வே.சபாநாயகம்
சின்ன வயதிலிருந்தே அவருக்கு இந்தக் குளம் பிடித்தமானது. அந்தக் குளத்தின் அழகும் அமைதியும் அவரை அங்கே அடிக்கடி தேடி வரச் செய்திருக்கிறது.
பச்சை வட்டத் தகடுகள் போல மிதக்கும் அல்லி இலைகளும், நீர்ப்பாம்பு தலை நீட்டுகிறமாதிரித் தெரியும் அல்லி மொக்குகளும், அடுத்தடுத்து வெள்ளி நட்சத்திரங்களாய்ச் சிரிக்கும் அல்லி மலர்களும் , அடித்தண்டு வரை ஆழம் காட்டும் கருமையான நீரும், மணற்பாங்கான தரையும் வேறு எந்தக் குளத்திலும் காண முடியாதது. அதன் தண்ணீருக்கு ஒரு அலாதியான குளிர்ச்சி. குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்த மாதிரி ‘சிலீர்’ என்ற ஜில்லிப்பு. அந்த நீரின் ருசி கூட வித்தியசமானது. ஊர் முழுதும் குடி நீருக்கு இதிலிருந்துதான் எடுத்துப் போவார்கள்.
‘ஸ்படிகம்’ போன்ற அதன் தெளிவான நீர்ப் பரப்பு வழியோடு போகிற எவரையும் ஒருகணம் இழுத்து நிறுத்தும். நீரில் இறங்கி ஒரு வாயாவது எடுத்து அருந்தாமல் எவரும் செல்ல முடியாது. அந்தக் குளத்தைப் பார்ப்பதே ஒரு சுகம்!
இப்பொது அந்த அழகின் தரிசனம் கிட்டாதபடி முழுதுமாய் மறைத்து ஆக்கிரமித்துக் குடிசைகள் கட்டி இருக்கிறார்களே! நல்ல வே¨ளை, நகரங் களைப் போல குளத்தையே தூர்த்து மேடாக்கிக் குடிசைகட்டாது விட்டார்களே! அழகை மறைத்துக் கட்டுவதும் ஒருவகையில் அந்தக் குளத்தை அழிப்பது போல் தானே!
ஒரு சில சிவப்புத் தாமரைகளும் அங்கே தென்பட்டதுண்டு. அவற்றினூடே நீர்க்கோழிகள் புகுந்து நீந்தி விளையாடுவதும், ‘குபுக்’கென முழ்கி வேறொரு இடத்தில் அவை தலை நீட்டுவதும் சிறு வயதில் அவருக்குத் தெவிட்டாத காட்சிகள். நீளமான அல்லித்தண்டை ஒடித்தெடுத்து ஒருமுனையை நீரில் போட்டு மறுமுனையை வாயில் வைத்து நீரை உறிஞ்சுகையில் ‘சிலீரெ’ன்று அடித்
தொண்டையில் குளிர்ந்த நீர் சிலிர்க்குமே அந்த அனுபவம் இனி எங்கே கிட்டும்?
இழப்பின் தாக்கம் நெஞ்சை வருத்த மேலே நடக்கிறார்.
குளம் முடிகிறவரை அதை முழுமையாக அவரால் பார்க்க முடியவில்லை. கடைசிக் குடிசை வந்ததும் அதன் சுவரை ஒட்டி நடந்து போய்க் குளத்தைப் பார்க்க முயன்றார். ஒரே கோரையும் புல்லும் பாசியும் அடர்ந்து – குளமாகவே
தெரியவில்லை.
இந்தக் குளக்கரையை ஒட்டி ஒரு சின்னத்திடல் இருந்ததே! அதைக் காணோமே! அந்த இடத்தில் ஒரு சின்ன நஞ்சைப் பகுதி தெரிந்தது. நீர் மட்டத்தைவிட உயரமாக இருந்த அந்த இடம் ஒரு கைப்பந்து விளையாட்டுத் திடலாக இருந்தது. அதை இப்போது மண்ணெடுத்து ஆழமாக்கி நஞ்சையாக்கி இருக்கிறார்கள். கோயில் குளத்தையே தூர்த்து நிலமாக்கியவர்களுக்கு இந்தப் புறம்போக்கு இடத்தைத்தானா அபகரிக்க முடியாது?
இத்திடலுக்கு இந்த ஊரின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கு இருந்தது. எல்லா ஊரையும் போல இந்த ஊர் இளைஞர்களும் வழிகாட்டுவார் இன்றி, சீட்டாடியும் வம்பு வழக்கில் ஈடுபட்டும் சீரழிந்து கொண்டிருந்த போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சின்ன அண்ணன் இவர்களைத் தடம் மாற்றிஆரோக்கியமான பொழுது போக்கில் ஈடுபடுத்தினார்.
அப்பாவைப் போலவே சின்னண்ணனும் பொது மக்களிடம் சுமுகமான, நம்பிக்கைக்குரிய உறவை வளர்த்துக் கொண்டிருந்தார். சோம்பிச் சுற்றிவந்த இளைஞர்களை – அவர் கோடை விடுமுறையில் வந்திருந்தபோது ஒருநாள் இரவு கூட்டிப் பேசி, வேலையில்லாத நாட்களை வீணே சீட்டாட்டத்தில் செலவழிக்காமல் பயனுள்ள வழியில் செலவிட ‘பாரதி கைப் பந்துக் கழகம்’ என்ற ஒன்றை உருவாக்கி அவர்களை விளையாட்டில் ஈடுபடுத்தினார். யார் பேச்சுக்கும் கட்டுப் படாத அவர்கள் அண்ணன் பேச்சுக்கு அடங்கி அதை ஏற்றுக் கொண்டார்கள். வாலிபர்கள் மட்டுமின்றி நடுத்தர வயதினர் பலரும் அக் கழகத்தில் உறுப்பினர் ஆனார்கள். ஊரின் ஓரத்தில் இருந்த இந்தப் புறம்போக்கு இடத்தில் களம் அமைத்து, கால்கள் நட்டு, வலை பந்து எல்லாம் வாங்கி ஒரு நல்ல நாளில் ஊர்ப் பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன் கைப்பந்து விளையாட்டு துவக்கப் பட்டது. அண்ணனேதான் அவர்களுக்கு அந்த விளையாட்டின் ஆசானாகவும் இருந்தார். வெட்டிப் பேச்சும், வீண்வம்பும், சீட்டாட்டமும் ஒழிந்து உருப்படியான விளையாட்டில் இளைஞர்களின் கவனம் திரும்பியதில் பெரியவர்களுக்கெல்லாம் மெத்த மகிழ்ச்சி.
கோடை விடுமுறை முடிந்து அண்ணன் கல்லூரி திரும்பிய பின்னும் ஒரு ஆண்டுக்கு மேலாக மாலை வேளையில் ஆர்வமுடன் இளைஞர்கள் விளையாடி வந்தார்கள். அண்ணன் படிப்பு முடிந்து கோயம்புத்தூருக்கு – அடிக்கடி வரமுடி
யாதபடி – வேலைக்குச் சென்ற பிறகுதான் அது கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வமிழக்கப்பட்டு ஒரு நாள் நின்று போனது. ஊர் இளைஞர்களிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய அந்த இடம்தான் இப்போது அந்த விளையாட்டைப் போலவே
காணாமல் போய்விட்டது!
விளையாட்டுக் கழகம் அமைத்த சூட்டோடு அண்ணன் பெரியவர்களையும் ஈடுபடுத்த ‘பாரதி தமிழ்க் கழகம்’ என்ற ஒன்றையும் உருவாக்கி அதன் சார்பாக ஒரு படிப்பகம் ஒன்றையும் ஊர்ச்சாவடியில் தொடங்கச் செய்தார். அப்பாவுக்கு வரும் தினமணி மற்றும் இதர பத்திரிகைகளையும் அதில் போட்டு படிக்கத் தூண்டினார். உயர்நிலைப் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்த சிதம்பரம் போன்ற மாணவர்களை செய்திக¨ளைப் படித்துக்காட்டச் செய்தார். ஊர் மக்களும் ஆர்வமுடன் ஒழிந்த போதெல்லாம் வந்து கேட்டார்கள்.
தொடங்கி ஒரு ஆண்டு கழிந்ததும் ஆண்டு விழா நடத்தியபோது அது ஊர்த் திருவிழா போல மக்களிடம் ஒரு மலர்ச்சியை உண்டு பண்ணியது. கோயில் திருவிழாவில் காட்டும் உற்சாகத்தை இந்த ஆண்டு விழாவிலும் எல்லோரும்
காட்டினார்கள். ஊர்த் திருவிழாவிற்கு தலைக்கட்டு வரி தருகிற மாதிரி, முகம் சுணங்காமல் இதற்கும் கொடுத்தார்கள். பெரிய அளவில் திட்டமிட்டு நடத்தினார் கள். கோயில் விழா போல ஒரு தமிழ்ச் சங்கக் கூட்டத்தை மக்கள் ஒத்துழைப் போடு கோலாகலமாகக் கொண்டாடப் படுவதை அப்போது நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அந்த ஆரோக்கியமான புரட்சியை சின்ன அண்ணன் செய்தார்.
ஊர் மந்தையில் பந்தல் போடப்பட்டு மேடை அமைக்கப் பட்டது. மாவிலைத் தோரணங்களும் தென்னங்கீற்றுத் தோரணங்களும் பின்னிக் கட்டுவதில் முதியவர்கள் பங்கேற்றார்கள். சிதம்பரம்தான் வரவேற்புப் பதாகைகளை நீளமான வெள்ளைத் துணியில் குருவி நீலத்தில் எழுதினார். சிதம்பரம் படித்த உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் – தமிழ்ப் பற்று மிக்கவர் – தலைமை தாங்க அழைத்து வரப்பட்டார். சிறப்புச் சொற்பொழிவாற்ற, தமிழ்க் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த உள்ளுர் இளைஞர் தன் கல்லூரிப் பேராசிரியரை அழைத்து வந்தார். விழாவின் தொடக்கத்தில் பாரதிதாசனின் ‘வாழ்க வாழ்கவே! வளமார் எமது திராவிட நாடு” என்கிற வாழ்த்துப் பாடலை கடவுள் வணக்கத்துக்குப் பதிலாகப் பாட வேண்டும் என்று புலவர் மாணவர் ஆசைப் பட்டார். தமிழ் படிக்கிறவர்கள் எல்லோருமே ‘சூனா மானா’ எனப்பட்ட பெரியார் கட்சிக்காரர்கள் என்கிற ஒரு அபிப்பிராயம் அப்போது நிலவியதால், கடவுள் வணக்கம் பாடா விட்டால் அது ‘சூனா மானா’ கூட்டம் போல ஆகிவிடும் என்று சிலர் எதிர்த்தார் கள். அண்ணன் தமிழ்விழா என்பதால் அதைப் பாடுவதில் தவறில்லை என்று சொல்லி எதிர்ப்புச் சொன்னவர்களை சமாதானப் படுத்தினார். அந்தப் பட்டைப் பாட அங்கே யாருமில்லையே என்றபோது புலவர் மாணவர் பக்கத்து ஊரில் இப்படிக் கழக மேடைகளில் இந்தப் பாட்டைப் பாடுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவரை அழைத்து வருவதாகச் சொன்னார். ஆனால் அந்தப் பாட்டைப் பாட அவருக்கு பத்து ரூபாய் தரவேண்டும் என்றும், அதோடு அவர் மேடையில் தலைவர், பேச்சாளர் போலத் தனக்கும் நாற்காலி போட்டு சமமாக உட்கார வைக்கவேண்டும் என்றும் கேட்பார் என்றும் சொன்னார். முதல் விழாவில் தடங்கல் வேண்டாம் என்று எல்லாவற்றையும் அண்ணன் அனுமதித்தார்.
விழா திட்டமிட்டபடியே கோலாகலமாய் நடந்தது. அப்போதெல்லாம் திருமணங்களில் மட்டுமே கொண்டு வரப்படும் ஒலிபெருக்கியும் பக்கத்து நகரத்திலிருந்து அமர்த்தப்பட்டது. கோயில் உற்சவரை ஊர்வலமாய் அழைத்து வருகிறமாதிரி தலைவர் பேச்சாளரை ஊர்ப் பொதுச் சாவடியிலிருந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக மேடைக்கு அழைத்து வந்தார்கள். அதிர்வேட்டு முழங்க விழா தொடங்கியது. அதுவரை கோயில் திருவிழா தவிர இப்படி ஒரு கொண்டாட் டத் தைப் பார்த்திராத பொது மக்களுக்கு இது ஒரு புதுமையாக, பூரிப்பை அளித்தது.
அந்த ஆண்டோடு – அண்னன் வேலைக்குப் போய் விட்டாதால், கைப் பந்து கழகம் போலவே தமிழ்க் கழகமும் பிறகு செயலிழந்து போயிற்று.
– இவ்வளவும், அந்த மாஜி விளையாட்டுத் திடலைப் பற்றி எண்ணியதும் தொடர்க் காட்சியாக நினைவுத் திரையில் பரபரவென்று ஓட்டியது. அந்த சுகமான நினைவுகளை அசைபோட்டபடியே மேலே நடந்தார்.
(தொடரும்)
- ‘நிலவு ததும்பும் நீரோடை’ கவிஞர் பஜிலா ஆசாத்தின் அழகியல்!
- கவிதைத் தொகுதிகள் வெளியீடு
- எவ்வாறு ஒரு பிரிட்டிஷ் ஜிஹாதி உண்மை ஒளியைக் கண்டடைந்தார்? – 2
- கருத்துக் கணிப்பு – சில ஆலோசனைகள்
- நிறச் சுவாசங்கள்
- திரு. பிரகஸ்பதி அவர்களின் கட்டுரை பற்றி
- இலக்குகள் நோக்கிய பயணத்தில் பாரதி இளைஞர்அணி
- உரையாடல் குறித்த உராய்தல்கள் – தாஜுக்கு மறுமொழி
- இலர் பலராகிய காரணம்
- திருமதி கொப்பலின் குற்றச்சாட்டு
- குறுந்தொகை காட்சியும் மாட்சியும்
- காதல் ஒரு போர் போன்றது
- இலை போட்டாச்சு ! 28 – வெங்காய ரவா தோசை
- இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் -5
- மனிதன்
- கவிதைகள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:8 காட்சி:1)
- மிருகம்
- கவிதை
- காதல் நாற்பது (20) உன்னைத் தெரியாது ஓராண்டுக்கு முன்பு
- பூத்துக் குலுங்கும் பாப்பா! ( சிறுவர் பாடல்)
- தமிழர் நீதி
- தமிழ்நாட்டு அரசின் பொறுப்பற்றதனம்
- வழிவிடட்டும் அரசியல் வாரிசுகள்
- தலித் முஸ்லிம்
- நாவல்: அமெரிக்கா II! அத்தியாயம் ஒன்பது: 42ஆம் வீதி மகாத்மியம்!
- பிரதிமைகள்
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 9
- கால நதிக்கரையில்……(நாவல்)-6