சூர்யா லட்சுமிநாராயணன்
மொழி என்று ஒன்று இருக்கும் வரை அதற்காக போராடவில்லை என்றால் (அது ஆரோக்கியமானதாகவே இருப்பினும்) சாப்பிடக்கூடிய உணவானது தொண்டைக் குழியை விட்டு உள்ளே போகமாட்டேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்துவிடும் சில அரசியல் பிரமுகர்களுக்கு. தேவையில்லை என்றாலும் போராடித்தான் ஆக வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. சத்தியமாக ஓட்டுக்காக இல்லை என்று சொன்னால், ஒரு பிறந்த 5 மாதமே ஆன குழந்தை வாயை பொத்திக் கொண்டு வயிறு குலுங்க சிரிக்கும். ஆகையால் மொழிக்கு நிறைய பிரச்சனைகள் தேவையாக உள்ளது. அதற்காக போராட வேண்டியதாயிருக்கிறது. மேலும் அதை சீர்படுத்த வேண்டியதாயிருக்கிறது. மாநாடுகள் நடத்த வேண்டியதிருக்கிறது. இது தனது ஒரு ஜென்மத்தில் முடிந்து விடுவதில்லை என்பது நன்றாகத் தெரிந்தாலும் தனது அரசியல் வாரிசுகள் அதைப் பயன்படு;தி பொழைப்பு நடத்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காகவாவது மொழியை பிரச்சனையிலேயே வைத்து அதற்காக போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் இவர்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் இறந்துவிடுகிறார்கள்.
ஆனால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரே. அவருக்கும் பொழுது போக வேண்டுமே. அவரும் விருது வழங்கும் விழாக்கள் நடத்துவதில் விருப்பம் உடையவராகவே உள்ளார் என்பது ஆச்சரியமான விஷயம் இல்லை. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் தலைமைப் பண்பை நிலைநாட்டிக் கொள்ள, தங்கள் தலைமையின் சக்தியை, அளவை உறுதிப்படுத்திக்கொள்ள இது போன்று விழாக்கள் நடத்துவது சகஜமான விஷயம் தான் என்று மேலுலகத்தில் வாயிற் காவல் பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் பணியாளர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
மேலுலகத்தில் கடவுளிடம் பரிந்துரைக்கப்பட்ட விழாக்களில், மொழிக்ககாக போராடியவர்களுக்கான விருதுவழங்கும் விழாவும் பரீசீலனையில் இருந்தது. கடவுள் சாப்பிட்டுவிட்டு மதிய வேளையில் கொட்டாவி விடும் நேரத்தில் இடையில் புகுந்து ஒப்புதல் வாங்கிவிட்டார் சித்திரகுப்தன். விழாவுக்கான தேதி குறிக்கப்பட்டது. சொன்ன வார்த்தையை காப்பாற்றுவதில் தனக்கிருக்கும் பொறுப்பை உணர்ந்த கடவுள் விழாவுக்கு செல்ல தயாரானார் சித்திரகுப்தனின் குள்ளநரித்தனத்தை எண்ணி கருவியபடி.
விழா நாளன்று வாயிற் காப்போன் வெகு நேரமாக வரவேற்பளித்துக் கொண்டிருந்தான்.
ராஜாதிராஜ, ராஜகம்பீர, ராஜமார்த்தாண்ட……………………..
சளிப்படைந்த கடவுள் அவனை புறக்கணித்துவிட்டு விழாமேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். சித்திர குப்தனை அழைத்து காதோரமாக கிசுகிசுத்தார். அந்த வரவேற்புரையை சற்று சுருக்குமாறு கட்டளையிட்டார்.
விழா தொடங்கியது. இளம் பெண்கள் நடனமாடினார்கள். அந்த இளம் பெண்ணின் பெயர் என்ன என்று கடவுள் கேட்டார். அவர் பெயர் மைக்கேல் ஜாக்சன் மேலும் அவர் ஒரு ஆண் என்றும் பதில் வந்தது. கடவுளுக்கு அசிங்கமாய் போய்விட்டது. பின் இவ்வாறு கூறினார்.
‘அன்று ஒரு நாள் பூமியல் கண்டுபிடிக்கப்பட்ட மின்சாரம் என்ற வஸ்துவை தெரியாமல் தொட்ட பொழுது நானும் இப்படித்தான் துடிதுடித்தேன். இவரும் அதைப்போன்று நன்றாகத் துடிக்கிறார்.” என்று
பின்னர் பாடல்கள் பாடப்பட்டன. யாரோ ஒருவர் இளையராஜாவின் பாடல் ஒன்றை பாடினார். பயந்துபோன சித்திரகுப்தன் தனது உதவியாளனை அழைத்து இவ்வாறு கேட்டார்.
‘அந்த சாரு நிவேதிதா என்ற எழுத்தாளர் இங்கு வந்திருக்கிறாரா? என்று”
இல்லை என்ற பதிலை கேட்டதும் தான் நிம்மதியானார். மேலும் அழகான சிம்பொனிகள் இசைக்கப்பட்டன. அமேடியஸ் மொசார்ட் சிறப்பான சிம்பொனி இசைக்கோர்வை ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார் கடவுளுக்காக, பீத்தோவான் காதுகேட்காத காரணத்தால் திருதிருவென விழித்தபடி அமர்ந்திருந்தார். கடவுளிடம் பல வருடங்களுக்கு முன்னர் தனது கோரிக்கையை வைத்திருந்தார் பீத்தோவான். தனது காதுகளை சரி செய்துவிடுவார் என்ற நம்பிக்கையில் பல வருடங்களாக காத்திருக்கிறார். ஆனால் கடுமையான அலுவல்களுக்கு மத்தியில் பீத்தோவானின் கோரிக்கை மனு கவனிக்கப்படாமலேயே எங்கோ கிடக்கிறது.
அப்போது கடவுளுக்கு சிறப்பு பரிசாக ஒரு ஓவியம் வழங்கப்பட்டது. அந்த ஓவியம் பிக்காசோவால் வரையப்பட்டது. பெருமையும், இன்பமும் பொங்க கடவுள் அந்த ஓவியத்தை வாங்கி பிரித்துப் பார்த்தார். அதைப்பார்த்த கடவுளின் முகத்தில் குழப்ப சுருக்கங்கள் விழுந்தன. கடவுள் பிக்காசோவை அருகில் அழைத்து ஒரு கேள்வி கேட்கலாமா? என்றார். பிக்காசோ ‘ம்” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தார். இதில் என்னுடைய அழகான மூக்கு எங்கே இருக்கிறது என்றார். கடுமையான சிந்னைக்குப் பிறகு அந்த ஓவியத்தை 4 பக்கமும் திருப்பி, திருப்பி பார்த்து ஆராய்ந்த பிறகு இவ்வாறு கூறினார்.
‘நான் வரையும் பொழுது எனக்கு உங்கள் அழகான மூக்கு எங்கு வரைந்தேன் என்ற நியாபகம் இருந்தது. ஆனால் இப்பொழுது அது சிரமம். உங்களுக்கு முழு வாய்ப்பு உள்ளது. இது ஒரு மாடர்ன் ஆர்ட். இதில் எதை வேண்டுமானாலும் உங்கள் மூக்காக நினைத்துக் கொள்ளலாம், மேலும் உங்களது மூக்கை போன்ற ஒன்றை இந்த ஓவியத்தில் கண்டுபிடிப்பீர்களானால் எனக்கு சொல்லி அனுப்புங்கள்”
கலைஞர்களுக்கே உரிய கர்வமான பேச்சுதான் என்றாலும் அதை மன்னிக்கக் கூடிய அளவுக்கு கடவுளுக்கு பெருந்தன்மை உள்ளதால் பிக்காசோ எண்ணெய்ச்சட்டியில் வருபடும் தண்டனையிலிருந்து தப்பித்தார்.
விருது வழங்கும் விழா ஆரம்பமானது. அந்த காண்டா மணியை டங்..டங்.. என்று அடிப்பது கடவுளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. 5 நிமிடத்துக்கு ஒரு முறை அந்த மணியை ஒரு கல் உடைக்கும் இரும்பு சுத்தியலால் அடித்து அறிவிப்பு வெளியிடவில்லை என்றால் இப்பொழுது என்ன வந்துவிட்டது. வெறுமனே அறிவிப்பை வெளியிட வேண்டியது தானே என நொந்து கொண்டார் கடவுள்.
விருதுக்குரிய நபர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். அவர்களின் பெயர்கள் மைக்கில் வாசிக்க தயாரானார்கள். முதலில் பூமியில் அதிகம் புகழ் பெற்றிருக்கும் ஆங்கில மொழியின் வளர்ச்சிக்காக போராடியவர்களில் சிறந்தவரை அறிவிக்க முன்வந்தார்கள். கூடியிருந்த அவ்வளவு கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கடுமையான எதிர்ப்பு குரல் எழுந்தது. கடவுள் யார் அவர்கள் என்று கேட்டார்.
சிறிது நேர விசாரணைக்குப் பிறகு சித்திரகுப்தன் கூறினார். அவர்கள் தமிழர்கள் என்று. கடவுள் கூறினார்.
‘நினைத்தேன் அவர்களாகத்தான் இருக்கும் என்று” இதற்காகத்தான் இந்த விழாவை இவ்வளவு நாள் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்ததாகவும் தனக்குத் தானே நொந்து கொண்டார்.
பிறகு கூச்சல்களுக்கு நடுவே பெயர் வாசிக்கப்பட்டது.
‘ஆங்கில மொழிக்காக போராடியவர்களில் முதலிடம் பிடிப்பவர்…………………… சிறிது நேரம் மௌனம்………… தி அவார்டு கோஸ் டு மிஸ்டர். பெர்னாட்ஷா”
அறிவிக்கப்பட்ட பின்னரும் பெர்னாட்ஷாவை மேடைக்கு வரவில்லை. கடவுள் சித்திரகுப்தனை அருகில் அழைத்து கடுகடுப்பான குரலில் கூறினார்.
‘;அந்த ஆள்தான் நோபள் பரிசு வழங்கும் போதே அதை வாங்கவில்லை என்று உனக்கு தெரியுமில்லையா? பிறகு ஏன் அந்த ஆளைத் தேர்ந்தெடுத்தீர்கள். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்றே நீ இவ்வாறு செய்கிறாயா?”
பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை பெர்னாட்ஷா மேடைக்கு வந்தார். தங்கமெடலை பெற்றுக் கொண்டார். மேலும் தங்க கரீடம் சூட்டப்பட்டது. இங்கிலாந்து மக்கள் செய்த ஆரவாரம் விண்ணை முட்டியது. சித்திர குப்தன் நிம்மதியாக மூச்சு விட ஆரம்பித்தார்.
அடுத்ததாக ரஷ்யமொழி என்று அறிவிக்கப்பட்டதுதான் தாமதம் தமிழர்கள் நின்றிருக்கும் பகுதியிலிருந்து சில கற்கள் பறந்து வந்தன. பாதுகாவலர்களால் காக்கப்பட்டார் கடவுள். கடவுள் கடுமையாக எச்சரித்தார். தமிழர்கள் தொடர்ந்து இதுபோன்று வன்முறையில் ஈடுபட்டால் எண்ணெய்ச் சட்டி வருக்கும் இடத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று. சம்பந்தமே இல்லாமல் யாரோ ஒருவருடைய பெயரைச்சொல்லி தலைவர் வாழ்க என்ற கோஷம் வந்தது தமிழர்கள் பகுதியிலிருந்து. பின்னர் ஒரு வழியாக சமாதானமானார்கள்.
பின் அறிக்கை வாசிக்க ஆரம்பிக்கப்பட்டது.
‘ரஷ்ய மொழி வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்று போராடியவர்களில் முதலிடம் பிடிப்பவர்” (சிறிது மௌனத்திற்குப் பிறகு)
திரு. லியோ டால்ஸ்டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ரஷ்ய மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளிக் குதித்தனர்.
ஆனால் லியோ டால்ஸ்டாய்க்கும், தஸ்தாயேவ்ஸ்கிக்கும் கடைசி வரை கடுமையான போராட்டம் நிலவி வந்தது. இவர்கள் இருவரில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று மிகப்பெரிய அளவில் சூதாட்டம் நடந்ததாக கூறப்பட்டது. இந்த விஷயம் கடவுளின் காதுகளுக்கு வந்தது. யார் இந்த சூதாட்டத்தை நடத்தியது என்று விசாரித்த போது அந்த சூதாட்டத்தை நடத்தியவரே தஸ்தாயேவ்ஸ்கிதான் என்று தெரியவந்தது. கடவுள் மிகவும் குழம்பிப் போனார். தன்னையே வைத்து ஒருவர் சூதாடியிருக்கிறார்; என்றால் அவர் எவ்வளவு பெரிய சூதாடியாக இருப்பார் என்று வியந்தார். தஸ்தாயேவ்ஸ்கி சூதாட்டத்தில் தோற்றுப் போனதால் அவருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. அவர் தனது அடுத்த நாவலை எழுத ஆரம்பித்து விட்டார். அதை சொர்க்கத்தில் விற்று அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது நஷ்டத்தை சமாளிக்கலாம் என்பது அவரது திட்டம். ஆகையால் நரகத்தின் குறிப்புகள் என்ற நாவலை எழுதத் தொடங்கிவிட்டார். சொர்க்கத்தில் இருந்தவர்கள் நரகத்தைப் பற்றி தெரிந்துகொள்ள மிகுந்த ஆவலாக இருக்கிறார்கள் என்பது அவருக்கு மிக நன்றாகத் தெரியும்.
இப்படியாக ஒவ்வொரு நாட்டினரும் தங்கள் நாட்டுக்குரிய பரிசை பெற்றுக்கொண்டிருந்தனர். விழாவின் இடையில் கடவுளின் தூதுவர் சிறிது குழப்பத்துடன் தலையை சொறிந்தார். கடவுள் கேட்டார்.
‘என்ன விஷயம்”
‘கடவுளே ஒரு சின்ன குழப்பம்”
‘என்ன குழப்பம்”
‘தமிழ்நாட்டில் தேர்ந்தெடுப்பதில் ஒரு சின்ன குழப்பம்”
‘என்னால் சாத்தானை கூட சமாளிக்க முடியும், ஆனால் இந்த தமிழ்நாட்டுக் காரர்கள் என்றால் எனக்கு பயமாக இருக்கிறது. என்ன குழப்பம் என்று சொல்லித் தொலை.”
‘தமிழ்மொழிக்குரிய விருதை தங்கள் தலைவருக்கு கொடுக்க வில்லை என்றால் பெட்ரோல் குண்டுவீச்சில் ஈடுபடுவோம் என்று துண்டு சீட்டில் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.”
‘எப்படி சொர்க்கத்திற்குள் ஆயுதங்களை அனுமதித்தீர்கள்.”
அவர்கள் பாரம்பரிய உடை என்று வெள்ளை வேட்டியை கட்டி வந்தார்கள். இப்பொழுது தான் தெரிகிறது. ஆயுதங்களை மறைத்து வைத்து கடத்துவதற்கு வசதியாகவே அந்த ஆடையை பயன்படுத்துகிறார்கள் என்று.
‘தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் யார்”
‘திரு. வள்ளுவர்”
‘சித்திர குப்தா தமிழர்களின் பெட்ரோல் குண்டுவீச்சை நம்மால் சமாளிக்க முடியுமா?”
‘அந்த புதுவிதமான ஆயுதம் மிகுந்த ஆபத்தானதாக இருக்கிறது கடவுளே. அதை சமாளிக்க நம்மால் இயலாது.”
‘எனது மூன்றாவது கண்ணில் இருந்து கிளம்பும் தீப்பொறியைவிட கடுமையானதா? அந்த பெட்ரோல் குண்டு”
‘கிட்டத்தட்ட அதுபோன்றுதான் இருக்கும் கடவுளே”
‘அப்பாடியானால் எனக்கு போட்டியாக இன்னொன்று இருக்கிறதா?……….. அவர்களிடமிருந்து கற்க வேண்டிய புதிய போர் முறைகள் நிறைய உள்ளன. ஏன் அவர்களைக் கொண்டு நமது வீரர்களுக்கு போர்ப்பயிற்சி அளிக்கக் கூடாது. அந்த புதுவித ஆயுதமான பெட்ரோல் குண்டை உபயோகிப்பது பற்றி நமது வீரர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு தீவிர பயிற்சி அளிக்க ஏற்பாடு செய், மேலும் விழாவை மறுதேதியின்றி ஒத்தி வைப்பதாக அறிவித்துவிடு ”
விழாவை ஒத்தி வைத்த கடவுள், விழாவை பாதியில் ரத்து செய்துவிட்டு, வேறு ஒரு கூட்டத்திற்கு அவரச அவசரமாக சென்றுவிட்டார்.
மீண்டும் ஒரு நாள் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அங்கு அவர் கண்ட காட்சி
தலைசுற்றல் என்ற மனிதனுக்கு மட்டுமே வரக்கூடிய அந்த வியாதி கடவுளுக்கு வந்தது. அவருக்கு தலை கிருகிருவென்று சுற்றியது. வேறு ஒன்றுமில்லை தமிழகத்தின் அரசியல் தலைவரை போற்றி புகழ்ந்து பாடப்பட்ட 40 குறட்பாக்கள் மிஸ்டர். வள்ளுவரால் பாடி காண்பிக்கப்பட்டது. மேலும் அவரால் கையெழுத்திடப்பட்ட போட்டியிலிருந்து விலகிக் கொள்ளும் கடிதமும் கடவுளிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கின் முடிவில், கடவுள் வெகுநேரமாக அந்த விருதை பார்த்துக் கொண்டிருந்தார். அரை மனதாக அதை அந்த அரசியல் தலைவரிடம் வழங்கினார்.
பின் ஒருநாள் தனது கடவுள் பதவியை ராஜினாமா செய்வதாக எழுதி வைத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டார்.
கடவுள் தோற்றுப் போனார்.
- ஓளி விசிறும் சிறுபூ
- அமீரகத் தமிழ் மன்றத்தின் ’இனியொரு விதி செய்வோம்’ மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி
- தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து மே மாத இறுதியில் கவிதைப் பட்டறை
- From the renowned & controversial Georgian filmmaker
- தமிழ் இலக்கியக் களம் பிரபஞ்சன் மற்றும் இசையமைப்பாளர் ஷாஜி ஆகியோரைக்கொண்டு கலந்துரையாடல்
- வாய் தந்தனவும் மறை தந்தனவும்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -11
- அதிகாரத்தின் சரடுகளை இழுக்க துடித்த ஒரு அராஜகவாதியின் கதை
- கெண்டைமீன்குஞ்சும் குரான் தேவதையும் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய திறனாய்வு நூல் அறிமுகம்
- நீதி நூல்களுக்கான இலக்கணமும், யாப்பு வடிவமும்
- வேத வனம் விருட்சம் 82
- மோதிக்கொள்ளும் காய்கள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -7
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இடிக்கப்பட்ட ஆலயங்கள் கவிதை -27 பாகம் -2
- மவுனம் பயணிக்கும் தூரம்
- மீளெழும் கனவுகள்..
- பின்னிரவு முகம்
- ஒரு நொடியின் ஆயிரம் பாகம்..
- வரிசை…………..!
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி எட்டு
- முள்பாதை 26
- ஆணாதிக்கம்
- சக்கர வியூகம்
- கடவுளின் ராஜினாமா கடிதம்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -14
- ஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது(கட்டுரை -1)
- மராத்தா- முகலாயர் – 27 வருட போர் – போரியல் ஆராய்ச்சி
- மனங்கவர்ந்த டோரேமோனும் அற்புத மனிதர்களும்
- இணையத்தில் தமிழ்
- முருகாற்றுப்படையில் கடவுளர் வழிபாடும், நம்பிக்கையும்