ஏவாரி

This entry is part [part not set] of 7 in the series 20000213_Issue

பெருமாள் முருகன்


‘என்னக்கா அடுப்புல பொவையுது ? ‘

‘காப்பித்தண்ணி வாத்தியாரு ‘

‘அப்படியே எனக்கும் ஒரு கிளாசு குடுக்கா ‘

‘கட்டல்ல உக்காரு வாரேன் ‘

‘பாலூத்தீட்டு வந்தாச்சா ? ‘

‘இப்பத்தான் வந்தன். எந்தப் பாலிருக்குது. சனியனுவ ஆனையாட்டம் தீனிதான் திங்குவ. குர்குர்ரென்னு கறக்குதா. இந்த ஈத்தோட எருமய வித்துப்புடறேன் ‘

‘ஆமா. வித்துப்புட்டு வேறொண்ணு நல்லதா வாங்கிக்குங்க…. அட அட… வெள்ளாட்டுக்குட்டி ஊட்டுக்குள்ள போவுது பாருக்கா. ‘

‘உஸ்… உஸாய்… இதுவ இப்பத்தான் மனசன ஒரு பக்கம் நிக்க உடுதா. காட்டுல போயில் மேயறது. ஊட்லதான் கொட்டி வச்சிருக்குதாமா ? ‘

‘குட்டிவ தாம் பெருசாயிருச்சே ஏக்கா குடுத்திர்றீங்களா ? ‘

‘இப்ப என்ன. இன்னுரு எட்டுக்கு இருக்கட்டும் வாத்தியாரு. ‘

‘ரண்டும் கெடாக்குட்டிவ தான. ஒடையடுச்சு உட்டாச்சா. ‘

‘ஆரு ஒடையடிச்சா. சும்மாத்தான் திரியுதுவ ‘

‘ம்க்கும். அப்ப இது தானக்கா தரணம். இன்னமே வெச்சிருந்தா குட்டி ஒடஞ்சு போய்ராது. வெள்ளாட்டு மேல உழுந்துதுன்னா அவ்வளவுதான். நஞ்சு போயிரும். சொல்லுக்கா பாப்பம் ‘

‘இங்க எந்த வெள்ளாட்டு மேல போயி உழுவுது. அவுத்துடறம். மேஞ்சதியும் புடிச்சுக் கட்டிப்புடறம். இருக்கட்டும் ‘

‘மேச்சலுக்குப் போறப்ப பாத்துக்கிட்டேவா இருப்பீங்க ? ரண்டுதரம் வெள்ளாட்டு மேல உழுந்துதுன்னா ஒரு நூறு ரூவா போயிரும். ‘

‘எங்க போவுது வாத்யாரு. இன்னம் வெள்ளாட்டுல பாலூட்டுதுவ ‘

‘வெள்ளாடு பயராயிருச்சா ? ‘

‘அதென்னமோ இந்த ஈத்து இன்னம் பயராவக் காணாம் ‘

‘அப்ப வெள்ளாட்டையும் சேத்திக் குடுத்தர்ரது ? செனையோட வேற ஒண்ணு வாங்கிக்கலாமில்ல ? ‘

‘ம்… இன்னொரு மாசங் கழிச்சுத்தான் பயராவட்டுமே. நாலு ஈத்தாச்சு. எப்பேர்ப்பட்ட வம்சம். இது மாதிரி வருமா வெள்ளாடு ? ‘

‘அப்ப வெச்சிருங்க. குட்டிய வித்துப்புட்டா சீக்கிரம் பயரயிரும். இன்னம் பாலூட்டிக்கிட்டிருந்தா எப்படி பயராவும் ? ‘

‘பாலூட்டப் பாலூட்டவே பயராயிரும். இந்த ஈத்துத்தான் என்னமோ இன்னுங் காணாம் ‘

‘அத்தப்ப கவுண்ட்ரூட்டு வெள்ளாடு இப்படித்தான் பயராவாதயே கெடந்துது. குட்டிய வித்தொடன நாலே நாளுல பயராயிடுச்சுக்கா ‘

‘கல்லாக்காட்டு அத்தப்ப கவுண்ட்ரூட்டுதா ? ‘

‘ஆமாக்கா. அந்தக்கா கூட பாலூட்டற குட்டிய எங்க விக்கிறதுன்னுது. நாந்தாஞ் சொல்ச்லி வாங்கினே ‘

‘ம்.. செரி பாரு இந்தக் குட்டிவளத்தான். எவ்வளவு வருமுன்னு பாப்பம் ‘

‘நேத்துப் பையன் மேய்க்கும்போது புடுச்சுப் பாத்தன்; குட்டிவ பரவாயில்ல. ஒரு அளவுக்குப் ‘புடி ‘ இருக்குது. வெலச் சொல்லுங்க ‘

‘நானென்னத்தச் சொல்றது. நீ கேளு வாத்யாரே ‘

‘அதெப்டாக்கா. நீ சொல்லாத நாங் கேக்கறது. ஒரு வெலச் சொன்னா, படிஞ்சா மேல கேக்கலாம் ‘

‘செரி தொளாயரம் குடு ‘

‘என்னக்கா இது. குடுக்கற மாதிரி சொல்லுங்க. ரண்டும் பூங்குட்டிவ. பாலூட்டற குட்டிவள இந்த வெலைக்கு வாங்கி நா மொதலு பண்ண வேண்டாமா ? ‘

‘அந்த வெலைன்னா குடுக்கறது. இல்லன்னா எட்டுக்கு இருக்கட்டும் ‘

‘இன்னொரு எட்டுக்கு வெச்சிருந்தா மட்டும் எவ்வளவு வந்தரப் போவுது ? செரி. ஒரு குட்டி நல்லா முறுக்கம். ஒண்ணு அந்த அளவுக்கு வராது. கொஞ்சம் உடும். ரண்டுஞ் சேந்து ஏழ்நூறுக்குத் தாக்கா போவும் ‘

‘என்ன வாத்யாரு. கறி கிலோ நாப்பது ரூவா சொல்ற. குட்டிய மட்டும் இப்பிடிக் கேக்கற ‘

‘ஆமாக்கா, குட்டி அஞ்சஞ்சு கிலோத்தான் வரும். தோலு, தல, கொடலு.. இப்படித்தான் சேத்து மொதலு பண்ணோணும். அதும் நாளைக்கு ஞாயித்துக்கெழம. வர்றவங்களுக்கு இல்லைன்னு சொல்லக்கூடாதுன்னு பாக்கறன். ஒரு இருவத்தஞ்சு சேத்தி வெச்சுக் குடுங்க ‘

‘எட்நூத்தி அம்பதுக்குக் கம்மி வராது வாத்யாரே. ஆனா இல்ல. நாட்றாயன், மணி ஆராச்சும் வருவாங்க ‘

‘பத்து ரூவா எச்சுக்க்கம்மி. கையில காச வாங்கிக்கலாம். அவுங்களுக்கெல்லாம் குடுத்தா ஒரு மாசம் ரண்டுமாசம் இழுத்தடிப்பாங்க. நம்மகிட்ட அந்த வேலயே வேண்டாம். கையில காச வாங்கிக்கங்க ‘

‘அதான் சொல்லிப்புட்டன். அதுக்குங் கம்மின்னா இல்ல வாத்யாரு ‘

‘பாதிப்பணம் இப்பவே வாங்கிக்குங்க. நாளைக்குக் காத்தால பாதி. நம்மகிட்ட பாக்கிகீக்கிங்கற பேச்சே இல்ல. ஒடச்சுச் சொல்லுக்கா. எட்நூறுக்குக் கீழ வாக்கா ‘

‘கீழ மேலங்கற பேச்சே வேண்டாம். செரியா எட்நூறு குடுத்துரு. இப்ப ஒரு பேச்சு சொல்லிப்புட்டு பணத்துக்கு அப்பறம் வா. இப்பறம் வான்னு இழுத்தடிக்கக் கூடாது ஆமா ‘

‘ஏக்கா எப்பவாச்சும் நா அப்படிச் செஞ்சிருக்கறனா. சொன்னாச் சொன்னதுதான். சந்தேகம். கையில காசக் குடுத்துட்டுக் குட்டிய புடிச்சுக்கறேன். போதுமா. ஒரே வெல எழுநூத்தி அம்பது. அதுக்கு மேல போவாதுக்கா. புடி காச ‘

‘இல்ல வாத்யாரு. இருக்கட்டும். அவுங்கப்பன் வந்தா சண்டக்கட்டுவாரு. இந்த வெலக்கா குடுத்தீனு ‘

‘எனக்குன்னு சொன்னா மாமன் ஒண்ணுஞ் சொல்ல மாட்டாரு. இன்னக்கி நேத்தா பழக்கம். எத்தன வருசத்துப் பழக்கம். புடாக்கா காச ‘

‘இன்னொரு இருவத்தஞ்சு சேத்திக் குடு வாத்யாரு. கைல பணம் வந்தாத்தான் குட்டிய குடுப்பன் ஆமா ‘

‘எங்காசு எங்கீக்கா போயிருது. உங்கூட்ல இருக்கறாப்பல. செரி, பத்து ரூவா சேத்தி. அரவது புடிக்கா ‘

‘எப்படியும் எட்நூறுக்குப் போவும். வெலய உட்டுத்தான் குடுத்துட்டன் ‘

‘இன்னம் பத்து நாளைக்கு வெச்சிருந்து ரண்டு மூனுபடி சோளம் வெச்சா அது பணமில்லையா, எல்லாஞ் செரியாப் போயிரும். இந்தாக்கா மும்பணம் பத்து ரூவா. முன்னூறு ரூவா போயில் இப்பவே பையன் கிட்டக் குடுத்தனுப்பறன் ‘

‘குடுத்துடு வாத்யாரே. அது இதுன்னு சாக்குச் சொல்லக்கூடாது ஆமா ‘

‘இப்பவே குட்டியப் புடிச்சோரன். நாளைக்குக் கறிக்கு இதுதான். பணத்தப் பத்தி கவலைப்படாதீங்க. இப்பவே போயிப் பையங்கிட்ட குடுத்தனுப்பறன். மீதி ஞாயித்துக்கெழம தாரன். புடாங்க குட்டிய ‘

***

திருச்செங்கோடு சிறுகதைத்தொகுதி

***

Thinnai 2000 February 13

திண்ணை

Series Navigation

பெருமாள் முருகன்

பெருமாள் முருகன்