ஏலாதி இலக்கிய விருது 2006

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

செய்தி


தமிழக அளவிலான சிறந்த கட்டுரை, ஆய்வு நூல்களுக்கான போட்டியில் ஜனவரி 2003 முதல் 2006 ஜுலை முடிய வெளிவந்த நூல்கள் வரவேற்கப்பட்டன. இதில் எண்பத்தொரு படைப்பாளிகள் கலந்து கொண்டனர். மூன்று சுற்று தேர்வுக்குப் பின்னால் நடுவர் குழு ஏலாதி விருது இரு சமபரிசுகளுக்கான நூல்களை தேர்வு செய்தது. இதற்கான பரிசளிப்பு விழா தக்கலையில் ஹெச்.ஜி.ரசூல் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நட.சிவகுமார், முஜிபுர் ரகுமான் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
சென்னையைச் சேர்ந்த படைப்பாளியும், விமர்சகருமான எம்.ஜி.சுரேஷ் எழுதிய பின்நவீனத்துவம் என்றால் என்ன என்ற நூல் ஏலாதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. கணேஷ் சாவித்திரி சிறப்பு பரிசாக ரூபாய். இரண்டாயிரத்துக்கான பணமுடிப்பும், ஞாபகச் சிற்பமும், பாராட்டுச் சான்றிதழையும், கவிஞர். ஜி.எஸ்.தயாளன் எம்.ஜி.சுரேசுக்கு வழங்கினார். நாட்டுபுறவியல் ஆய்வாளர் முனைவர். த.கண்ணா கருப்பையா எழுதிய மதுரை வீரன் வழிபாட்டு மரபும் வழக்காறுகளும் நூலுக்கு இன்னொரு சமப்பரிசாக ஏலாதி விருது வழங்கப்பட்டது. அவுக்காரும்மாள் நினைவுப் பரிசாக ரூ. இரண்டாயிரத்துக்கான பணமுடிப்பும், ஞாபகச் சிற்பமும், பாராட்டுச் சான்றிதழையும் ஏ.எஸ்.ஜெகபர் சாதிக் வழங்கினார்.
மதுரையில் பிறந்த எம்.ஜி.சுரேஷ் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். தமிழ் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களின் உதவி இயக்குநராக பணிபுரிந்த இவர் புகழ்பெற்ற சில நாவல்களையும் எழுதியுள்ளார். அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் (1999). அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும் (2000). சிலந்தி (2001), யுரேகா என்ற நகரம் (2002), 37 என்ற நாவல் (2003) ஆகிய முக்கிய நாவல்களை படைத்தளித்துள்ளார். 2001 முதல் பன்முகம் காலாண்டிதழின் ஆசிரியராக இருந்து வரும் எம்.ஜி.சுரேஷ் அண்மையில் இஸங்கள் ஆயிரம், டாவின்சி கோடும் டெளன்லோட் பிரதிகளும் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். ஏலாதி விருது பெற்ற பின்நவீனத்துவம் என்றால் என்ன 2004-ம் ஆண்டில் வெளிவந்துள்ளது. தமிழ் சூழலில் வெகுவான கவனத்தைப் பெற்ற இந்நூல் பின்நவீனத்துவ சூழலையும், சிந்தனையுலகையும், எளிமையாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ழாக்தெரிதா, பூக்கோ, ரோலன்பர்த், ழாக்லகான் உள்ளிட்ட பின்நவீனத்துவ அறிஞர்களையும், மொழி, அதிகாரம், இலக்கியம், உளவியல், பெண்ணியம், ஓவியம், திரைப்படங்கள் உடனான பின்நவீனத்துவ உரையாடல்களையும் இந்நூல் வெளிப்படுத்துகிறது.
மதுரை வீரன் வழிபாட்டு மரபும் வழக்காறுகளும் நூலாசிரியர். முனைவர். த.கண்ணா கருப்பையா திண்டுக்கல் மாவட்டம் அம்மையன் நாயக்கனாரைச் சேர்ந்தவர். தற்போது திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றுகிறார். நாட்டார் வழக்காற்றியல், தற்கால இலக்கியம் ஆகிய துறைகளில் தொடர்ந்து இயங்கி வருபவர். தமிழகத்தில் நாட்டார் வழிபாடு உருவாகிய விதம், தொன்மைத் தன்மை, வழிபாட்டு வடிவங்கள், மதுரை வீரனை வழிபடும் அருந்ததியர் உள்ளிட்ட சமூகத்தாரின் வழிபாட்டு நிலைகள், கலை வடிவங்களில் மதுரை வீரன் கதை உள்ளிட்ட பல அரிய தகவல்களை களப்பணி மூலம் சேகரித்து ஆய்வு செய்து நூலாக்கியுள்ளார்.
ஏலாதி இலக்கிய விருதுபெற்ற எம்.ஜி.சுரேஷ் மற்றும் முனைவர். கண்ணா கருப்பையா உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. இந்நிகழ்வில் தலித்மயமாக்கல் நூலாசிரியா சி.சொக்கலிங்கம், உவர்மண் கவிதை நூலாசிரியர் நட.சிவகுமார், தேவதைகளின் சொந்த குழந்தைகள் கதை நூலாசிரியர் முஜிபுர் ரகுமான், மைலாஞ்சி கவிதை நூலாசிரியர். ஹெச்.ஜி.ரசூல், சுவர் முழுக்க எறும்புகள் பரபரக்கின்றன கவிதை நூலாசிரியர். ஜி.எஸ்.தயாளன், கொம்பியே கவிதை நூலாசிரியர் செல்சேவிஸ், சராசரி கவிதை நூலாசிரியர் ஆர்.பிரேம்குமார், புதிய காற்று மாத இதழாசிரியர் ஹாமீம் முஸ்தபா, சிலேட் இதழாசிரியர் லட்சுமி மணிவண்ணன், மீசான் கற்கள் மலையாள நாவல் மொழி பெயர்ப்பாளர் எஸ்.எம்.யூசுப், உக்கிலு கதை நூலாசிரியர். குமாரசெல்வ’, தலித் சித்தாந்த தேடல் நூலாசிரியர் வி.சிவராமன், மக்களிசைப் பாடகர் ஐ.தர்மசிங் திரைத்துறை உதவி இயக்குநர் முத்துராமன் மற்றும் கவிஞர்கள், ஆன்றனி ராஜாசிங், சிபி மைக்கேல், செ.தங்ககிருஷ்ணன், எர்சாத் அகமது உள்ளிட்ட படைப்பாளிகள், விமர்சகர்கள், வாசகர்கள் கலந்து கொண்டு உரையாடல் நிகழ்ச்சியை சிறப்பித்தனர். கடந்த ஆண்டு சிறந்த சிறுகதை நூல்களுக்கான ஏலாதி விருதையும் இருசமப்பரிசுகளையும், உமாமகேஸ்வரி, ஆதவன்தீட்சண்யா பெற்றனர். 2004-ம் ஆண்டு சிறந்த கவிதை தொகுப்புகளுக்கான இருசமப்பரிசுகளை கவிதாயினி வெண்ணிலா, கவிஞர்.கரிகாலன் ஆகியோர் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Series Navigation

செய்தி

செய்தி