வீ செல்வராஜ்
காந்தியடிகள் ஆற்றிய இயக்கத்தின் பயனாக சுயராஜ்யம் கிடைத்தது. ஆனால் அனுபவத்தில் காண்பது என்ன ? வெள்லையராதிக்கம் இருந்த இடத்தை கருப்பராதிக்கம் பிடித்துக் கொண்டுள்ளது. தந்தை பெரியார் ஆற்றிய சுயமரியாதை இயக்கத்தின் பயனாக பார்ப்பனர் ஆதிக்கம் தணிந்தது. ஆனால் அனுபவத்தில் மேல்சாதி ஆதிக்கம் இருந்த இடத்தை தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு சாதியும் பிடித்துக்கொள்ளப் போட்டியிடுகிறது.
காந்தியார் கண்ட கனவும், பெரியார் கண்ட கனவும் சமுதாய சமத்துவம் என்றாலும் சாதிப்பிரிவுகள் என்றும் போல் இன்றும் உள்ளன. அன்று அது கோவில், குளம், உணவு விடுதிகள் ஆகிய சமுதாய நிறுவனங்களைப் பீடித்திருந்தது. இன்று அது அரசியலில் தலைவிரித்தாடுகிறது. அரசு பதவிகளுக்கு சாதிவாரியாக உரிமை கொண்டாடுவதிலும், சலுகைகள் பெறுவதிலும் தீவிரம் அதிகரித்து வருகிறது. சாதி வேற்றுமை நமது சமுதாயத்தைப் பீடித்துக் கொண்டிருக்கிற சாபத்தீடாகவும் புதிராகவும் இருந்து வருகிறது. ஏன் ?
பண்டை காலத்தின் வருணாசிரம தர்மம் தடம் புரண்டதால் சாதிகள் உருவாயின என்பது காந்தியடிகள் கருத்து. வருணாசிரமம் குலைந்தால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்படும் என்று கீதையில் கண்ணன் உபதேசித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார். வேறு எந்த சீர்திருத்தக்காரர்களையும் விட அவர் வருணாசிரம தர்மம் பற்றி அதிகம் ஆராய்ந்திருக்கிறார். பாரம்பரிய வழியாக ஒவ்வொரு தனிமனிதருக்கும் கிடைக்கும் பிறவிக்கூறு- மனிதசுபாவம் அல்லது சுதர்மம்- அதாவது சத்துவம், ரஜஸ், தமம் ஆகிய முக்குணக் கலப்பில் ஏற்படும் இயற்கையான வேறுபாடுகள் ஆகியவற்றை அனுசரித்து சமுதாயத்தில் உருவான நான்கு கடமை – தொழிற்பிரிவுகள் வருணாசிரம தர்மத்தின் அடிப்படை, இதன்படி பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரன் என்ற நான்கு வருணங்கள் தோன்றின.
சமுதாயத்துக்கு ஒவ்வொரு தனி மனிதரும் ஆற்ற வேண்டிய கடமை அல்லது தொழிற்பிரிவுகளே தவிர இதற்கு சாதிப்பிரிவுகளுக்கும் தொடர்பில்லை என்று காந்தி எச்சரித்தார். நான்கு வருணாசிரமங்களை அவர் ஆதரித்த போதிலும் சாதிப்பிரிவுகளை அவர் வன்மையாகக் கண்டித்தார். சாதி ஒழிப்பு இயக்கமும் நடத்தினார்.
நாளாவட்டத்தில் வருணாசிரம தர்மம் தடம் புரண்டது. நான்கு வருணங்களுக்குள் மேல் கீழ் வாதம் தொடங்கிற்று. சமுதாயத்தில் பிராம்மணர் முதல் சூத்திரர்வரை கீழ்நோக்கி வரிசைப்படுத்தப்பட்டனர். இதன் விளைவாக ஒவ்வொரு வருணத்திலும் மேல் கீழ் பேதம் கற்பிக்கும் உட்பிரிவுகள் தோன்றின. தீண்டாமைக்கு ஆளாகி சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட பஞ்சமர் என்ற ஐந்தாவது வருணம் தோன்றிற்று. இத்துடன் வருணாசிரமம் உருக்குலைந்து நூற்றுக்கணக்கான சாதிகளாகப் பிரிந்து இந்திய சமுதாயம் சிதறிப் போயிற்று.
பிறப்பால், கடமையால், தொழிலால் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்காத வருணாசிரம தர்மம் அல்லது அதன் அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாய அமைப்பு திரும்பவும் நடைமுறைக்கு வரவேண்டும் என்ற லட்சியக் கனவு காந்தியடிகளுக்கு உண்டு. நாட்டை ஆட்சி புரியும் ஜனாதிபதிக்கும் தெருக்கூட்டும் சமுதாய அந்தஸ்தில் ஏற்றத்தாழ்வு கற்பிக்காமல் அவரவர் இயற்கை சுபாவத்துக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப சமுதாயத்தில் கடமை ஆற்றும் நிலை உருவாக வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.
தந்தை பெரியார் வருணாசிரம தர்மத்தைக் கடுமையாக எதிர்த்தார். ஒருவரின் பிறவிக் கூறுகளையும், பாரம்பரியதையும் வருணாசிரம தர்மத்தோடு இணைப்பதாயின் முன் ஜென்ம பாவ-புண்ணியத்தையும் மறுபிறப்பு வாதத்தையும் ஒப்புக்கொள்வதாகிறது. இது பெரியாருக்கு ஒவ்வாதது. முன் பிறவியில் புண்ணியம் செய்தவன் இப்பிறவியில் பிராமண வர்ணத்திலும் பாவம் செய்கிறவன் சூத்திர வர்ணத்திலும் பிறப்பதாகிறது. இதை அவர் ஒதுக்கித் தள்ளினார்.
காந்தியடிகள் வருணாசிரமம் பற்றிக் கூறியுள்ள சில பகுதிகள் தந்தை பெரியாரின் கருத்துக்களுக்கு ஏற்புடையவை அல்ல. அவை யாவன:
‘வருணாசிரம தர்மத்தை பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரிவினையாக நான் கருதுகிறேன் ‘
‘எனினும் ஒரு சூத்திரர் வைசியரின் கடமையைச் செய்வதற்காக அவர் தம்மை வைசியர் என்ற பட்டம் சூட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. கேரளத்தைச் சேர்ந்த சுவாமி நாராயணகுருவை சமஸ்கிருதப் பண்டிதர் என்று கூறுகிறார்கள். அவர் பிராமணர் கடமையைச் செய்பவர். அடுத்த ஜன்மத்தில் அவருக்கு பிராமணராவது எளிதாகலாம். இந்த ஜன்மத்திலேயே ஒரு வருணத்திலிருந்து இன்னொரு வருணத்துக்கு மாறுவதென்பது பெரும் மோசடியாகும் ‘
‘நமது முன் ஜென்ம கர்ம வினைகளின் பலாபலஙலை இப்பிறவியில் முற்றிலும் அகற்றிவிட முடியாது. இதன்படி பிராமண பெற்றோருக்குப் பிறந்த ஒருவரை பிராமணராகவே கருதுவது நியாயம். ஒரு பிராமணர் சூத்திரரின் தொழிலைப் புரிந்த போதிலும் அவரை பிராமணராகவே நடத்துவதில் உலகத்துக்கு நஷ்டம் ஏதுமில்லை ‘
இது போன்ற காந்தியாரின் கருத்துக்கள் மனிதரின் தன்மான உணர்வுக்கு ஒவ்வாதவை என்று அவற்றை பெரியார் புறக்கணித்தார். கடவுள், மதம், பாவ-புண்ணியம், மறுபிறப்பு போன்ற நம்பிக்கையிலிருந்து மீண்டாலன்றி சாதிகள் ஒழியாது என்பது அவருடைய வாதம்.
காந்தியடிகளுக்கும், தந்தை பெரியாருக்கும் இதில் நேர் எதிரிடையான கருத்து முரண்பாடு இருந்தாலும் அவர்களின் நாணயத்தில் முரண்பாடில்லை.ஆகவே இதில் எது சரியானது என்று ஆராயப்புகுவது என்னைப்போன்ர அப்பாவிகளுக்கு ஒரு புதிராகவே இருக்கிறது. ஆழ்ந்த பணிவும் விருப்பு வெறுப்பற்ற விசாலமான மனதும் இருந்தாலன்றி இப்புதிரை விடுவிக்க இயலாது.
என்னைப் பொறுத்தவரை ஞான வள்ளல் ஜே. கிருஷ்ணமூர்த்தி தரும் கல்வி எனக்கு உதவுகிறது. சத்தியம் என்பது fact எனப்படும். உண்மையுடன் தொடர்புடையது, belief அல்லது faith என்னும் நம்மிக்கை பறியதல்ல, உதாரணமாக உலகம் உருண்டை என்பது fact. ஆனால் மறுபிறவி, மற்றும் கடவுள் பற்றிய கற்பனை ஒரு faith. இது மனிதருக்கு மனிதர் மாறுபடுவது. இதனை பிறர் பேரில் திணிக்காதிருப்பதே நல்லது.
ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைப்படி பிறவியால் எழும் மேல் கீழ் வாதம் வாசனை ஏறிய மனதின் சுபாவமான தன்னகங்காரத்தின் விளைவாகும். மற்றவரோடு தம்மை ஒப்பிட்டுப் பாராமல், சுதர்ம பாவனையில் சுயமாக இருந்து ரசிப்பதை தன்னகங்காரம் பீடித்த மனம் நம்மை அனுமதிப்பதில்லை. இவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்து அகங்கரிப்பதற்கு சாதி, மதம், பாவம், புண்ணியம் போன்ரவை மனிதருக்கு அகப்படுகின்றன. இது பிராமணருக்கு மாத்திரமின்றி சகல சாதிகளுக்கும் பொது. தன்னகங்காரம் என்ற வேதாளத்துக்கு ஏற்ற முருங்கை மரம் இந்த சாதி, மதம்.
இதைப் புரிந்து கொள்ளாதவரை சாதிகள் எப்படி ஒழியும் ? இன்னும் பல காந்தியாரும், பெரியாரும் வந்த போதிலும் அது ஒழியப் போவதில்லை. சாதித்திமிர் ஒழிந்தால் மதத்திமிர், மதத்திமிர் ஒழிந்தால் பணத்திமிர், அது ஒழிந்தால் பதவித்திமிர் – இவ்வாறு தன்னகங்காரம் அதன் குதிரையை மாற்றிச் சவாரி செய்து கொண்டேதான் இருக்கும்.
இதற்கு மாற்று தன்னகங்காரமில்லாத தன்மான உணர்வு. தன்னைத்தானே புரிந்து கொள்வதற்கு தடையாக இருப்பது தன்னகங்காரம். அதற்கு உதவுவது சுயமான தன்மான உணர்வு. காந்தியடிகளும், தந்தை பெரியாரும் தன்மான உணர்வில் இணைவதால் அவர்களிடையே நிலவும் பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கிடையிலும் புதிர்களுக்கிடையிலும் சமுதாய சீர்திருத்த பணிகளில் அவர்கள் ஒருமைப்பாடு காண்கிறார்கள்.
***
பெரியாரும் காந்தியாரும் என்ற நூலின் 7ஆம் அத்தியாயம்.
***
திண்ணை நவம்பர் 28, 1999
***