சங்கச் சுரங்கம் — 15: ஆறடி ஆறுமுகன்

This entry is part [part not set] of 24 in the series 20090521_Issue

சு. பசுபதி, கனடா



என் கணினித் திரையில் திடீரென்று ஒரு சொற்குமிழி எழும்பியது; அருணா என்னுடன் பேச விரும்புவதாக அது சொன்னது.

என்னுடைய உறவினருள், முனைவர் பட்டப் படிப்புப் படிக்கும் ஒரே தமிழ் மாணவிதான் அருணா; அதனால் எனக்கு அவள் மீது ஒரு விசேஷ ஈடுபாடு. இந்தியாவிலிருந்து அடிக்கடி என்னிடம் தமிழைப் பற்றிக் கேள்விகள் கேட்பாள். அவளுடைய அழைப்பை நான் ஏற்றதும், சில நிமிடங்களில் இருவரும் வலைக்கேமராவைப் பயன்படுத்திப் பேசத் தொடங்கினோம்.

“மாமா, என் சங்கத்தமிழ் ஆசிரியை பூரணி ‘ஆறடி ஆறுமுகன்’ என்ற தலைப்பில் எல்லோரையும் ஒரு கட்டுரை எழுதச் சொல்லி இருக்கிறார். சிறந்த பொருளும், சிறப்பான விளக்கங்களும் இருந்தால் பரிசு உண்டு என்று சொல்லியிருக்கிறார். உங்களைத் தான் நான் நம்பி இருக்கிறேன், மாமா. டொராண்டோவில் ஆறடிக்கு ஒரு முருகன் மூலவராய் உள்ள கோவில் இருக்கிறது என்று படித்திருக்கிறேன். அதைப் பற்றிச் சொல்லுங்கள் , எழுதிக் கொள்கிறேன்” என்றாள் அருணா.

‘அடி, அசடே, உன் ஆசிரியையின் குறும்பு புரிகிறது. உங்களுக்குச் சங்கத் தமிழ் தெரியுமா என்று பார்க்கிறார்! அதற்குப் பதில் இது இல்லை. உன் கட்டுரையில் முருகனைப் பற்றிய ஓர் ஆறடிச் செய்யுளைக் கொடு!” என்றேன். “மாமா, நான் முதலில் அப்படித்தான் நினைத்தேன். அருணகிரி நாதரின் பாடல்கள் எல்லாம் தேடினேன். எல்லாம் நான்கு அடி விருத்தங்களாய் இருக்கின்றன. அதனால் தான் இந்த வழிக்குத் திரும்பினேன்”

“ அஞ்சேல்! இதோ வருகிறது. ஓர் ஆறடிக் கவிதை! சங்கத் தமிழில் ! அதுவும் ஒரு விதத்தில் மிகச் சிறந்த கவிதை! ஆசிரியை உனக்கே பரிசு தருவார்” என்றேன்.

அருணாவின் ஆர்வம் கேமரா மூலம் வெளிப்படையாகத் தெரிந்தது. எப்படி உங்கள் வசதி? நீங்களும் கேட்கிறீர்களா?

“பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற ஒரு கடைச் சங்கப் புலவர் எட்டுத் தொகை நூல்களில் ஐந்து நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துகள் பாடி இருக்கிறார். ( அவர் பாடிய பாரதம் நமக்குக் கிட்டவில்லை. அந்த நூலின் சில செய்யுள்கள் தொல்காப்பியப் பொருளதிகாரம் நச்சினார்க்கினியத்திலும், யாப்பருங்கல விருத்தி முதலிய நூல்களிலும் எடுத்துக் காட்டுகளாக உள்ளன.) இவற்றுள் குறுந்தொகைக்கு இவர் பாடிய கடவுள் வாழ்த்து முருகனைப் பற்றியது. ஆறடிகள் கொண்ட ஆசிரியப்பா அது! அதைப் பற்றித்தான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன். மிக எளிய பாடல் தான். ஆனால் அழகு மிக்கது. முதல்வனைப் பற்றி குறுந்தொகையில் உள்ள இந்தப் பாட்டு, முதன்மை பெற்ற பாட்டும் கூட.”

“எப்படி முதன்மை பெற்ற பாட்டு?” என்று கேட்டாள் அருணா. “ முந்திரிக் கொட்டை! அது ஒரு ‘ஹிட்ச்காக்’ ‘ஸஸ்பென்ஸ்’ ! கடைசியில் சொல்கிறேன் !” என்றேன்.

‘குறுந்தொகை’ அகம் பற்றிய 401 பாடல்கள் நிறைந்த ஒரு தொகுப்பு. ஆய்வுக்குரிய ஒன்றிரண்டைத் தவிர, 4 முதல் 8 அடிகள் கொண்ட பாடல்கள் தாம் யாவும் . இந்த ‘அகப்’ பாடல் தொகுப்பிற்குப் ‘புறத்தை’ சேர்ந்த ஒரு பாடல் தான், கடவுள் வாழ்த்தாக உள்ளது! அதுதான் நாம் பார்க்கப் போகும் ‘ஆறடி ஆறுமுகன்’!

ஆண்டவனின் அருள்மிகு உருவத்தைப் ‘பாதாதி கேசம்’ ‘அடி முதல் முடி’ என்ற வரிசையில் விவரிப்பதே பொதுவான வழக்கம். அதைத்தான் இங்கே பெருந்தேவனார் கடைபிடிக்கிறார்.

செவ்வேளைப் பற்றிய பாடல் அல்லவா? எல்லாம் ‘சிவப்பு’ மயமாக வருகிறது கவிஞருக்கு!

தாமரை மலர் போன்ற அழகிய செம்மை பொருந்திய திருவடி; உடலோ பவழம் போல் உள்ளது; உடல் ஒளிர்கிறது; குன்றிமணியைப் போன்ற சிவந்த ஆடை; கையில் கிரவுஞ்ச மலையைப் பிளக்கும்படி வீசிய செஞ்சுடர் வேல்; இன்னொரு கையில் சேவற்கொடி; இப்படிப்பட்ட முருகன் காத்தருளுவதால், உலகில் உள்ள எல்லா உயிர்களும் இன்பமான நாட்களை அடைந்து நிற்கின்றன.

தாமரை புரையும் காமர் சேவடி,
பவழத்து அன்ன மேனி, திகழ் ஒளி,
குன்றி ஏய்க்கும் உடுக்கை, குன்றின்
நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல்,
சேவல்அம் கொடியோன் காப்ப.
ஏம வைகல் எய்தின்றால் — உலகே. ( குறுந்தொகை, கடவுள் வாழ்த்து )

[ புரையும் – போன்ற; காமர் – அழகிய; ஏய்க்கும் – ஒத்த; உடுக்கை – ஆடை; நெஞ்சு – நடுவிடம்; பக – பிளக்கும்படி; சேவல் – (சிவந்த கொண்டை கொண்ட) சேவல்; ஏமம் – இன்பம்; வைகல் – நாள் ]

“ பாடல் மிக அழகாக இருக்கிறது , மாமா. என் ஆசிரியைக்குப் புதுமை என்றால் மிகவும் பிடிக்கும். எந்த உரையாசிரியரும் சொல்லாத ஒரு கோணத்தில் ஏதாவது இந்தப் பாடலைப் பற்றிச் சொல்ல முடியுமா? ”

நான் சிரித்தேன். “ சரி, உன் ஆசிரியையின் பெயருக்குப் பொருத்தமாய் ஒரு விளக்கம் கொடுக்கிறேன்! பலசமயங்களில் இயற்றியவருக்கே தெரியாத சில நயங்கள் ஒரு பாடலில் இருப்பது நமக்குத் தெரியுமே! அதுபோல் இதுவும் ஒன்று என்று வைத்துக் கொள்ளேன்! எண்கணிதத்தில் முதலில் நுழைவோம்! இந்த ஆறு என்கிற எண் இருக்கிறதே , அதற்குத் தற்காலக் கணிதத்தில் ஒரு விசேஷ குணம் உள்ளது . அந்தத் தொடர்பில் உங்கள் ஆசிரியையின் பெயரும் அடிபடும்! அதைச் சொல்லிக் கொஞ்சம் ‘புதுமைவிரும்பி’யை அசத்த முயலேன்” என்றேன்.

“சொல்லுங்கோ, மாமா” என்றாள் அருணா ஆவலுடன்.

“ எண்களைப் பலவிதத்தில் பிரிக்கலாம். அவற்றுள் ‘ பூரண ‘ ( perfect) எண்கள் என்று ஒரு வகை. ஓர் எண்ணின் சரியான ( proper) நேர்க்குறி வகுப்பான்களைக் ( positive divisors) கூட்டினால் அந்த எண்ணே வந்தால் அது ஒரு ‘பூரண’ எண் எனப்படும்.

எண்களில், ஆறு தான் முதல் ‘பூரண’ எண்! ஏனென்றால், அதன் வகுப்பான்களான 1, 2, 3 மூன்றையும் கூட்டினால் ஆறு வருகிறது அல்லவா? ( ஆறை ஆறே வகுக்கும்; ஆனால் அது ‘சரியான’ வகுப்பானன்று! ) ஆறுக்குப் பின் அடுத்த பூரண எண் , 28 தான். ( 1+2+4+7+14) . ஆறுமுகனுக்குப் பிரியமான ‘ஆறு’ என்கிற எண்ணுக்குப் பல பெருமைகளை, விளக்கங்களைச் சொல்வர் பேரறிஞர்கள். அவற்றை எல்லாம் உன்கட்டுரையில் நீ எழுதலாம். அவற்றின் கூடவே, அந்தப் ‘பூரண’னுக்கும் ‘பூரண’ எண்ணிற்கும் உள்ள ஒற்றுமையையும் சொல்லலாம் இல்லையா? இது எப்படி? ”

“தலையைச் சுற்றினாலும், ஒரு மாதிரியாகப் புரிகிறது. இதை நான் என் விளக்கத்தில் எழுதி என் ஆசிரியையை அசத்தப் பார்க்கிறேன்” என்றாள் அருணா.

“ கேள், இதை பற்றிய இன்னொரு ஆறடி வெண்பாவையும் சொல்கிறேன். எழுதிக்கொள். பாவலர் பாதிமதியர் இயற்றியது இந்தக் கவிதை. அதன் பொருள்: நாம் குறைவின்றி வாழவேண்டுமானால் ‘நிறைவு’ அல்லது ‘பூரணம்’ என்ற எண்ணத்தை நினைவூட்டும் தெய்வத்தைத் தான் வணங்குவோம் அல்லவா? அதைத்தான் குறிக்கிறார் ‘ஆறு’முகன் ! புராணத்தில் வள்ளியும், தெய்வயானையும் திருமாலின் மகள்களாகச் சொல்லப்படுவர். அதனால், ‘குறைவொன்றும் இல்லாத கோவிந்தன்’ என்று ஆண்டாளால் போற்றப்பட்ட திருமாலின் பெண்கள் மணம் புரிய ஒரு ‘பூரணனை’த் தானே தேர்ந்தெடுப்பர்? அதனால் தான் அவர்கள் ‘பூரண’ எண்ணுக்கு உரிய ஆறுமுகனை முன்பு மணந்தனர் போலும்!

குறைவின்றி வாழநாம் கும்பிடும் தெய்வம்
நிறைந்ததெனும் எண்ணம் நிறுவச் — சிறப்புடன்
ஆறெழுத்துச் சுட்டும் அருங்கணித தத்துவமாம்
‘பூரணஎண்’ பூண்குகனைப் போற்றிச் — சிறிதும்
‘குறைவொன்றும் இல்லாத கோவிந்தன்’ பெண்கள்
முறையாய் மணந்தனர்காண்! முன்பு.

உன் ஆசிரியர் கேட்டதற்கு ஒன்றுக்குப் பதிலாய் ‘இரண்டு’ ஆறடி ஆறுமுகன்களைக் கொடுத்து விட்டேன்.” என்றேன்.

“அது சரி, குறுந்தொகைக் கடவுள் வாழ்த்து ஒரு ‘முதன்மையான’ செய்யுள் என்று எப்படிச் சொல்வது? ”

“ஆ, அதுவா! அதுதான் உன் கட்டுரையின் ‘பஞ்ச் லைன்’ ! சொல்கிறேன் கேள்! ஆறுமுகனான பூரணனைப் பற்றிப் பூரண எண்ணான ஆறு அடிகளில் பாடப் பட்ட இந்தச் செய்யுளில் ஒரு குறைவும் இல்லை , அதாவது , இந்தச் செய்யுளும் ஒரு ‘பூரணம்’ என்று …. சாமான்யனான நான் சொல்லவில்லை…. யாப்பருங்கலக் காரிகைக்கு உரை எழுதிய குணசாகரர் என்ற பேரறிஞர் சொல்கிறார் ! அந்த உரையை எடுத்துப் பார்! அதன் கடைசிப் பகுதியில் சொல்குற்றம், பொருள்குற்றம் போன்ற பல குற்றங்களை விவரித்துவிட்டுப் பின், கடைசிப் பக்கத்தில் , இந்தப் பாடலை இட்டுக் குணசாகரர் “ இஃது எல்லாக் குற்றமும் தீர்ந்த செய்யுள் ” என்று சொல்கிறார்! இதற்கு மேல் உனக்கு என்ன சான்றிதழ் வேண்டும்? உனக்குத் தான் தெரியுமே? இப்படிப்பட்ட சான்றிதழை வாங்க வேண்டுமென்றால், அது ஒரு சாதாரண காரியமா? என் ஆய்வுத்துறையில், புகழ்பெற்ற அறிஞர் ஒருவரிடமிருந்து ஓர்ஆய்வேட்டுக்கு இப்படிப்பட்ட ஒரு சான்றிதழ், அதுவும் மிகவும் பேர் பெற்ற ஒரு புத்தகத்தில் வந்தால் , அது நோபல் பரிசுக்குச் சமம் என்றல்லவா நினைத்துப் பெருமைப்படுவர் ? ஒரு படைப்பின் சிறப்பே அதை மற்ற அறிஞர்கள் எப்படி மதிக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தது தானே? இப்போது சொல், குறுந்தொகையில் வரும் இந்த ‘ஆறடி ஆறுமுகன்’ பலவகைகளிலும் மிகச்சரியான, குறைவுகளே இல்லாத, ஒரு ‘பூரணமான’ செய்யுள் இல்லையா?”

எனக்கு நன்றி கூறி, முகத்தில் திருப்தி ஒளிர, வலைக்கேமராத் தொடர்பைத் துண்டித்தாள் அருணா.

~*~o0O0o~*~
s dot pasupathy at yahoo dot ca

Series Navigation

சு. பசுபதி, கனடா

சு. பசுபதி, கனடா