கண்ணீர் விட்டுத் தண்ணீர் வேண்டுமா ? அல்லது தண்ணீர் விட்டுக் கண்ணீர் வேண்டுமா ? இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


தீது செய்வ தஞ்சிலாய், நின்முன்னே

தீமை நிற்கில் ஓடுவாய் போ போ போ

நீதி நூறு சொல்லுவாய் -காசொன்று

நீட்டினால் வணங்குவாய் போ போ போ. …. (போகின்ற பாரதத்தைச் சபித்தல்)

மகாகவி பாரதியார்

“விடுதலைக்குப் பிறகு கடந்த 50 ஆண்டுகளாய், ‘அணைகளை நவீன இந்தியாவின் ஆலயங்கள் ‘ என்று ஆராதித்த பண்டித நேருவின் காற்படைச் சீடர்கள் இயற்கையற்ற வெறி பிடித்து, அணைகள் கட்டும் வர்த்தகப் பணியில் பாய்ந்து மூழ்கி விட்டனர்! அன்று அணைகள் கட்டும் பணிகள் தேசத்தை உருவாக்கும் புனித வினைகளாய் மேற்கொள்ளப் பட்டன! அவரது வெறி வேட்கை மட்டுமே ஒருவருக்கு ஐயப்பாடை உண்டாக்கி யிருக்க வேண்டும்! பேரணைகள், நடுத்தர அணைகள், சிற்றணைகள், நீண்ட அணைகள், குற்றணைகள் ஆகியவற்றைக் கட்டிக் கொண்டு, இந்தியா உலகில் மூன்றாவது பெரிய அணைக்கட்டு நாடாகத் தன்னைப் பீற்றிக் கொள்கிறது! பேரணைகளின் ஆரம்பம் சிறப்பாக இருந்து, முடிவு சீர்கேட்டில் முடிந்தது! ‘வட்டாரத் தவிப்பு, தேசீய நலன் களிப்புக்கு ‘ [Local Pain for National Gain] என்னும் புனைந்துரை எல்லாம் வெட்ட வெளியில் வெடித்து விட்டது!”

அருந்ததி ராய் (ஏப்ரல் 1999)

“சூழ்மண்டலக் காப்பு நெறிகளை முடிக்காமலும், புதுக் குடியேற்ற வசதிகளைப் பூர்த்தி செய்யாமலும், நர்மதா நதியில் கட்டும் சர்தார் சரோவர் அணையின் உயரத்தை மிகையாக்க மாநில அரசாங்கமும், மத்திய அரசும் அனுமதிக்கக் கூடாது!”

மேதா பட்கர், அருந்ததி ராய் [டெல்லி சாஸ்திரி பவன், பிப்ரவரி 7, 2002]

“உலக மெங்கும் ஓடும் பல நதிகள் சீர்கேடான நிலையில் உள்ளன. ஆறுகள் இன்னும் கீழான தரத்தில் மாறிட, அவற்றில் உருவெடுத்து வரும் அணை விருத்தித் திட்டங்கள் பயமுறுத்துகின்றன. அமெரிக்கா பேரணைகள் கட்டுவதை நிறுத்தி இருக்கிறது. ஆனால் மற்ற நாடுகள் பேரணைகளை இன்னும் கட்டுமானம் செய்து பிரச்சனைகளைச் சமாளிக்கின்றன. இந்தியா பல்வேறு பெரு நதிகளை இணைக்கும் திட்டங்களை 200 பில்லியன் டாலர் மதிப்பீடுச் செலவில் நிறைவேற்ற முற்பட்டிருக்கிறது. அந்தத் திட்டங்களால் நதி ஓரங்களில் வாழும் பல மில்லியன் மக்கள் இடப்பெயர்ச்சியில் பாதிக்கப் படுவதோடு, ஆறுகளில் வாழும் நீரின உயிர்களும் மாயப் போகின்றன. சைனாவின் மிகப்பெரும் யாங்சூ நதியில் [Yangtze River] மூன்று கார்ஜியஸ் [Three Gorges] என்னும் முரண்பாடு மிக்க, பிரச்சனைக்கு உட்பட்ட முப்பெரும் அணைகள், குடிநீர் பரிமாற்றம், நீர்ப்பாசான அளிப்பு, வெள்ளக் கட்டுப்பாடு, நீர் மின்சக்தி உற்பத்தி ஆகிய தேவைகளை நிவிர்த்தி செய்யக் கட்டுமானமாகி வருகின்றன. எதிர்பாராத விதமாக சைனாவின் பிரதம மந்திரி வென் ஜியாபெள [Wen Jiabao] மேற்குச் சைனாவில், கட்டத் தயாராகும் வேறொரு பேரணைத் திட்டத்தை நிறுத்தி, அப்பகுதியின் சூழ்மண்டலப் பாதிப்பை மீளாய்வு செய்யும்படி வேண்டியுள்ளார்.”

பாட்ரிக் மெக்கெல்லி [Patrick McCully Director, International Rivers Network (2004)]

“அமெரிக்காவின் பத்துப் பெரிய நதிகள் பேரளவுச் சுத்தீகரிப்புச் செய்யும் அபாய நிலையை எட்டி விட்டன! அமெரிக்காவின் மிகப்பெரும் சீர்கேடு மாசுகள் மண்டிய அபாய நதிகள் அல்ல! அந்த ஆறுகள் அனைத்தும் இப்போது ஒரு சிக்கலான அபாயத் திருப்பத்தில் சென்று கொண்டிருக்கின்றன! நதிகளின் சீர்கேட்டுக் குறைபாடுகள், அவற்றைத் தீர்க்கும் முறைபாடுகள் ஆகிய இரண்டுமே மக்களுக்கு அபாயத்தை விளைவிக்கப் போகின்றன! மனிதர் தம் தோல்வியை ஒப்புக் கொள்ளாது, உதவியை நாடும் ஓர் கூப்பாடு அது!”

ஜான் ஸென் [John Senn, Representative of American Rivers] (April 2004)

டைனோஸார்ஸ் [Dinosaurs] போன்ற பூத விலங்கினம் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் அழிந்து மண்மூடிப் போனதுபோல், பாரதப் பேரணைகளைத் தகர்த்து மண்ணில் மூடிப் புதைத்து விடலாம் என்று அருந்ததி ராய், மேதா பட்கர் போன்ற சமூகப் போராட்டவாதிகள் அயராமல் அடிமேல் அடித்து வருகிறார்கள். ஆனால் மெய்யாக நடக்கப் போவது என்ன ? நதியிணைப்புத் திட்டங்களில் அணை அமைப்புகள் புத்துயிர் பெற்று செம்மை ஆக்கப்பட்டு, ஆலமரமாய் வேர்விட்டுப் பெருகி விழுதுகள் விடப் போகின்றன!

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அரச சந்ததிகள் ஆண்டுவந்த காலங்களில் அணைகள் கட்டுவதும், கால்வாய்கள் வெட்டுவதும் தடை செய்யப்படாமல் பெருகத் தொடங்கின! ஆனால் இருபதாம் நூற்றாண்டு இடைக் காலங்களில் அநேகக் குடியரசு நாடுகள் முளைத்துக் கிளைவிட்ட பிறகு, அணைகள் பூரண வளர்ச்சி அடைந்து, உச்சநிலை தொட்டுப் பின்பு தேய்பிறைபோல் சிறுத்துக் கொண்டு வருகின்றன! பிரச்சனைகள் புகார் செய்யப்பட்டுத் தீர்ப்புகள் திருப்தி செய்யவில்லை என்றால், போராட்டவாதிகள் பேரணை வேலைகளைத் தடுக்காது, மற்ற வழிகளில் தர்மப் போர் புரிய வேண்டும். கோடிக் கணக்கான ரூபாய்ச் செலவில் வடிவாகி வரும் பேரணையைக் கட்ட விடாமல் தடுப்பதுவும், கால தாமதப் படுத்துவதும் அரசாங்கத்தைத் தண்டிப்பதாகத் தோன்றினாலும், மெய்யாக மக்களே மக்களைத் தண்டித்துக் கொள்கிறார்கள்! நதியிணைப்புப் பணி நிறுத்தங்களில் எதிர்கால நீர்வள இழப்பு, நிகழ்கால நிதி இழப்பு மத்திய அரசை மட்டுமன்று, மாநில மக்களையும் பாதிக்கின்றன! இறுதியில் நீர்ப் பற்றாக்குறைத் தவிப்பில் தண்டிக்கப் படுவது அரசாங்க மன்று, பாரத மக்கள்தான்! தற்போது நாட்டுக்குத் தேவை எதிர்காலத் தண்ணீரா அல்லது நீண்ட காலக் கண்ணீரா வென்று மாநில அரசாங்கங்களும், போராட்டத் தீரர்களும், பாதிக்கப்படும் மக்களும்தான் தீர்மானிக்க வேண்டும்!

கட்டுரை ஆசிரியர்

நர்மதா திட்டங்கள் தேசீய நதியிணைப்புகளுக்கு வழிகாட்டி!

நர்மதா நதித் திட்டங்கள் சமூக வாதிகளின் போராட்டங்களால் தாமதமானாலும், சர்தார் சரோவர் திட்டம் மாநிலத்தின் பத்துச் சிறு நதிகளை வெற்றிகரமாக இணைத்து, மற்ற தேசீய நதி யிணைப்புத் திட்டங்கள் நிறைவேற வழிகாட்டிப் பாதை விரித்தது. நர்மதாவின் பிரதமக் கால்வாய் 40,000 கியூசெக்ஸ் [cuft/sec] நீரோட்டத் திறமுடையதால், உபரி வெள்ளம் மற்ற ஓய்ந்த சிறுநதிகளுக்குப் பங்கீடு செய்யப்பட்டது. மழைப் பொழிவுக் காலங்களில் பிரதமக் கால்வாய் வெள்ள அடிப்புகளைத் தணிய வைத்துக் காய்ந்து கிடக்கும் மற்ற இணைப்பு நதிகளை நிரப்பி, அவற்றின் சங்கமப் பகுதிகளைச் செழிக்கச் செய்தன. அவ்விதம் புத்துயிர் பெற்ற சிறுநதிகளில் நீர்வள உயிரினங்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து பெருகின வென்று, சர்தார் சரோவர் நர்மதா நிகம் கம்பெனி அறிவித்தது.

நர்மதா பிரதமக் கால்வாய் ஏற்கெனவே 158 மைல் (263 கி.மீ) தூரம் கட்டப்பட்டு மாஹி, சபர்மதி நதிகளுக்கும் மற்ற சிறு நதிகளுக்கும் நீர் வெள்ளத்தை அனுப்பி யிருக்கிறது. அவ்விதம் நீரை வறண்ட நதிகளிலுடன் பகிர்ந்து கொண்டதால், வெள்ள அடிப்புப் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுக் குஜராத் நீர்ப்பற்றாக்குறைப் பகுதிகளில் பிரச்சனைகள் குறைந்தன. 2003 ஆம் ஆண்டு மழைப் பொழிவுக் காலத்தில் நர்மதாவின் உபரி வெள்ளம் குஜராத் மாநிலத்தின் எட்டு நதிகளுக்கு [ஹெரான், ஆர்சங், கராடு, மாஹி, சைதக், மோஹார், வட்ரக், சபர்மதி] நீரைப் பகிர்ந்து கொள்ளப் பட்டது. அடுத்து செளராஷ்டிரா கிளைக் கால்வாயும் கட்டி முடிந்தால், வருடத்தில் பெருங் காலம் வறண்டு போகும் செளராஷ்டிரா பகுதிகளில் 27 சிறு நதிகள் அணைகளுடன் இணைக்கப்படும். 2003 டிசம்பரில் குஜராத் வேளாண்மை அமைச்சர், பூபேந்திரசிங் சூடாசமா 240 மைல் [400 கி.மீ] கால்வாய் ஒன்று கட்டப் போகும் அடுத்த திட்டத்தைப் பற்றிக் கூறினார். அது முடிவு பெற்றால் டாமன் கங்கா நதியுடன் சபர்மதி நதியும் இணைக்கப்படும்.

எட்டு தேசங்களின் இடையே ஓடும் நைல் நதியில் அஸ்வான் பேரணை!

ஆஃபிரிக்கா கண்டத்தின் வடகிழக்கே எகிப்து நாட்டில் 4187 மைல் தூரமோடும் உலகிலே எல்லாவற்றிலும் மிக நீளமான நைல் நதியில் அஸ்வான் பேரணை கட்டப்பட்டுள்ளது. தென் அமெரிக்காவின் மிகப் பெரிய நதி அமேஸான், நைல் நதியை விட நீளத்தில் (3900 மைல்) சற்று சிறியதே. நீல நைல், வெண்ணிற நைல், அத்பாரா எனப்படும் மூன்று மூல நதிகள் ஒன்றாய் இணைந்து, பிரதம நதியான நீள நைல் எகிப்து நாட்டில் ஓடி மத்தியதரைக் கடல் சங்கம அரங்கில் புகுந்து கலக்கிறது. நைல் நதி ஓட்டத்திலே ஓர் உலக விந்தை! நீல நைல் இதியோப்பியா, ஸயர், கெனியா, டான்ஜினியா, ரவாண்டா, புருண்டி ஆகிய நாடுகளின் வழியாகவும், வெண்ணிற நைல் யுகாண்டா, சூடான் வழியாகவும், பிரதம நைல் இறுதியில் எகிப்து வழியாகவும், ஆக எட்டு தேசங்களின் வழியாக ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது! நைல் நதியில் அல்லது அதன் மூல நதிகளில், பல நாடுகளின் உடன்பாடு, ஒப்பந்தம் பெற்றுப் பேரணைகள் கட்டுவதோ, கால்வாய்கள் வெட்டுவதோ எத்துணைச் சிக்கலான, சிரமான இமாலய முயற்சிகள் என்பதை இங்கே எடுத்துக் கூற வேண்டியதில்லை!

நைல் நதியில் நான்கு பேரணைகள் (ரோஸைரஸ் அணை, சென்னார் அணை, அஸ்வான் பேரணை, ஓவன் நீர்வீழ்ச்சி அணை) கட்டப்பட்டுப் பயனளித்து வருகின்றன. நைல் நதியின் சராசரி நீரோட்ட அளவு: விநாடிக்கு 3.1 மில்லியன் லிடர் (680,000 காலன்)! அனுதினமும் ஆயிரக் கணக்கான பேர் நைல் நதிப் போக்குவரத்தில் பயணம் செய்து வருகிறார்கள். வேளாண்மை, போக்குவரத்து, சுற்றுலாப் பயணம், மீன்வளப் பிடிப்பு போன்ற முக்கிய வாழ்வு, வர்த்தக, ஊழிய, உவப்புப் பணிகள் அனைத்தும், அணைகள் அமைக்கப் பட்டதால், ஓரளவு ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டாலும், பின்னல் அவை பெருமளவில் விருத்தி யடைந்தன என்பது மறுக்க முடியாத உண்மை.

கரை ஓரங்களில் வாழும் பன்னாட்டு ஆஃபிரிக்க மக்களுக்கும், நைல் நதிக்கும் இடையே இருந்த நெருக்க உறவுக்கு எந்த ஒப்புமையும், உதாரணமும் காட்ட முடியாது. வேளாண்மைத் தொழிலில் வாழும் மாந்தரின் ஜனத்தொகை அடர்த்தி [Population Density] ஒரு சதுர கி.மீடருக்கு 8600 நபர்கள்! ஆண்டு தோறும் வெள்ளநீர் அடிப்புக் காலங்களில் வடிகால் நிலங்கள் நிரம்பி வழியும் போது, ஆறு வாரங்களுக்கு நீர் வெள்ளம் தங்கி நிற்கும்படி அப்படியே விட்டுவிடப் படுகிறது. நதி நீர்மட்டம் தணிந்த பிறகு, தளமீது ஆறு விட்டுச் சென்ற செழிப்பான வண்டல் படுகையால், ஆண்டு தோறும் நீர்க்கிடை நிலத்தில் [Waterlogged Soil] இலையுதிர்க் குளிர்காலப் பயிர்கள் விளைவிக்கப் படுகின்றன. ஆயினும் விவசாயிகள் ஆண்டுக்கு ஒருமுறை விளைச்சல் தரும் நிலங்களுடன், ஏறி இறங்கும் நிலையற்ற வெள்ள அடிப்புநீர் அளவின் கருணையில் வாழ வேண்டி யிருக்கிறது.

நைல் நதியின் பேரணைகளும், நீர் அரண்களும்

1843 ஆம் ஆண்டு நைல் நதி தீரத்தில் அடுத்தடுத்து வரிசையாகக் கெய்ரோவுக்கு 12 மைல் தூரத்தில் நதிக் கீழோட்டச் சங்கமப் படுகையில் [Downstream Delta] பல திருப்பு அணைகள் கட்டத் தீர்மானிக்கப் பட்டது. அவ்விதம் செய்வதால் நதி மேலோட்ட [Upstream River] நீர் மட்டம் உயர்ந்து, வேளாண்மைக் கால்வாய்களுக்கு நீர் வெள்ளம் அனுப்ப முடியும். அத்துடன் நீர்ப் போக்குவரத்து வசதிகளையும் கட்டுப்பாடு செய்ய முடியும். 1861 ஆண்டு வரை ‘சங்கம நதி அரண் ‘ [Delta Barrage] முழுவதும் கட்டி முடிக்கப் படாமலே இருந்தது. அதற்குப் பிறகு அதே நதி அரண் நீட்சியாகி செம்மைப் படுத்தப் பட்டது. 1901 இல் நைல் சங்கமப் பகுதி டாமைட்டா கிளையின் [Damietta Branch] பாதி தூரத்தில் ஸிஃப்டா நதி அரண் [Zifta Barrage] அந்த அமைப்புடன் சேர்க்கப் பட்டது. அடுத்து அசியட் நதி அரண் [Asyut Barrage] 1902 இல் முடிக்கப் பட்டது.

அஸ்வான் நைல் நதியின் முதல் எகிப்து நீர்வீழ்ச்சி [Cataract] ஆகும். அவ்விடத்தில் பழைய அஸ்வான் கீழ் அணையும் [Old Aswan Lower Dam], புதிய அஸ்வான் மேல் அணையும் [New Aswan Higher Dam] அஸ்வான் நகருக்கு அருகில் அமைந்துள்ளன. அஸ்வான் கீழணை (1899-1902) ஆண்டுகளில் கட்டி முடிக்கப் பட்டது. அதன் நீர்மட்டச் சக்தியை இழுத்து, 345 மெகாவாட் மின்சக்தி ஆற்றலை உற்பத்தி செய்யும் நீர்மின்சார நிலையம் ஒன்று நிறுவனமானது.

அஸ்வான் பேரணை உருவாகி வரும்போது, இடப்பெயர்ச்சியில் பாதிப்பான நபர்களின் எண்ணிக்கை 90,000! அஸ்வான் மேல் அணை கெய்ரோவுக்கு 600 மைல் நதி மேலோட்ட தூரத்திலும், கீழணைக்கு 3.6 மைல் தூர மேலோட்ட தீரத்திலும் (1960-1970) ஆண்டுகளில் அமைக்கப் பட்டது. நைல் நதி 1800 அடி அகலம் உள்ள இடத்தில் கட்டப் பட்டது, மேலணை. மேலணை நீர்மின்சக்தி நிலையத்தின் தகுதி 2100 மெகாவாட் மின்சார ஆற்றல்! பிரம்மாண்டமான அஸ்வான் மேலணையின் நீளம்: 12,000 அடி [3600 மீடர்] (2.3 மைல்)! அணையின் நீர் உயரம்: 370 அடி. மேலணையின் அடிப்பகுதி 0.6 மைல் [1 கி.மீடர்] அகலத்தில் கட்டப் பட்டிருக்கிறது! நதிநீர் மட்டத்திற்கு மேல் அணையின் விளிம்பு 330 அடி [100 மீடர்] உயரத்தில் உள்ளது!

உச்ச வெள்ள அடிப்பில் அணை வழியாகச் செல்லும் நீரோட்டம்: விநாடிக்கு 11,000 கியூபிக் மீடர்! அபாய நிலைக்கு நீர் உயரம் எழும்போது, விபத்தைத் தவிர்க்க 5000 கியூபிக் மீடர் வெளியேற்றும் ‘அபாயத் திறப்பு வாய்கள் ‘ [Emergency Spillways] அமைக்கப் பட்டுள்ளன! அஸ்வான் மேலணை எழுப்பப் பட்டதால், 6000 சதுர கி.மீடர் பரப்புள்ள, செயற்கையான நீர்த் தேக்கம் ‘நாஸர் ஏரி ‘ [Lake Nasser] உருவாகி உள்ளது! மாபெரும் நீர்த் தேக்கமான நாஸர் ஏரி 288 மைல் [480 கி.மீடர்] நீளமும், 10 மைல் [16 கி.மீடர்] அகலமும் கொண்டு, (150-165) கியூபிக் கி.மீடர் (cubic km) நீர்க் கொள்ளளவு உடையது. தற்போது அஸ்வான் மேலணையில் ஒவ்வொன்றும் 175 மெகா வாட் உற்பத்தி செய்து வரும், 12 நீர் டர்பைன் யூனிட்டுகள் இயங்கி வருகின்றன (மொத்தம்: 1680 மெகா வாட்). 1967 ஆண்டு முதல் தொடர்ந்து நீர் மின்சார நிலையங்கள் மின்சக்தி பரிமாறி வருகின்றன. நிலையத்தின் உற்பத்தி உச்சமான போது, எகிப்து நாட்டின் பாதியளவு மின்சக்தி ஆற்றலைப் பங்கெடுத்து, முதன்முதல் பெரும்பான்மையான கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்க வழி வகுத்தது.

உலக நாடுகளில் ஓடும் ஆறுகளின் சீர்கெட்ட நிலை

அமெரிக்காவின் இருபெரும் சூழ்மண்டலக் கண்காணிப்புக் குழுவினர், அமெரிக்கா மற்றும் பிற தேசங்களின் நதிகள் துர்மாசு, நச்சு இரசாயனக் கலப்புகளால் சீர்கெட்டு, அணை விருத்திகளால் சூழ்மண்டலக் கேடுகள் ஏற்பட்டுச் சிதைந்து போவதாய் எச்சரிக்கை விடுவித்துள்ளனர்! மேலும் நச்சுக் கழிவுகள் வடிகட்ட வேண்டிய உலக நதிகளின் அட்டவணையையும் வெளியிட்டிருக்கிறார்கள். அமெரிக்க ஆறுகளின் பிரதிநிதி ஜான் ஸென் என்பவர், பின்வரும் நதிச் சீர்கேடுகளையும், சுத்தீகரிப்புத் தேவைகளையும் எடுத்துக் காட்டுகிறார்.

‘அமெரிக்காவின் பத்துப் பெரிய நதிகள் பேரளவுச் சுத்தீகரிப்புச் செய்யும் அபாய நிலையை எட்டி விட்டன! அமெரிக்காவின் மிகப்பெரும் சீர்கேடு மாசுகள் மண்டிய அபாய நதிகள் அல்ல! அந்த ஆறுகள் அனைத்தும் இப்போது ஒரு சிக்கலான அபாயத் திருப்பத்தில் சென்று கொண்டிருக்கின்றன! நதிகளின் சீர்கேட்டுக் குறைபாடுகள், அவற்றைத் தீர்க்கும் முறைபாடுகள் ஆகிய இரண்டுமே மக்களுக்கு அபாயத்தை விளைவிக்கப் போகின்றன! மனிதர் தம் தோல்வியை ஒப்புக் கொள்ளாது, உதவியை நாடும் ஓர் கூப்பாடு அது! ‘

‘அமெரிக்காவின் அபாய ஆறுகளில் மேற்கு அமெரிக்க மாநிலங்கள் பலவற்றின் வழியாக ஓடும் பெருநதி கொலராடோ நதியே முதலிடத்தில் உள்ளது. மிகச் சீர்கெட்ட துச்ச நிலையை இன்னும் அடையா விட்டாலும், தற்போதைய பிரச்சனைகள் தீர்க்கப்படா விட்டால் கொலராடோ நதி கீழான அந்த இழிநிலையைச் சீக்கிரம் அடைந்துவிடும்! கொலராடோ நதியோட்டத்தில் அனுதினமும் காலனுக்கு மேல் காலன் ராக்கெட் எரி ஆயில் கசிந்தூறி நுழைவதால், குடிநீருக்கு வருகிறது முதல் ஆபத்து! எதிர்பார்க்கும் இரண்டாவது ஆபத்து: கொலராடோ நதி யூடா [Utah] மாநிலத்தைக் கடக்கும் போது, சேமித்துக் கரைக்கு அருகில் வைக்கப் பட்டுள்ள 11 மில்லியன் டன் கதிரியக்கக் கழிவுகள் நதியோட்டத்தில் கசிந்து கலக்கலாம்! ‘

அரிஸோனா மாநிலத்தின் ஆளுநர் (2004) ஜானெட் நெபோலிடானோ [Governor, Janet Nepolitano] கூட்டாட்சி நீர்வள அதிகாரிகளுடனும், மற்ற மாநில அதிகாரிகளுடனும் கலந்துரையாடி நதிநீர்த் தர மீட்சிக்கும், பாதுகாப்புக்கும் முயலப் போவதாய்க் கூறினார். கொலராடோ நதிக்கரையில் குடியேறியுள்ள 30 மில்லியன் மக்களுக்குத் தற்போது நதிநீர் குடிநீர்த் தகுதி பெற்றது என்றும், எதிர்காலப் பாதுகாப்புக்குத்தான் தடுப்புப் பணிகள் தயாராக இருக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

அடுத்து பிரச்சனை மிக்க அமெரிக்க ஆறு, பத்து மாநிலங்களின் வழியே ஓடும் மிஸ்ஸிஸிப்பி நதி. படகு கட்டுமரப் போக்குவரத்துகள், தொழிற்துறைத் துர்நீர் கலப்புகள், மற்ற இரசாயன நச்சுகள் ஆகியவற்றால் சீர்கேடாகி அது பயமுறுத்தி வருகிறது. வடகிழக்குப் பகுதியில் ஓடும் ஹெளஸடானிக் ஆறு [Housatonic River] கூட அந்த அட்டவணையில் சேர்க்கப் பட்டிருக்கிறது. அந்த நதியில்தான் தவிர்க்கப்படும் மிகப் பேரளவு பிசிபி [Synthetic Chemical (PCB)] கலந்துள்ளது. புற்றுநோய் உண்டாகத் தூண்டுவது பிசிபி என்று அமெரிக்கா தொழிற்சாலைகளுக்குத் தடை போட்டுள்ளது. பிசிபி உற்பத்தி செய்யும் ஜெனரல் எலெட்டிரிக் கம்பெனியும், அமெரிக்கச் சூழ்வெளிக் காப்புப் பேரவையும் [Environmental Protection Agency (EPA) USA] சேர்ந்து, தொழிற்சாலைகளின் அருகில் பிசிபி தீண்டிய நதி மண்டிகள் திரண்ட பகுதிகள் சுத்தீகரிக்கப் பட்டன. மற்றும் 142 மைல் [237 கி.மீ] நீண்டு செல்லும் நதி தீரங்கள் சுத்தமாக்கப் படுமா என்பதை அதிகாரிகள் இன்னும் தீர்மானிக்க வில்லை.

கண்ணீரைத் துடைக்கிறாரா ? அல்லது தண்ணீரைத் துடைக்கிறாரா ?

காட்டு யானையைக் கவனத்துடன் பிடித்து, பயிற்சி அளித்து மனிதருக்குப் பணிசெய்யப் பாதுகாத்து வருவது முற்போக்கான முயற்சிகள். அதைப் புறக்கணித்து யானைகள் காட்டு விலங்குகள், அவை நாட்டையும், மாந்தரையும் நசுக்கிக் கொல்பவை என்று வாதிடுவது போன்று பேரணை எதிர்ப்பாளிகள் ஆரவாரம் செய்து அணைகள் மக்களின் வாழ்வை அழிப்பவை என்று கட்டுவதைத் தடுத்து வருவது ஆக்கவழி நெறி ஆகுமா ? வேறு முறைகளில் பிரச்சனைகளைத் தீர்க்க முயல வேண்டுமே தவிரப் பேரணைகள் வடிவாகி வருவதை நிறுத்துவது எந்த நியாயத்தைச் சாரும் ? குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும் எதிர்ப்பாளிகள், பேரணை அமைப்பு முறைபாடுகளைத் தடுப்பதோ அல்லது தாமதப் படுத்துவதோ குடியரசு நெறிகளாகத் தெரியவில்லை. சமூகப் போராட்டவாதிகள் மெய்யாகவே மக்களின் கண்ணீரைத் துடைக்கிறாரா அல்லது மாந்தர் குடிக்கப் போகும் அவர்களது எதிர்காலத் தண்ணீரைத் துடைக்கிறாரா என்பதை ஆழ்ந்து நோக்க வேண்டும்!

[கட்டுரை தொடரும்]

தகவல்கள்:

1. Address of A.K. Goswami Secretary of Water Resources, Govt of India [www.ficci.com/media-room/speeches-presentations/2003/Mar]

2. Interlinking Problems By: Suresh Prabhu Task Force Leader The Hindu Editorial [Aug 6, 2003]

3. In a Place where Nature Provides, Mankind Deprives By Christian Monitor [Oct 30, 2002] [www.csmonitor.com/2002/1030/p08s02-wosc.htm]

4. Linking of Major Rivers of India -Bane or Boon ? By: B.P Radhakrishna, Current Science Vol:84 No:11 [June 10, 2003]

5. Planning for Inter-Basin Transfers, Indian National Perspective Plan, Govt of India, Ministry of Water Resources [2003]

6. Linking Rivers Courting Disaster By: Darryl D ‘Monte [www.boloji.com/wfs195.htm] [July 13, 2004]

7. The River Linkages Payoff [June 2003] [www.indiatogether.org/2003/jun/opi-rivers.htm], River Links & Judicial Chinks By Videh Upadhyay [Sep 2003] [www.indiatogether.org/2003/sep/vup-sclinks.htm], Cart Before the Horse By Videh Upadhyay [May 2004] [www.indiatogether.org/2004/may/env-ilrreview.htm]

8. Interlinking Mirages By madurai collective [Dec 8, 2002] By Medha Patkar & L.S. Saravinda (The Hindu Dec 3, 2002)

9. River Linking: Boon or Folly -Water Voices HidustanTimes.com [www.hindustantimes.com/…]

10 The Doubtful Science of Interlinking By: Jayanta Bandyopadhyay & Shama Perveen [Feb 2004]

11 The Hindu Report By: Dr. Kalyanaraman Special Correspondent [April 16, 2003]

12 Govt of India, Ministry of Water Resources Task Force Resolution [December 13, 2002]

13 The Hindu Report By: A. Vaidyanathan [www.hindunet.com] [March 27, 2003]

14 Linking Rivers: Vision or Mirage ? By R. Ramaswamy Iyer, Former Secretary Govt of India Water Resources, Member, Integrated Water Resource Planning, Vision 2020 Committee of Planning Commission (Dec 2002) [www.flonnet.com/].

15 No Rethink on River Links Project: Centre By: J. Venkataraman ‘The Hindu ‘ [Aug 31, 2004]

[www.thehindu.com/2004/08/31/stories]

16 Calamity, Chennai ‘s Thirst By: T.S. Subramanian [March 26, 2004]

17 Case Study of Telugu Ganga Project, India (Water Rights, Conflicts and Collective Action) By: Balaraju Nikku (Doctoral Fellow, Irrigation & Water Engineering Group, Wageningen University Research Centre, Netherlands) [May 2004]

18 California Canal [www.bsi.vt.edu/welbuam/pictures/irrigation.html]

19 All American Canal Boulder Canyon Project [www.usbr.gov/dataweb/html/allamcanal.html]

20 Colorado River Aqueduct, Parker Dam, Central Valley Project By: Cactus Jim [June 2002]

21 Indian Priest uses Engineering Training to clean up Ganges By Denise Brehm, MIT News, Mass (U.S.A) http://web.mit.edu/newsoffice/tt/1998/dec09/ganges.html [Dec 9, 1998]

22 India ‘s Ganges A Holy River of Pollution -Clean the Ganges Campaign (Project 130) [Jan 13, 2001]

23 Sacred Ganges Carries Toxic Pollution By E-Law U.S. Staff Scientist Mark Chernaik [www.elaw.org/news/ebulletin/] (2001)

24 The Ganges River By: Ashok Dutt M.A. Ph.D. Pofessor of Geography University of Akron, OHIO, U.S.A.

25 The Tehri Dam Project By: Sudha Mahalingam The Hindu (June 1998)

26 Tehri Dam, IRN Fact Sheet By: (Oct 2002)

27 Statement of Supreme Court Ruling on Tehri Dam (Sep 1, 2003)

28 Questions Surrounded Fatal Tunnel Collapse in Tehri Dam Project By: Saibal Dasgupta (Aug 10, 2004).

29 Large Dam Construction is a Controversial Issue in India, BBC By: Ram Dutt Tripathi, Lucknow [Dec 8, 2001]

30 The Greater Comman Good -Article on Gujarat ‘s Sardar Sarovar Dam in Narnada River By: Arundhathi Roy [April 1999].

31 Untapped Water Resources in Yamuna River Basin By: R.N. Malik (June 26, 2003) [www.tribuneindia.com/2003/20030626/science.htm]

32 Interlinking of Rivers – Opening the Floodgate of Contradictions By: Sudhirendar Sharma.

33 River-Linking Plan: India to Go Ahead By: Golap Monir (Sep 26, 2004).

34 India ‘s Gigantic River Linking Project: Think about the Oceans too! By: Sudhirender Sharma.

35 River Linking Projects The Need, Earlier Proposals, About the Plan, Financing, Benefits & Implementation.

36 River Linking Scheme, Central Chronicle By: Pradip Saha [www.centralchronicle.com] (Sep 25, 2004).

37 R. Rangachari, Nirmal Sengupta, R. Ramaswamy Iyer, Pranab Banerji, and Shekar Singh, – Large Dams: India ‘s Experience, a WCD case study prepared as an input to the World Commission on Dams, Cape Town, [www.dams.org] [November 2000]

38 Narmada River Dams, India -Evaluation Against World Commission on Dams Guidelines.

39 Proponents & Critics of Dams Agree to Work Together -World Conservation Union [Apr 11, 1997]

40 Sardar Sarovar Dam Overflows as Main Canal Ruptures. Earthquake also Registered near Reservoir By: Yogini Khanolkar & Ashish Mandloi [Aug 16, 2004]

41. Worlds Rivers Imperiled By Chemicals & Development -Leah Krakinowski [April 17, 2004] [www.greennature.com]

42. Egypt ‘s Nile River Aswan Dam, Environmental Issues From: Wikipedia, the Free Enclclopedia.

43. Technical Aspects Against Interlinking of Indian Rivers By: P.V.R. Raja The Hindu News [www.thehindu.com] (September 23, 2003)

44. Gujarat Success Provides Cue for National River Linking [www.decanherald.com] (Feb 8, 2004)

45. Interlinking Mirages By: Medha Patkar & L.S. Aravinda.

46. Scheme to Link Major Rivers Divides India By: Keya Acharya, Hyderabad (July 17, 2003)

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan] [November 25, 2004] (Part X)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா