காற்றுவெளி ஏப்ரல் 2010 இதழ் வெளிவந்துள்ளது.

This entry is part [part not set] of 21 in the series 20100509_Issue

காற்றுவெளி


காற்றுவெளி

காற்றுவெளி ஏப்ரல் 2010 இதழ் வெளிவந்துள்ளது. மொத்தம் 48 பக்கங்களில்; ஆறு விளம்பரங்களை மட்டும் தாங்கி (மூன்று விளம்பரங்கள் நூல், சிற்றிதழ், ஊடகம் பற்றியது) வெளியாகியுள்ள காற்றுவெளி சுயவிளம்பரமற்ற சிற்றிதழ்.

வழமைபோலன்றி காற்றுவெளி- இந்த வெளியீட்டில் மிகையான கவிதைகளால் நிரப்பப்படாமல் பல அம்சங்கள் கொண்டதாகக் காணப்படுகிறது. உதயகுமாரி (நிலா) பரமலிங்கத்துடனான நேர்காணல், மாற்று வல்லமையுடைய பலர் இக்காலத்தில் பல்துறை ஆளுமை கொண்டவர்களாக இருப்பதை மீளவும் உறுதி செய்கிறது. இதழின் கொள்ளளவோடு பார்க்கையில் – சற்று நீண்ட சந்திப்பாக இருப்பினும் – நிலா அவர்களின் உறுதி, செயலூக்கம் ஆகியன பற்றிய தெளிவுபடுத்தல் அனேகருக்கு நிச்சயம் உதவக்கூடியது. கவிதைகளில் விக்னா பாக்கியநாதனின் துளிப்பாவனம் தீபச்செல்வனின் அதேமுட்கம்பிகள் அதே பயங்கரம், மதனின் மலைகளின் பறத்தல் போன்றவை காற்றுவெளிக்கு பெருமை சேர்க்கின்றன. மாதுமை எழுதிய பெண் பொறுப்பதற்குப் பிறந்தவள் எனும் கவிதை அவரது ஒரு பக்கப் பார்வை மட்டுமே என்பதில் சிறிதும் ஐயமில்லை. எனினும் இந்தப் பெண் தனது ஆதங்கத்தை வேறு விதமாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இளய அப்துல்லாவின் மாறுகின்ற வன்முறை எனும் கட்டுரை, புலம் பெயர் சமூகம் அறிந்திருக்க வேண்டியதும் நிச்சயம் மாற்றுவழி காண வேண்டியதுமான சமூக வெளிப்பாடு. கனவில் மிதக்கும் இளம் தலைமுறை விழிப்புடன் செயற்பட வேண்டியது அமைதியான இல்வாழ்வுக்கு உதவும். எங்கிருந்தோ வந்தான் சிறுகதை யொன்றும் இதழில் இடம்பிடித்திருக்கிறது. மற்றும் டாக்டர் வை. கணபதி மற்றும் பாக்கியநாதன் ஆகியோரின் இரண்டு மிகச் சிறிய மொழி ஆய்வுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இனி வரும் இதழ்களும் இவ்வாறே பல விடயங்களைத் தாங்கி வெளிவரவேண்டும் என்பதை குறிப்பிட வேண்டியதில்லை. சிறு இதழ்கள் அவ்வப்போது தோன்றி மறைவது வழமையாகிய போதிலும் காற்றுவெளி நினைத்த போது தொடர்ந்து வெளிவந்துகொண்டிருப்பது போற்றற்குரியது. பிரசுர வேதனையை தனியொருவராக தாங்கும் ஆசிரியருக்கு கைகொடுக்க வேண்டியது எழுதுகோல் பிடிக்கும் அனைவரதும் பொறுப்பாகும்.

ஹேமராஜ்
சஞ்சிகை கிடைக்குமிடம்
R.Mahendran,
34,Redriffe Road,
Plaistow,
London. E13 0JX.

Series Navigation

காற்றுவெளி

காற்றுவெளி