரி எள்ளுவிளைக் கல்வெட்டிலும் நாட்டார் நாடாக்கள் என்ற பெயரிலும், நாடான் என்ற பட்டத்துடனும் சான்றோர் சமூகத்தவர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பிரிக்கப்பட்டு தமிழ்நாட்டுடன் சேருவதற்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான் பேஷ்கராக இருந்த நாகமையா அவர்கள் தமது Trivancore State Manual என்ற நூலில் சான்றோர் என்ற இச்சாதிப்பெயரைக் குறித்தும், நாடாள்வான் என்ற சாதிப்பட்டம் குறித்தும் தெளிவாகவே எழுதியுள்ளார். பூர்விக சேர அரச மரபினர் சான்றோர் குலத்தவர்களே என்றும் பல ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். ‘அன்னத்த கேரளம்’ என்ற நூலில் குஞ்ஞன் பிள்ளை அவர்களும் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆய்வு முடிவுகளின் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் நாட்டை ஆண்டவர்கள் சான்றோர் குலத்தவர் என்பதும் நாட்டாட்சிக்கு அடிப்படையான போர்ப் பயிற்சியில் தேர்ச்சி பெற்று போர்க்கலை ஆசான்களாகத் திகழ்ந்தவர்கள் என்பதும் ஆகும்.

இவையெல்லாம் ஏதோ எங்களுடைய வெற்று ஊகங்கள் அல்ல. காலஞ்சென்ற மயிலை சீனி. வெங்கடசாமி, பி. லூர்து சாமி ஐ.ஏ.எஸ்., திருமுருக. கிருபானந்த வாரியார் போன்ற சான்றோர் சாதியினர் அல்லாத பிறசாதித் தமிழ் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளவையே. இன்றும் குமரி மாவட்டத்தில் வர்மக்கலை, தெற்கன் களரி, சைலாத் என்ற அடிமுறை, சிலம்பம் எனப்படும் சிரம வித்தை போன்றவற்றில் ஆசான்களாகத் திகழ்பவர்கள் சான்றோர் சமூகத்தவரே. The killing kick and heeling touch என்ற தலைப்பில் E.G. ராஜேந்திரன் என்பவர் 13-02-1988 இந்தியன் எக்ஸ்பிரஸ் Weekend Supplementஇல் எழுதியுள்ள கட்டுரையில் குமரி மாவட்ட சான்றோர் சமூகத்தவர்கள் வர்மாணி ஆசான்களாகவும், மருத்துவர்களாகவும் திகழ்கின்ற செய்தியை விவரித்துவிட்டு அது குறித்த வரலாற்றுப் பாரம்பரியத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே, சான்றோர் சமூகத்தவர் பனையேறிகளாக இருந்தவர்கள், அதிலிருந்து மீண்டு பல துறைகளில் சாதனை படைத்துள்ளார்கள் என்ற பார்வையே அரைகுறையான, உள்நோக்கத்துடன் கூடிய என்று சொல்வதற்கும் இடமளிக்கக்கூடிய பார்வையாகும்.

குமரி மாவட்டத்தில் திருவிதாங்கோட்டிலும், நெல்லை மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சியிலும் கொல்லம் ஆண்டு 628இல் (கி.பி. 1453) பொறித்து வைக்கப்பட்ட வெள்ளை நாடார் பற்றிய கல்வெட்டுகள் சான்றோர் சமூகத்தவருடைய ஆட்சி மற்றும் பிற்கால வீழ்ச்சி ஆகியவற்றுக்கான தடயங்களாக நின்று நிலவுகின்றன. இக்கல்வெட்டைப் பற்றியும், கி.பி. 1662ஆம் ஆண்டைச் சேர்ந்த நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் வலங்கை உய்யக்கொண்டார் பிரிவுச் சான்றோர் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பற்றுச் செவ்வந்திநாடான் கல்வெட்டு பற்றியும் 1917ஆம் ஆண்டு Annual Report on Epigraphy குறிப்பிடுகிறது. அக்கல்வெட்டு நூலின் முன்னுரையில் இந்திய அரசின் கல்வெட்டுப் பிரிவு அலுவலர்கள் நெல்லை மாவட்டத்திலுள்ள வேளாளர்களுக்கும், நாடார் சமூகத்தவருக்கும் இடையிலான பகைமையின் வேர்களை இக்கல்வெட்டுகளில் காணமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை வறீதையா கான்ஸ்தந்தின் போன்றவர்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

சான்றாண்மை என்ற பண்பு அனைத்து வகை நற்குணங்களையும் ஆளும் பண்பு என்று திருக்குறள் உரையாசிரியர்களால் பொருள்படுத்தப்பட்டுள்ளது. வீரயுகப் பண்புகள் மிகுந்திருந்த சங்க காலத்தில் நாட்டை ஆண்ட தலைமக்கள் அறப்போர் முறையில் பயிற்சி பெற்றுத் தேர்ந்த உயர் வர்க்கப் போர்வீரர்களாக இருந்தனர். அத்தகைய பயிற்சி பெற்ற அறப்போர் முறைக்குப் பெரியபுராணம் குறிப்பிடும் ஏனாதி நாதரை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஏனாதி நாதர் சான்றார் குலத்தவர் ஆவார். பனையேறியோ, கள் இறக்கியோ பிழைத்தவர் அல்லர். சான்றோர் சமூகத்தவரின் குலத் தொழில் என்பது அறப்போர் மரபு, போர்ப் பயிற்சி, நாட்டை ஆள்தல், வருவாய்க் கணக்கு பராமரித்தல், நீதி நிர்வாகம் போன்றவை ஆகும். கோகர்ணம் முதல் கன்னியாகுமரி வரை பெருமாள் ராஜாக்கள் காலம் (கி.பி. 12ஆம் நூற்றாண்டு) வரை வழக்கிலிருந்த மூழிக்களக்கச்சம் என்ற நிர்வாக நடைமுறைச் சட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்தியவர்கள் சான்றார் குலத்தவரே ஆவர். கன்னியாகுமரி மாவட்டக் கல்வெட்டுகள் பலவற்றிலேயே இதற்கான ஆதாரம் உள்ளது.

இவ்வாறெல்லாம் நாங்கள் குறிப்பிடுவதால் பனையேறும் தொழிலை நாங்கள் இழிவாகக் கருதுவதாகவோ, அதிலிருந்து விடுபட நினைப்பதாகவோ, அந்த நினைப்பின் அடிப்படையில் இல்லாத கற்பனைகளைப் புனைந்து கூறுவதாகவோ கருதுவது தவறு. அகில இந்திய கல்வெட்டு ஆய்வுக் கழகத்தில் (All India Epigraphical Society) இப்பொருள் குறித்து பல கட்டுரைகள் வாசிக்கப்பட்டுள்ளன. Journal of the Epigraphical Society of India (Mysore)-இல் இக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் “வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்” என்ற நூலை 2004ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளது.

“சாணார் இனத்துப் பெண்கள் தங்கள் மார்பை ஆடையால் மூட அனுமதிக்கப்படவில்லை. இதற்கு எதிரான எழுச்சியே 1959 தோள்சீலைப் போராட்டம்” என்று வறீதையா குறிப்பிடுகிறார். இது தோள்சீலைப் போராட்டம் என்றால் என்ன என்பதையே புரிந்து கொள்ளாத சிறுபிள்ளைத்தனமான வாதமாகும். Samuel Mateer என்ற புராடஸ்டண்ட் பாதிரியார் The Land of Charity – A descriptive account of Travancore and its people with especial reference to Missionary Labour என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் 1870ஆம் ஆண்டில் லண்டனிலுள்ள John Snow & Companyயால் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலில் தோள்சீலைக் கலவரம் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சாமுவேல் மடீர் சான்றோர் சமூகத்தவரைப் பற்றிய உயர்வான அபிப்பிராயம் உடையவர் அல்லர். அவர்களுடைய இழிவான நிலையைச் சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தால்தான் மதமாற்ற வியாபாரம் தடையின்றி தொடர்ந்து நடைபெறும் என்ற நம்பிக்கை உடையவர். இருப்பினும், தமது சமகாலத்து அல்லது சமீப காலத்து நடைமுறை விவரங்களைக் குறிப்பிடும்போது பெருமளவு திரித்தலின்றிக் குறிப்பிடுகிறார். திரித்தால் அவருடைய நம்பகத்தன்மை போய்விடும் என்பதே காரணமாக இருந்திருக்க வேண்டும்.

பெரும்பான்மையாக உள்ள மற்ற சமூகத்துப் பெண்டிர் போலவே, குறிப்பாக புதிதாக அதிகாரத்துக்கு (14-15ஆம் நூற்றாண்டில்) வந்த வேளாளர், நாயர் இல்லத்துப் பெண்டிர் போலவே சாணார் சமூகத்தின் பனையேறி, கள்ளச்சாணார் போன்ற பிரிவினைச் சேர்ந்த பெண்டிரும் மார்பை மறைக்கும் வண்ணம் முண்டு என்ற ஒற்றை ஆடையைத்தான் 19ஆம் நூற்றாண்டில் உடுத்தி வந்தனர். இடுப்பில் முண்டு, மார்பில் ரவிக்கை அதற்கு மேல் முந்தானையாக தோள்மீது குறுக்கே இடப்படும் சீலை என்று அணியத் தொடங்கும்போதுதான் எதிர்ப்புத் தோன்றுகிறது. சென்ற நூற்றாண்டின் தொடக்கக் கட்டம் வரையிலும் தஞ்சை மாவட்டத்தில் எஜமானன் என்றும், ஆண்டை என்றும் அழைக்கப்பட்ட பண்ணையார்கள் முன்னிலையில் குடியானவர்களும், ஊழியர்களும் தோளில் துண்டு போட்டுக்கொண்டு அல்லது துண்டை தலைப்பாகையாக அணிந்து கொண்டு நிற்பது எத்தகைய ஓர் அவமரியாதையாகக் கருதப்பட்டதோ அதே போன்ற ஓர் அவமரியாதையாகத்தான் சாணார் சமூகத்துப் பெண்டிரின் இச்செயலை புதிய எஜமானர்களாகிய வேளாளர்களும் நாயர்களும் கருதினர்.

இன்னும் சொல்லப்போனால் தம் குலத்துப் பெண்டிரே பரம்பரையாகப் பின்பற்றாத ஒரு வழக்கத்தை இவர்கள் பின்பற்றுவது தமக்கு அவமானம் என்று கருதியதால்தான் நாயர் அல்லது நாயர் பட்டம் தரித்த அகம்படியரும், வேளாளர்களும் பொது இடத்துக்கு வர நேர்ந்த சாணார் சமூகத்துப் பெண்களை இழிவுபடுத்தத் தொடங்குகின்றனர். இதனுடைய பொருள் என்னவென்றால், சாணார் சமூகத்தவர் தாங்கள் இம்மண்ணின் பூர்விக எஜமானர்கள் என்பதை உணர்த்துவதற்காகத் தம் சாதிப் பெண்டிரை இவ்வாறு அணியச் செய்தனர் என்பதாகும். இதனை ஏற்காத – தாங்களே எஜமானர்கள், புதிய எஜமானர்களாகிய தங்கள் குடும்பத்துப் பெண்டிர்க்கே இல்லாத இத்தகைய உரிமையை பூர்விக எஜமானர்கள் என்று உரிமை கோரும் சாணார் சமூகத்தவர்கள் தங்கள் குடும்பத்துப் பெண்டிர்க்கு வழங்குவதா – என்ற ஆத்திரமே இந்தக் கலவரத்துக்குக் காரணமாகும்.

ஐரோப்பியர் நிர்வாகத் தலையீடும் புராடஸ்டண்ட் கிறிஸ்தவப் பாதிரிமார்களின் செயல் திட்டமும் சாணார் சமூகத்தவரின் உரிமை மீட்புக் கிளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தன என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், சாணார் சமூகத்தவரின் நோக்கமென்பது உரிமை மீட்பு, பாதிரிமாரின் நோக்கமென்பது ஆன்ம மீட்பு (இன்றைய விடுதலை இறையியல்) என்ற போர்வையிலான மதப் பரப்பல் முயற்சி. சாமுவேல் மடீரின் நூலில் நாம் குறிப்பிடுகின்ற கருத்துகளுக்கான ஆதாரங்கள் மிகத் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 1819ஆம் ஆண்டில் ரெவரண்ட் மீடு என்ற பாதிரியாரே நாகர்கோயில் நகர சிவில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஓராண்டு காலம் அப்பணியில் இருந்தாரென்றும், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 3000 பேரை (பெரும்பாலும் சாணார் சமூகத்தவர்) மதமாற்றம் செய்தார் என்றும் பக்கம் 267இல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற பல ஆதாரபூர்வமான செய்திகளையெல்லாம் படித்துப் பார்க்காமலோ அல்லது படித்துவிட்டும் பிறருக்கு தெரிந்து விடக்கூடாது என்று மறைத்தோ எழுதுவது ஆய்வு ஆய்வுப்பணி ஆகாது. (சான்றோர் சமூகமும் தோள்சீலைக் கலவரமும் என்ற தலைப்பில் இது பற்றி 24/2/2006 திண்ணை இணைய இதழில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.)

வறீதையா அவர்கள் நாடார் வளர்ச்சி வடிவம் என்ற தலைப்பில் “கடந்த நூற்றாண்டின் முன் ஐம்பதுகள் வரை தாழ்நிலையில் தவித்த ஒரு சமூகம்” என்று சான்றோர் சமூகத்தைக் குறிப்பிட்டுள்ளார். இவர் குறிப்பிடுகின்ற கால எல்லை எந்த அடிப்படையில் வரையறுக்கப்பட்டது என்பதை விளக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் வறீதையாவுக்கு இருக்கிறது. ஒரு வேளை, பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்ற காலகட்டத்தையே தமது கால எல்லையாக வரையறுத்துக் கொண்டாரோ என்று ஐயுறுகிறோம். அவ்வாறு இருப்பின் காமராஜ் அவர்களையும், சான்றோர் சமூகத்தவரையும் ஒருசேர இழிவுபடுத்தும் கண்ணோட்டமாகவே இதைக் கொள்ள முடியும். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே விருதுநகரில் சத்திரிய வித்யாசாலை என்ற பெயரிலும், அந்நூற்றாண்டின் இறுதியில் கமுதியில் சத்திரியபானு வித்யா சாலை என்ற பெயரிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டிய குல சத்திரிய நாடார்கள் (இன்றைக்கு PKN என்று வழங்கப்படுகின்ற) உயர்நிலைப்பள்ளி என்ற பெயரிலும் கல்விக்கூடங்கள் தொடங்கி அனைத்து சமூகத்தவருக்கும் கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் சான்றோர் சமூகத்தவர் ஆவர்.

சொல்லப்போனால், இத்தகைய சான்றோர் சமூகத்தவரின் கல்வி கற்பிக்கும் ஆசான் தன்மை காமராஜ் அவர்களின் பாரம்பரிய உள்ளுணர்வில் இருந்ததால்தான் அவர் அனைவருக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற திட்டத்தை வகுத்துச் செம்மையாகச் செயல்படுத்தி அதன் மூலம் கல்விக்கண் திறந்த கர்மவீரர் என்ற பட்டத்தையும் பெற முடிந்தது. “வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்தியிட வேண்டும்” என்ற பாரதியின் வரிகளுக்குச் செயல்வடிவம் கொடுத்து உண்மையான சான்றோராகத் திகழ்ந்தவர் காமராஜர் அவர்கள் ஆவார். அந்த சான்றோர் தன்மை அவரிடம் இருந்ததால்தான் அவர் சான்றோர் சாதி என்ற மட்டத்தையும் கடந்து மக்கள் தலைவராக உயர்ந்தார். எனவே, அவரை சான்றோர் சமூகத்தவர் உயர்வதற்கு கைகொடுத்தவர் என்று பார்ப்பது அவரையும், சான்றோர் சமூகத்தையும் இழிவுபடுத்துவதாகும். இந்த இடத்தில் வேறொரு செய்தியையும் குறிப்பிடுவது அவசியமாகும். 1923ஆம் ஆண்டில் ‘கள்ளர் சரித்திரம்’ எழுதி வெளியிட்ட நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார், அந்நூலில் “தமிழ்நாட்டில் நாடார் என்னும் சான்றார் வகுப்பினரைக் குறிப்பிடலாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வறீதையா, மீனவர் சமூகம் கடல்புரம் என்ற மட்டத்தைக் கடந்து நானிலத்துக்கும் உரியவர்களாக ஆகவேண்டும் என்று எண்ணுவது உயர்ந்த சிந்தனையே. ஆனால், அதற்காகத் தவறான அணுகு முறையில் வரலாற்று ஆய்வினை மேற்கொள்வது தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

(புதிய பார்வை நவம்பர் 1-15, 2006 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை.)

ganesanadar@gmail.com

Series Navigation

அ. கணேசன்

அ. கணேசன்