ஜாஃபர் நோமன்
ஐரோப்பிய திரைப்படவிழா கராச்சி, இஸ்லாமாபாத், பெஷாவர் போன்ற நகரங்கள் சுற்றி என்னுடைய ஊரான லாகூருக்கு வந்தது. பிரஞ்ச் கலாச்சார மையத்தின் தோட்டத்தில், இரண்டுவாரங்கள், தினமும் இரண்டு படங்களாக காட்டப்பட்டது. உள்ளடக்கமும் அமைக்கப்பட்ட விதமும் இந்த திரைப்பட விழாவை வெற்றி என சொல்லவைத்தன. மாலையில் நல்ல சூழ்நிலையில், தோட்டத்தில் திறந்த வெளியில் பெரிய திரையில் காட்டப்பட்டன இந்த படங்கள். நான் லாகூரில் ஒரு மாதம்தான் இருந்தேன் என்றாலும், இந்த விழாவை எனக்கு வாஷிங்டன் டி.சியில் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
இரண்டு விஷயங்கள்தான் நான் வருத்தப்பட்ட காரணங்கள். ஒன்று என்னால் அனைத்து படங்களையும் பார்க்க முடியவில்லை என்பது. இரண்டாவது விழா முடிந்ததனால் இப்போது மாலைகளில் என்ன பண்ணுவது என்று தெரியாமல் உட்கார்ந்திருப்பது. நான் பார்த்த சில படங்களின் விமர்சனம் இதோ.
Il Postino: 1994, directed by Michael Radford
இல் போஸ்டினோ, 1994, இயக்கம் மைக்கல் ராட்ஃபோர்ட்
இந்தப்படத்தை நான் திரைப்பட விழாவில் பார்க்கவில்லை. ஆனால் இது பார்த்தே ஆக வேண்டிய படம். ஒரு இளைஞன் தபால்காரனாக வேலையேற்கிறான். அவனுக்கு பிரபல சிலி எழுத்தாளரான பாப்லோ நெருடாவுக்கு தபால்களைக் கொடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பாப்லோ நெருடா சொந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட இத்தாலிய நகரம் ஒன்றில் தங்கியிருக்கிறார். மரியோ என்ற இந்த இளைஞனுக்கு உள்ளூர்க்காரியான் பீட்ரிஸ் என்னும் பெண்ணின் மீது காதல். ஆனால் இந்தக் காதலை அவளிடம் இவனுக்குச் சொல்லத்தெரியவில்லை. இதனால் இவன் பாப்லோ நெருடாவிடம் உதவி பெற வருகிறான். இவர் இவனுக்கு கவிதையின் சக்தியைப் பற்றிச் சொல்லித்தருகிறார். இதன்மூலம் இவன் பாப்லோவுடன் நெருங்கிய நட்பு கொள்கிறான். அழகான நகைச்சுவைப்படம். எளிய காதல் கதை. சிறப்பாக நடிக்கப்பட்ட, அட்டகாசமாக இயக்கப்பட்ட, அற்புதமாக எழுதப்பட்ட சிறந்த திரைப்படம் இல் போஸ்டினோ. இந்தப்படம் எடுத்து முடித்த சில மணிநேரங்களில், இந்தப்படத்தில் மரியோ என்னும் தபால்காரனாக நடித்த பிலிப்பி ந்வொரே இறந்து போனார் என்பது தெரியும்போது இன்னும் வருத்தமாக இருக்கிறது. இந்தப்படத்துக்கு ஐந்து நட்சத்திரங்கள் கொடுக்கிறேன்.
Leo Sonnyboy: 1989, Rolf Lyssy.
லியோ சன்னிபாய், 1989, ரோல்ஃப் லிஸ்ஸி
காதல் நகைச்சுவைப்படங்கள் எனக்கு பெரும்பாலும் பிடிப்பதில்லை. ஆனால் இந்தப்படம் சந்தோஷமாக, புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்ட படம். அதிகம் ஹாலிவுட்டின் தொணதொணப்பு இல்லாமல் எடுக்கப்பட்ட படம். லியோ என்னும் நகைச்சுவை உணர்வு இல்லாத சுவிஸ் ரயில் டிரைவன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாய் வாழ்வதென முடிவெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். நடுவில் இவனது நண்பன் தனது பெண் சினேகிதியை (நிர்வாண நடனம் ஆடும் பெண்!) மணந்து கொள்ளச்சொல்லி வற்புறுத்துகிறான். அப்போதுதான் அவளுக்கு சுவிஸ்நாட்டில் வாழ விசா கிடைக்கும். இவளது பெயர் அபியா. லியோவும் அபியாவும் காதலில் வீழ்கிறார்கள். இதில் அபியாவின் சினேகிதனுக்கும் அபியாவின் பிம்புக்கும் வருத்தம், கோபம். அபியாவும் லியோவும் வரும் காட்சிகள் நன்றாக இல்லை. அவர்கள் கொடுக்கும் முத்தம் கூட கடனெழவே என்று இருக்கிறது. இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் சேர்ந்த இரண்டு பொருந்தாத ஜோடிக்குள் நடக்கும் விஷயங்கள் பார்க்க ஜாலியாக இருக்கிறது. பிரகாசமான படம் இல்லை ஆனால் நன்றாக பொழுதுபோகும். மூன்று நட்சத்திர சமாச்சாரம்.
Left Luggage: 1998, Jeroen Krabbe
லெஃப்ட் லக்கேஜ் (விட்டுப்போன பெட்டி) 1998, ஜெரோன் க்ராப்பி
சின்னப்பையனுக்கும் ஒரு 20 வயது பெண்ணுக்கும் இடையில் கலாச்சார இடைஞ்சல்கள் தாண்டி இருக்கும் ஒட்டுதல் பற்றிய படம். 1970இல் ஆண்ட்வெர்ப் நகரில் சாஜா என்னும் யூதப்பெண் தத்துவஇயல் படிக்கிறாள். இவள் சுமாராக ஒரு நாத்திகவாதி. ஒரு ஹாசிடிக் பாரம்பரிய குடும்பத்தில் (ரொம்ப ஆசாரமான கட்டுப்பெட்டியான யூதர்கள்) குழந்தையை பார்த்துக்கொள்ளும் ஆயாவாக வேலைக்குப் போகிறாள். இவள் பார்த்துக்கொள்ளும் பிள்ளைகளில், சிம்ஹா என்னும் ஒரு பையனுடன் ஒட்டிக்கொள்கிறாள். சாஜா எப்போதும் மத நம்பிக்கைகொண்டவளல்ல. கோவிலுக்கும் போவதில்லை. இந்தக் குடும்பத்தில் ஒட்டும்போது மாறமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் இந்த சமூகம், துன்பமான நினைவுகள், ஹோலோகாஸ்ட் போன்ற அனைத்து விஷயங்களுக்கும் புதிய பரிமாணம் கிடைக்கிறது இவளுக்கு. ஞாபகத்தில் இருக்கக்கூடிய படம். நிச்சயம் 5 நட்சத்திரங்கள்.
The Tongue of Butterflies: 1999, Jose Luis Cuerda
டங் ஆஃப் பட்டர்ஃப்ளைஸ் (வண்ணாத்திப்பூச்சிகளின் தாய்மொழி), 1999, ஹோசே லூய் க்வெர்டா
1930இல் சிறிய ஸ்பானிய நகரத்தில் மான்சோ என்னும் சிறிய பையனின் பார்வையிலிருந்து ஸ்பானிய உள்நாட்டுப்போரைப் பார்க்கிறோம். அழகான இயற்கைக் காட்சிகள். அழகான காமராவேலை. சரியான நேரத்தில் பேசப்படும், சொல்லப்படும் அவனுடைய கதை. மெதுவாக நகர்கிறது படம். ஆனால், மான்சோவின் அழகான அமைதியான வாழ்க்கை அவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இல்லாத சக்திகளால் தீவிரமாக திடாரென நொறுக்கப்படுவதன் முன்னோடி அது. பள்ளிக்கூடத்தில் சிறிய பிரச்னைகளுடன் ஆரம்பிக்கும் வாழ்க்கை, அவனது ஆசிரியரோடு பேசுவதோடு ஆரம்பிக்கிறது. இந்த ஆசிரியர், ஒரு வயதான கிழம், எதிர்பார்ப்பின்றி கொடுக்கிறார். மான்சோ தன் ஆசிரியரின் துணையுடன் தன்னைச்சுற்றி இருக்கும் உலகத்தை அறிந்து கொள்கிறான். ஸ்பானிய குடியரசு நொறுங்கும் சூழ்நிலையில் அழுத்தம் அதிகரிக்கிறது. அதன் பின்னர் நடப்பது, மனித இயற்கையைப் பற்றி மறக்கமுடியாத பாடம். நிச்சயமாக நாலரை நட்சத்திரம்.
All About My Mother: 1999, Pedro Almodovar
ஆல் அபெளட் மதர் (அம்மாவைப்பற்றி) 1999, பெட்ரோ அல்மொடொவர்
இந்தப்படத்துக்கு இருந்த பிரமாதமான பாராட்டுதல்களைப் படித்துவிட்டு படம் பார்த்தால் மிகுந்த ஏமாற்றம். மானுவலா என்ற முப்பதை தாண்டும் ஸ்பானிய நர்ஸ் தனது 17வயது நிரம்பிய மகனது பிறந்த நாள் அன்று ‘ஆசை என்னும் பெயர் கொண்ட பேரூந்து ‘ என்ற நாடகத்தை பார்க்க செல்கிறாள். வெளியே வரும்போது பேரூந்தில் அடிபட்டு மகன் இறக்கிறான். உலகத்தில் தன்னந்தனியே இந்த ஸ்பானிய நர்ஸ். அவனது நாட்குறிப்பை படிக்கும் இவள், அவனது கடைசி ஆசையாக அவன் தனது தந்தையை அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவது கண்டு அவள் பார்ஸலோனா செல்கிறாள். அங்கு பழைய நண்பர்களை காண்கிறாள். சில புதிய நண்பர்களைப் பெறுகிறாள்.வேசிகளும் அலிகளும் நிறைந்த உலகத்தில் சேர்கிறாள்.
சில நேரங்களில் இந்தப்படம் நகைச்சுவையாகச் செல்கிறது. பல நேரங்களில் குழப்பமான குணச்சித்திரமும், எங்கெங்கோ செல்லும் ஸ்கிரிப்டும் படம் ஏமாற்றத்தைத் தந்தது. சீலியா ரோட்டின் மானுவலாவாக நடிப்பு பிரமாதம். இரண்டரை நட்சத்திரங்கள். அவ்வளவுதான்.
Cinema Paradiso: 1988, Guiseppe Tornatore
சினிமா பாரடிஸோ 1988, கிஸப்பி டோர்னடோர்
இந்தப்படம் எல்லோருக்கும் தெரிந்த படம்தான். படம் டோடோ என்ற சிறு பையனுக்கும் அந்த இத்தாலிய சிறுநகரத்தில் சினிமா படம் ஓட்டுபவனாக இர்க்கும் ஆல்பிரடோவுக்கும் இடையேயான தனீ நட்பு பற்றிய படம். டோடோ வளர்ந்து விடலைப்பருவத்தில் எலானாவை காதலிக்கிறான். எலானாவின் மீதான காதலுக்கு சமமாக அவன் சினிமாவையும்காதலிக்கிறான். ஆல்பிரடோ இந்த இரண்டு காதலுக்கும் வேராக இருக்கிறான்.
மனித உறவுகள் அந்த பருவங்கள் எல்லாவற்றையும் இந்த படம் ஆராய்கிறது. சிறந்த படம் . நாலரை நட்சத்திரங்கள்
Just Friends: 1993, Marc-Henry Wajnberg
வெறுமே நண்பர்கள், 1993, மார்க் ஹென்றி வென்பெர்க்
ஆண்ட்வெர்ப் நகரத்தில் வைத்து இன்னொரு படம். ஒரு சாக்ஸபோன் வாசிப்பவனது வாழ்க்கை பற்றிய படம். 1959இல் ஜாக் என்னும் இவன் தனது காதலையும் தனது வேலையையும் குழப்பிக்கொண்டு வாழ்கிறான். இவனுக்கு தனது இசையை நேசிக்கும் நியூயார்க் போக ஆசை. இந்த நியூயார்க் மோகத்தால் அவனுக்கு சரியான உறவுமுறைகளை கட்டிக்கொள்ள முடிவதில்லை. படத்தின் குறி சரியாக இல்லை. முடிவு சரியானதாக இல்லை. ஜாக்கின் நிலைமை மீது அனுதாபம் கொண்ட ரசிகர்களால் முடிவை ஒப்புக்கொள்ள முடிவதில்லை. ஏமாற்றப்பட்ட உணர்வு வந்து விடுகிறது. மூன்றரை நட்சத்திரங்கள்
The Dinner of Fools: 1998, Francis Veber
முட்டாள்களின் உணவு வேளை,. 1998, ஃப்ரான்ஸிஸ் வெபர்
பியாரே ப்ரோசாந் ஒரு பணக்கார, அழகுணர்ச்சி நிரம்பிய ஆனால் கொடுமையானவன். அவனது நண்பர்களும் அவனும் ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் மாலை உணவுக்கு ஒன்று கூடுகிறார்கள். அவர்களுக்குள் ஒரு போட்டி. யார் மிகப்பெரிய முட்டாளை கூட்டிக்கொண்டுவருகிறார்கள் என்பதுதான் அந்தப் போட்டி. மிகப்பெரிய முட்டாளை கூட்டிக்கொண்டுவருபவன் வெற்றி பெறுகிறான். இறுக்கமான திரைக்கதை, சிறந்த டயலாக், இவை நல்ல சினிமாவை விட நல்ல நாடகத்துக்கு ஒப்பானதாக இந்தப் படம் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நிமிஷமும் சிரிப்பு. உலகமகா முட்டாளை சந்திக்கும் ஒவ்வொரு நிமிஷமும் சிரிப்பு. அந்த சிரிப்பை தாண்டி இந்தப் படம் எதையும் சொல்வதில்லை என்பது இந்தப்படத்தின் குறை. ஒருவேளை அதுவே இந்தப் படத்தின் செய்தியாக இருக்கலாம். நான் இந்தப்படத்துக்கு ஐந்து நட்சத்திரங்கள் தருகிறேன்.யார் என்னை கேள்வி கேட்கமுடியும் ?
- சமீபத்திய ஐரோப்பிய திரைப்படங்கள்