சலனம்

This entry is part [part not set] of 22 in the series 20010917_Issue

ஸ்ரீனி


‘சாந்தி தியேட்டர் .. எறங்கு ‘..

கூட்டம் முட்டி மோதிக்கொண்டு இறங்கி, மறுபடி ஏறிக்கொண்டது. அதுவரை கால்கடுக்க நின்றுகொண்டிருந்த ரகு, பின்னால் நின்ற பெரியவர் சற்றே முன்னேற, இடித்து கொண்டு அமர்ந்தான். பெரியவர் முறைக்க, கவனித்த ரகு சட்டென்று திரும்பி வெளியெ வேடிக்கை பார்த்தான். பக்கத்தில் அமர்ந்திருந்தவர் முக்கால்வாசி சீட்டை ஆக்ரமித்திருந்தார்.

பஸ் டிரைவர், ஏதோ ஞாபகம் வந்தவராய், பிரேக்கை மிதிக்க, அனைவரும் ஊஞ்சல் ஆடினர்.

‘கால மிதிக்காத பா .. அய்ய… ‘

‘சாரிங்க.. ‘

‘குடையை அப்படி வைங்க சார்.. ‘

மேலும் பல முனகல்கள்.

தனக்கு உட்கார இடம் கிடைத்தது ரொம்ப திருப்தியாக இருந்தது. ஆனால் அருகில் அமர்ந்திருந்தவர் இவனை கீழே தள்ளும் அளவிற்கு சீட் ஆக்ரமிப்பு நடத்த, ‘கொஞ்சம் தள்ளி உட்காருங்க சார்.. ‘ எரிச்சலுடன் அவரை பார்த்தான். அவர் ஏதோ முனகிக்கொண்டே ‘கொஞ்சூண்டு ‘ இடம் கொடுத்து தள்ளி அமர்ந்தார். ‘டி.ம்.எஸ் எறங்கு.. ‘ சாக்கில் மேலும் மேலும் அடைபெறும் புளி போல கூட்டம், மேலும் அடைத்துக்கொண்டது.ரகு அருகில் அமர்ந்தவரை பார்க்க, அவர் புரிந்துகொண்டு இன்னும் தள்ளி உட்கார, வசதியாக அமர்ந்தான்.

பின்னால் நின்ற பெரியவர் அவனைப் பார்க்க அவன் மறுபடி வெளியெ நோட்டம் விட ஆரமித்தான். கூட்டம் ஏறிக்கொண்டே இருந்தது.அப்பொழுது தான் கவனித்தான். அந்த பெண். நல்ல வட்டமான முகம். வெளிர் நீலத்தில் சுரிதார் அணிந்திருந்தாள். ஒரு கையில் பர்ஸை வைத்துக்கொண்டு, இன்னொரு கையால் மேலே கம்பியை பிடித்துக்கொண்டு, கூட்டத்தின் ஊடே முன்னேறினாள். ரகு, கம்பியின் மேல் தலைசாய்த்து படுப்பது போல,

தலைவைத்து ஓரக்கண்ணால் அவளையே கவனித்தான். அவள் அவன் இருந்த இடத்தை நோக்கி வர, ரகு சற்று நிமிர்ந்து அமர்ந்தான்.

அவள் இவன் அருகில் வந்து நின்று கொண்டாள். ரகு அவ்வப்போது நோட்டம் விட, ஒரு முறை அவளை பார்க்கும் போது, பின்னால் நின்ற பெரியவர் அவனைப் பார்க்க, அவன் ஒன்றும் அறியாதது போல திரும்பிக்கொண்டான்.

‘சைதாபேட்டை வெளிய வாங்க … ‘

அருகில் இருந்தவர் எழுந்தார். ரகுவிற்கு சட்டென யோசனை தோன்ற தள்ளி அமர்ந்தான். அவன் மேல் மெல்லிய உடம்பு பட்டதும் சிலிர்த்தான்.

சன்னலின் வழியே வெளியே பார்த்தான். அவனுக்குள் ஏனோ ஒரு வித புது மயக்கம் சேர்ந்துகொண்டது. அதை ரசித்த படியே திரும்ப…பக்கத்தில்

பெரியவர்..

அவனை பார்த்து சிரித்தார். ரகுவிற்கு கோபமும் ஏமாற்றமும் சேர்ந்து வந்தது.

‘ஏன் சார், கொஞம் தள்ளி .. உட்காருங்க.. நானும் டிக்கெட் வாங்கித்தான் டிராவல் பண்றோம் ‘..

பெரியவர் ஏமாற்றம் அடைந்தவராய் திரும்பிக்கொண்டார்.

ரகு சந்தடி சாக்கில் அந்த பெண்ணை கவனித்தான். அவளை சுற்றிலும் பலர் நின்று நசுக்க,

‘கொஞ்சம் தள்ளுங்க .. நான் வெளியே பொவணும் ‘.. என்று வெளியெ வந்து.. ‘எக்ஸ்கியூஸ் மீ…நீங்க உட்கார்ங்க …பரவாயில்லை .. உட்காருங்க ‘ என்றான்.. ஏதோ ஒரு சாதனை செய்து விட்டதாக நினைத்தான்..

அவள் அந்த பெரியவரிடம் .. ‘ அப்பா .. தள்ளுங்க .. ‘ என்று கூறியது தான் தாமதம், பெரியவர் அவனை பார்த்து புன்னகைக்க,

‘சார் நீங்க மீனம்பாக்கம் தானே டிக்கெட் வாங்கினீங்க … ‘ என்று கண்டெக்டர் கூரியதை பொருட்படுத்தாது ரகு இறங்கினான்.

பஸ் ஸ்டாப்பை விட்டு வெகுதூரம் வந்தும் , ஏனோ அந்த பெரியவரின் சிரித்த முகம் மட்டும் அவன் கண் முன் வந்து வந்து போனது.

Series Navigationபாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு. >>

ஸ்ரீனி

ஸ்ரீனி