ஒரு உரையாடலும், சில குறிப்புகளும் -1

This entry is part [part not set] of 31 in the series 20051118_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


சுந்தர ராமசாமியுடன் (சு.ரா) நடந்த ஒரு உரையாடலை பி.கே.சிவக்குமார் திண்ணையில் பதிவு செய்து வருகிறார். அவருக்கு என் நன்றிகள்.

இந்த உரையாடலின் பதிவான சில கருத்துக்கள் குறித்த என் எண்ணங்களை இங்கு தருகிறேன். அங்கு விவாதிக்கப்பட்ட ஒவ்வொரு கருத்தினையும் நான் இங்கு அலசப் போவதில்லை. ஒரு சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு எழுதுகிறேன்.உரையாடல் முழுவதும் திண்ணையில் வெளியான பின் சில சிறு குறிப்புகளை எழுதலாம் என்றிருக்கிறேன்.

I

மேற்கில் மகாபாரதமோ அல்லது திருக்குறளோ உரிய கவனம் பெறவில்லை என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் அவர்களும் அவ்வாறே கருத வேண்டும் நாம் எதிர்பார்க்க முடியாது, எதிர்பார்க்கத் தேவையுமில்லை. மேற்கு தன் அறிவு உலகின் மூலமாக கிரேக்க சிந்தனையும், நாகரித்தினையும் கருதுகிறது. இந்தியா அல்லது சீனத்தை அல்ல. இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அவர்களுக்கு வியாசரை விட ஹோமர் மிக முக்கியமானவராக, திருவள்ளுவரை விட அரிஸ்டாட்டிலும், பிளோட்டாவும் முக்கியமானவர்களாக இருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை. மேலும் மேற்கின் அங்கீகாரமே உலகின் அங்கீகாரம் என்று நாம் ஏன் கருத வேண்டும். சிலப்பதிகாரமோ அல்லது மகாபாரதமோ அல்லது திருக்குறளோ அவர்களைப் பொருத்த வரை கிழக்கத்திய நாகரித்தின் பங்களிப்புகள் என்று மட்டுமே புரிந்து கொள்ளப்படலாம். மகாபாரதம் ஒரு இதிகாசம் அல்லது காவியம் என்ற அளவில் புரிந்து கொள்ளப்படலாம்.

மேற்கு கிழக்கினை பல்வேறு விதங்களில் பார்க்கிறது, கையாள்கிறது, புரிந்து கொள்ள முயல்கிறது. அதில் ஒன்று கிழக்கினை, அதன் பண்பாட்டினை exotic, mysterious ஆகப் பார்ப்பது. இன்னொன்று கிழக்கினை வெறும் கடந்த காலமாக அருங்காட்சியகப்படுத்துவது. மேற்கு கிழக்கினை ஒரு பிறவாக (the other) கருதுவதும் உண்டு. இப்படி மேற்கு கிழக்கினை எப்படியெல்லாம் புரிந்து கொள்கிறது, புரிந்து கொண்டது, புரிந்து கொள்ள முயல்கிறது என்பது பற்றி விரிவான நூல்கள் இருக்கின்றன. பல விமர்சனங்கள், குறைகள் இருந்தாலும் Edward Said எழுதிய Orientalism இந்த விதத்தில் முக்கியமான நூல். சு.ரா இதைப் படித்திருந்தால் மேற்கு குறித்த அவரது புரிதல் மாறியிருக்கலாம்.

உலகப் பொது மறை என்று நாம் கருதினாலும், அப்படி ஒரு பொது மறை இருக்க முடியுமா என்ற கேள்வியும் இருக்கிறதே. இதை நாம் எப்படிப் புறக்கணிக்க முடியும். அரிஸ்டாட்டில் அறம் குறித்து கூறியவை அவர்களுக்கு முக்கியமாக இருப்பதால் அறம்,அறநெறி குறித்த பாடத்திட்டங்களில் அரிஸ்டாட்டில் எழுதியவை இடம் பெறுவதில் வியப்பில்லை. அது போல் ரோமானிய சட்டங்கள், கிரேக்க நீதி குறித்தும் அவர்கள் அதீத அக்கறை காட்டுவதில் ஆச்சரியமில்லை. எனவே திருக்குறளோ அல்லது மனுஸ்மிருதியோ ஆதி காலத்து நீதி நூல்கள் என்ற அளவில் கவனிக்கப்பட வேண்டியவை என்ற

கருத்து நிலவினால் அதில் வியப்படைய ஒன்றுமில்லை . அவற்றின் விழுமியங்கள், நீதிக் கோட்பாடுகள் அந்த நாகரித்தின் நீதிக் கோட்பாடுகள், விழுமியங்களின் துவக்கப் புள்ளிகள் அல்ல. இதை நாம் மறந்து விடக்கூடாது. தப்பித்தவறி யாராவது சிலர் பண்டைய நீதி நூல்கள் குறித்த ஒப்பிட்டாய்வில் ஈடுபடும் போது திருக்குறளைப் பற்றி விரிவாக ஆராய்ந்து, புரிந்து கொண்டு எழுதக் கூடும். ஒரு சில பாடத்திட்டங்களில் திருக்குறள் குறித்த கட்டுரை அல்லது அதன் பகுதிகள், வேறு சிலவற்றுடன் இடம் பெறக்கூடும்.

வெகுஜன வாசகர்களுக்கு திருக்குறள் முன்னிறுத்தும் நீதி, அறம் குறித்து எளிமையான நடையில் விளக்கும் வகையில் நூல்கள், மொழிபெயர்ப்புகள் இருக்கலாம். ஆனால் திருக்குறள் முன்னிறுத்தும் பல விழுமியங்கங்கள் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு அந்நியமானவை என்பதால் திருக்குறள் எழுதப்பட்ட காலம், பண்டைத் தமிழர் பண்பாடு குறித்த ஒரு அறிமுகமும் தேவை. இல்லையென்றால் திருக்குறளை ஒரு நிலப்புரபுத்துவ அறவியல் நூல் அல்லது ஆணாதிக்க அறவியல் நூல் என்ற புரிதலை அடிப்படையாகக் கொண்டு இன்றைய வாசகர் அதை முற்றுமாக ஒதுக்கிவிடும் அல்லது நிராகரித்துவிடும் சாத்தியக் கூறுகளும் உள்ளன. மேலும் இன்றைய வாசகரிடம் உலகப் பொதுமறை நூல் என்று ஒன்றை அறிமுகம் செய்வது சரியாகவும் இருக்காது. உலகப் பொது மறையாக அதை விளம்பரப்படுத்துவது ஒரு எதிர் மறையான கண்ணோட்டத்தினையே உருவாக்கும்.

ஒரு படைப்பாளி உலகின் பிறக் கலாச்சாரங்களின் உன்னத படைப்புகள் குறித்து ஏதும் அறியாமலேயே சிறந்த ஆக்கங்ளைத் தரமுடியும். மகாபாரதமோ, சிலப்பதிகாரமோ படிக்காத ஒரு ஆப்பிரிக்க எழுத்தாளர் அல்லது கிழக்கு ஐரோப்பிய எழுத்தாளர் தன் சூழலில் இருந்து கொண்டு உலகம் குறித்த தன் கண்ணோட்டம் கொண்டு சிறந்த படைப்பினைத் தர முடியும். மேலும் ஒரு பிரதியைப் படித்தாலும் அப்பிரதிக்குரிய கலாச்சார விழுமியங்களை, குறியீடுகளை, மதிப்பீடுகளைப் புரிந்து கொள்வது எளிதல்ல. உதாரணமாக கீகர்கார்டினை நான் என்னதான் விழுந்து விழுந்து படித்தாலும் அவரது கேள்விகள், பிரச்சினைகள் அனைத்தையும் நூறு சதவீதம் என்னுடைய பிரச்சினைகளாக பார்க்க முடியாது. அவரது சூழல், கிறித்துவ அறம், விழுமியங்கள் போன்றவை எனக்கு எழுத்து மூலமே பரிச்சயம் என்பதால் கீகர்கார்டினை நான் முழுதுமாக அவற்றுடன் எழுத்து மூலமும், வாழ்க்கைச் சூழலிலும் பரிச்சயம் பெற்றுள்ள ஒரு ஐரோப்பியர் போல் உள்வாங்குவது எளிதல்ல, அது எந்த அளவிற்கு சாத்தியம் என்ற கேள்வியும் இருக்கிறது. இது போல்தான்

மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் ஒரு ஐரோப்பியரால் அல்லது ஆப்பிரிக்கரால் எந்த அளவு உள்வாங்கப்படும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்.

காம்யு புரோமிதயஸ் குறித்து எழுதும் போது கிரேக்க புராணக்கதையிலிருந்து ஒரு முன்மாதிரியினை எடுத்துக் கொள்கிறார். அவர் திரிசங்கு என்ற பாத்திரத்தை எங்காவது குறிப்பிட்டால் அல்லது பயன்படுத்தினால்தான் ஆச்சரியப்பட வேண்டும். எனக்கு புரோமிதியசை விட திரிசங்கு கலாச்சார ரீதியாக நெருக்கமான பாத்திரம். புரோமிதியஸ் போன்ற பாத்திரம் என் தேசத்து இதிகாசங்களில் இல்லை என்பதால் நான் காம்யுவைப் படித்து ஏதாவது எழுதினால் அது புலியைப் போல் சூடு போட்டுக் கொண்ட பூனை கதை போலாகி விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஷேக்ஸ்பியரும், ஆங்கிலம் மூலமாக கிரேக்க நாடகங்களும் நம் நாடகச் சூழலில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் ஸ்பானிஷ் மொழி, பிரெஞ்சு மொழி நாடகங்கள், காவியங்கள் நமக்கு அறிமுகம் அதிகம் ஆகவில்லை என்பதால் அவற்றின் தாக்கம் மிகக்குறைவாகவே உள்ளது. இதற்குக் ஒரு முக்கிய காரணம் காலனியாக்கப் போட்டியில் இந்தப் பகுதியில் ஆங்கிலேயர் கை மேலோங்கியது.

II

சு.ரா கேட்ட கேள்வி,

சிலப்பதிகாரத்தைப் பார்த்தசாரதின்னு ஒருத்தர் மொழிபெயர்த்திருக்கிறார். ரொம்ப எபர்ட் போட்டுத்தான் செஞ்சிருக்கார். செவன் டூ எய்ட் இயர்ஸ் வொர்க் பண்ணியிருக்கார். ரீச் பண்ணலையே. வேர்ல்ட்ல இருக்கற முக்கியமான எத்தனை ஸ்காலர்ஸ் – இங்லீஸ் ஸ்காலர்ஸ் – அதை ரீட் பண்ணியிருக்காங்க. அது முக்கியமான கொஸ்சன்

இன்று ஒருவர் ஒரு குறிப்பிட்ட விஷயங்களில், உபதுறையில் பாண்டித்தியம் பெருவது, ஆழமாகப் பயில்வது, எழுதுவது போன்றவற்றைச் செய்வதே பெரும் உழைப்பையும், நேரத்தையும், திறனையும் கோருவதாக உள்ள நிலையில் வேறு துறையில் உள்ள வெளியீடுகள், ஆய்வுகள் குறித்து அவர் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்க இயலாது.அறிவுத் துறைகள் பல உபதுறைகளாக அல்லது பிரிவுகளாக உள்ளன. இலக்கியம் என்று என்னதான் பொதுவாகப் பேசினாலும் ஆய்வாளர்கள் பெரும்பான்மையோர் குறிப்பிட்டவற்றிலேதான் தனிக் கவனம் செலுத்துகிறார்கள்.

உதாரணமாக காமன்வெல்த் இலக்கியம், லத்தின் அமெரிக்க இலக்கியம், ஆப்பிரிக்க இலக்கியம், பின் நவீனத்துவமும் இலக்கியமும். எனவே ஒரளவிற்கு பொதுவான இலக்கியம் குறித்த புரிதல் இருந்தாலும் ஒரு இலக்கியப் பிரதி எல்லோருக்கும் ஆர்வம் ஊட்டக்கூடியதாக அல்லது அதே அளவு முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டியதில்லை. உதாரணமாக சால்மன் ருஷ்டியின் எழுத்துக்கள் காமன்வெல்த் இலக்கியம், post-colonial studies போன்றவற்றில் உள்ள ஆய்வாளர்களிடம் பெறும் கவனத்தினை லத்தின் அமெரிக்க இலக்கியம், ஆப்பிரிக்க இலக்கியம் போன்ற பிரிவுகளில் உள்ளவர்களிடமும் பெறும் என்று எதிர்பார்க்க முடியாது.இதன் பொருள் அவர்கள் ருஷ்டியை நிராகரிக்கிறார்கள் என்பதல்ல. ருஷ்டியின்

எழுத்துக்கள் நிச்சயம் கவனம் பெறும், எந்த அளவிற்கு என்பதுதான் கேள்வி. அதே சமயம் தெற்காசியாவின் சமகால வரலாற்றில் ஆய்வு செய்யும் ஒருவருக்கு ருஷ்டியின் எழுத்துக்கள் மீது ஆர்வம் இருக்கலாம்.

சிலப்பதிகாரம் நவீன இலக்கியம் அல்ல. குரோசவா மாக்பெத்தையை கையாண்டது போல் யாராவது சிலப்பதிகாரத்தினை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் இயக்கினால் அது ஒரளவு கவனிப்பைப் பெறக்கூடும். பீட்டர் புருக்ஸ் மகாபாரதத்தினை மேடை நாடகாமாக்கி உலக அரங்கிற்கு இட்டுச் சென்றது போல் யாராவது செய்தால் சிலப்பதிக்காரம் என்ற மூல நூல் ஒரளவாவது கவனிக்கப்படும் அல்லது அதன் மொழிபெயர்ப்பு பல வாசகர்களை எட்டும். சிலப்பதிகாரத்தினை அடிப்படையாகக் கொண்டு ஒரு நவீன புதினம் எழுதினால் சிலப்பதிகாரப் பிரதி கவனம் பெறும். அல்லது சிலப்பதிகாரத்தினை அடிப்படையாகக் கொண்டு ஒரு மேடை நிகழ்வு, தொலைக்காட்சித் தொடர் உருவாக்கப்பட்டால் மூலப்பிரதி பலரால் கவனிக்கப்படும்.சிலப்பதிகாரம் அப்படி வெகுஜன பார்வையாளருக்காக மறு ஆக்கம் செய்யப்படும் போது அது

‘A classical tale of love, sacrifice and revenge ‘ என்பது போல் விளம்பரப்படுத்தப்படவும் வாய்ப்பிருக்கிறது. வெறும் மொழிபெயர்ப்பு எத்தனை பேரை சென்றடையும், எத்தனை பேர் அதில் ஆர்வம் காட்டுவார்கள்.

பல்கலைகழகங்களில் இலக்கியத்துறையில் உள்ளவர்கள் பலர் குறிப்பிட்டவற்றில் தேர்ச்சி பெற்றவர்களாக,

நிபுணர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு சிலப்பதிகாரம் என்பது epic in a classical language என்றளவிலே தெரியவரும். அதற்கு மேல் அது குறித்து அக்கறை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் classical literaure of India என்பதில் அக்கறை உள்ளவர்கள் அல்லது உலக இலக்கியத்தில் ஆர்வமுடையவர்கள் அல்லது பண்டைய தெற்காசியாவின் வரலாறு, பண்பாட்டில் ஆய்வு செய்பவர்கள் அல்லது தமிழ்நாடு குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அல்லது பண்டைய இலக்கியங்களில், நாகரிங்களில் ஒப்பீட்டு ஆய்வுகள் புரிபவர்களுக்கு அந்த மொழிபெயர்ப்பு ஆர்வமூட்டுவதாக இருக்கலாம். ஒரு பல்கலைகழகத்தில் humanities என்ற பிரிவின் கீழ் ஆய்வு செய்பவர்கள், மாணவர்கள், பாடம் கற்பிப்பவர்களில் 5% – 10% பேர் சிலப்பதிகார மொழிபெயர்ப்பில் ஆர்வம்

காட்டினால் அதுவே அதிகம். அதில் எத்தனை பேர் அதை ஊன்றிப் படிப்பார்கள் என்பது கேள்விக்குறி.

சு.ரா நினைப்பது போல் முக்கியமான ஸ்காலர்ஸ் எல்லோரும் ஆங்கிலத்தில் எழுதுவதில்லை, ஆங்கிலத்தில் வெளியாகின்றவை அனைத்தையும் படிப்பதில்லை. பிரெஞ்ச், ஸ்பானிஷ்,ஜெர்மன் போன்ற மொழிகளில் எழுதும் பல சிந்தனையாளர்களின் நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றன. ஆனால் அவர்களில் பலர் ஆங்கிலத்தில் எழுதுவதில்லை. ஐரோப்பாவின் பல பல்கலைகழகங்களில் செய்யப்படும் ஆய்வுகள் முதலில் ஆங்கிலத்தில் வெளியாயவதில்லை. இதில் ஆசியாவைப் பற்றிச் செய்யப்படும் ஆய்வுகளும் அடக்கம். எனவே சிலப்பதிகாரத்தினை ஆங்கிலம் வழியாகப் படிக்காமல் ஒரு ஜெர்மானியர் தன் தாய் மொழி, தமிழ் மூலம் அறிந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

சு.ராவின் அனுமானங்கள் பலவீனமானவை, எனவே கேள்வியும் பொருத்தமற்ற கேள்வியாக இருக்கிறது. சு.ரா குறிப்பிடும் ஸ்காலர்ஸ், இங்கிலீஷ் ஸ்காலர்ஸ் யார் என்பதை அவர் தெளிவாக்கவில்லை.

இந்திய அளவிலும், உலக அளவிலும் குறிப்பிடத் தக்க சமூக அறிவியல் அறிஞர் பார்த்தா சாட்டர்ஜி ஆங்கிலத்திலும்,வங்க மொழியிலும் எழுதுகிறார். ஆனால் தமிழ் நாட்டில் சிறு பத்திரிகை உலகில் எத்தனை பேருக்கு இந்தியாவின் மிகச் சிறந்த சமூகவியல் அறிஞர்கள் என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என்பது தெரியும்.பார்த்தாவின் கட்டுரைகள் அல்லது உரைகள் உலகின் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தாலும், தமிழில் இல்லை (நானறிந்த வரை). இதை எப்படிப் புரிந்து கொள்வது.

என்னைக் கேட்டால் ‘ஸ்காலர்ஸ், இங்கிலீஷ் ஸ்காலர்ஸ் ‘ சிலப்பதிகார மொழிபெயர்ப்பினை படிப்பார்களா என்ற கேள்வியை விட தமிழில் பிற இந்திய மொழியில் உள்ள எல்லாக் காவியங்களின் மொழிபெயர்ப்பும் கிடைக்கின்றனவா என்ற கேள்வி முக்கியம்.சமகால இந்திய சிந்தனை தமிழில் தரப்ப்டுகிறதா, அதன் மீது விவாதம் இருக்கிறதா என்பது முக்கியம்.

சு.ரா வின் உலகம் என்பது ஆங்கிலம் சார்ந்த உலகமாக இருக்கிறது. இது ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டதின் விளைவு. பிரெஞ்ச்காரர்கள் ஆங்கில்லேயரைத் தோற்கடித்து இந்தியாவை ஒரு பிரெஞ்சு காலனியாக மாற்றியிருந்தால் மேற்கையும், உலகையும் நாம் பிரெஞ்ச் மூலம் பார்த்திருப்போம், புரிந்து கொள்ள முயற்சி செய்திருப்போம். ஆனால் 1947க்குப் பின்னரும் நாம் ஆங்கிலமே உலகம், ஆங்கிலம்தான் உலகம் என்று கருதிக் கொண்டிருந்தால் எப்படி.

(கிழக்கும் மேற்கும் சந்திக்கவே முடியாது அல்லது ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளவே முடியாது என்று நான் வாதிடவில்லை. மேலும் கிழக்கு, மேற்கு என்று குறிப்பிடுவதே ஒரு வசதிக்காகத்தான்).

ravisrinivas.blogspot.com

Series Navigationஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மணற்கடிகை ‘ – காலத்தின் பரமபத விளையாட்டு >>