K. ரவி ஸ்ரீநிவாஸ்
உயர் நீதிமன்றத்தில் தமிழினைப் பயன்படுத்துவது குறித்த சர்ச்சை தொடர்கிறது.மதுரையில் வழக்கறிஞர்கள் மக்களவை உறுப்பினர் மோகன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.இதனால் என்ன பயன் என்று தெரியவில்லை. உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆங்கிலம் போல் பயன்படுத்துவதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன.தமிழில் சட்ட நூல்கள், மொழிபெயர்ப்புகள் உட்பட பல தேவையான வகையில், அளவில் இல்லை. ஆங்கிலத்தில் வழக்குகளுக்கான மனுக்களை தயாரிப்பது, வாதிடுவது, அதற்கான குறிப்புகளை தயாரிப்பது, தீர்ப்பெழுதுவது போன்றவை சாத்தியமாகியுள்ள அளவிற்கு அவை தமிழில் இன்று சாத்தியமில்லை. மேலும் தமிழினைப் பயன்படுத்துவது என்றால் கூட ஆங்கிலத்தில் உள்ளவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் பயன்படுத்த முடியும் என்ற நிலைதான் இன்று இருக்கிறது. எனவே தமிழில் இவற்றைச் செய்வதை விட ஆங்கிலத்தில் செய்வதே திறன்மிக்க செயலாக இருக்கும்.
சட்டத்துறை அறிவுப் பெருக்கம் உட்பட பல காரணங்களால் ஆங்கிலமே உகந்ததாக இருக்கிறது. தமிழ் குறித்து ஆணை பிறப்பிக்கப்பட்டாலும் தமிழை எந்த அளவு பயன்படுத்த முடியும், அதனால் எத்தகைய சாதக,பாதகங்கள் ஏற்படும் என்பதை கண்டறிய வேண்டும். எல்லாத் துறைகளையும் போல் சட்டத்துறையிலும் அறிவுப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் தொழில் நுட்பம் பலவற்றை சாத்தியமாக்கியுள்ளது. தமிழில் இரண்டுமே அதாவது அறிவு பெருக்கம்/வளர்ச்சி, அதனை கையாள உதவும் தொழில் நுட்பம், இல்லை. இந்த கசப்பான உண்மையை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
ரயிலை மறிப்பது எளிது. அதை விட சட்டங்களை தமிழில் மொழிபெயர்ப்பதும், சட்டத்தமிழை வளர்ப்பதும், சட்டம் குறித்த கலைச் சொற்களை உருவாக்குதல், தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்தல் போன்றவை கடினமானவை. இவை தொடர்ந்த உழைப்பினையும், கவனத்தினையும், அறிவாற்றலையும் கோருபவை. தமிழில் அரசியல் சட்டம் குறித்து எத்தனை நூல்கள் உள்ளன. ஆங்கிலத்தில் உள்ள விரிவான அலசல்களையும். ஆய்வினையும் உள்ளடக்கியுள்ள நூல்கள் போல் சட்டங்கள் குறித்து தமிழில் எத்தனை இருக்கின்றன.
உதாரணமாக, இந்திய அரசியல் சட்டம் குறித்து ஆங்கிலத்தில் பல நூல்கள் உள்ளன.அறிமுக நூல்கள் என்ற அளவில் தொடங்கி ஒன்றிற்கும் மேற்பட்ட நூல்கள் கொண்ட தொகுதியாக உள்ள சீர்வை எழுதிய புகழ் பெற்ற நூல் உட்பட பல நூல்கள் அரசியல் சட்டம் குறித்து ஆங்கிலத்தில் உள்ளன. எனக்குத் தெரிந்த வரை தமிழில் அறிமுகம் என்பதைத் தாண்டிய அளவில் நூல் ஏதும் இல்லை.
முன்பு ஒரு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் போன்றவற்றிற்கு ஆல் இண்டியா ரிப்போட்டர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டிய தேவை இருந்தது. இன்று மனுபத்ரா போன்ற தளங்கள் தரும் தீர்ப்புத் தொகுதிகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் வசதி இருக்கிறது. ஒரு வழக்கில் சுட்டப்படும் தீர்ப்புகள் பெரும்பான்மையானவற்றை இத்தளங்களிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் நேரமும், உழைப்பும் மிச்சமாகும் நிலை இன்றுள்ளது. உதாரணமாக உச்ச நீதிமன்றம் 1956ல் கொடுத்த தீர்ப்பினைப் படிக்க இன்று ஆல் இண்டியா ரிப்போட்டர் போன்றவற்றின் பழைய தொகுதிகளை புரட்ட வேண்டியதில்லை. தீர்ப்புகளை தரும் தகவல்தரவு தளங்கள், தொகுப்புகளிலிருந்தும், குறுந்தகடுகளிலிருந்து அந்த தீர்ப்பினைப் படிக்கவும், மேற்கோள் காட்டவும் முடியும். இத்துடன் பல்வேறு நாடுகளிலுள்ள லெக்ஸிஸ், வெஸ்ட்லா போன்றவைகளையும் பயன்படுத்தும் வாய்ப்பு இன்று இருக்கிறது. செலவு அதிகம் என்று தோன்றினாலும் இவை மிகவும் பயன் தரும் வகையில் உள்ளன.உதாரணமாக லெக்ஸிஸ் மூலம் சட்டத்துறை ஜர்னல்கள்,ரிவ்யூக்களில் வரும் கட்டுரைகள், முக்கியமான நாளேடுகள், பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள், முழுமையான தீர்ப்புகள், வழக்கு விபரங்கள், ஸிஸமின் உரிமங்கள்(patents) குறித்த நூல் உட்பட பலவற்றைப் பெற முடியும், அச்சிட முடியும். லெக்ஸிஸ்,வெஸ்ட்லா போன்றவை இன்று சட்டத்துறையில் தவிர்க்க முடியாதவை என்று கூறலாம்.அமெரிக்காவில்
சட்டம் பயிலும் மாணவர்களுக்கு லெக்ஸிஸ்,வெஸ்ட்லாவை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் பயிற்சி அளிக்கிறார்கள். ஏனெனில் இன்றைய தகவல்,கணினி யுகத்தில் வழக்கறிஞர், சட்டத்துறை ஆய்வாளர்கள் இதைத் தெரிந்து கொள்ளாமல் தொழில் செய்வது கடினம். இந்தியாவில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் உட்பட பல குறுந்தகடுகளிலும், இணையத்திலும், தகவுத் தொகுப்பாகவும் கிடைக்கின்றன. இந்தியாவில், சர்வதேச, இந்திய சட்டங்கள் குறித்த ஆய்வுகள், நூல்கள், ஜர்னல்கள் ஆங்கிலத்தில்தான் உள்ளன என்றால அது மிகையில்லை. இந்தியாவில் உள்ள சட்டப் பல்கலைகழகங்களில் ஆங்கிலம்தான் பயிற்று மொழியாக உள்ளது. சட்ட முன் வடிவுகள், சட்டங்களின் பிரதிகள், செபி(SEBI),கம்பெனி சட்ட போர்டு வெளியிடும் அறிவிப்புகள், ஆணைகள் ஆங்கிலத்தின் தான்
உள்ளன அல்லது முதலில் ஆங்கிலத்தில்தான் வெளியாகின்றன.
இவற்றுடன் ஒப்பிடுகையில் தமிழில் என்ன உள்ளது. இவற்றை உருவாக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும், அதற்குள் பெருகிவரும் அறிவினை தமிழில் எப்படித் தருவது, தமிழுக்கு இவற்றை எப்படிக் கொண்டு வருவது, இதற்கு கணினி, இணையத் தொழில் நுட்பங்களை எப்படிப் பயன்படுத்த முடியும்- இப்படி பல கேள்விகள் உள்ளன. இவற்றையெல்லாம் யோசிக்காமல் வெறும் உணர்ச்சி ரீதியாக முழங்குவது எந்த பயனையும் தராது. நாம் செய்ய வேண்டியவை என்னென்று நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது. தமிழ் ஆங்கிலத்தின் இடத்தினைப் பெறுவதோ அல்லது அதற்கு மாற்றாக இருப்பதோ சட்டம் உட்பட பல துறைகளில் சாத்தியமேயில்லை என்பது என் கருத்து. தமிழினை ஒரளவு பயன்படுத்த முடியும். ஆனால் அதுவும் உடனடியாக சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
இருப்பினும் நாம் வாளவிருக்கலாகாது. எதுவுமே செய்ய முடியாது என்று முயற்சிக்காமல் இருந்து விடக்கூடாது. இந்தி பயன்படுத்தப்படும் உயர் நீதிமன்றங்களில் இந்தி எந்த வகைகளில், எப்படிப் பயன்படுத்தப்படுகிறது, இந்தியில் சட்டத்துறை அறிவு எந்த அளவில் உள்ளது போன்றவற்றை நாம் ஆராய வேண்டும்.இதன் அடிப்படையில் தமிழில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஒரு செயல் திட்டம் வகுக்க வேண்டும். இது ஒரு நல்ல துவக்கமாக இருக்கும். அடுத்த பத்தாண்டுகளில் என்னென்ன செய்ய வேண்டும் என்ற நோக்கோடு நாம் செயல்பட வேண்டும்.இப்படிச் செய்தால் தமிழை உயர்நீதி மன்றத்தில் சட்ட,
வழக்காடு மொழியாக ஒரளவேனும் பயன்படுத்துவது சாத்தியமாகக் கூடும். ஆனால் அதற்கே நாம் கடக்க வேண்டிய தூரம் மிக மிக அதிகம்.
சட்டம் உட்பட பல துறைகளில் தமிழ் இன்னும் பிறக்காத குழந்தை நிலையில்தான் உள்ளது. அந்தக் குழந்தை மீது பாசம் இருக்கலாம், அதற்காக அது ஒலிம்பிக் பந்தயத்தில் நாளை கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்ப்பது சரிதான் என்றால் ஒரு ஆணையை பிறப்பிபதன் மூலம் உயர் நீதிமன்றத்தில் முழுமையான சட்ட, நீதிமன்ற மொழியாக தமிழை பயன்படுத்திவிடலாம் என்று நினைப்பதும் சரிதான்.
ravisrinivas@rediffmail.com
http://ravisrinivas.blogspot.com
- பெரியபுராணம்-126 – 39. சோமாசி மாற நாயனார் புராணம்
- காதல் நாற்பது (15) காதலிப்பாய் காதலுக்காக !
- தன்னை விலக்கி அறியும் கலை
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 12
- இலை போட்டாச்சு! – 23 – ரசவாங்கி வகைகள் (அரைத்து விடாத) கத்தரிக்காய் ரசவாங்கி
- லைஃப் ஸ்டைல்
- நாணயத்தின் மறுபக்கம்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:6)
- சதாரா மாலதி மறைவு
- இந்தியத் துணைக்கோள் இன்ஸாத்-4B ஏரியன்-5 ஏவுகணையில் பயணம் (மார்ச் 11, 2007)
- கரிச்சான் குஞ்சு – தோற்றம் தரும் முரண்கள்
- நற்குணக் கடல்: ராம தரிசனம்
- எழுத்தறிவு அற்றவர்களின் எண்ணறிவு
- பாரதி இலக்கிய சங்கம் நடத்தும் இந்த ஆண்டுக்கான பரிசுப் போட்டி
- அன்புடன் கவிதைப் போட்டி
- அலாஸ்கா கடற் பிரயாணம் – நான்காம் பாகம்
- தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – இரண்டாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்
- கலைப்படம் – தமிழ்ச் சினிமா தவறவிட்ட அத்தியாயம்
- குரு என்னும் சுடர் : பேராசிரியர் ஜேசுதாசன் நினைவில்….
- அம்பையின் எழுத்து
- மாத்தா-ஹரி அத்தியாயம் -3
- திசைகளைநோக்கி விரிவடையும் கோடுகள்
- கனவுக் கொட்டகை
- தைத்திருநாள் விழா கவியரங்கம் – 5
- புல்லாங்குழல்களின் கதை
- பூப்பறிக்கும் கோடரிகள்
- நீர்த்திரை
- குடும்பம்
- கவிதைகள்
- சிண்டா
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – தமிழ் வலைப்பூக்களின் பரிணாமம்
- சட்டமும் தமிழும்: கனவுகளும்,கசப்பான உண்மைகளும்
- கிரிக்கெட் – விளையாட்டுக்களை அழிக்க வந்த அரக்கன்
- தொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் நான்கு: மதகுருவின் துணிவு!
- புரு
- நீர்வலை (17)
- மடியில் நெருப்பு – 31