வே.சபாநாயகம்
கடிதம் – 45
3, செங்குந்தர் வீதி,
திருப்பத்தூர்.வ.ஆ.
22-3-94
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
ஒருவழியாக, JK மணிவிழா மலருக்கான ஒரு கட்டுரையையும், பசும்பொன் தேவர் மாவட்டம் கிருங்காக்கோட்டையிலிருந்து வெளிவரும் “தொடரும்” என்கிற இதழின் ஆசிரியர் எழுதிக் கேட்டதால், அவருக்கு ஒரு கட்டுரையும் எழுதி அனுப்புகிற பணி, படாதபாடு பட்டு, இன்று மாலைதான் நிறைவுற்றது. இதனிடையில் தாங்கள்
அருணாசலத்துக்கு எழுதிய கடித விவரங்களை அறிந்தேன்.
நமது டில்லிப் பயணத்தை அசை போட்டு அது பற்றி எழுதுங்கள். ரிஷிகேஷ், ஹரித்வார் போட்டோக்களை அருணாசலம் முதற்கொண்டு அனைவரும் பாராட்டினர். இரவு பூராவும் செய்த களைப்புமிக்க பயணத்துக்குப் பிறகும்,
ரிஷிகேஷில் நாம் எவ்வளவு புத்துணர்ச்சியோடு குளுகுளுவென்றிருக்கிறோம் பார்த்தீர்களா? அந்தப் போட்டோக்களை நானும்கூட இன்னும் பார்த்து முடியவில்லை. தாங்கள், JK ஹரித்வாரில் கங்கையில் குளிக்கும் போட்டோ ஒன்றை எனக்கு
அனுப்பி உதவ வேண்டும் – நண்பர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக!
ஒய்வு பெற்ற பின்பு தங்களுடைய ஒவ்வொரு நாளும் அலாதியான அழகோடு கழிவதை நண்பர்களுக்கு அடிக்கடி கூறிக் கொண்டிருக்கிறேன். இயன்ற பயணங்களுக்கு எல்லாம் தங்களை இனிமேல் இழுக்கலாம் என்று ஆசை பிறக்கிறது. பாப்பா வசிக்கும் செஷல்ஸ்தீவுக்குச் சென்று வாருங்கள். புதிய வானத்தின் வேறொரு புறத்தில் உள்ள ஒரு புதிய கடலின் எதிரே, பாப்பாவுக்கு நீங்கள் எங்கள் ஆசிகளைக் கூறுகிற பொழுது, எங்கள் ஆசிகளும் மந்திரத்தொனி கொண்டு புதிதாய் ஒலிக்கக் கடவன.
உங்களது நாவல் ‘ஒரு நதி ஓடிக் கொண்டிருக்கிறது’ – புத்தக வேலைகள் முழுமை பெற்றுவிட்டனவா? நமது டில்லிப் பயணம் பற்றி வீட்டிலுள்ளவர்களுக்கு, சுவைபட நிறையச் சொன்னீர்களா?
JK 25-3-94 வெள்ளி இரவில் ஜோலார்ப்பேட்டையைக் கடக்கும் சேரன் எக்ஸ்பிரஸில் கோவை போகிறார். அநேகமாக நானும் கூடப் போகவேண்டியதாய் இருக்கும். ஞாயிறு இரவு அதே வண்டியில் திரும்புகிறோம். இன்ஷாஅல்லாஹ்!
ஒரு கடிதம் எழுதுங்கள்.
தங்கள்,
பி.ச.குப்புசாமி
ஒரு பின்னிணைப்பு:
சில வெண்பாக்கள் கிறுக்கினேன். உங்கள் மாதிரி நெருக்கமானவர்களோடு
அதைப் பங்கிட்டுக் கொள்ள மனம் விழைகிறது.
பொய்….பொய்…..பொய்
0 நின்றதுபொய் பார்த்ததுபொய் நெஞ்சைமெலத் தொட்டுவிட்டுச்
சென்றதுபொய் ஆனால் செகமும்பொய் – இன்றுமுதல்
தெய்வமும் பொய்யாம் தெரிந்துகொண் டேனெல்லாம்
பொய்யினும் பொய்யாகும் போ!
0 சொன்னவை பொய்உன் சுடர்விழி வீசிய
மின்னலும் பொயுன்றன் மென்னடை – இன்முகம்
கன்னிகை நாணம் கருத்தை அறிவித்த
புன்னகை யாவுமே பொய்!
0 வாழ்வுபொய் நீயதில் வந்ததுபொய் நம்பிய
ஊழ்வினைப் புண்ணியம் ஓர்பொய்யே – ஏழேழ்
பிறவிக்கும் பற்றாகும் பேரன் பெனும்சொல்
வெறும்பொய்யே அன்றிவேறு என்?
– பி.ச.கு
- ஜெனரல் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா
- பழமைவாதமும், புதுமைவாதமும் – இரு கண்காட்சிகள்
- அன்பர் தினம் துணையே
- விவசாய சங்கத்தலைவர் ஆறுபாதி கல்யாணம் அவர்களுடன் பேட்டி 2 – தொடர்ச்சி
- மனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றிப் பாரிஸ் கருத்தரங்கு-2 (IPCC)
- In response to Jadayus atricle
- இத்தருணத்தின் கடைசி நொடி
- பன்னாட்டுக் கருத்தரங்கம் – அண்ணாமலை பல்கலைக் கழகம், கலைஞன் பதிப்பகம்
- மனத்தில் எழுந்த அலைகள் (கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது – கட்டுரைத் தொகுதி அறிமுகம்)
- கடித இலக்கியம் -45
- அலாஸ்கா கடற் பிரயாணம் – மூன்றாம் பாகம்
- இலை போட்டாச்சு! – 15 கறி (பொரியல்) வகைகள்
- நெஞ்சோடு புலம்பல்!
- போரில்லா உலகுக்காய்ப் போரிடும் கவிஞர்கள் – தொடர்ச்சி
- மடியில் நெருப்பு – 25
- தாஜ் கவிதைகள்.
- தப்பூ சங்கரின் தப்பு தாளங்கள்.
- இது கூட இயற்கை தானா?….
- கோவில் சன்னதி
- காதல் நாற்பது (9) – என்ன கைம்மாறு செய்வேன் ?
- பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
- பச்சைத் தமிழரைப் பற்றிச் சில பசுமையான நினைவுகள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:5&6)
- நீர்வலை (11)