காதல் ஒரு விபத்து

This entry is part [part not set] of 33 in the series 20090212_Issue

குரு அரவிந்தன்


நியூயோர்க் லாகாடியா விமான நிலையத்தில் பயணிகள் ஏறும் இடத்தில் எயர்பஸ் ஏ-320; நோர்த் கரோலினாவில் உள்ள சாலொட்டிக்குச்; செல்வதற்குத் தயாராக நின்று கொண்டிருந்தது. நோர்த் கரோலினாவிற்குச் செல்லும் பிளைட் இலக்கம் 1549-ல் பயணம் செய்பவர்களை செக் இன் செய்யும்படி கணனித் திரையில் சிகப்பு நிறத்தில் எழுத்துக்கள் மின்னிக் கொண்டிருந்தன. அதைவிட ஒலி பெருக்கியிலும் அவ்வப்போது அழைப்பு வந்து கொண்டிருந்தது. பிரயாணிகள் தங்குமிடத்தில் உட்கார்ந்து, நாவல் படித்துக் கொண்டிருந்த கொலின்ஸ் இந்த அழைப்பைக் கேட்டதும், விகாஷ் சுவாரப்பின் ‘கியூ அன்ட் ஏ’ என்ற அந்த நாவலை மூடி, படித்த பக்கத்திற்கு அடையாளம் வைத்து விட்டு நிமிர்ந்தாள். ‘கியூ அன்ட் ஏ’ என்ற பம்பாயில் நடந்த அந்த நாவலின் மூலக்கதையே ‘டானி பொய்லியின்’ நெறியாள்கையில் ‘ஸ்லம்டோக் மில்லியனார’; என்ற பெயரில் திரைப் படமாக்கப்பட்டு சிறந்த நெறியாளருக்கான அக்கடமிப் பரிசையும், தமிழ் நாட்டைச் சேர்ந்த ஏ.ஆர். ரகுமானுக்கு சிறந்த இசை அமைப்புக்கான பரிசையும் பெற்றுத் தந்தது. தமிழ்ப் பெண்ணான மியா என்று அழைக்கப்படும் ‘பேப்பர்பிளேன்’ பாடல் புகழ் மாதங்கியும் இந்தப் படத்தில் பாடியிருக்கின்றார். ஒஸ்கார் பரிசும் இந்தப் படத்திற்குக் கிடைக்கலாம் என்பதால் படத்தைப் பார்ப்பதற்கு முன் நாவலை வாசித்து முடித்து விடவேண்டும் என்று அவள் ஆர்வம் காட்டினாள். சுவாரஸ்யமாக அந்த நாவல் இருந்ததாலும், இந்தியப் பின்னணியில் இருந்த கதாபாத்திரங்கள் அவள் மனதைக் கவர்ந்திருந்ததாலும் விமானப் பிரயாணத்தின் போது மிகுதியையும் வாசித்து முடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

அவள் பிரயாணிகள் விரிசையில் தன்னை இணைத்துக் கொண்டபோது, வலது குறைந்தோரையும், குழந்தைகளோடு கூடிய பெற்றோரையும் முதலில் உள்ளே செல்லும்படி அழைத்தார்கள். அவள் அமைதியாக வரிசையில் நின்று தனது இருக்கை இலக்கத்தை அழைத்த போது, கைப்பையோடு உள்ளே சென்றாள். விமானத்தின் வாசலில் அவளை வரவேற்று, பிரயாணச் சீட்டை உறுதி செய்த விமானப் பணிப் பெண்மணி அவள் அமரவேண்டிய இருக்கையின் திசையைக் காட்டி விட்டாள். இப்போதெல்லாம் முன்புபோல விரும்பிய பொருட்களை எல்லாம் கையில் கொண்டு செல்லும் பையில் கொண்டு செல்ல முடியாதாகையால் அவள் தெரிந்தெடுத்த சில பொருட்களையே அதில் வைத்திருந்தாள். கூரான பொருட்கள், குறித்த அளவிற்கு மேற்பட்ட திரவப் பெருட்கள் எதுவும் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை. பற்பசைகூட சிறியதைத் தான் அனுமதிப்பார்கள். எனவே மிகவும் கவனமாக கையோடு கொண்டு செல்லும் பொருட்களைத் தெரிந்தெடுத்திருந்தாள்.

ஆறு மாதங்களுக்கு முன் வேலை விடையமாக நோர்த் கரோலினாவில் உள்ள தலைமையகத்திற்குச் சென்றபோது தான் அங்கே மைக்கேலை முதன் முதலாகச் சந்தித்தாள். அவளுடைய உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து மரியாதையோடு அவன் பழகி இருந்தான். அதன்பின் தொலைபேசி, செல்பேசி, மின்னஞ்சல், சாற்றிங், வீடியோ கொன்பிறன்ஸ் என்று அவர்களது தொடர்புகள் தொடர்பு சாதனைங்களை நம்பியே இருந்தன. இப்போதெல்லாம் காதல் தொடர்பு சாதனங்களையே நம்பி ஆரம்பித்து விட்டாலும் இளமைத் துள்ளலின் தாக்கத்தால் அவை சந்தோஷமாகவே நீடிக்கின்றன. திருமண பந்தத்தில் நுழைய வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு வந்த போது, அவன் நல்லவனா, அன்பானவனா, அவனை நம்பித் தன்னை ஒப்படைக்கலாமா என்றெல்லாம் அவள் சிந்தித்து அதிகம் கவலைப்பட்டாள். இந்தியப் பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை அவள் நேசித்ததால், தப்பானவனைக் கணவனாக அடைந்தால் காலமெல்லாம் வாழ்க்கை நரகம்தான் என்பது அவளுக்குத் தெரியும். எப்படியாவது அவனை நேரே சந்தித்து, அவனோடு பழகிப் பார்க்க வேண்டும், அவன் தனக்கு ஏற்றவன் தானா என்பதை உறுதிப் படுத்த வேண்டும் என்ற ஆவலோடு தான் அரைமனதோடு இருந்த அவள் இந்தப் பயணத்தை மேற்கொண்டாள். அவளது விருப்பத்தை ஏற்று, மைக்கேலும் அவள் வருகைக்காகக் காத்திருப்பதாக அறிவித்திருந்தான். சுருங்கச் சொன்னால் அவள் அவனுடனான ‘டேற்ரிங்குக்கு’ நாட்குறித்து விட்டு, அவனைச் சந்திக்கச் சென்று கொண்டிருந்தாள்.

இருக்கைப் பட்டியை மாட்டிக் கொண்டு, பாதியில் விட்ட நாவலை ஆர்வம் காரணமாக மீண்டும் தொடர நினைத்தாள். மறுபக்கத்தில் ஒரு தாயும் இரண்டு பெண் குழந்தைகளும் அமர்ந்திருந்தார்கள். முன் இருக்கையில் இளம் பெற்றோர் அமர்ந்திருந்தார்கள். யன்னல் கரையில் அவர்களின் மகன் அமர்ந்திருந்தான். மகனைக் கொஞ்சுவதும், பின் கணவனை அணைப்பதுமாக அந்தப் பெண் நடந்து கொண்டாள். நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்று மனதிற்குள் நினைத்தவள், தனக்கும் இப்படி கணவன், குழந்தை என்று ஒரு அன்பான குடும்பம் அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்டாள்.

விமானக் கதவுகள் மூடப்பட்டு, விமானி ‘சுள் எம்பேக்கர்’ என்று தனது பெயரை அறிமுகம் செய்து பயணிகளை வரவேற்க, விமானம் ஓடு பாதை நோக்கி மெல்ல நகர்ந்தது. ஆபத்து நேரத்தில் பிரயாணிகள் என்ன செய்ய வேண்டும் என்று ஒலி பரப்பு செய்ய, இரண்டு விமானப் பணிப் பெண்கள் அதற்கு விளக்கம் கொடுத்தக் கொண்டிருந்தார்கள். சிலர் அதைக் கவனிக்காது அசட்டை செய்தார்கள். விமானம் இப்போது வேகமாக ஓடுபாதையில் ஓடி மெல்ல மெல்ல மேலெழுந்தது. கொலின்ஸ் நேரத்தைப் பாரத்தாள் 3:26 என்று காட்டியது. மேகக்கூட்டங்களை நோக்கி விமானம் மேலெழுந்து செல்வது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. கெலின்ஸ் அந்த அழகை ரசித்துக் கொண்டிருந்தாள். பறவைகள் கூட்டமொன்று எதிர் பக்கம் பறந்து வந்து விமானத்தைக் கடந்து செல்வது இன்னும் அழகாக இருந்தது. 3200 அடி உயரத்தை விமானம் தொட்டபோது, திடீரென இடதுபக்க இயந்திரத்தில் புகை கிளம்புவதை அவள் அவதானித்தாள். தொடர்ந்து ஏதோ எரிந்து கருகும் மணம் வந்தது. உள்ளே சிகப்பு விளக்குகள் மின்னத் தொடங்கின. பறவைகள் தாக்கியதில், இரண்டு பக்க இயந்திரங்களும் செயல் இழந்து விட்டதால், அவசரமாகத் தரை இறக்கவேண்டிய சூழ்நிலையில் விமானம் இருப்பதாக விமான ஓட்டியின் அறிவிப்பு வந்தது. கைக்கடிகாரத்தைப் பார்த்தாள் 3:27 என்று காட்டியது. எல்லாமே சட்டென்று முடிந்து விட்ட உணர்வில் ஒரு கணம் உறைந்துபோன அவள், பிளாக் பெரியை எடுத்து மைக்கேலுக்கு ‘ஐ லவ் யூ’ என்ற ரெக்ஸ் செய்தியை அவசரமாக அனுப்பினாள்.

விமானத்தை அருகே உள்ள ‘ரெற்றபோறோ’ விமான நிலையத்தில் தரை இறக்கும்படி தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து அறிவிப்பு வந்தது. மேற்கொண்டு தொடர்பு கொள்ளமுடியாமல் தொடர்பு துண்டிக்கப்படவே விமானி தானாகவே முடிவெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். விமானத்தில் இருந்த 155 பிரயாணிகளையும் காப்பாற்ற வேண்டிய நிலையில், வேறு வழியில்லாமல் கட்சன் நதியில் விமானத்தை இறக்கினார். விமானம் 150 மைல் வேகத்தில் பாதுகாப்பாக நதியில் இறக்கப்பட்டது. கொலின்ஸ் நேரத்தைப் பார்த்தாள் 3:.31 என்று நேரம் காட்டியது.

நதியில் மூழ்காமல் எவ்வளவு நேரத்திற்குத் தாக்குப் பிடிக்க முடியும். காலடியில் தண்ணிர் தேங்குவதைத் திடீரென கொலின்ஸ் உணர்ந்தாள். மளமளவென்று தண்ணீர் இடுப்பளவிற்கு வந்தது. இந்தக் குளிர் நீருக்குள் அரை மணிநேரத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்பதால் கொலின்ஸ் வெளியேற ஏதாவது வழி இருக்கிறதா என்று நிமிர்ந்து பாரத்தாள். முன்பக்கக் கதவு திறக்கப்பட்டு பிரயாணிகள் வெளியேறிக் கொண்டிருப்பது தெரிந்தது. தண்ணீர் மட்டம் உயரவே, அருகே உட்காரந்திருந்த குழந்தைகள் மூச்சுத் திணறத் தொடங்கினர். அவற்றில் ஒன்றைத் தூக்கிக் கொண்டு அவளும் முன்நோக்கி நகர்ந்தாள். வெளியே அவசரமாக வந்த உதவிப் படகுகள் அவர்களுக்காகக் காத்திருந்தன. பயணிகள் ஒவ்வொருவராக அவர்களின் உதவியோடு படகில்; ஏற்றப்பட்டார்கள்.

நல்ல நிகழ்விற்குப் போகும்போது அபசகுணம் மாதிரி இந்த விபத்து ஏற்பட்டதில் அவள் மனம் கலங்கிப் போயிருந்தாள். இந்திய கலாச்சாரத்தில் மட்டுமல்ல, சோதிடத்திலும் அவள் நம்பிக்கை வைத்திருந்தாள். அவளது எதிர் காலம் குறித்த கவலை அவளை வாட்டத் தொடங்கியது. தொடக்கமே இப்படி என்றால், முதற் சந்திப்பே தடைப்படுவதென்றால், ஒன்றாக இணைந்து இன்னும் எவ்வளவு காலம் இந்த வாழ்க்கையைத் தொடரமுடியும் என்ற கேள்வியும் அவளைச் சஞ்சலப்பட வைத்தது. உதவிப் படகில் இருந்து அவள் வெளியே வருவதற்கு முயற்சி செய்த போது கைலாகு கொடுத்து அவளை வெளியே கொண்டு வந்தவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளால் இது கனவா நினைவா என்று நம்பமுடியாமல் இருந்தது.

‘மைக்கேல் நீயா?’ என்றவள், ஆச்சரியத்தில் மூழ்கினாள்.

‘நானேதான் மைடியர்!’; என்றான் மைக்கேல்.

‘இங்கே எப்படி?’ என்றாள் வியப்போடு.

‘உனக்கு ஒரு சந்தோஷ அதிர்ச்சி தரவேண்டும், உன்னோடு சேர்ந்து நானும் இந்த விமானத்தில் பயணிக்கவேண்டும் என்று தான் நான் திட்டம் போட்டு நியூயோர்க் வந்தேன். ஆனால் சற்றுத் தாமதமானதால் விமானம் புறப்பட்டுச் சென்று விட்டது. ஏமாற்றத்தோடு விமான நிலையத்தில் நின்றபோது எதிர்பாராத இந்த அதிர்ச்சியான செய்தி வந்தது. நான் துடித்துப் போய்விட்டேன். என்ன செய்வது என்று தெரியாமல் நான் வேண்டாத கடவுளே இல்லலை. அதனால்தான் எப்படியோ கெஞ்சி மன்றாடி இங்கே உதவி செய்ய வந்த இவர்களோடு படகில் ஏறி வந்துவிட்டேன்.’ என்று அவன் விளக்கம் தந்தான்.

‘நான் துடித்துப் போய்விட்டேன்’ என்று அவன் கண் கலங்கியபோது அவனது உண்மையான அன்பின் வெளிப்பாட்டை அவனது விழிகளில் அவள் கண்டாள். அடுத்த கணம் அதற்காகவே காத்திருந்தது போல,

‘மைக்கேல்..!’ என்று உணர்ச்சி வசப்பட்டவளாய் அவனை இறுக அணைத்து அவனது பரந்த மார்பிலே முகம் புதைத்துக் கொண்டாள். வார்த்தைகள் இல்லாத அந்த அணைப்பில் காதலைச் சொல்ல காதலர் தினம்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லாமற் போயிற்று. அவனோ அவளை இதமாய் அரவணைத்து அவளது தலையை வருடியபடி ‘மீ ரூ லவ் யூ’ என்று அன்பாய் ஆறுதல் சொன்ன போது ஒரு தாய்ப்பறவையின் அரவணைப்பை அவள் உணர்ந்து கொண்டாள். இப்படியான ஒருவனின் அன்பிற்காக, அரவணைப்பிற்காகத்தான் அவள் இதுவரை காலமும் ஏங்கிக் கொண்டிருந்தாள் என்பதையும் அந்தக் கணமே புரிந்து கொண்டாள். இந்த விபத்தில் அவள் உயிர் தப்பிப் பிழைத்தாலும், அதன் பாதிப்பு அவள் மனதில் நிலைத்து நின்றாலும், காலமெல்லாம் தன்னை அன்போடு அரவணைத்துப் பாதுகாக்கக் கூடிய ஒருவனின் அன்பைப் புரிந்து கொள்ளத் தனக்கு இப்படி சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைந்தாள். அதனால் தான் காதல் ஒரு விபத்து என்று எங்கள் முன்னோர்கள் சொன்னார்களோ தெரியவில்லை, ஆனாலும் அதை அடைவதற்கு அவள் பெரியதொரு விலை கொடுத்திருந்தாள்.


kuruaravinthan@hotmail.com

Series Navigation

குரு அரவிந்தன்

குரு அரவிந்தன்