கேட்பாரில்லாமல் கீழ்சாதிகளாக்கப்பட்ட சங்கத் தமிழர்

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

பிரகஸ்பதி


பாப்பானுக்கு முந்திய பறையோன்
கேட்பாரில்லாமல் கீழ்சாதியானானே

– என்பது பறையர் இன மக்களின் சில நூற்றாண்டு கால புலம்பலாகும். தமிழுக்கு இலக்கணம் வகுத்துச் செம்மைப்படுத்திய அகத்தியனாரும், திருக்குறள் இயற்றிய வள்ளுவனாரும் பிறந்த பறையர் குலத்தைத் தமிழரே அல்ல என்று அகராதி கண்ட தமிழக சூழலில் இப்புலம்பலைக் கேட்பாரும் கூட இல்லை. சங்க கால வாழ்வியலில் அறிவர் என்றும், கணியன் என்றும் அழைக்கப்பட்டுப் பிராமணருக்கு நிகரான சாதியாக விளங்கிய இப்பறையர் இன மக்கள், இன்று தங்கள் அடையாளங்களை இழந்து நிற்கின்றனர்.

துவாரகையிலிருந்து, கண்ணன் வழிவந்த நெடுமுடிவேந்தர்களையும், குறுமுடி வேளிரையும், அருவாளரையும் தமிழகம் அழைத்து வந்து சங்ககால நாகரிகம் படைத்த பறையர் இனம் மெல்ல மெல்ல பஞ்சமர் ஆகியதைத் தமிழ்ச் சமூகம் வேடிக்கை பார்த்து வாளாவிருந்தது. அதன் விளைவு, ஒட்டு மொத்த சங்கத் தமிழ்ச் சாதிகளுமே, தாங்களும் தமிழர்தானா என்றக் கேள்விக் குறியுடன் இன்று நிற்கின்றன. (சங்க கால வாழ்வியலில், அகத்திணைக்குரியோராகக் கொள்ளப்படும் நடுவண் ஐந்திணை மக்களும், தலை மக்களுமே, இங்கு சங்கத் தமிழர் என்ற சொல்லில் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்).

கி.பி. 16ஆம் நூற்றாண்டில், தமிழ் வேந்தர்குடியினர் தங்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்து, தெலுங்கு நாயக்கர் ஆட்சி நிலை பெற்ற சூழலில், சாதிய படிநிலைகளில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விட்டன. நாலஞ்சாதியான வேளாளர் இரண்டாம் சாதியாகவும், இரண்டு மற்றும் மூன்றாம் சாதிகள் ஐந்தாம் சாதிகளாகவும் மாற்றம் பெற்றன. அன்று ஏற்பட்ட குழப்பம், இன்று தமிழ்ச் சமூக சித்திரத்தைக் காண விழையும் புதியவருக்கு, ஒன்றுக்குப் பின் நான்கு, ஐந்து என்ற எண்கள்தான் தமிழில் உண்டோ என்ற மயக்கத்தை ஏற்படுத்திவிடும் நிலையில் உள்ளது.

சாதிய அடையாளங்கள் மாறத் தொடங்கிய 16ஆம் நூற்றாண்டிலிருந்து பல சாதிகள் தங்கள் சமூகத்தின் உரிமைகளையும், பெருமைகளையும், புராண மரபில், புராணங்களாகவும், சமூக ஆவணங்களாகவும் எழுதி வைத்துள்ளனர். இவ்வாறு தோன்றிய புராணங்கள்தான் வன்னியரின் வன்னியபுராணம், கைக்கோளரின் ‘ஈட்டி எழுபது’, நாடார் சாதியினரின் ‘வலங்கை மாலை’ மற்றும் ‘பனை எழுபது’, வேளாளரின் ‘ஏர் எழுபது’ மற்றும் ‘வேளாளர் புராணம்’, பலிஜவாரின் ‘பலிஜவார் புராணம்’ போன்ற புராணங்களும் பிற சமூக ஆவணங்களும் ஆகும். இப்புராணங்களிலும், சமூக ஆவணங்களிலும் கூறப்படும் செய்திகள், தொடர்புடைய சாதிகளின் உயர்வு கருதி மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளன எனக் கூறி, அவற்றை தமிழ்ச் சமூக ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. வேளாளர் தங்களை சூத்திர நற்குலமாக கூறிக்கொள்ளும் வேளையில், வன்னியர், நாடார், கைக்கோளர், பார்கவ குலத்தார், மற்றும் பலிஜவார் போன்ற சாதியினர் தங்களை சத்திரியர் (அரசகுலம்) என கூறிக் கொள்வது சைவ மரபிற்குப் புறம்பாகிப் போனது போலும்.

சித்தர்களின் நூல்கள், சைவ சாத்திர வரிசையில் இடம் பெற முடியாத பஞ்சம நிலையிலேயே உள்ளன என வி. சிதம்பர ராமலிங்கம் கூறுவார். ‘சித்தர்’ என்றால் அறிவர் என்று பொருளாகும். தமிழ் மரபு அகக்திய முனிவனைச் சித்தராகச் சித்தரிக்கின்றது, நச்சினார்க்கினியர், அகக்தியனை ‘அறிவர்’ எனக் குறிப்பிடுகின்றார். பாண்டியனுக்கு குருவாக விளங்கிய அறிவர் மரபினரும், பார்ப்பாருமே, சங்ககால வாழ்வியலில் அரசருக்கு அறிவுரை வழங்கக் கூடிய தகுதியைப் பெற்றிருந்தனர் என்பதைத் தொல்காப்பியம் தெளிவாக உணர்த்துகின்றது.

பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே
– /தொல்:பொருள்:498.

நாற்கவி ராசநம்பி இயற்றிய, நம்பி அகப்பொருள் விளக்கமும் இதனை உறுதிசெய்கின்றது,

அறிவர், கிழவோன், கிழத்தியென்றிருவர்க்கும்
உறுதி மொழிந்த உயர் பெருங்குரவர்
.

இதன் பழைய உரை: அறிவரென்பார் தலைமகற்கும், தலைமகட்கும், உறுதியைப் பயக்கும் உபதேசங்களைச் சொல்லும் மேம்பட்ட குருக்கள் என்றவாறு.

சங்ககால வாழ்வியலில், தலைமக்களின் குருக்களாக (பாண்டியனுக்கு அகத்தியன் விளங்கியதைப் போல்) அறிவர் குடியினர் விளங்கினர் என்பது உறுதியாகின்றது. இம்மரபில் வந்த சமூகத்தினரும், அவர்கள் எழுதிய நூல்களும், சைவ சாத்திர மரபில் பஞ்சம நிலையை அடைந்துவிட்டபொழுது, பிற சமூகத்தினரின் புராணங்கள் தீண்டத் தகாத நிலையை அடைந்து விட்டதில் வியப்பேதும் இல்லை தான்.

ஆகஸ்ட் 2006, காலச்சுவடு இதழில் பொ. வேல்சாமி இலக்கியக் களத்தில் உயர்சாதிக் கூட்டணி என்ற தலைப்பில் நூல் விமர்சனக் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அக்கட்டுரையின் இறுதியில், ‘சிவஞான மாபாடியம்’ என்ற புகழ் பெற்ற நூல், தமிழர்களில் உயர்வானவர்களைக் குறிக்க ‘சத்சூத்திரர்’ என்ற சொல்லாட்சியையும், தாழ்ந்த நிலையில் உள்ள தமிழர்களைக் குறிக்க ‘அசத் சூத்திரர்’ என்ற சொல்லையும், பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பை படித்ததன் விளைவுதான் மேலெழுந்த வாரியான நீண்ட புலம்பலாகும். சத்சூத்திரர் என்ற சொல்லாட்சி, இன்றை உயர்குடி வேளாளரைக் குறித்து நிற்பதை அனைவரும் அறிவோம். அவ்வாறாயின் பிராமணரும், வேளாளரும் அல்லாத பிற தமிழ்ச் சாதிகள் கீழ்சூத்திரர் என்றாகின்றது. தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிக்குப் பின், இலக்கியக் களத்தில் உயர்சாதிக் கூட்டணியால் (பிராமணர்+வேளாளர்) ஏற்படுத்தப்பட்டுள்ள இம்மாயையை, பொ.வேல்சாமி போன்ற ஆய்வாளர்களும் அங்கீகரித்து எழுதி வருவதுதான் வேதனையான ஒன்றாகும்.

வேளாளர் (சூத்திரர்) அல்லாத பிற தமிழ்ச் சாதிகள் சூத்திரரா?

சங்க கால வாழ்வியலில், நான்கு வருணப் பகுப்பு முறை இருந்ததை தனது புறநானூற்றுப் பாடல் மூலம் தெளிவாக்கிய ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் காலம் தொடங்கி கி.பி. 17ம் நூற்றாண்டு வரையிலான தமிழரின் அனைத்து இலக்கண நூல்கள் மற்றும் நிகண்டுகளும், தமிழ்ச் சமூகத்தில் நான்கு வருணங்கள் தெளிவான வரையறைகளுடன் நிலவி வந்ததை சுட்டுகின்றன. (பார்க்க, திண்ணை இணையதள இதழில் வெளிவந்துள்ள நான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை என்ற என்னுடைய கட்டுரை.)

தொல்காப்பிய மரபியல் சூத்திரங்கள் இடைச் செருகல் என்போர், பிற்கால இலக்கண நூல்கள், நிகண்டுகள், பிற இலக்கியங்கள் கூறும் நான்கு வருணங்களைப் பற்றிய குறிப்புகளும் இடைச் செருகல் எனக் கூற முற்படுவரா? பார்ப்பனர் சூழ்ச்சி செய்து தொல்காப்பியத்தில் மரபியல் சூத்திரங்கள் சிலவற்றை இடைச் செருகல் செய்து விட்டதால், பிற்காலத்திய புலவர்களும் அம்மரபையே கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று எனக் கூறி தப்பித்துக் கொள்ளலாமா? நம் கற்றோர்களால் வேளாண் மரபில் வந்தவராக நம்பப்படும் வேந்தர்கள், நடைமுறையில் இல்லாத ஒரு பகுப்பு முறையை இலக்கணங்களிலும், நிகண்டுகளிலும் சூழ்ச்சிக்காரர்கள் எழுதி வந்ததையோ அல்லது இடைச் செருகி வந்ததையோ தடை செய்ய முன்வரவில்லை என்பது முரண்படவில்லையா? சாதி நான்கு உண்டெனக் கூறும் சேக்கிழார் பெருமான் தன் சொந்த சாதியை சூத்திர நற்குலம் என்றும், நாலாங்குலம் என்றும் எழுதுவதற்கு நிர்பந்தித்தது யார்? சோழனை அண்டி வாழ்ந்த பிராமணர்கள் இவ்வாறு பணித்திருப்பர் என எடுத்துக் கொள்ளலாமா? வேளாண் மரபில் தோன்றி அரச பதவியைத் துய்த்தபின், தன் சொந்த சாதியையே நாலாங்குலமாக வகைப்படுத்திய பிராமணரை ஆதரித்த வேந்தர்கள் மீது இப்பொருள் தொடர்பான ஒரு வசைப் பாடல் கூடவா தோன்றவில்லை? கம்பன், தன் சொந்தப் பிரச்சினைக்காகவே வேளாளரை உயர்த்தியும், சோழனை வசைபாடியும் எழுதியுள்ளதாகச் சில பாடல்கள் கிடைத்துள்ளன. இவ்வசைப்பாடல்களும் கூட, வேளாளர்குலம் வேறு, அரசர்குலம் வேறு என்றவாறே பாடப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

சோற்றிற்குள் முழுப்பூசனிக்காயை வெற்றிகரமாக மறைத்துவிட்டதாக நம்பிக் கொண்டிருக்கும் கனவான்கள், மேலே கூறியுள்ள முரண்பாடுகளை விளக்கினால், என்னைப் போன்ற சராசரி வாசகனுக்கு தமிழ்ச் சமூகத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் சாதிகள் இருந்ததே இல்லை என்ற பேருண்மையை புரிந்து கொள்ள ஏதுவாக அமையும்.

கி.பி. 9ம் நூற்றாண்டில் இயற்றிய சேந்தன் திவாகரம் வேளாளரின் பெயரை கீழ்கண்டவாறு கூறுகின்றது,

வினைஞர், சூத்திரர், பின்னவர், சதுர்த்தர்,
வளமையர், வேளாளர், மண்மகள் புதல்வர்,
வார்த்தைத் தொழிலோர், (வண்) களமர், உழவர்,
(சீர்த்த) ஏரின் வாழ்நர், காராளர்.

திவாகரம், நான்கு சாதிகளுக்கான பெயர் பட்டியலில், வேளாளருக்கு மட்டுமே சூத்திரர் என்ற பட்டத்தை வழங்கியுள்ளது கவனத்திற்குரியது. கி.பி. 10ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிங்கால நிகண்டு, சூத்திரர் என்ற தலைப்பில், கீழ்கண்ட பெயர் தொகுதியை கூறுகின்றது.

பின்னவர், சதுர்த்தர், பெருக்காளர், வளமையர்,
மன்னமுத் தொழிலர், மண்மகள் புதல்வர்,
உழவர், ஏரின் வாழ்நர், காராளர்,
வினைஞர், மேழியர், வேளாளரென்றிவை
தொகுபெய ரெல்லாஞ் சூத்திரர் பெயரே
/பிங்:780.

மேலே கொடுக்கப்பட்டுள்ள இரு பெயர் பட்டியல்களிலும் இடம் பெற்றுள்ள பெயர்கள் அனைத்தும் வேளாளருக்கு மட்டுமே பொருந்தி வருவதைக் காண்க. சங்கத் தமிழ்ச் சாதிகளான இடையர், குறவர், பரதவர், வேடர், மறவர், வணிகர் (செட்டி) போன்ற சாதிகளின் பெயர்கள் எந்த இடத்திலும் சூத்திரராகக் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின் எவ்வாறு பிற தமிழ்ச் சாதிகளை சூத்திரராக கூறமுடிந்தது? வேளாளரின் ஆணைவழி நின்று அவர்களுக்கு தொண்டூழியம் செய்வதே பஞ்ச கம்மாளர், வேட் கோவர் (குயவர்), உட்பட்ட பிற தமிழ்குடிகளின் தொழில் என மறைமலை அடிகள், கனகசபை பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்கள் கூறியுள்ளனர். பட்டடை சாதிகள் என அழைக்கப்பட்ட இச்சாதிகள் தான், வினைஞர் என்ற பெயரில் சூத்திரர் பெயர் தொகுதியில் இடம் பெற்றுள்ளதாகத் தவறாக இவ்வறிஞர்கள் கருதிவிட்டனர் போலும். திவாகரத்தில் வேளாளர் பெயர் பட்டியலில் இடம் பெற்றவாறே, பிங்கல நிகண்டில் சூத்திரர் என்ற பெயர் பட்டியலில் ‘வினைஞர்’ என்ற பெயர் இடம் பெற்றுள்ளதேயன்றி வேறு சாதிகளைக் குறிக்கும் வகையில் அல்ல. பிற்கால நிகண்டுகள் சில வேளாளர் = சூத்திரர் என ஒரே வரியில் பொருள் கூறியுள்ளதையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

பஞ்ச கம்மாளரும், குயவரும் வினைஞர்தானே, அவர்களை ஏன் சூத்திரராகக் கொள்ளக் கூடாது என்ற நியாயமான கேள்வி இங்கு எழலாம். பாங்கு தொழிலில் பார்ப்பனப் பாங்கு, சூத்திரப் பாங்கு என இருவகை உள்ளதைப் போல, வினைஞரிலும், சூத்திர வினைஞர் அல்லாது, வைஸ்ய வினைஞரையும் காண முடிகின்றது. செட்டிகள் (வைஸ்யர்) பெயர் பட்டியலில், திவாகரம் ‘வினைஞர்’ என்ற பெயரை இத்தகைய கைவினைஞர் பொருட்டே சேர்ந்துள்ளதை உணர்ந்து கொள்ளலாம். வேளாளருக்கு அனுமதிக்கப்படாத (அதனால் அணியாத), இருபிறப்பாளருக்கு அனுமதிக்கப்பட்ட பூணூலை அணியும், பஞ்சகம்மாளரும், குயவரும் குறைந்த பட்சமாக வைஸ்யர் பிரிவில் வருவரேயன்றி சூத்திரப் பிரிவில் வருவதற்கு வழியில்லை. மேலும், பசுகாவல் மற்றும் உழவுத்தொழில் செய்யும் வேளாளர் அல்லாத பிற தமிழ்ச் சாதிகளும் தெளிவாக வைஸ்ய வருணத்தில் குறிக்கப்படுகின்றனர். எனவே தமிழ்ச் சமூகக்தில் வேளாளர் தவிர்த்த பிற எந்த சாதியினரையும் சூத்திர வருணத்தில் சேர்த்து கூற முடியாது என்பதே உண்மை.

வேளாண்மை செய்யும் சாதியானதால்தானே வேளாளர் என்ற பெயர் ஏற்பட்டது. அவ்வாறு இருக்கையில் இத்தொழில் செய்யும் சில சாதிகளை வைஸ்ய வருணத்தில் சேர்த்துவிட்டு, வேளாளரை மட்டும் சூத்திர வருணத்தில் சேர்த்தது ஏன் என்ற கேள்வி எழலாம். சங்ககால வாழ்வியலிருந்து கீழ்நோக்கி வந்தால்தான் இதற்கு விடை காண முடியும்.

வேளாண்மை என்றால் உழவுத் தொழிலா?

தொல்காப்பியம்தான் ‘வேளாண்’ என்ற சொல்லை முதலில் பயன்படுத்துகின்றது. மரபியலில் நான்காம் சாதியாகிய வேளாளரைக் குறிக்க ‘வேளாண் மாந்தர்’ என்ற பதத்தைப் பயன்படுத்துகின்றது. வேளாளரைக் குறிப்பதற்கல்லாமல், வேறு இடங்களிலும் ‘வேளாண்’ என்ற சொல்லை தொல்காப்பியம் பயன்படுத்துகின்றது.

பொருளதிகாரம் 105ம் சூத்திரத்தில் ”வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்” என்ற அடிக்கு, தலைவி உபகாரம் எதிர்பட்ட விருப்பின் கண்ணும் என இளம்பூரணர் உரை கூறுகின்றார். இங்கு உபகாரம் என்ற பொருளில் வேளாண் என்ற சொல்லை தொல்காப்பியம் பயன்படுத்துகின்றது. பொருளதிகாரம் 112ம் சூத்திரத்தில் கூறப்படும் ‘வேளாண் பெருநெறி’ என்பதற்கு விளக்கம் கூறும் இளம்பூரணர், ”வேளாண்மையாவது உபகாரம், பெருநெறியாவது உபகாரமாகிய பெருநெறி என்க”, எனக் குறிப்பிடுகின்றார். ஆக, வேளாண்மை என்ற சொல்லை உபகாரம் என்ற பொருளில்தான் தொல்காப்பியம் பயன்படுத்தியுள்ளது.

கலித்தொகை 101 ஆம் பாடலின், ”வேளாண்மை செய்தன கண்” என்ற வரிக்கு தலைவனைக் கண்டு என் கண்கள் உபகாரம் செய்தன என்றே உரை கூறப்பட்டுள்ளது, (கண்கள் உழவுத் தொழில் செய்ய முடியாது என்பதையும் கணக்கில் கொள்க). வேளாண்மை என்ற சொல்லிற்கு விருந்தோம்பல் என்ற பொருளையே நிகண்டுகளும் கூறுகின்றன. விருந்தோம்பல் அதிகாரத்தில் வேளாண்மை என்ற சொல்லை உபகாரம் என்ற பொருளில் வள்ளுவர் பயன்படுத்துகின்றார். (“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி விருந்தோபி வேளாண்மை செய்தற் பொருட்டு”.) ‘விருந்தோபி வேளாண்மை செய்தற் பொருட்டு’ – என்ற வரிக்கு உரையாக விருந்தினரைப் பேணி அவருக்கு உபகாரம் செய்தற் பொருட்டு எனப் பரிமேலழகர் கூறுகிறார். பாரதி தீபம், வேளாண்மை என்றால், உபச்சாரம் மற்றும் மெய் உபச்சாரம் என்று பொருள் கூறுகின்றது. எனவே மரபியலில் நான்காம் சாதியாக வேளாண் மாந்தர் எனக் குறிக்கப்படுவது., உபகாரம் செய்யக்கூடிய (ஆணைவழிநிற்கும்) மாந்தர் என்ற பொருளையே கொடுக்கின்றது. வடஇந்திய தாஸர்களுக்கும் (சூத்திரர்), ஐரோப்பாவில் அடிமை நிலையில் வாழ்ந்த செர்·ப்களுக்கும், கொலோன்களுக்கும் விதிக்கப்பட்ட விருந்தோம்பல் முறைமைகள்தான் சங்ககால வாழ்வியலில், வேளாண் மாந்தருக்கும் விதிக்கப்பட்டிருந்தது தெளிவாகின்றது. மேலோரின் ஆணைவழி நின்று அவர்க்குக் குற்றவேல் செய்வதே வேளாளரின் கடமை என்பதை ……. வேளாண் வாகையில் புறப்பொருள் வெண்பா மாலையும் தெளிவாக்குகின்றது.

மேன் மூவரு மனம் புகல
வாய்மையான் வழியழுகின்று
-(புறப்.வெ.மா:165)

இதற்கு, முற்பட்ட அந்தணர், அரசர், வணிகரென்னும் மூவரும் நெஞ்சு விரும்ப, மெய்ம்மையால் அவரவர் ஏவல் வழியே சென்றது என்றவாறு என்பது பழைய உரையாகும். இவற்றிலிருந்து குற்றவேல் செய்வதே வேளாண் மாந்தருக்கு விதிக்கப்பட்ட தொழில் என்பதையும், உழவுத்தொழில் பிற்காலத்தில் அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட ஒன்று என்பதையும் எளிதில் உணரலாம்.

சங்ககால வாழ்வியலில் வேளாளர்:

சங்ககால சமூகத்தின் மக்கள் தொகையை, தலைமக்கள், நிலமக்கள், வினைவலர், அடியோர் என நான்காகப் பகுக்கலாம். அந்தணர், அரசர் மற்றும் தனவைஸ்யரை தலைமக்களாகவும், பூவைஸ்யரை நிலமக்களாகவும், உயர்குடி வேளாளராக வினைவலரையும், கீழ்குடி வேளாளராக அடியோரையும் குறிப்பிடுகின்றனர்.

குஜராத்தில் உள்ள துவாரகையிலிருந்து, அகத்தியனால் அழைத்து வரப்பட்ட வேந்தர், வேளிர் மற்றும் பணிமக்களாகிய அருவாளர் குடியினராலேயே காடழித்து நாடாக்கப்பட்டு சங்ககால வாழ்வியல் தோன்றியது. /புறம்:201, மற்றும் தொல்காப்பியம், நச். உரை கூறும் புராணச் செய்திகள். இதனை நிறுவும் விதமாக, குஜராத்திலிருந்து தமிழகத்திற்குப் பரவிய இரும்பு பயன்பாட்டு கருப்பு-சிவப்பு மட்பாண்ட பண்பாடு, சங்ககால வாழ்வியலை தோற்றுவித்தது என தொல்லியல் அறிஞர் பலரும் உறுதிபடக் கூறுகின்றனர். இவ்வாறு வெளியிருந்து குடியேறிய வம்ப வேந்தர் குடியினர், இங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த புதிய கற்கால மற்றும் சிறுகற்கால மேய்ச்சல் குடிகளைத் தங்கள் வாளின் வலிமையினால் வணக்கி, தங்கள் அரசுகளைத் தோன்றுவித்துக்கொண்டனர். பழைய மேய்ச்சல் குடிகள் பெரும்பாலும் திணைக்குடிகளாக பரிணமித்தன. திணைக்குடிகளுக்கு ஒப்பீட்டளவு சுதந்திரம் இருந்ததால் இவர்கள், வருண பகுப்பில் மூன்றாம் சாதியாகினர்.

பழைய மேய்ச்சல் வாழ்க்கைக் குடிகளுள், வலுவாக விளங்கிய குடிகள் வேந்தர்களின் மேலாண்மையை ஏற்று சீறூர் மன்னர் மரபினராகப் பரிணமித்தனர். வட இந்தியாவில் கீழ்நிலை சத்திரியராகக் கருதப்பட்ட தாளஜங்கா மரபினரும் இவரும் ஒன்றே. இவர்களில் வேந்தரிடமிருந்து மருத நில வயல்களை மானியமாகப் பெற்று கிழார் பட்டத்திற்குரியோராக மாறியவரும் உண்டு. இவ்வாறு மானியம் பெற்ற இம்மரபினரின் பெண்டிர், தலைமக்களின் அனுக்கமான வாயில்களான செவிலித் தாய், தோழியாக பணியாற்றினர்.

உயிரும், நாணும், மடனும் என்றிவை
செயிர்நீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய
– /தொல்:பொருள்:198.

இதற்கு உரையாக இளம்பூரணர், ”உயிரும், நாணும், மடப்பமும் என்று சொல்லப்பட்டவை குற்றந் தீர்ந்த சிறப்பினையுடைய தலைமகட்கும், தோழிக்கும், நற்றாய்க்கும், செவிலிக்கும் உரிய என்றவாறு”, எனக் கூறுகின்றார். இதனைக் கொண்டு மறைமலை அடிகள் போன்ற அறிஞர்கள், தாய், தோழி மரபினரும், வேந்தர் குடியினரும் ஒரே குடியை (சாதியை) சேர்ந்தவராக கருதுகின்றனர். ஆனால் கீழ்கண்ட தொல்காப்பிய சூத்திரம் இக்கருத்துக்கு எதிராக உள்ளது.

அறத்தொடு நிற்குங் காலத்தன்றி
அறத்தியல் மரபிலள் தோழி என்ப
– /தொல்: பொருள்: 203.

இளம்பூரணர் உரை : தலைவி அறத்தொடு நிற்குங் காலத் தன்றித் தோழி தானே அறத்தோடு நிற்கும் மரபு உள்ளவள் அல்ல என்றவாறு.

இதிலிருந்து வேந்தர் குடியினரிலிருந்து வேறான மரபினராகவே தாய், தோழியரைக் காண முடிகின்றது, வடஇந்திய மரபுகள் இவர்களை சத்திரியரில் கீழானவராகக் கருதுகின்றது, தமிழ்ச் சமூகத்தில் அரசருக்கு மகட்கொடைக்குரியோராக விளங்கிய இம்மரபினர், மூன்றாம் சாதியாக வைஸ்ய வருணத்தில் வைத்து எண்ணப்பட்டனர். இவர்களை குறிக்கப்பயன்படுத்தப்படும் பணி (பணிமக்கள்) என்ற சொல்லிலிருந்தே, வைஸ்ய வருணத்தவரின் வணிகன் என்ற சொல் தோன்றியுள்ளதாகத் தெரிகின்றது,

இவர்களன்றி, வேந்தருக்கு மகட் கொடை மறுத்த முகுகுடி மன்னர் மரபினரையும் சங்ககால வாழ்வியலில் காணமுடிகின்றது, மருதநில வாழ்க்கையை மேற்கொண்டு, சிறந்த போர்குடியாக விளங்கிய இம்முதுகுடி மன்னர் மரபினர், வீரயுகப் பண்பாட்டுத் தளத்தில் வாழ்ந்தனர். நில பிரபுத்துவ பண்பாட்டு நிலையில் வாழ்ந்த வேந்தர் குடியினருக்கு இவர்கள் மகட்கொடை மறுத்தது இயல்பானதே. வேந்தர் குடியினரும் முதுகுடி என அழைக்கப்படுவதால், இம்மரபினரும், வேந்தர் குடியினரும் ஒரேகுடியாக இருந்து, பின் பண்பாட்டு வளர்ச்சிப் போக்கில், இரு வேறு குடிகளாகப் பிரிந்துள்ளனர் எனத் தெரிகின்றது. வேந்தரிடம் தோற்று நிலைகுலைந்த இவ் ஆதி அரசர் குலத்தினர், சங்க காலத்தில் காணப்படும் மள்ளர், பொருநர் ஆகிய போர்க் குடிகளாக மாறியிருந்தனர். இம்மரபினரை தேவேந்திர குல வேளாளராகிய மள்ளர் (பள்ளர்) குடியினருடன் தொடர்புபடுத்தலாமேயன்றி, வேளாண் (அடிமை) மாந்தராகிய வேளாளருடன் தொடர்புபடுத்த முடியாது என்பதை உணர்க. இம்முதுகுடி மன்னரில் சிலர் வேந்தருக்கு மகட்கொடையளித்து, அரசகுலத்தில் ஓர் அங்கமாகவும் மாறியிருக்கக் கூடும். (இப்பொருள் குறித்து தனிக் கட்டுரையில் விவாதிக்கலாம்) வேந்தர் குடியினர் இம்மரபினரை சமமாக மதித்ததாலேயே, அவர்களின் வீரயுகப் பண்பாட்டிற்குரிய அறப்போர் முறையில் அவர்களைத் தோற்கடித்து தங்கள் மேலாண்மையை நிறுவினர். ஊர்கொள வந்த பொருனனை, வீரயுகப் பண்பாட்டிற்குரிய மற்போரில் வென்ற போரவைக் கோப் பெருநற்கிள்ளியின் செயல் இதனை உணர்த்துகின்றது. மகட்கொடை மறுத்துப் போரில் தோற்ற முதுகுடி மன்னர் மரபினர், சிறைப்படுத்தப்பட்டு உழுகுடிகளாகத் தாழ்ந்தனர்.

வேந்தர் குடியினரின் வருகைக்கு முன், மேய்ச்சல் வாழ்க்கையறியாத பல வேட்டுவ குடிகளும் தமிழகத்தில் வாழந்து வந்தனர். எளிதில் அடங்காத இக்குடிகள், வாளின் வலிமையால், ஏவல் மரபினராக மாற்றப்பட்டபொழுது, உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் வருவதும் இல்லை. இத்தகையவரை முதலில் அடியோராக மாற்றி, காலப் போக்கில் கட்டுப்பாடுள்ள குடியாக மாறிய நிலையில் வினைவலராக மாற்றினர்.

தலைமக்களுக்குரிய வாயில்களாக 12 பேரைத் தொல்காப்பியம் குறிப்பிடும். இவர்களில் பார்ப்பாரும், அறிவரும் குருநிலையிலிருந்த அந்தண வாயில்களாகும். தாய், தோழி ஆகியோர் வைஸ்ய வாயில்களாகும். பாணர், கூத்தர், விறலியர், இளையோர், கண்டோர் போன்ற பிறவாயில்கள் அனைத்தும் அடியோராயிருந்து வினைவலராக ஏற்றம் பெற்ற வேளாண் வாயில்களாகும். அரசகுலத்தவருக்கு, தன் சொந்த குலத்தவர் மகட்கொடையளித்தால் அவள் இல்கிழத்தியாவாள். தாய், தோழி மரபினராகிய வைஸ்ய வருணத்தவர் மகட் கொடையளித்தால் அவர் காமக் கிழத்தியாவார். வேளாண் மாந்தர் மகட்கொடைக்குரியயோர் அல்ல, எனினும் காதற் பரத்தையர் இம்மரபினராவர். இல்கிழத்தியும், காமக் கிழத்தியும் கற்பில் அமைந்த வதுவைப் புணர்ச்சிக்குரிய மகளிர் என்றும், காதற் பரத்தையர் களவொழுக்கத்திற்கு உரியர் என்றும் நம்பியகப் பொருள் உரைப்பது இங்கு பொருத்திப் பார்க்கத்தக்கதாகும்.

அகத் திணைக்குரியோரே சங்கத் தமிழராவர்:

அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை இலபுறத் தென்மனார் புலவர்
– /தொல்: பொருள்:25.

இதற்கு உரை கூறும் இளம்பூரணர், அடியோரும், வினைவலரும் அன்பின் ஐந்திணைக்குரிய அகத்திணைக்குரியோர் ஆகமாட்டார் என்றும், அவர்கள் கைக்கிளை, பெருந்திணைக்குரியவர் என்றும் கூறுகின்றார். மேலும் அவர்கூறும் விளக்கம்,

”இவர் அகத்திணைக்கு உரியரல்லரோவெனில், அகத்திணையாவன அறத்தின் வழாமலும், பொருளில் வழாமலும் இன்பத்தில் வழாமலும் இயலல் வேண்டும். அவையெல்லாம் பிறர்க்கும் குற்றவேல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகவானும், அவர் நாணுக் குறைபாடுடையராகலானும், இன்பம் இனிது நடத்துவார், பிறர் ஏவல் செய்யாதார் என்பதானும், இவர் புறப்பொருட்குரியவராயினர் என்க”.

இம்மரபினர் நாணம் குறைபாடுடையவர் என இளம்பூரணர் கூறுவதைக் கவனத்தில் கொள்க. தமிழக ஆரம்பகால வேட்டுவ குடிகள் பெரும்பாலும், பெண்வழி சமூகமாகவே வாழ்ந்தனர் போலும். பெண் வழி சமூகமாக வாழ்ந்து, வேளாண் மாந்தராக மாறிய படியாலேயே, அக்குடிகளுக்கு கற்பு நெறியும், நாணுதலும் தேவைப்படவில்லை. இன்று கேரளாவில் உயர்சாதியாகக் கருதப்படும், நாயர் சமூகத்தினர் மட்டுமே சூத்திரர் என அழைக்கப்படுகின்றனர். பிற சாதிகளை யாரும் சூத்திரர் என அழைப்பதில்லை. நாயர் சமூகம் 100 ஆண்டுகளுக்கு முன்புவரை கூட தெளிவான பெண்தலைமை சமூகமாகவே நீடித்தது. மிகச் சமீப காலம் வரையிலும் கூட இச்சாதியினரிடம், பெண்களுக்கே சொத்துரிமை இருந்தது.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் நாஞ்சில் வேளாளர் சாதியினரிடமும், தூத்துக்குடி மாவட்டத்தில் வாழும் சிவகளை பிள்ளைமார் (நற்குடி வேளாளர்) சாதியினரிடமும், பெண்களுக்கே சொத்துரிமை உள்ளதை இன்றும் காண முடிகின்றது. அதே வேளையில் இம்மாவட்டங்களில் வாழும் பிற அனைத்து சாதிகளிடமும் தெளிவான தந்தை தலைமை சமுதாய அமைப்பு நிலவுவதைக் காண முடிகின்றது.

தொல்காப்பியம், மேலோர் மூவராகிய அந்தணர், அரசர், வணிகர் ஆகியவரைப் போல் வேளாளருக்கும், மணவினைச் சடங்குகள் ஏற்படுத்தப்பட்டது எனக் குறிப்பிடுகின்றது. அடியோர் நிலையிலிருந்து வினைவலராக ஏற்றம் பெற்ற மரபினரே மேற்கூறியவாறு மணவினைச் சடங்குகள் ஒழுங்குபடுத்தப்பட்டு ஏற்றம் பெற்றிருக்க வேண்டும். களப்பிரர் கால சமூக மாற்றத்தில் அடியோரும், வினைவலரும் வேளாளர் என்ற ஒரே சாதியாக தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர். பழமொழி நானூறு பாடலொன்று இச்சமூக மாற்றத்தைத் தெளிவாகச் சுட்டும்.

உடைப் பெருஞ் செல்வரும், சான்றோரும் கெட்டுப்
புடைப் பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்
கடைக் கால் தலைக் கண்ண தாகிக் குடைக்கால் போற்
கீழ் மேலாய் நிற்கும் உலகு
– (நாலடியார் : 368)

இப்பாடல், உடைப் பெருஞ் செல்வராக வேந்தர் குடியினரையும், சான்றோராக அரசகுல போர்வீரரையும், புடைப் பெண்டிர் மக்களாக தாய், தோழி மரபினரையும், கீழ் ஆக, வேளாண் மாந்தரையும் குறிப்பிடுகின்றது. களப்பிரர் கால சமூக மாற்றம், வைஸ்ய வருணத்தவராகிய தாய், தோழி மரபினரும், கீழ்நிலையிலிருந்த பிற வேளாண் மாந்தரும் அணி சேர்த்து வேந்தர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததன் விளைவாகத் தோன்றியதாகும். புடைப் பெண்டிர் மக்கள் அகம்படியர் என பிற்கால வழக்கில் அழைக்கப்பட்டனர். வைணவ உரைநூல்களில் இடம் பெற்றுள்ள ”அகம்படிகள் கிளர்ந்தால் அரசராலும் அடக்க வொண்ணாதது போல” என்ற வாசகம் களப்பிரர் கால சமூக மாற்றத்தைக் குறிப்பதாகலாம். களப்பிரர் காலத்திற்குப் பின் தோன்றிய சோழர் காலத்தில், அகம்படி மரபினர் சித்திரை மேழி பெரிய நாட்டார் என்ற ஒரு வலுவான அமைப்புடன் விளங்கினர். வேளாளரில் உயர்வு பெற்றோரிடம், மண உறவு கொண்டு வாழ்ந்ததால், சித்திரை மேழி பெரி நாட்டாரும் வேளாளர் என்றே அழைக்கப்பட்டனர். வேளாளரில் அவ்வாறு உயர்வு பெற்றோரையும் இவ்வணியில் சேர்த்திருக்கலாம்.

சங்க காலத்தில், வேந்தருக்கு மகட்கொடையளித்து மருதநில வயல்களை மானியமாக பெற்று, உழுவித்துண்போராக வாழ்ந்த வைஸ்ய வருணத்தின் சில குடிகள் இவ்வாறு சோழர்கால வாழ்வியலில், உயர்குடி வேளாளராக மருவி நின்றனர். இம்மரபினரையே, வேந்தர்க்கு மகட்கொடைக்குரிய உயர்குடி வேளாளராக உரை ஆசிரியர் எழுதியுள்ளனர். இவர்களையே சத்சூத்திரர் என்றும் அழைக்கின்றனர். எனவே அசத்சூத்திரர் என்ற பதம் பிற வேளாளரை குறிக்குமேயன்றி, பிற தமிழ்ச் சாதிகளைக் குறிப்பதாகாது.

கி.பி. 15 ஆம் நூற்றாண்டில், சோழர்கள் ஆட்சியதிகாரத்தை இழந்துவிட்ட சூழலில், சித்திரை மேழி பெரிய நாட்டார் அமைப்பும் கலைக்கப்பட்டுவிட்டது எனத் தெரிகின்றது. கைக்கோளர், அகம்படி முதலியார் போன்ற சாதிகள் சித்திரை மேழி பெரிய நாட்டார் அணியில் சேராமல் தங்களை வேளாளர் என அழைக்கப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டனர். உடையார், நயினார், மூப்பனார் ஆகிய சாதிகள் சித்திரை மேழி பெரிய நாட்டார் என்ற அமைப்பிலிருந்து தங்களை விடுத்தபின், பார்கவ குல சத்திரியர் என அழைத்துக் கொண்டனர். பண்டைய அகம்படி சாதிகளில் சோழிய வேளாளர், கார்காத்த வேளாளர், இசை வேளாளர், வீரக்கொடியார் ஆகிய சாதிகள் மட்டுமே வேளாளர் சமூகத்தில் இடம் பெற்று விட்டனர். இவர்களையே உயர்குடி வேளாளராக நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றார்.

சோழனின் கிளைகுடியினனான தொண்டைமானைத் தங்கள் இனமாகக் கொள்ளும் சோழிய வேளாளர், சோழனின் கிளைக்குடி என்பது உறுதிபடுகின்றது. வட இந்தியாவில் யது குலத்தின் கிளைக்குடியாகக் கூறப்படும் ஐந்து பிரிவுகளைக் கொண்ட தாளஜங்கா மரபினரை ஒத்தவராவர் இவர். சோழிய வேளாளரின் பேரூர் சிறுகுடி மடத்துச் செப்புப் பட்டயம் மூலம் இவர்கள் ‘ஈழவர்’ சாதியை சேர்ந்தவர் என அறியமுடிகின்றது. ஈழவரின் ஐந்து இல்லங்கள், தாளஜங்க சத்திரியரின் ஐந்து குலங்களைக் குறித்து நிற்கின்றது. தாளஜங்கா குடியில் ஏயர் (கைகேயர்) குலமும் ஒன்று. அக்குலத் தோன்றலான ஏயர் கோமான் கலிக்காம நாயனார் வம்சத்தினரும் இன்று சோழிய வேளாளர் சாதியிலேயே சேர்ந்திருக்க வேண்டும். கலிக்காம நாயனார், வேளாளருடன் மண உறவு கொண்டதைப் பெரிய புராணம் மூலம் அறியமுடிகின்றது. இவ்வாறு வேளாளருடன் மண உறவு கொண்டதாலேயே சோழியர், வேளாளராகினர் போலும். தாளஜங்கா மரபினரை வட இந்தியர் பாரசைவ நாகர் என அழைப்பர். இசை வேளாளரும் பாரசைவர் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றனர். எனவே இவரும் அம்மரபினரே என்பதை உணர்க. நாகஸ்வரம், நாகரின் இசையென்றதால், அப்பெயர் பெற்றது போலும்.

களப்பிரர் கால சமூக மாற்றம் வேறு வகையில் அமைந்த கேரளாவில், மண வினைச் சடங்கு ஒழுங்கு படுத்தப்படாத, வேளாண்மாந்தராகிய நாயரே சூத்திரராயினர். அங்கு ஈழவர் கீழ்சாதியாகி விட்டாலும், சூத்திரர் என அழைக்கப்படுவதில்லை. எனவே, சத்சூத்திரர் என்ற சொல், சூத்திரராக மறுவி நிற்கும் பழைய வைஸ்ய வருணத்தை குறித்தும், சூத்திரர் என்ற சொல் பழைய வேளாண்மாந்தரை குறித்தும் கூறப்பட்டுள்ளது என்பதே பொருத்தமானதாகும். நிலைமை இவ்வாறிருக்க தமிழரில் பத்து விழுக்காடு ஜனத்தொகையே உள்ள இக்கீழ் வேளாளரையும், சத்சூத்திரராக்கும் முயற்சியில், ஏற்றமிகு தமிழ்ச் சாதிகள் அனைத்தையும் (சுமார் 75 விழுக்காடு) அசத்சூத்திரராகவும், பஞ்சமராகவும், சண்டாளராகவும் (பார்த்தால் தீட்டு) வகைப்படுத்தி மகிழ்வது நியாயம்தானா என்பதை அறிஞர் பெருமக்கள் சிந்திப்பார்களாக.

brahaspathy@gmail.com

Series Navigation

பிரகஸ்பதி

பிரகஸ்பதி