சு. பசுபதி, கனடா
கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் வந்திருந்த என் நண்பன் நம்பியை வீட்டுக்குள் வரவேற்றேன்.
தமிழ்ப் பாடல்கள் என்றால் நம்பிக்கு மிகவும் பிடிக்கும், மணிக்கணக்கில்
என்னுடன் அவற்றைப் பற்றிப் பேசுவான்; கூடவே என் மனைவி கொடுத்துக் கொண்டே வரும் தின்பண்டங்களும்
உள்ளே போய்க்கொண்டே இருக்கும் . இப்படித்தான் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று
வந்துவிடுவான்.
காலணியைக் கழட்டிக்கொண்டே நம்பி சொன்னான்: ” முதலில், என் தாக சாந்திக்காக… இந்தக்
குளிருக்கு இதமாக…. ஏதாவது கொடு! பிறகு பேசலாம்” என்றான். நான் அவனை ஏற இறங்கப்
பார்த்து, சிறிது தயங்கிப் பின்னர் சொன்னேன்: ” நிச்சயமாய்த் தருகிறேன்! குறுந்தொகையில் ஒரு பாடல் உள்ளது. இப்படித்தான் பனிக்காலத்தில் வரும் ‘அறிவர்’களுக்கு என்ன திரவம் கொடுக்கவேண்டும் என்று அது சொல்கிறது. அதைக் கொடுக்கட்டுமா?” என்றேன். நம்பியின் கண்கள் நூறு வாட் பல்புகள் போல் பிரகாசித்தன.
“பேஷ்! பேஷ்! அந்தக் காலத்துப் பானமா? அமர்க்களமாக இருக்குமே! கொண்டுவா! ” என்றான். “சரி! சோபாவில் உட்கார். அந்தப் பாடலைச் சொல்கிறேன். அதற்குள் என் மனைவி உனக்கு அதைத் தயாரித்து கொண்டு வருவாள்” என்றேன். நான் அவனுக்குச் சொன்ன பாடலை உங்களுக்கும் சொல்கிறேன், சரியா?
மார்கழி, தை மாதங்களை முன்பனிக்காலம் என்பார்கள். அதற்கு ‘ அச்சிரம்’ ‘அற்சிரம்’ என்று பெயர்.
பனிக்காலம் பற்றிய பல குறுந்தொகைக் காட்சிகளில் இதுவும் ஒன்று. ஓரில் பிச்சையார் என்ற புலவர்
பாடியது. அந்தப் பாடல் தீட்டும் ஓவியம் இதுதான்:
வேலை காரணமாகத் தலைவன் வேறு நாட்டிற்குச் சென்றிருந்தான். குளிர் காலம் வரும்போது வீடு திரும்புவதாகத்
தலைவியிடம் அவன் சொல்லி இருந்தான். தலைவியோ காத்துக் காத்துப் பொறுமை இழந்தவளாய்த் துடித்துக்
கொண்டிருந்தாள். இன்னும் தலைவன் வந்தபாடில்லை. தோழி , தலைவியின் நிலையைப் பார்த்துப் பரிதாபப் பட்டு, ஊருக்கு வந்துள்ள ஓர் அறிவரிடம் சொல்வது போல் அமைந்துள்ள பாடல் இது.
அறிவர் என்பவர்கள் துறவிகள் ; முக்காலத்தையும் அறியும் ஆற்றலுள்ளவர்கள்.
” நான் துறவியல்ல ; ஆனாலும் … உனக்கு ஆட்களை மதிப்பிடுவதில் 100 மார்க் ! என்னை ‘அறிவாளி’ என்று சொல்வது மிகப் பொருத்தமே! ” என்று காலரைச் சரிசெய்துகொண்டே பூரித்தான் நம்பி.
அறிவர்கள் பொதுவாக அந்தணர்கள் இருக்கும் வீடுகளிலும், நாய்கள் இல்லாத வீடுகளிலும் போய்
சோறு அளிக்க வேண்டுவர். இப்படிச் சோறு வாங்கி உண்டு வாழ்வதை உஞ்சவிருத்தி என்றும் சிலர் சொல்வர்.
“அட, அந்தக் காலத்திலேயே இந்த நாய்கள் கடித்துக் குதறும் பிரச்சினை இருந்தது போலிருக்கிறதே ?”
என்றான் நம்பி.
சில சமயங்களில் அறிவர்களுக்குத் தலைவன் எப்போது வருவான் போன்ற தகவல்கள் தெரிந்திருக்கும்.
அதனால், தோழி அறிவரிடம் கேட்கிறாள் :
” அறிவரே! மின்னலைப் போன்ற இடையுடைய என் தலைவி தலைவன் வருகைக்குக் காத்திருக்கிறாள்.
நடுக்கும் குளிர் காலத்தில், வாடைக் காற்று வீசும் பருவத்தில் வருவதாகச் சொல்லிப் போயிருக்கிறான்
தலைவன். அந்தப் பருவம் எப்போது வரும் என்று சொல்லுங்கள்! உங்களுக்குக் கோடிப் புண்ணியம்!
பொதுவாக நிறைய வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுத்து, அங்கே கிடைக்கும் சிறு, சிறு உணவுப் பகுதிகளைச் சேர்த்து
உண்டு பசியைத் தீர்த்துக் கொள்ளும் உங்களுக்கு ஒரு வீட்டிலேயே முழுமையான, நல்ல விருந்து கிடைக்கட்டும்!
குற்றமற்ற தெருவில், நாய் இல்லாத வீட்டில், செந்நெல் சோற்றுருண்டையும், வெண்மையான நெய்யும்
சேர்ந்த பிச்சை உணவை ஒரே வீட்டில் பெறுவீர்! மேலும், நீரைச் சேமிக்க நீங்கள்
வைத்திருக்கும் செப்புப் பாத்திரத்தில் ( கமண்டலத்தில் ) பனிக்காலத்திற்கே உரிய வெந்நீரும் கிடைக்கட்டும்! ”
என்று வாழ்த்துகிறாள் தோழி. ( இப்படி ஒரு அற்புதமான வாழ்த்து…. அறிவருக்கு ஒரே வீட்டில் அன்றைய பிச்சை கிடைக்கட்டும்…என்று சொல்லியதால், இந்தப் புலவர்க்கு ‘ஓர்+இல்+ பிச்சையார்’ ‘ஓரிற் பிச்சையார்’ என்ற பெயர்
கிட்டியது. )
இதோ அந்தப் பாடல்:
ஆசு இல் தெருவில் நாய் இல் வியன் கடை,
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி,
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே –
“மின்னிடை நடுங்கும் கடைப் பெயல் வாடை,
எக் கால் வருவது? ‘ என்றி:
அக்கால் வருவர், எம் காதலோரே. ( குறுந்தொகை – 277 )
( ஆசு இல் – குற்றம் இல்லாத, வியன் – அகன்ற, கடை -வாயில் , அமலை – சோற்றுத்திரள்,
இழுது – நெய், சேம – சேமித்து வைக்கும் , கடைப் பெயல் வாடை – இறுதியில் மழையைக் கொடுக்கும்
வாடைக்குரிய காலம் ; வாடை முன்பனிப் பருவத்திலும் இருப்பதால் கூறப்படும் பருவம் அற்சிரம் அல்லது
முன்பனிக் காலம் )
” சே! கடைசியாகப் , போயும், போயும் வெறும் வெந்நீர் கொடுத்து என்னை ஏமாற்றப் போகிறாயா?”
என்று முகத்தைச் சுளித்தான் நம்பி.
” பரவாயில்லை, அதைக் குடித்துவிட்டு, இங்கேயே இருந்து இரவுச் சாப்பாட்டை இந்த எளியனின் ‘ஓரில்லில்’ முடித்துக் கொண்டு போயேன்” என்றேன்.
“”அவ்வளவுதான், வேறு வினையே வேண்டாம்! இங்கே சாப்பிட்டுவிட்டு என் வீட்டிற்குச் சென்றால்,
உணவு தயாரித்துக் காத்திருக்கும் என் மனைவியாகிய என் ‘இல்’ .. , இனிமேல் வீட்டில் உங்களுக்கு உணவு ‘இல்’ , தினமும் எங்கேயோ சென்று ‘ஓரிற்பிச்சை’யோ , ‘பல இல் பிச்சையோ’ எடுக்கப் போம்! என்று சொல்லி என்னை வீட்டை விட்டுத் துரத்தி விடுவாள்! ” என்று சொல்லி, வெந்நீரை அவசரம், அவசரமாகக் குடித்துவிட்டு, தன் வீட்டிற்குக் கிளம்பினான் நம்பி.
pas_jaya@yahoo.ca
~*~o0O0o~*~
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தில் எதிர்ப்பிண்டம் (Antimatter) பெருகியுள்ளதா ? (கட்டுரை 50 பாகம் -4)
- வேத வனம் விருட்சம் 22
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -22 << அழகி ஒரு பெண் நெருப்பு ! >>
- கலில் கிப்ரான் கவிதைகள் என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே !
- என் காது செவிடான காரணம்
- சங்கச் சுரங்கம் – 1 : ஓரிற்பிச்சை
- ஒரு நேசத்தின் மிச்சம்
- நாகேஷ் – ஒரு கலை அஞ்சலி
- உள் பயணம்
- அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்
- ஏதேதோ…
- ஈழ அரசியல் நிரந்தர போர்நிறுத்தம்
- தமிழநம்பி அவர்களை பாராட்டுகிறேன்.
- பகத்சிங் நூற்றாண்டு விழா பொங்கல் விழா
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறும்பட வட்டம்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -3 பாகம் -3
- காந்தியின் மரணம்
- எல்லைகள் இல்லா உலகம்
- நாகேஷ்
- மோந்தோ -3-2
- பேச்சுத்துணை…
- மெளனமாய் இருந்ததில்லை கடல்.
- சாத்தான்களின் உலகம்
- வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்
- சர்வோதயா தினத்தில் தேசத்தந்தைக்கு சேவாலயாவின் அஞ்சலி
- இரயில் பயணங்களில்
- ஆறாம் விரலும் புகை மண்டலமும்
- மோந்தோ -3 – 1
- சிநேகிதனைத் தொலைத்தவன்
- தட்சணை
- பரிமள விலாஸ்
- “மனிதர்கள் பல விதம் இவன் ஒரு விதம்”
- திருப்புமுனை – 2
- திருப்புமுனை -1