ஒளிரும் காரிருள்

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

பி எஸ் நரேந்திரன்


I found a soundman on his knees, poking his furry microphone boom into the face of a Somali spread-eagled on the earth. The man lay silent, until with a faint exhalation he died. The soundman held on for a few more seconds, then switched off his machine and got to his feet. ‘I ‘ve been wanting to do that, ‘ he said. ‘I ‘ve captured the sound of death on tape. ‘

– Aidan Hartley, The Zanzibar Chest

சமீபத்தில் படித்த ஒரு புத்தகம் பற்றிய எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

மேற்கூறிய The Zanzibar Chest என்பதுதான் அந்தப் புத்தகம். Reuters News wire Service-இல் நிருபராகப் பணியாற்றிய Aidan Hartley என்பவர் எழுதியது. என்னை உலுக்கிய புத்தகம் இது என்று சொல்லலாம். ஜர்னலிசம் பற்றிய அறிவு எனக்கு மிகவும் குறைவு. அப்படி எழுதுவது சரியா அல்லது இப்படி எழுதுவது சரியா என்று விவாதிக்குமளவுக்கு அதில் ஞானமோ, அனுபவமோ எனக்கில்லை. எனினும், நல்ல ஜர்னலிசம் என்பது என்னைப் பொறுத்தவரை, உள்ளதை உள்ளபடி அதே சமயம் உள்ளத்தைத் தொடும்படி எழுதுவதுதான். ஒரு சங்கதியைப் படித்த பிறகு, படித்தவரை ஒரு நிமிட நேரமேனும் யோசிக்க வைப்பதில்தான் உண்மையான ஜர்னலிசத்தின் வெற்றி அடங்கி உள்ளது என்பது என் எண்ணம்.

யார் வேண்டுமானாலும், எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். ஒரே விஷயத்தைப் பத்து பேர் எழுதினாலும், ஒன்றிரண்டு மட்டுமே நமது கண்களில் ‘பளிச் ‘சென்று தெரிகின்றன. எழுதப்பட்ட முறையில் உள்ள வித்தியாசம்தான் இதற்குக் காரணம். ‘குஜராத்தில் மதக் கலவரம். நூற்றுக் கணக்கானோர் சாவு ‘ என்று எழுதப் பட்ட செய்தி நமக்கு சாதாரணமாகப் படுகிறது. ‘இன்றைக்கு நேற்றைக்கு நடக்கிற சங்கதியா இது ? எப்பவும் நடக்கிறதுதானே! ‘ என்று போகிற போக்கில் படித்து, மடித்து எறிந்து விட்டுப் போய்விடுவோம்.

அதே சமயம், அந்த மதக்கலவரத்தின் காரணமாகக் கொல்லப் பட்ட அப்பாவிகளின், அநாதைகளாக்கப் பட்ட குழந்தைகளின், மானபங்கப் படுத்தப் பட்ட பெண்களின், மரித்துப் போன கணவர்களின், சகோதர்களின், குழந்தைகளின் சோகம் நமக்குத் தெரிவதில்லை. நம்மைப் பொறுத்தவரை அந்த மதக் கலவரம் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் நடந்த ஒரு செய்தி. அவ்வளவுதான். பல நூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியாக நடந்து வரும் வன்முறைகளைக் கண்டு நமது மனம் மரத்துப் போனது காரணமாக இருக்கலாம். அல்லது நான் காட்டுவதைத்தான் நீ பார்க்க வேண்டும், சொல்வதைத்தான் நம்ப வேண்டும் என்ற ஸ்டாலினிஸ்ட் ஸ்டைல் அரசாங்க high handedness-ஆக இருக்கலாம். அல்லது இதையெல்லாம் எழுதினால் மதக்கலவரம் இன்னும் தீவிரமாகி விடலாம் என்ற sensitivity கூடக் காரணமாக இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை.

இறந்தவர்களில் இத்தனை பேர் இந்துக்கள், இத்தனை பேர் முஸ்லிம்கள் என்ற statistics யாருக்கு வேண்டும் ? கலவரத்தில் இறந்து போனவர்கள் நம்மைப் போன்ற ரத்தமும், சதையுமான மனிதர்கள். காலம் காலமாக அவர்கள் வணங்கிய தெய்வங்கள் அவர்களைக் காப்பாற்ற வரவில்லை. Secularism பற்றி பீற்றிக் கொள்ளும் அரசாங்கம் அவர்களுக்கு உதவவில்லை. வெறும் காட்டு விலங்குகளைப் போல மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டு, ரத்தம் சிந்தி மடிந்து போனார்கள். இதுபோல இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். Nobody is immune to it. ஆனால், அந்த நிகழ்வுகளைச் சிந்தாமல், சிதறாமல், நடு நிலமையுடன் பதிவு செய்து வைப்பதில் ஜர்னலிஸ்ட்களின் பங்கு மிக முக்கியமானது. எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு பாடமாக மட்டுமல்ல, எச்சரிக்கை செய்வதற்காகவும் கூட.

All right. இனி Zanzibar Chest பற்றி.

Aidan Hartley ஆஃரிக்க நாடான கென்யாவில் பிறந்த வெள்ளைக்காரர். அவரின் பெற்றோர்கள் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் உச்சத்தில் இருந்த 1920-களில் அங்கு போய்க் குடியேறியவர்கள். பிரிட்டிஷ் அரசாங்கக் காலனி விரிவாக்க ஏஜெண்டுகளாக. விவசாயத்தில் ஆர்வமுடையவரான Aidanனின் தகப்பனார் David Hartley, ஆஃரிக்கா மீதும் அதன் மக்கள் மீதும் அளவில்லாத ஆர்வம் கொண்டவர். அந்த ஆர்வம் Aidan Hartleyக்கும் தொற்றிக் கொண்டிருக்கிறது.

David Hartley இறந்த பிறகு, Zanzibar தீவில் அவர் விட்டுச் சென்ற ஒரு பெட்டியில் அவரின் நண்பரான Peter Davey என்பவர் எழுதிய கடிதங்களையும், குறிப்புகளையும் Aidan தற்செயலாகப் படிக்க நேரிடுகிறது. Peter Davey பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் முக்கிய கேந்திரமாகக் கருதப்பட்ட Yemen நாட்டில் முக்கிய அதிகாரியாக இருந்த, சரளமாக அரபு மொழி பேசத் தெரிந்தவர் வித்தியாசமான வெள்ளைக்காரர் Davey. ஏமன் நாட்டுப் பெண்ணின் மேல் காதல் கொண்டு அவளை மணப்பதற்காக இஸ்லாம் மதத்தைத் தழுவியவர். இரண்டு ஏமனி Tribalகளுக்கு இடையே நடந்த சண்டையைத் தடுக்கப் போய், படுகொலை செய்யப் பட்டு இறந்து போனார்.

தான் கண்ட, கேட்ட, அனுபவித்த விஷயங்களை மிக நுணுக்கமாக எழுதி வைத்திருக்கிறார் அவர். பெட்ரோல் வளம் கண்டுபிடிக்கப் படுவதற்கு முன் இருந்த வளைகுடா நாடுகளின் கலாச்சாரம் பற்றியும், inter tribal சண்டைகள் பற்றியும் விளக்கமாக எழுதப் பட்டிருக்கிறது அவரின் அந்தக் குறிப்புகளில்.

Peter Davey-யின் குறிப்புகளில் தென்படும் சில விஷயங்கள் சுவராசியமானவை,

‘மனித உடலில் விரல் நகம் மிகவும் விஷத் தன்மை வாய்ந்ததாகக் கருதப் படுகிறது. இந்தப் பகுதியில், கணவனைப் பிடிக்காத பெண்கள், விரல் நகங்களில் சிலவற்றை லேசாக வறுத்து, அதனுடன் தலைமுடி சிறிதைச் சேர்த்துப் பொடியாக்கி உணவில் கலந்து கொடுத்து விடுவார்கள். சாப்பிட்ட கணவன் நேராக பரலோகம் போய் விடுவான் ‘.

The Zanzibar Chest, Peter Daveyயின் குறிப்புகளைச் சுற்றிச் சுழல்வது போல எழுதப் பட்டிருந்தாலும், அதன் நோக்கம் சோமாலியா, ருவாண்டா, எத்தியோப்பியா, Zaire போன்ற ஆஃரிக்க நாடுகளில் நடக்கும் இனப் படுகொலைகளைப் பற்றியும், மதச் சண்டைகளைப் பற்றியும், ஆயுதம் தாங்கிய சில சுய நலக் குழுக்கள் காரணமாகச் செயற்கையாக ஏற்படுத்தப் பட்ட உணவுப் பஞ்சம் பற்றியும், அதன் காரணமாக இறந்த பல்லாயிரக் கணக்கானோர் பற்றியும், ஆஃரிக்கர்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கும் AIDS பற்றியும் இதுவரை உலகம் அறிந்திராத பல விஷயங்களை நேர்மையாக, வலிமையுடன் விளக்குகிறது.

முக்கியமாக ருவாண்டா நாட்டில் Tutsi மற்றும் Hutu இன மக்களுக்கிடையே நடந்த இனப் படுகொலைகள். இதைப் பற்றி யாரும், இன்று வரை இவ்வளவு விளக்கமாக, நேரடியாக எழுதி நான் படித்ததில்லை. இருபதாம் நூற்றாண்டு ஒரு ரத்தமயமான நூற்றாண்டு. சென்ற நூற்றாண்டைப் போல மனிதர்கள், சக மனிதர்களுக்கு இழைத்த கொடுமைகள் போல எந்த நூற்றாண்டிலும் நடக்கவில்லை. Plague, காலரா போன்ற நோய்கள் கூட இவ்வளவு மனிதர்களைக் கொன்றிருக்காது என்றே நினைக்கிறேன்.

Aidan சொல்கிறார்,

‘என் கண் முன்னே, ஒரு சிறு குழந்தையைத் தன் முதுகில் கட்டிக் கொண்டிருந்த ஒரு பெண்மணி, தனக்கு முன்னால் அது போலவே இன்னொரு சிறு குழந்தையை முதுகில் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த இன்னொரு பெண்மணியை விரட்டிச் சென்று பட்டாக் கத்தியானால் வெட்டிக் கொல்வதைப் பார்த்தேன். அச் சிறு குழந்தை, அதன் தாய் இருவரையும். ஏன் ? எதற்காக ?…. ‘

இனப் படுகொலை உச்சத்தில் இருந்த சமயத்தில், Lake Victoriaவில் ஒவ்வொரு நாளும் சுமார் இருபதாயிரம் பிணங்கள் வந்து சேர்ந்ததாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். மீன்களைப் பிடித்து அறுக்கையில், மனித உறுப்புகளும், கைகளும், விரல்களும் வெளியில் வந்து விழுந்தன. அந்த மீன்களைச் சாப்பிட்டவர்கள் நோய்கள் கண்டு இறந்து போனார்கள். ஏறக்குறைய ஐந்து இலட்சத்திலிருந்து, பத்து இலட்சம் பேர் வரை இந்த இனப் படுகொலையில் இறந்து போனதாகப் பொதுவாகக் கணக்கிட்டிருக்கிறார்கள்.

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். நம்மில் எத்தனை பேருக்கு இந்த விஷயங்கள் தெரியும் ? தெரிந்து ஒன்றும் ஆகப் போவதில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். நாம் வாழும் இந்த உலகில் மதம், இன, மொழியின் பேரால் நடக்கும் கொடுமைகளை அறிந்து கொள்வதில் தவறு எதுவும் இல்லை. பல்வேறு இன, மொழி, மத மக்கள் வாழும் இந்தியாவிற்கு இது போன்ற ஒரு நிலைமை வரக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வாவது நமக்கு உண்டாகலாம். இதுபோன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வதால்.

மனித உரிமை மீறல்கள் பற்றி வாய் கிழியக் கதறும் முன்னேறிய நாடுகள் எவையும் இந்தப் படுகொலைகளைக் கண்டும் காணாமலும் இருந்ததுதான் மிகவும் சோகம். என்ன செய்வது ? ருவாண்டாவில் பெட்ரோல் இல்லையே! CNN போன்ற செய்தி ஸ்தாபனங்கள் இதைப் பற்றி மூச்சு கூட விடவில்லை.

நான்கைந்து வருடங்களுக்கு முன் ருவாண்டா இனப் படுகொலைகளைப் பற்றி, HBOவில் ஒரு டாகுமெண்டரி பார்த்தேன். கொலைகள் நடப்பதைக் கண் முன் கண்ட, ஏழு அல்லது எட்டு வயதுடைய குழந்தைகளைப் பேட்டிகண்டு எடுக்கப் பட்ட டாகுமெண்டரி. அதனைப் பற்றி இங்கு விளக்கப் போவதில்லை. கண்ணில் ரத்தம் வர வைக்கும் பேட்டிகள் அவை என்று மட்டும் சொல்லுவேன். அதைப் பார்த்த பிறகு வந்த கோபத்தில், எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டுக் கொளபீனத்துடன் எங்காவது திருவண்ணாமலைப் பக்கம் ஓடிவிடலாமா என்று கூட யோசனை வந்தது. Believe me. அதன் தாக்கம் அப்படியானது.

Aidan Hartleyயுடன் செய்தி சேகரிக்க சோமாலியா நாட்டிற்குச் சென்ற அவரின் பல பத்திரிகை நண்பர்கள், வெறி பிடித்தவர்களால் சாலைகளில் விரட்டப் பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள். Adventurous ஜர்னலிசத்திற்கான அதிக பட்ச விலை அது. மிகத் தாமதமாக Peace keeping செய்யப் போன அமெரிக்கர்களும் அங்கு வாங்கிய உதையில் தப்பித்தேன், பிழைத்தேன் என்று ஓடிப் போனார்கள். Black Hawk Down படம் பாருங்கள். புரியும்.

மிக மெதுவாக ஆரம்பிக்கும் இந்தப் புத்தகம், Concorde வேகத்தில் புறப்பட்டு, super sonic வேகத்தில் பறக்கிறது. இப்போது பத்திரிகையுலகில் தாராளமாக உபயோகிக்கப் பட்டுவரும் ‘warlord ‘ என்ற வார்த்தையை முதன் முதலில் அறிமுகம் செய்தவர் இந்த Aidan Harley. NPR எனப்படும் National Public Radioவில் Aidan-இன் அரை மணி நேரப் பேட்டி ஒன்று இருக்கிறது. முடிந்தால் கேட்டுப் பாருங்கள் (www.thezanzibarchest.com).

If you can get it, don ‘t miss it. அதற்கு முன் ஒரு எச்சரிக்கை. புத்தகம் படிப்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை இருக்கிறது. எனவே, எதிர்பார்ப்புகளைக் குறைந்த வால்யூமில் வைத்துக் கொள்ளவும்.

******

ஜனநாயகத்தில் கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் இருப்பது மாதிரி, புதிதாக ‘க்ளிக் ‘குச் சுதந்திரம் என்ற ஒன்றும் உண்டு. எனவே, அடுத்து வரும் எனது சுய தம்பட்டம் பிடிக்காதவர்கள் தாரளமாக அடுத்த கட்டுரைக்குக்குக் ‘க்ளிக் ‘கிக் கொள்ள அனைத்துச் சுதந்திரமும் அவர்களுக்கு உண்டென அறிவுறுத்தப் படுகிறார்கள்.

புத்தகம் படிப்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு ‘டேஸ்ட் ‘ இருக்கிறது என்றேன். எல்லோரும் ஒரே மாதிரியான விஷயங்கள் பற்றிய பிடிப்பு இருப்பதில்லை. சிலருக்கு fiction. சிலருக்குக் கவிதை. சிலருக்கு thriller. இன்னும் சிலருக்கு இலக்கியம். இப்படி ஆளுக்கு ஆள் நிறம் மாறுவது மாதிரி ரசனையும் மாறும். என்னைப் பொறுத்தவரை ஆங்கில fiction பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை. கல்லூரி நாட்களில் படித்த Irwing Wallace, Sydney Sheldon, Harold Robbins போன்றவர்களோடு சரி. அதற்கப்புறம் ஆங்கிலக் கதைகளின் மீதான நாட்டம் குறைந்து விட்டது. இரண்டாம் உலகப் போர் பற்றிய புத்தகங்கள், Real life adventures, உலக அரசியல், வரலாறு என்று ரசனை மாறிப் போய்விட்டது. அனேகமாக Nuremberg Trial வரையிலான எல்லா Nazi holocaust பற்றிய புத்தகங்களையும் படித்து விட்டேன் என்றே சொல்லலாம். .

புரியாத விஷயங்களைப் படிப்பதில்லை என்றும், அப்படியே படித்தாலும் நடிப்பதில்லை என்றும் ஜெய் ஜக்கம்மா மேல் சலாமடித்து சத்தியம் செய்திருக்கிறேன். இந்த ஜென்மத்தில் அதை மீறுவதாக இல்லை. (ஹலோ!…என்ன சார் ? நீட்ஷே…காஃப்கா…கத்திரிக்காவா ?…ஸாரி…ராங் நம்பர்!)

தமிழ்நாட்டை விட்டு வந்து ஏறக்குறைய 12 வருடங்களாகி விட்டன. புதிதாக நிறைய தமிழ் எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள் போலத்தான் தெரிகிறது. எல்லா புதிய எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிக்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. தூரம் ஒரு காரணம். ஜெயமோகன், இரா.முருகன் போன்றவர்களெல்லாம் எனக்கு இணைய தளங்களின் மூலமாகத்தான் அறிமுகமானார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இப்படித்தான், ஒரு எழுத்தாளரின் கதையை இணைய தளத்தில் படித்து விட்டுப் பாராட்டுகிறேன் என்ற நினைப்பில் ‘இத்தனை நாட்களாக எங்கு போய் ஒளிந்திருந்தீர்களோ ? ‘ என்று அப்பாவித்தனமாக ஒரு ஈ-மெயில் அனுப்பினேன். அவ்வளவுதான். என்னுடனான கடிதத் தொடர்புகள் அத்தனையையும் சடாரென முறித்துக் கொண்டார். இதுவும் ஒருவகையான மதுரைக் குசும்பு என்று நினைத்துக் கொண்டாரோ என்னவோ ? பெயரெல்லாம் வேண்டாமே. Merci.

தமிழ் எழுத்துலகில் சுஜாதா ஒரு legend. அனேகமாக அவர் எழுதாத விஷயங்களே இல்லை எனலாம். ஆழ்வார்கள் புகழ் பாடும் ‘பஜனை ‘ கோஷ்டியிலும் இருப்பார். அய்த்தலக்கா படமான ‘பாய்ஸிலும் ‘ இருப்பார். கதைகளில் அவர் உபயோகப் படுத்தாத நவீன உத்திகளே இல்லை எனலாம். நிறைய யோசித்து, ஏதாவது ஒரு உத்தியைக் கண்டுபிடித்து அதை உபயோகிக்கலாம் என்று நினைக்கும் போது, அதே உத்தி சுஜாதாவால் அவரின் ஏதாவது ஒரு கதையிலோ, கட்டுரையிலோ ஏற்கனவே உபயோகப்படுத்தி இருப்பது தெரியவரும்.

மண்டை காய்கிற விஷயம் அது.

என்னை மாதிரி அனா, ஆவன்னாக்கள் கூட அவர் மாதிரி எழுத வேண்டும் என்று நினைப்பதுதான் சுஜாதாவின் மிகப் பெரிய வெற்றி. என்னைப் பொருத்தவரை, சுஜாதா ஒரு துரோணர். நான் ‘தம்மாத்தூண்டு ‘ ஏகலைவன் ( ‘கட்ட வெரலக் கேட்டுடாதீங்கோ மாமா! ‘).

சுஜாதாவைத் திடாரென்று பாராட்டக் காரணம் ஏதுமில்லை. பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. பாராட்டி விட்டேன். மற்றபடி, அவருக்கு ‘மஸ்கா ‘ அடித்து எனக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. அவருக்கும் ஆகப்போவதும் ஒன்றுமில்லை.

அவரென்ன இதையெல்லாமா படிக்கப் போகிறார் ?

Adios Amigos!

———————————————————————————————

narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்