கோஸவா சுதந்திர பிரகடனமும் அதன் பின்னுள்ள உலக அரசியலும்

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

சுந்தரேஷ்


கோஸவோ என்பது எங்கே இருக்கிறது என்று கேட்டால் பலருக்கு சரியாகத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் செர்பியாவிடமிருந்து விடுதலை பெற்ற தனிநாடாக அது பிப்ரவரி 17-இல் தன்னிச்சையாக அறிவித்ததும் இலங்கையிலிருந்து ஸ்பெயின் வரை பல நாடுகளிடம் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன. கோஸவோவின் அறிவிப்பை ரஷ்யா கடுமையாக எதிர்த்துள்ளது. சீனாவும் இதனை நிராகரித்துள்ளது. பிரேசிலும் இந்தியாவும் இந்த அறிவிப்பு சட்டபூர்வமானதா என ஆராய்ந்து கொண்டிருப்பதாக அறிவித்திருக்கின்றன. அதே சமயம், நேட்டோ நாடுகள் குழுமத்தில் உள்ள அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கோஸவோவிற்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளன.

செர்பியா, பால்கன் நாடுகள் என்ற்ழைக்கப்படும் தீபகற்பப் பகுதியில் உள்ள பிரதேசம். குரோயேஷியா, போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா, மாசடோனியா, செர்பியா, மாண்டிநெக்ரோ, அல்பேனியா, க்ரீஸ், பல்கேரியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நிலப்பரப்பு இது . இதில் த்ரேஸ், துருக்கியின் சில பகுதிகள் ஆகியவையும் அடங்கும். ரஷ்யாவின் பெரும்பான்மை இனமான ஸ்லாவியர்கள் பல நூற்றாண்டுகள் முன்பே இங்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வந்தனர். செர்பியாவில் ஸ்லாவிய ஆர்த்தடாக்ஸ் கிறித்தவரும், செர்பியப்பகுதியாக இருந்த கோஸவோவிலும் அதன் அண்டை நாடான அல்பேனியாவிலும் முஸ்லீம்களும், குரோவேஷியாவில் கத்தோலிக்க மதத்தவரும் பெரும்பான்மையாக உள்ளனர்.

செர்பியாவிலிருந்து கோஸவோவின் விடுதலை, உலக நாடுகள் பலவற்றிற்கும் ஏன் இவ்வளவு முக்கியமாய் ஆனது என்று ஆராய அதன் கடந்த கால வரலாற்றையும், ஐரோப்பிய வரலாற்றில் செர்பியா மற்றும் கோஸவோ ஆகிய நாடுகளின் பங்கும் ஆராயத் தக்கவை.

பிரிவினையின் ஆரம்ப அத்தியாயம்

பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய, ஆசிய பகுதிகளை தரை வழியாக இணைப்பதாலும், மத்தியதரைக்கடலுக்கும் கருங்கடலுக்கும் இடையேயான நிலப்பரப்பை கொண்டிருந்ததாலும், வாணிப முக்கியத்துவம் மிகுந்தாகவும் பல கலாசாரங்களையும் பேரரசு மாற்றங்களையும் கண்ட பிரதேசமாகவும் பால்கன் பிரதேசம் விளங்கியது. இந்நிலப்பகுதியில் செர்பியர்களும் அல்பேனியர்களும் பல நூற்றாண்டுகளாக அருகருகே வாழ்ந்து வந்தனர். முதலில் ரோமப்பேரரசின் கீழும், பின்னர் பிசாண்டிய பேரரசின் கீழும் இருந்த காலத்தில் செர்பியர்கள் மற்றும் அல்பேனியர்கள் கலாசாரத்தில் பெருத்த வேறுபாடுகள் இல்லை. பிசாண்டிய பேரரசின் கீழ் இவ்விரு இனத்தவரிடத்தும் கிறித்துவ கலாசாரமே பெரிதும் பரவியிருந்தது. 14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை செர்பியர்களின் கையில் இருந்த இந்த நிலப்பிரதேசம், 1389-இல் ஆட்டோமான் அரசுடனான போரில் தோல்வியடைந்து அடிமையுற்றது. அடுத்த நூறு வருடங்களில் பால்கன் பகுதிகள் முழுமையாக துருக்கியின் ஆதிக்கத்தின் கீழ் வந்தன. வேளாண்மைக்கு ஏற்ற வளமான பகுதிகளாக இருந்த அல்பேனியா மற்றும் கோஸவோ பகுதிகளில் அல்பேனிய இனத்தவர் அதிக அளவில் இடம் பெயர்ந்து வாழத் தொடங்கினர். ஆட்டோமான் பேரரசின் கீழ் படிப்படியாக இந்த அல்பேனியர்கள் இஸ்லாமுக்கு மாற, ஆர்த்தடாக்ஸ் கிறித்துவம் எனப்படும் பழைய கிறித்துவத்தை சார்ந்திருந்த பல செர்பியர்கள் அல்பேனியா மற்றும் கோஸவோவை விட்டு வெளியேறி வடக்கே பெல்க்ரேடை நோக்கி நகரத் தொடங்கினர். 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்பேனியாவிலும் கோஸவோவிலும் கிறித்துவம் சிறுபான்மையாக்கப்பட்டு விட்டது. ஆதிக்க இனமாக இருந்த செர்பிய இனம் ஆட்டோமான் பேரரசில் இரண்டாம் தர குடிகளாக்கப்பட்டனர். அதே சமயம் அல்பேனியர்கள் முதல் தர குடிகளாக பல சலுகைகளுடன் அல்பேனியா, கோஸவோ போன்ற வளமான நிலப்பரப்புகளில் பல்கிப்பெருகத் தொடங்கினர். செர்பியர்களுக்கும் அல்பேனிய கோஸவர்களுக்கும் இடையே பகைமை புகையத் தொடங்கியது. 1990-களில் இந்த நிலப்பரப்புகளில் நடந்த ரத்த நிகழ்வுகளின் ஆரம்ப அத்தியாயம் இவ்வாறுதான் எழுதப்பட்டது.

உலகப்போர்களால் உருக்குலைந்த பிரதேசம்

ஆட்டோமான் பேரரசில் மேலாண்மையை இழந்த செர்பியர்கள் அதனை மீண்டும் பெறும் நாள் ஏறக்குறைய நானூறு ஆண்டுகளுக்குப்பின் வந்தது. 19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா பலம் பெறத் தொடங்கியது; துருக்கியை மையமாகக் கொண்ட ஆட்டோமான் பேரரசு பலம் இழக்கத் தொடங்கியது. 1878-இல் நடந்த ஆட்டோமான் – ரஷ்யப்போரில் ஆட்டோமான் பேரரசு தோல்வியடைய, ஸ்லாவிய ரஷ்யாவின் நட்பு இனமான செர்பியர்கள் மீண்டும் பலம் பெறத்தொடங்கினர். செர்பிய தேசியவாதம் பல மடங்கு பலமடைந்தது. ஆனால் இதன் எதிர்விளைவாக கோஸவோ நிலப்பரப்பில் சிறுபான்மையாய் இருந்த செர்பியர்கள் அல்பேனியர்களால் வடக்கு நோக்கி தள்ளப்பட்டனர். கோஸவோ நிலப்பகுதி இஸ்லாமிய அல்பேனியர்கள் ஆதரவு பகுதியாகவும், செர்பியா ஆர்த்தடாக்ஸ் கிறித்துவத்தைச் சார்ந்தவர்கள் பகுதியாகவும் உருவெடுத்தது. 19-ஆம் நூற்றாண்டின் முடிவில் செர்பியர்கள் கையில் மீண்டும் செர்பிய ஆதிக்கம் முழுமையாக வந்தடைந்தது.

1912-இல் செர்பியா உள்ளிட்ட நான்கு பால்கன் நாடுகள் ஒன்றிணைந்து துருக்கியின் நட்பு நாடான அல்பேனியா மீது போர்தொடுத்தன. இப்போரில் அல்பேனியா தோல்வியைத் தழுவ, அதைத்தொடர்ந்து கோஸவோவில் செர்பியப்படைகள் நிகழ்த்திய வன்முறையில் பல கோஸவர்கள் உயிரையும் உடைமையயும் இழந்தனர். இந்தப்போரின் விளைவாக கோஸவோ செர்பியாவின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. கோஸவோவில் பெரும்பான்மையாக இருந்த அல்பேனியர்கள் செர்பியாவின் மேலாண்மையை எதிர்க்கத் தொடங்கினர்.

ஸ்லாவிய மக்கள் வாழும் செர்பியாவுக்கு ஸ்லாவிய பெரும்பான்மை ரஷ்யா எப்போதுமே ஆதரவு தந்துள்ளது. முதல் உலகப்போர் மூண்டதற்கே போஸ்னிய செர்பிய மாணவன் ஒருவன் ஆஸ்திரியா-ஹங்கேரி இளவரசரக் கொன்றதுதான் காரணமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரியா-ஹங்கேரி செர்பியா மீது போர் தொடுக்க, ரஷ்யா செர்பியாவுக்கு ஆதரவாகவும், ஜெர்மனி ஆஸ்திரியா-ஹங்கேரிக்கு ஆதரவாகவும் போர்க்களத்தில் இறங்கியதுதான் ஐரோப்பாவை முதல் உலகப்போருக்கு இட்டுச்சென்றது. முதல் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்வி செர்பியர்கள் தரப்பை வலுப்படுத்தியது. கிறித்துவம் தோய்ந்த செர்பிய தேசியவாதம் மீண்டும் வலுப்பெறத் தொடங்கியது. இந்நிலையில் இரண்டாம் உலகப்போர் மூண்டபோது, செர்பியர்கள் நாசிகளுக்கு எதிராக partisan-களாகப் போரிடத்துவங்கினர். இது முஸ்லீம்கள் மீதான வன்முறையாக உருவெடுத்தது. அல்பேனியர்களோ நாசிகளோடு ஒத்துழைத்து செர்பியர்களுக்கும், யூதர்களுக்கும் எதிரான வன்முறைகளில் ஈடுபட்டனர். இரண்டு உலகப்போர்களிலும் இரு தரப்புகளிலும் நிகழ்ந்த பாஸ்பர வன்முறைகள் பால்கன் பகுதியில் கிறித்துவ முஸ்லீம் உறவை கடுமையாக சீர்குலைத்து விட்டது. பார்ட்டிசன்களின் தலைமையேற்றுப் போரிட்ட கம்யுனிசத் தலைவர் மார்ஷல் டிட்டோ இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஒருங்கிணைந்த யுகொஸ்லாவியாவின் அதிபரானார்.

தேசியவாதத்தை அடக்க மதவாதத்தை வளர்த்த மார்ஷல் டிட்டோ

கம்யூனிச டிட்டோவின் ஆட்சி, பிரிவினைவாதத்தை ஒடுக்கும் பொருட்டு முதலில் கோஸவோவை கடுமையான அடக்குமுறையால் ஆண்டது. பின்னாளில் டிட்டோ அராபிய நாடுகளுக்கு ஆதரவாளரானார். 1967- அராபிய இஸ்ரேல் போரில் இஸ்ரேல் எதிர்ப்பு நிலையை எடுத்தார். இந்நிலையில் யுகோஸ்லாவியாவில் வலுவடைந்து வந்த செர்பிய தேசியவாதத்தை எதிர்க்கும் முகமாக போஸ்னிய முஸ்லீம்களை மத அடிப்படையில் ‘தனி தேசிய அடையாளம் உடையவர்கள்’ என டிட்டோ அறிவித்தார். இது பால்கன் பகுதியில் மத அடிப்படையில் நாடு பிரிவினை செய்யப்படுவதற்கு அரசியல் அங்கீகாரத்தைத் தந்து விட்டது. தேசியவாதத்திற்கு எதிராக சிறுபான்மை மதவாதத்தை வளர்க்கும் பிரிவினைவாதப் போக்குக்கு பாதை போட்டுத்தந்தது டிட்டோவின் இந்த செயல்.

செர்பிய தேசிய வாதம் கடுமையாக ஒடுக்கப்பட்ட டிட்டோவின் ஆட்சியில் கோஸவோவின் அல்பேனிய முஸ்லீம்களைத் திருப்தி செய்யும் வகையில் பல சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. இது “கிறித்துவ செர்பியர்க”ளுக்கும் “இஸ்லாமிய அல்பேனியர்களு”க்கும் இடையே நிரந்தரமான பிளவையும் வெறுப்பையும் ஏற்படுத்தி விட்டது. இந்த வெறுப்புகள் 1980-இல் டிட்டோ மறைவுக்குப்பின் முஸ்லீம்களுக்கு எதிரான கிறித்துவ செர்பிய நடவ்டிக்கைகளாக பீறிட்டு வெளிக்கிளம்பின. கோஸவோக்கள் தனிநாடு கேட்பதை செர்பியர்கள் நாட்டைப் பிளவுபடுத்துவதாக கடுமையாக எதிர்க்கத் தொடங்கினர். இந்நிலையில் பல ஆண்டுகள் அடக்கப்பட்ட தேசியவாதத்தின் தீவிர உருவமாக செர்பிய அதிபர் மிலோசெவிக் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். இவரும் டிட்டோவின் கம்யுனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்தான். 1974-இல் டிட்டோவின் ஆட்சியில் சுயநிர்ணய அதிகாரம் பெற்றிருந்த கோஸவோ 1991-இல் செர்பியாவிலிருந்து பிரிந்த தனி நாடாக அறிவித்தது. செர்பியா இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அல்பேனியா தவிர உலக நாடுகள் எதுவும் இந்த அறிவிப்பை ஏற்காத நிலையில் மிலோசெவிக் கோஸவோவை செர்பியாவின் நேரடி அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தார். பிரிவினை கோரும் அல்பேனிய கோஸவோக்களின் மீது கடுமையான அடக்குமுறையும் வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஏறக்குறைய 10 லட்சம் கோஸவ அல்பேனியர்கள் கோஸவோவிலிருந்து வெளியேறினர். தொடர்ந்த கலவரங்களில் பல்லாயிரக்கணக்கான அல்பேனியர்களும் செர்பியர்களும் உயிரிழந்தனர். ஐநாவும் நேட்டோவும் தலையிடத்தொடங்கின. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர நேட்டோ விமானங்கள் செர்பிய தரப்பு மீது 72 நாட்கள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்ததில் செர்பியா சின்னாபின்னமாக்கப்பட்டது. செர்பியப்படைகள் கோஸவோவிலிருந்து பின்வாங்க, கோஸவோ ஐநாவின் பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதியாக ஆனது. அமெரிக்க அழுத்தத்தால் 2001-இல் மிலோசெவிக் கைது செய்யப்பட்டு 2006-இல் சிறையிலேயே இறந்தார். இடையில் இஸ்லாமிய கோஸவோ விடுதலை இயக்கம் (KLA) பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்டது; பிறகு அந்தத்தடை விலக்கிகொள்ளவும் பட்டது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவிற்கு “வீட்டோ” (veto) அதிகாரம் உள்ளது. 2007-இல் ஐநாவின் மேற்பார்வையில் கோஸவோவுக்கு தனிநாடு தருவது என்ற தீர்மானம் ரஷ்ய எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. இந்நிலையில், ரஷ்ய ஒப்புதல் இல்லாமல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலால் அங்கீகரிக்கப்படாமலேயே செர்பியாவிலிருந்து விடுதலை பெற்று பிரிவதாக கோஸவோ தன்னிச்சையாக அறிவித்திருக்கிறது.

எண்ணெய் அரசியல்

காக்கஸஸ் பகுதி -குறிப்பாக- காஸ்பியன் படுகை- ஏராளமான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை உள்ளடக்கிய பகுதி. உலகிலேயே சவுதி அரேபியா, சைபீரியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக எண்ணெய் வளம் நிறைந்த பகுதி காஸ்பியன் படுகையாகும். இந்த எண்ணெய் வளத்தை மேற்கு ஐரோப்பாவிற்கு கருங்கடல் வழியாக இணைக்கும் முக்கியமான குழாய்ப்பாதை கோஸவோவின் அண்டை நாடான அல்பேனியா வழியாகச்செல்கிறது. அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆம்போ (Ambo- Albanian Macedonian Bulgrian Oil Corporation) இந்தப்பகுதியில் அதிநீள குழாய்ப்பாதை அமைப்பதில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பாதை அல்பேனியாவில் முடிவடைகிறது. கச்சா எண்ணெய் அல்பேனியாவிலிருந்து அமெரிக்க எண்ணெய்க்கப்பல்களில் ஏற்றப்பட்டு ராட்டர்டாம் வழியாக் நியுயார்க்/ நியுஜெர்சி துறைமுகத்தை வந்தடையும். “மத்திய கிழக்கு நாடுகளின் மீதான எண்ணெய்ச் சார்பை வெகுவாகக் குறைக்க வேண்டும்” என்ற எண்ணம் அமெரிக்காவில் வலுவடைந்து வரும் இந்நாளில், இந்த மாற்று திட்டம் அமெரிக்காவிற்கு மிகவும் அவசியமான ஒன்று. எனவே அமெரிக்காவைப்பொறுத்தவரை அல்பேனிய கோஸவோவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அதன் தொலைநோக்குத்திட்டத்தின் முக்கியப்பகுதியாகும். காஸ்பியன் கச்சா எண்ணெயை மேற்கு ஐரோப்பாவிற்கு எடுத்துச்செல்லும் இந்த முக்கிய குழாய்ப்பாதையை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மேற்கு ஐரோப்பிய வல்லரசுகளுக்கும் முக்கியமான ஒன்று. கிழக்கு ஐரோப்பாவிலிருந்து கச்சா பொருட்கள் பரவலான வினியோகத்திற்காக மேற்கு ஐரோப்பாவிற்கு வருகையில் ஜெர்மனியும் பிரான்சும் பெரிதும் பயனடையும் என்பதால் இந்நாடுகள் கோஸவோ விடுதலையையும் அங்கே ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலின் ராணுவ இருப்பையும் வரவேற்கின்றன. ஆக, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகியவற்றின் கோஸவோ பாசத்தின்பின் வலுவான பொருளாதாரக்காரணிகள் உள்ளன.

உலக நாடுகளின் எதிர்வினைகள்

கோஸவோவின் தன்னிச்சையான பிரிவினை அறிவிப்பால் இன்றைய நிலையில் மிகவும் எரிச்சல் அடைந்திருக்கும் நாடு ரஷ்யாதான். கோஸவோ விடுதலையும் அங்கு நேட்டோ கூடாரம் போடுவதும், எண்ணெய் வளம் நிறைந்த ஜார்ஜியா ரஷ்யாவிடமிருந்து விலகி நேட்டோ நாடுகளின் பக்கம் சாயும் நிலையை உருவாக்கலாம். ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் இல்லாமலேயே கோஸவோ விடுதலைப் பிரகடனம் செய்ததும் அதற்கு அமெரிக்கா உடனே ஆதரவு தெரிவித்திருப்பதும் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடலாம் என பல நாடுகள் அஞ்சுவதில் நியாயம் உள்ளது. ஏறக்குறைய இதே போன்ற பிரச்சனையைக்கொண்ட செச்னிய பிரிவினைக்கு இது வழி வகுத்து விடலாம் என்ற கவலை ரஷ்யாவிற்கு உண்டு. உய்கர் மற்றும் தைவானின் தனி நாடு கோரிக்கைகளுக்கு கோஸவோ ஒரு முன்னுதாரணமாகி விடும் என்று சீனா கருதுவதால், கோஸவோவின் விடுதலைப்பிரகடனத்தை அது ஏற்கவில்லை. இதே போல பாஸ்க் பிரிவினையாளர்களின் தரப்புக்கு வலு சேர்க்கும் என்பதால் ஸ்பெயினும், விடுதலைப்புலிகளின் தரப்புக்கு வலு சேர்க்கும் என்பதால் இலங்கையும் இதனை எதிர்க்கின்றன. கோஸவோவின் பிரகடனம் சட்டரீதியாக சரியா என ஆராய்ந்து கொண்டிருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. (முன்பு யூகோஸ்லேவியா மீது நேட்டோ குண்டு மழை பொழிந்தபோது இந்தியா அச்செயலை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). இந்நிலையில், உலகத்தின் பல பகுதிகளில் உள்ள செர்பியர்கள் கோஸவோ விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செர்பியாவின் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டுள்ளது. கோஸவோ சாலைத்தடைகள் பல எரிக்கப்பட்டுள்ளன. 90% முஸ்லீம் மக்கள் வாழும் கோஸவோவின் விடுதலைப்பிரகடனத்தை இஸ்லாமிய ம்க்கள் பேரவை (Organization of the Islamic Conference) வரவேற்றிருப்பதில் வியப்பில்லை.

மேற்கு ஐரோப்பாவினை நோக்கிய போதை மருந்து கடத்தலின் மூலம் கோஸவோ விடுதலைப்படைக்கு செர்பியர்களை எதிர்த்த போருக்கான தளவாடங்கள் வாங்க பெருமளவு பணம் கிடைத்தது. மேலும் ஜெர்மனி மற்றும் ஸ்விஸ் நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்ந்த அல்பேனியர்கள் தங்கள் வருமானத்தில் 3 சதவீதத்தை கோஸவோ விடுதலைப் போருக்காக அளித்தனர். 1990-இன் பிற்பகுதிகளில் கோஸவோ விடுதலைப்படைக்கு இஸ்லாமிய நாடுகளின் பண உதவி கிடைக்கவும் தொடங்கியது. அல்-குவைதா அமைப்பின் தொடர்பும் ஏற்பட்டது. கடந்த மே மாதம் நியு ஜெர்ஸி டிக்ஸ் கோட்டையில் உள்ள அமெரிக்க ராணுவவீரர்களைக் கொல்ல சதி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் அல்பேனியர்கள் ஆவர். இது போன்ற காரணங்களால், மேற்கு ஐரோப்பாவில் ஏற்கனவே வளர்ந்து வரும் இஸ்லாமிய தீவிரவாதம், கோஸவோ விடுதலையால் மேலும் முடுக்கி விடப்படலாம் என்று பல நாடுகள் கவலைப்படுகின்றன.

பிரச்சனைகளின் முடிவா அல்லது புதிய துவக்கமா?

எண்ணெய் வள ஆதிக்க அவசியத்தின் அடிப்படையில் உருவான பொருளாதார காரணங்களுக்காக செர்பியாவின் உள்ளே நுழைந்து ஒரு செயற்கையான அமைதியை நேட்டோ நாடுகளும் (ரஷ்ய ஆதரவின்றி) ஐநாவின் பாதுகாப்பு அமைப்பும் கூட்டாக இன்று உருவாக்கியுள்ளன. தேசியவாதத்தை அடக்க சிறுபான்மை மத வாதத்தை தூண்டிய டிட்டோவின் செயல் போஸ்னியாவில் 90-களில் பெரும் வன்முறையை உருவாக்கியது. இன்று செர்பியாவிலிருந்து கோஸவோவும் அதே போல் அப்பிரதேசத்திலுள்ள மதப்பெரும்பான்மையின் அடிப்படையில் பிரிந்துள்ள நிலை, மேலும் பல குழப்பங்களுக்கு வித்திடும் வாய்ப்பு உள்ளது. எண்ணெய் வள ஆதிக்கத்திற்காக மதத் தீவிரவாதத்தை கண்டு கொள்ளாமல் விடும் மேற்கின் கிட்டப்பார்வைக் கோளாறு, பால்கன் பிரதேசத்தை மீண்டும் ஒரு சிக்கலான போருக்குள் தள்ளிவிடலாம்.

வரலாறு நிலையாக ஓரிடத்தில் நின்று விடுவதில்லை. நியாயம் கிடைக்காத வரலாற்று அநீதிகள் வடுவாகிப் போனாலும் வலியை இழப்பதில்லை. செர்பியா மற்றும் கோஸவோக்கிடையேயான பிரச்சனை சொல்லித்தரும் பாடம் இதுதான். பல நூற்றாண்டு வரலாற்றுச்சிக்கல்களில் உருவாகிக்கிடக்கும் இந்தப்பிரச்சனை கோஸவோவின் தற்போதைய விடுதலைப் பிரகடனத்துடன் முடிந்து விடாது என்பது மட்டும் நிச்சயம்.


Series Navigation

சுந்தரேஷ்

சுந்தரேஷ்