ஒரு நடிகன் என்பவன் யார் ?

This entry is part [part not set] of 4 in the series 20000118_Issue

ஜெயகாந்தன்


சரி ஒரு நடிகன் என்பவன் யார் ? அவனது எல்லைகள் தான் என்ன என்பது குறித்து முதலில் இந்த நடிகர்களாவது புரிந்து கொள்ள வேண்டும். அவ்விதம் புரிந்து கொண்ட ஏற்றங்கள் தான் அவர்களூக்கு நிலைக்கும்.

நடிகன் ஒரு கலைஞன்.; எனினும் சமுதாயத்தில் ஒரு கவிஞனுக்கோ (பாடல் ஆசிரியன் அல்ல) ஒர் எழுத்தாளனுக்கோ (சினிமா வசன கர்த்தா அல்ல) ஒரு விஞ்ஞானிக்கோ உரிய ஸ்தானத்தை அவன் பெறவும் முடியாது, பெறவும் கூடாது.

ஆனால் கவிஞனை விடவும், எழுத்தாளனை விடவும் அவனது பொருளாதார அந்தஸ்து உயர்வடைவது இயல்பு. நமது கவலை அது குறித்தது அல்ல.

ஆனால் நடிகன் என்பவன் சித்தாந்தியோ , ஒரு அரசியல் தலைவனோ அல்ல என்பதை நடிகன் என்ற முறையில் அவனாவது உணர்ந்திருக்க வேண்டும்.

இவர்கள் கலை விழாக்களில் மட்டுமே விருதுகள் தரப்பட்டு முதலிடத்தில் அமர்த்தப்பட்டுக் கெளரவிக்கப் பட வேண்டும். இதை அரசாங்கமும் மக்களும் செய்யலாம். ஆனால் தேசீயக் கொடியைக் கூட வணங்கத் தெரியாத மூட ரசிகர்களின் பொறுப்பில்லாத புலைத் தனமான ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் உயர்ந்த ரசனை என்று எண்ணுகின்ற அறியாமை, அல்லது அதைத் தூண்டிவிடும் ஒரு சமூகக் கயமை இந்த நடிகர்களிடலிருந்து முற்றாக விலகி ஒழிவது அவசியம். கூலிப் பட்டாளங்களை அமர்த்தி கோஷமிடவும், இன்னொரு நடிகனின் படத்தைக் கொளுத்தவும் , ஒழிக்கவுமான காரியங்கள் நடை பெறுவது கலைத் துறையில் தமிழர்களின் அநாகரீகத்தின் சிகரமாக எனக்குப் படுகிறது.

இவர்களிடம் பணக்காரர்களின் பெருந்தன்மையும் இல்லை. ஏழைகளின் சிறப்பான மனிதாபிமானங்களும் இல்லை. மாறாக இவர்களிடம் பணக்காரர்களின் ஆதிக்க மனோபாவமும், ஏழைகளின் சிறுமைக் குணங்களும் ஒட்டு மொத்தமாய்ச் சங்கமித்து இருக்கின்றன.

ஆகவே இந்தப் போட்டி உணர்ச்சியினால் தங்களிடம் இருக்கும் பணப் பெருமையைப் பயன் படுத்தி இவர்கள் எல்லாக் கோயில்களிலும் கர்ப்பக் கிரகத்தில் இடம் தேடி அமரப் பார்க்கிறார்கள். இது இவர்களின் தன்னம்பிக்கையின்மையையே காட்டுகிறது.

ஆகவே இவர்கள் தாங்கள் சம்பந்தப் பட்டிருக்கும் துறையில் பணத்தைத் தவிர வேறு எதையுமே வளர்க்காமல், மக்களின் ரசனையை வளர்க்கப் பொதுவான கோட்பாடுகள் எதுவுமே இல்லாமல், பிற நாட்டுச் சினிமா கலையின் பெருமை நம் நாட்டிற்கு இல்லையே என்ற மன அரிப்புக் கூட இல்லாமல், தங்களைச் சுற்றி ஒரு வழிபாட்டு உணர்ச்சியை வளர்த்துக் கொள்வதிலேயே முனைந்து அதில் திருப்தியுறுகிற சுய திருப்திக் காரர்களாய் மந்தமுற்றுக் கிடக்கின்றனர்.

இவர்களைச் சமூகமும் சரிவரப் பயன் படுத்திக்கொள்ளவில்லை.

சமூகத்தை இவர்களும் சரிவரப் பயன் படுத்திக் கொள்ளவில்லை. மாறாக இரண்டு துறைகளிலும் தவறான போக்கே தறி கெட்டு வளர்ந்திருக்கிறது.

தேசத் தலைவர்களுக்கு இணையாக இவர்கள் பொது நிகழ்ச்சிகளில் வேஷம் போடுவதைக் கைவிட வேண்டும். மக்களும் இவர்களைத் தேசீயப் பெருமைக்கெல்லாம் மேலாகவும், தெய்வங்களுக்கு இணையாகவும் வழிபடும் மடமையிலிருந்து விடுபட வேண்டும். இதனால் ஒரு தேசீய அவமானமே விளைகிறதென்பதைச் சொல்கிறவன் மீது கோபப் படாமல் இரு சாராரும், இந்தத் தேசத்தின் பண்பாட்டு வளர்ச்சியைக் கருதிப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு நடிகன் அவன் சம்பந்தப் பட்டதுறை தவிரப் பிற துறைகளில் ஒரு சாதாரண மனிதனே. பெரும் பான்மையான ஒரு தரத்தில் அவன் சராசரிப் பாமரனே என்பதைச் சிந்தித்து அளந்து அறிந்து வைத்துக் கொள்வது ஒரு பொறுப்பான சமூக ஜீவியின் சமுதாயக் கடமை. மற்றபடி இன்று இந்த நடிகர்கள் தகுதியில்லாத ஸ்தானத்திற்கு உயர்த்தப் பட்டு இருப்பதற்கு நான் இந்த நடிகர்களை மட்டும் குற்றம் சொல்லத் தயாராக இல்லை. அது எந்த அளவுக்கு நமது அரசாங்கத்தின் குற்றமோ, நமது சமூக விதியின் குற்றமோ அந்த அளவுக்கு நடிகர்களீன் குற்றமும் ஆகும். இந்த மூன்று பிரிவினரில் யாராவது ஒருவர் இதைக் களைய முன்வந்தால் தான் இந்ஹ்தக் குற்றம் சீர் திருந்தும். இந்தச்ச் சாபம் விமோசனம் அடையும்.

(ஒரு இலக்கிய வாதியின் கலையுலக அனுபவங்கள் : 1980)

Thinnai 2000 January 18

திண்ணை

Series Navigation

- ஜெயகாந்தன்

- ஜெயகாந்தன்