வே.சபாநாயகம்
கடிதம் – 21
நாகராஜம்பட்டி
24-10-78
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
ஒரு மூன்று மாதங்களுக்கு முன்னால் தங்களுக்கு எழுதி, தபாலில் சேர்க்காது விட்ட ஒரு கடிதம் இத்துடன் வருகிறது. இது எவ்வளவு அநியாயம் என்பது இன்று தான் – இப்போதுதான் எனக்கு உறைக்கிறது என்று இல்லை. இந்த உணர்க்கை எப்பொழுதுமே எனக்கு உண்டு. என்ன செய்வது? வாழ்க்கையில் நேரங்கள் எதெதற்கோ பங்குபோய் விடுகின்றன.
அதுவுமின்றி, சில இடங்களுக்கு எல்லாம் வெறுமனே கடிதம் எழுதினால், அதில் ஒன்றும் அவ்வளவாகத் திருப்தி இல்லை. எண்ணுவதை எல்லாம் எழுதுவதில் ஏதோ திருப்தி கிடைக்கிற அந்தப் பிராயம் போய் விட்டது. சொல்ல நினைப்பதை எல்லாம் சொல்லாமல் – பரவாயில்லை என்று விட்டு விடுகிற ஒரு பக்குவம் வந்தாயிற்று.
நாமெல்லாம் எங்கெங்கோ இருந்து கொண்டிருக்கிறோம். இந்தக் கற்பூரம் இன்னும் கரையாமல் இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் பூஜைக்கு ஏற்றிக் கொள்ளலாம்.
தாங்கள் எழுதிய பரீட்சை முடிவுகள் வந்தாயிற்றா? அமைதியாகவும் அதே சமயத்தில், உணர்ச்சியின் இனிய குரலொலிகளுடனும், தெம்பாகவும், தீம்பு எதுவும் நேர்ந்துவிடாது என்கிற திட நம்பிக்கையுடனும், தங்களுக்கே உரிய விசேஷ
குணமான சிரத்தை மற்றும் sensitivity உடனும் இருங்கள் என்று வாழ்த்துகிறேன்.
நான் உங்களைவிடச் சின்னவன். ஆனால் ஒரு குழந்தையை வாழ்த்தத் தோன்றுவது போல் வாழ்த்துகிறேன். இதனைப் பெறுக.
இங்கே அனைவரும் நலம். வாழ்க்கை எப்பொழுதும் போல். ஆனால் நான் எப்பொழுதும் எப்படி வாழ்கிறேன் என்று தங்களுக்குத் தெரியுமா? அது ஒரு பரம நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குகிறது. வெளிச் சித்தரிப்புகளில் வேறு எந்தவித விசேஷமுமில்லை. என் பாஷையின் கிரீடம் எப்போதும் என் தலைமேல் இருக்கிறது. அவ்வளவுதான்.
சிவகுமார் ஐந்தாவது படிக்கிறான். வைஷ்ணவி மூன்றாவது படிக்கிறாள். அவர்கள் டவுனில். நாங்கள் இங்கே. விடுமுறைகளில் குழந்தைகள் கூடுவார்கள். அவர்களுக்காக நான் தருவதும் குறைவுதான். அவர்களுக்கு அந்தக் குறை தெரிய
வில்லை. வாழ்வு அவர்களுக்குப் பெரிய வியப்பாகவும் களிப்பாகவும் இருக்கிற பருவத்தில் வேறு குறைகள் எல்லாம் ஏன் வரும்?
குறைபட்டுக் கொள்ளும் கல்வியை உலகுதான் போதிக்கிறது. நிறைவு கொள்ளும் பண்பு ஓர் அருளாகும்.
தங்கள் வாழ்க்கையின் தோற்றமே மாறியிருக்கும் அல்லவா? ஒரு மருமகனை ஏற்கும் பருவம் தானே உங்களுக்கு? தலையில் நரையோடியிருக்கிறதா? எதிர்காலத்தைப் பற்றி ரொம்பப் பொறுப்பாகவெல்லாம் யோசிக்கத் தோன்றுகிறதா?
அகிலன் ஒரு தஞ்சாவூர் இளைஞன் போல்தான் இருப்பான். அன்று அவன் வாயில் குதப்பிக் கொண்டிருந்தசிவந்த வெற்றிலையும் சிரிப்பும் பேச்சும் அப்படித்தான் என்னை நினைக்க வைத்தன. நமது நல்லுணர்ச்சிகள் அவர்களுக்கு மெருகுகளாகச் சென்று சேர்வதாக.
எனது நீண்ட “பதிலின்மை”, தங்களது வருகையைத் தடுத்துவிட்டது. இந்தக் குற்றம் என்னைச் சார்கிறது. எனவே வருமாறு அழைப்பதில் ஒரு அநாகரீகமோ – நாசூக்கின்மையோ தட்டுகிறது. ஆனால், வந்தால் எவ்வளவு மகிழ்வேன் தெரியுமா? இதெல்லாம் நமக்குள் சொல்லிக் கொள்ளத் தேவையற்றவையே.
பேராம்பட்டிலேயே பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். JKவை மே மாதம் பார்த்ததுதான். நவம்பரில் போகலாமா என்று ஒரு நப்பாசை.
தங்கைக்கு இன்னும் டீச்சர் வேலை கிடைக்கவில்லை. வீட்டிலேயே சிறு பிள்ளைகளுக்கு ட்யூஷன் சொல்லிக் தருகிறது. நியாயமாக அதன் கல்யாணம் குறித்துக் கவலைப்பட வேண்டும். ஆனால் வாழ்வு இப்போது முதன்மையாக அதன்
உத்தியோகத்துக்கே தவம் கிடப்பதாக இருக்கிறது.
“போதிக்கிற தொழிலுக்கென்று அரசாங்கம் எனக்குத் தருகிற சன்மானம் அல்லாமல், வேறொரு காசு அதற்காக நான் இதுவரை பெற்றதில்லை” என்கிற பெருமையை இழந்து, நானும் தற்சமயம் பேராம்பட்டில் ட்யூஷன் வைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் முதல் மாதச் சம்பளக் காசுகளை வாங்கவில்லை.
மனைவி நலமே. அவ்வப்பொழுது சகஜமான நலிவுகள். பல விஷயங்களில் முதிர்ந்த ஞானியாகி விட்டாள். ஆனால் பெண்ணின் இலக்கணங்களுக்குள்ளும் அடக்கலாம்.
என்னைச் சுற்றி இருக்கும் எல்லோருக்கும் என் வாழ்முறைகள் வித்தியாசமானவையாகத்தான் தெரிகின்றன. நான் சாதாரண மாதிரியாய் இருந்து விட்டால் பல பிரச்சினை இருக்காது. ஆனால் எனக்குச் சுவையும் இருக்காது. எனினும் நானும் ஜனங்களும் எங்கள் உறவுகளில் திருப்தி பட்டுக் கொள்கிறோம். அப்படி மனிதர்களை வசீகரிக்கிறவனாகத்தான் நான் இருக்கிறேன்.
மேடைகளில் எப்பொழுதாவதுபேசினால், நான் ஒரு செகண்டரிகிரேடு வாத்தியார் என்பதை மறந்து விடுகிறேன்.
இந்தக் கடிதம் எங்கள் தீபாவளி வாழ்த்துக்களைக் கொண்டு வருவதாகவும் அமைவதாக.
நான் எழுதினால் என்ன, எழுதாவிட்டால் என்ன? நீங்கள் எழுதுங்களேன். தொடர்ந்து உங்கள் கடிதங்கள் வந்து கொண்டிருந்து, அந்தச் சுழற்சியால் என்னையும் இழுத்துச் சுற்றிக் கொண்டால் ஒழிய கடித விஷயத்தில் நான் இனி மிகுந்த குறை பாடுடையவனாக மாறி விடுவேன் போலிருக்கிறது.
ஒரு ஸ்பரிசம். அது பரிமாறுகிற விஷயங்கள் எவ்வளவோ. அது போல், எப்பொழுதோ ஒன்றாக நான் எழுதத் துவங்கினாலும், மிக்க அத்யந்த உணர்ச்சியில் ஆழ்ந்து விடுகிறேன். நான் சொல்லாததையெல்லாம் கூட நீங்கள் உணர்ந்து கொள்ளுமாறு உங்களைத் தொட்டுக் கொண்டு விட்டேன். கடிதங்களின் தேவை இது. அவை எப்பொழுதும் இங்ஙனம் தீரும்.
நாகராஜம்பட்டி, தங்கள்,
24-10-78 பி.ச.குப்புசாமி.
- சென்று வா நேசமலரே!
- நியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை
- கழிப்பறை காதல்
- மூதாய் சொல்லித் தந்த மார்க்ஸீய கதைகள்
- கடித இலக்கியம் – 21
- மருத்துவக் கல்லூரியில் கௌசல்யா என்ற ஏழை மாணவிக்கு உதவுங்கள்
- கீதாஞ்சலி -89 திடீர் அழைப்பு எனக்கு
- எந்த வகை அறிவுஜீவிகள்…..?
- 33-வது இலக்கியச் சந்திப்பு – ஈழத்தமிழ் இலக்கியத்தில் மனித உரிமை – செப் 23,24 – 2006
- கடிதம்
- கடிதம் – மதம் மடுத்த சுரையா
- காயல்பட்டணம் இஸ்லாமிய மண்ணறை (கல்லறை)க் கல்வெட்டுகள்
- அரண்/கீர்த்தி சக்கரம் : திரை விமர்சனமல்ல: பாரத மண்ணை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பரிந்துரை
- வெங்கட் சாமிநாதன்
- சுவிசில் நளாயினியின் கவிதைநூல்கள் அறிமுகமும் கலை இலக்கிய ஒன்றுகூடலும்
- நாசா விண்வெளித் தேடலில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் செல்லும் எதிர்காலத் திட்டங்கள்-2
- கவிதைகள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:1)
- இசையாக
- புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (44-73)
- பெரியபுராணம் – 103 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- என்னைச் சொல்லி,எனக்காய்(ச்) சொல்லுவது. (சலாம் பம்பாயும் நானும்,மீரா நாயரும்.)
- துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம்!
- பண்டைத் தமிழர்களின் அணு அறிவு கணிதம் என்பது அறிவியல் மொழி – தொடர்ச்சி – காலம்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 14. கலை
- விளையாட்டு பற்றி சில சீரியஸ் சிந்தனைகள்
- பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி
- பத்திரிக்கையாளர்கள் சதிகாரர்கள் – கமலா சுரய்யா
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 2
- மடியில் நெருப்பு – 2
- இரு வழிகள்