கணினிக்கட்டுரைகள் – 2

This entry is part [part not set] of 1 in the series 20000613_Issue

மா.பரமேஸ்வரன்


2. நாம் அலுவலகங்களில் உபயோகம் செய்யும் கணினி வலை அமைப்பிற்கும் (Network), இணையத்திற்கும்(Internet) உள்ள வேறுபாடு என்ன என்று உங்களுக்கு தெரியுமா ?

எளிமையாகச் சொல்லப்போனால் கணினி வலையமைப்பு (Computer Network) என்பது, ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றாக இணைப்பதுவே ஆகும். அவ்வாறு இணைப்பதற்கு நாம் மின்கடத்திக்கம்பிகளையோ(cables), அல்லது (Microwave) நுன்னதிர்வலைகளையோ அல்லது வேறு ஏதேனும் ஊடகங்களையோ பயன்படுத்தலாம் எவ்வூடகத்தை பயன்படுத்தி இணைத்தாலும் அஃது வலையமைப்பே ஆகும்.

இவ்வாறு கணினிகளை ஒன்றாக இணைப்பதனால் ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு தகவல்களை அந்த இணைப்புகள் மூலமாக எளிதில் அனுப்பமுடியும். இவ்வாறாக கணினிகளை இணைப்பதில் பல வகைகள் உள்ளன. அவைகளில் வெவ்வேறு இடங்களில் உள்ள கணினிகளை இணைக்கும் பொழுது அவற்றிற்கிடையே உள்ள தூரத்தை கொண்டு மூன்று வகைகளாக நாம் பிரிக்கலாம்.

1. Local Area Network(LAN) – இஃது கணினிகள் 60 கிலோமீட்டர் தூரத்துக்குள் இணைக்கப்பட்டால் அவ்வலையமைப்பு இவ்வாறு வழங்கப்படும். இத்தகைய வலையமைப்பையே நாம் அலுவலகங்களில் பயன்படுத்துகிறோம்

2. Metropolitan Area Network (MAN) – பெரு நகரங்களுக்குள் மட்டும் அமைக்கப்படும் கணினி வலையமைப்பு. (மும்பையில் உள்ள அனைத்து கல்லூரிகளும் கணினிக்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன – சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் கணினிக்கள் மூலம் இனைக்கப்பட்டுள்ளன. இவை இந்த MAN வலையமைப்பைக்குறிக்கும். ஆனால் சென்னை ஆப்டெக் கணினி மையத்தில் 20 கணினிகள் ஒரு வலையமைப்பாக இணைக்கப்பட்டுள்ளது – இது எவ்வகை வலையமைப்பு என்றால் LAN அமைப்பே ஆகும் இவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள கணினிகளை மட்டும் இணைப்பது ஒரு பெருநகரத்தின் எல்லைக்குள்ளேயே இருந்தாலும் இத்தகையவை MAN என்று அழைக்கப்படுவது இல்லை LAN என்றே அழைக்கப்படுகின்றன.)

3. Wide Area Network (WAN) – வலையமைப்புக்குள் 60 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள கணினிகளையும் இணைத்தால் அஃது இவ்வாறு வழங்கப்படும். எடுத்துக்காட்டாக இந்தியன் ரயில்வே மற்றும் பல… இணையம்(Internet) கூட இந்த வலையமைப்பின் கீழ் வருகிறது

இவ்வாறு ஒரு வலையமைப்பை 10 கணினிகளை கொண்டு நீங்கள் உறுவாக்குகிறீர்கள் என்று எடுத்துக்கொண்டால் அந்த 10 கணினிகளில் ஒரு கணினியை மைய,முக்கிய கணினியாக பயன்படுத்தவேண்டும் அத்தகைய மையக்கணினிகள் ஆங்கிலத்தில் SERVER என்று அழைக்கப்படுகின்றன. எந்த ஒரு கணினி வலையை எடுத்துக்கொண்டாலும் அதில் இத்தகைய SERVER கணினிகள் ஒன்றாவது இருக்கும்

இந்த Server களின் வேலைதான் என்ன ? தகவல்களைத்தன்னுள் சேமித்துவைத்து அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பிற கணினிகள் கேட்கும் போது அவற்றைக் கொடுத்து உதவுவதே. இவ்வாறு தகவல்களை ஒரிடத்தில் (Centralizing the Data) சேமித்து வைப்பதால் அவ்வலையமைப்பில் உள்ள எவரும் எப்பொழுது வேண்டுமானலும் அத்தகவல்களை பெற முடியும்.

எடுத்துக்காட்டாக-இரயில் போக்குவரத்துக்கு இருக்கை முன்பதிவு செய்கிறோம்-நான் மதுரையிலிருந்து பெங்களூர் போய் அங்கிருந்து தில்லி செல்லவேண்டும் அதற்காக மதுரை இரயில்வே சந்திப்பிலிருந்து பெங்களூர் – தில்லி ஒரு இருக்கை முன்பதிவு செய்கிறேன். அதேவேலையில் திரு என்பவர் திருவனந்தபுரத்திலிருந்து அதே வண்டிக்கு அதே நேரத்தில் முன்பதிவு செய்கிறார், மும்பையில் இருந்து ஒருவரும், நாகபுரியில் இருந்து ஒருவரும் அவ்வாறே பெங்களூர்-தில்லி இரயிலுக்கு முன்பதிவு செய்கின்றனர்….

இது எவ்வாறு சாத்தியப்படுகிறது ? நான் முன்பே கூறியவாறு ஒரு மைய இடத்தில் ஒரு கணினி(SERVER) நிறுவப்படுகிறது அந்த கணினியானது இந்தியாவில் உள்ள அனைத்து இரயில்வே சந்திப்புகளில் உள்ள கணினிகளுடன் இணைக்கப்படுகிறது (Wide Area Network) நான் செய்த முன்பதிவும், திரு அவர்கள் செய்ததும், நாகபுரியில் செய்ததும் எல்லாம் அந்த மையக் கணினியிலேயே சேமிக்கப்படுகின்றன. ஒருவர் முன்பதிவு செய்ய இருக்கை காலியாக இருக்கிறதா என்ற வினா எழுப்பும் போதும்கூட அந்த மையக்கணினியுடன் தொடர்புகொண்டு மொத்த இருக்கைகளில் எத்தனை இருக்கைகள் பதிவு செய்யப்பட்டுளளன என்ற தகவல் பெறப்பட்டு உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது.

இத்தகைய கணினி வலையமைப்பிற்கும் இணையத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன ? என்பது தான் நம்முடைய கேள்வி.

இங்கு நான் வசிக்கும் அமீரகத்தில் ஒரு வலையமைப்பு உள்ளது. இங்கு உள்ள மக்களின் கணினிகள் ஒரிடத்தில் நிறுவப்பட்டுள்ள பெரிய கணினி ஒன்றுடன் தொலைபேசி கம்பிகளின் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. என்னுடைய கணினி கூட அவ்வாறே இணைக்கப் பட்டுள்ளது. அதனால் எனக்கு எப்பொழுது அமீரகத்தைப்பற்றிய எத்தகைய தகவல்கள் வேண்டுமானாலும் நான் இந்த இணைப்பைப்பயன்படுத்தி அந்த பெரிய கணினியில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

சீனாதேசத்தில் சங்கையில் கூட அவ்வாறே ? சிவா அண்ணன் கணினி அங்கு நிறுவப்பட்டுள்ள ஒரு பெரிய கணினியுடன் இணைக்கப்பட்டுள்ளது அதிலிருந்து தான் அவர் சீன பற்றிய தகவல்களைப்பெறுகிறார்,சுலைமான் அண்ணன் கணினியும் தோகா நகரித்தில் உள்ள ஒரு பெரிய கணினியுடன் இணைக்கப்பட்டுள்ளது இதுபோல உலக நாடுகள் முழுவதிலும் அந்நெந்நாடுகளில் உள்ள கணினிவலையமைப்பில் பொது மக்களின் கணினிகள் இனைக்கப் பட்டுள்ளதால் அவர்கள் அந்த அந்த நாடு பற்றிய தகவல்கள அந்நாடுகளில் உள்ள பெரிய (SERVER)கணினிகளில் இருந்து பெற முடிகிறது.

ஆனால் நான் சீனா போக வேண்டும் அந்த நாட்டில் தொழில் தொடங்கவேண்டும் அதற்காக எனக்கு சில தகவல்கள் வேண்டி இருக்கிறது அதை நான் எப்படிப்பெற முடியும் ?

என்ன செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமா ? அமீரகத்தில் உள்ள பெரிய கணினி, தோகா வில் உள்ள பெரிய கணினி போல் உலகநாடுகளில் உள்ள அனைத்து பெரிய கணினி (SERVER) களையும் ஒன்றாக ஒரு இணத்தனர். இப்பொழுது என்னுடைய கணினி இங்குள்ள பெரிய கணினி யுடன் இணைக்கப்பட்டு, அது சீனா மற்று மறற தேசத்துடைய கணினிகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால் எந்த தகவலையும் எந்த நாட்டிலிருதும் உடனுக்குடன் பெற முடிகிறது ? அந்தெந்த நாடுகளின் வலை அமைப்பில் உள்ளவர்களுடன் தொடர்புகொள்ளவும் முடிகிறது. இப்பொழுது சொல்லுங்கள் இணையத்திற்கும், நமது அலுவலக கணினி வலையமைப்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

இணையம் கணினி வலையமைப்புகளை ஒன்றாக இணைக்கும் ஒரு பெரிய வலையமைப்பு, இது ஆங்கிலத்தில் Network of Networksஎன்று அழைக்கப்படுகிறது ஆனால் நமது அலுவலகக் கணினி வலையமைப்பு வெறும் கணினிகளை மட்டும் ஒன்றாக இணைக்கிறது.

 

 

  Thinnai 2000 June 11

திண்ணை


  • கணினிக்கட்டுரைகள் – 2

மா.பரமேஸ்வரன்

மா.பரமேஸ்வரன்