கடிதம் 27, ஜனவரி 05 – ஜெயமோகனின் அறிவியல் புனைகதை 9

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

ரெ.கார்த்திகேசு


திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு,

ஜெயமோகனின் அறிவியல் புனைகதை 9

ஜெயமோகனின் ‘தமிழ் இலக்கிய வடிவங்கள்: நேற்று இன்று நாளை ‘ (திண்ணை 13 ஜனவரி) வாசக மூளையை வெடிக்கச் செய்யும் கதை. நமது வழக்கமான வாசக அனுபவத்துக்குள் வகைப்படுத்தி அடக்கிவிட முடியும் ஒன்றல்ல. முதலில் அது பேசுகின்ற கால வெளியே நமது புரிதலுக்கு உட்பட்டதல்ல. கி.பி. 2868 வரை கொண்டு சென்று, பின் இந்த பூமி அழிந்தபின் ஏற்படும் வெளி வருடம் என்னும் புதுக் கணக்கில் இன்னொரு (வெளி) நூற்றாண்டைப் பற்றியும் பேசுகிறார். இப்போதைய மனித மூளை சுகமாகப் புரிந்துகொள்கிற கால அளவு அல்ல இது.

ஆனால் கதையின் கருப்பொருள் ஓரளவு புரிந்து கொள்ளக் கூடியதே. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் ‘தமிழ் ‘ என்னும் மொழி பற்றியும் அதில் உள்ள ‘இலக்கியங்கள் ‘ பற்றியும் ஒருவர் பேசுவது மகிழ்ச்சிக்குரியது. (எந்தப் பேதை சொன்னான் தமிழ் சாகும் என்று ?) தமிழ் உட்பட எல்லா இலக்கியங்களும் அறிவியல் மாற்றத்தால் – குறிப்பாகக் கணினிகளின் ஆளுமையால் – மொழி சிதைந்து, உரு சிதைந்து (உலகமே சிதைந்து போன பின்) பின் மீளுகின்றன. 20-ஆம் நூற்றாண்டுத் தமிழ் மீண்டும் ஒரு கருத்தரங்கில் – ஒரு நாடகபாணி நடிப்புடன் – பேசப்படுவதாக முடிக்கிறார். (வழக்கம்போல் ஜெயமோகன் என்ற பெயரை முற்படுத்தி நிலைப்படுத்திக் கொள்ளும் செயல் இருக்கிறது. ஆனால் மன்னிக்கலாம்.)

ஜெயமோகனின் சிந்தனை வெளியும் கற்பனை வெளியும் இத்தனை தூரம் பரந்திருப்பது வியந்து பாராட்டத்தக்க செய்தி. வான்வெளியில் கரும்பொருளை (dark matter) பார்க்கின்ற தொலை ஆடியில் எதிர்கால இலக்கியத்தைப் பார்த்துச் சில கண்டுபிடிப்புக்களைத் தருகிறார். இதுவரை எந்த எழுத்தாளரிடமும் நாம் பார்த்திராதது. தமிழுக்குப் புதிது. நவீனமடைந்து வரும் தமிழ் கற்பனா இலக்கியத்தில் ஒரு கிலோமீட்டர் கல்.

கதையின் காலத்தை நம் புரிதலுக்குள் இல்லாத ஒரு வெளியில் தள்ளியபின், அதன் பேசும் பொருளை மட்டும் ‘வரலாறு திரும்புகிறது ‘ என்னும் பாணியில் திருப்பி, வழக்கமாக நாம் அறிந்துள்ள இலக்கிய மரபுகளான சங்க இலக்கியம், புத்திலக்கியம், இலக்கியக் கருத்தரங்கம், கட்டுரை படைத்தல் என்று சாதாரணமாக ஆக்கிக் கதை படைத்திருப்பது ‘கெட்டிக்காரத்தனம் ‘.

ஏன் தமிழ் இலக்கியம் இப்படி 180 பாகை திரும்பியது என்பதற்கு விளக்கம் ஏதும் அவர் கொடுக்கவில்லை. 21-ஆம் நூற்றாண்டில் வாழும் நாமே இப்படித் திரும்பவில்லை. திரும்புவதற்கான தேவையும் சூழ்நிலையும் இல்லை. வாழ்க்கை இலக்கியத்தைப் புதிது புதிதாகச் சிருஷ்டித்துக் கொண்டு முன்னோக்கியேதான் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். இது இயற்பியல் விதி என்றே சொல்லலாம். ஜெயமோகனின் கற்பனை எதிர்காலத்தில் மற்ற பொருள்களும் செயல்களும் இயற்பியல் விதியைப் பற்றி முன்னோக்கியே போய்க்கொண்டிருக்க இலக்கியம் மட்டும் பின்னோக்கிப் போவது முரண்.

தவிர, பிற மொழி இலக்கியங்கள் என்ன ஆகின ? ஒரு கட்டத்தில் மொழி என்பது தேவையில்லாமல் போய்விட்டது எனச் சொல்லும் ஜெயமோகன் அப்படி கற்பனைகள் மொழி கடந்து கலந்த பின்னர் உருவான புதிய இலக்கிய உருவாக்கங்கள் யாவை எனச் சொல்லாமல் விடுகிறார். இவை பழைய தமிழ் இலக்கிய வடிவங்களையும் சொல்பொருள்களையும் ஏன் விஞ்சவில்லை ? ஏன் நிலைக்கவில்லை ? ஆங்கிலம் முதலிய மொழிகளின் நிலை என்ன ? அதைத் தொட்டுக் கூடப் பார்க்காதது ஒரு குறையே. எதிர்கால மனிதன் எப்படி ‘தமிழ் ‘ என்ற கூண்டுக்குள் தன்னைப் பூட்டிக் கொள்ள முடியும் ?

கதையில் உள்ள இன்னொரு ஓட்டை, இத்தனை கோளங்களில் மனிதர்கள் பரந்து வாழ ஆரம்பித்த பின்னும் வேறு ‘புத்திசாலித்தனமான ‘ இனங்களை அவர்கள் சந்திக்கவில்லையா ? அப்படியானால் பிரபஞ்சத்தில் மனுக்குலம் தவிர வேறு அறிவார்ந்த பிறப்புக்கள் தோன்றியிருக்கவில்லையா ? இது பற்றிய தேடலோ செய்தியோ கதையில் இல்லை.

இதற்கு ஜெயமோகன் உரிய பதில்களைச் சொல்ல வல்லவர். சொல்லுவார் என எதிர்பார்க்கிறேன். இந்தக் கேள்விகள் அவரின் கற்பனையை இன்னொரு தளத்திற்கு நீட்சிப்படுத்தும் நோக்கம் கொண்டவைதான்.

ஆனால் இப்படிச் சில குறைகளை நாம் பிறாண்டிப் பிறாண்டிக் கண்டு பிடித்தாலும் கூட (இன்னும் பிறாண்டினால் இன்னும் வரும்), அவருடைய கற்பனையின் அகலம் நம்மைத் திகைக்க வைப்பதே ஆகும். தமிழ் வாசக மூளைகளை அவர் கடுமையான அழுத்தத்துக்குள்ளாக்கி அவற்றின் நியோரோன்களை இன்னும் தீவிரமாக வளர்க்கத் துணை புரிகிறார். பாராட்டுக்கள்.

ரெ.கார்த்திகேசு

karthi@myjaring.net.

22, ஜனவரி 05

Series Navigation

தகவல்: ரெ.கார்த்திகேசு

தகவல்: ரெ.கார்த்திகேசு